மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா?

கேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா?

காளிகாம்பாள் கோயில் சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்

? இந்து மதத்தில் பெண்களை தெய்வமாகப் போற்றுவதன் தாத்பர்யம் என்ன?அனைத்து தெய்வங்களுக்கும் மூலாதாரம் ஆதிபராசக்தியே என்று பெரியோர்களும் ஞானநூல்களும் கூறுவது ஏன்?

- எஸ்.மாலதி, திருத்தணி

‘ஆதி’ என்றால் `முதன்மை' என்று பொருள். அதேபோல் `பரம்' என்பதற்கு `உயர்ந்த' என்றும் `சக்தி' என்பதற்கு `ஆற்றல்' என்றும் பொருள். ‘ஆதிபராசக்தி’ எனும் சொல், அனைத்துக்கும் முதலான உயர்ந்த சக்தியைக் குறிப்பது.

அனைத்து உலகங்களுக்கும் முழுமுதற் பொரு ளான சிவபெருமானுடன் இணைந்த சக்தியை ‘ஆத்யா’ என்று குறிப்பிடுகின்றன சிவாகமங்கள்.அவளிடமிருந்தே இச்சா, ஞான, க்ரியா சக்திகள் பிரிந்து, இன்னும் பலகோடி சக்திகளாக மாறி, இந்தப் பிரபஞ்சத்தின் காரியங்களை நிர்வகிக் கின்றன. ஆதிசக்தி ரூபம் அற்றவள். எனினும், உலக சிருஷ்டியின் பொருட்டு பல ரூபங்களில் அருள்புரிகிறாள். எப்படி ஒரே மின்சாரம் வெவ்வேறு பொருள்களில் வெவ்வேறுவிதமாகச் செயல்படுகிறதோ, அதேபோல் உருவமற்ற இறை நமது அறிதலுக்காகப் பல சக்தி வடிவங்களில் தோன்றி அருள் செய்கிறது என்கின்றன சாஸ்திரங்கள்.

பெண்கள் அனைவரும் அம்பிகையின் அருளை நிறைய பெற்றவர்கள். அவர்களை முறைப்படி போற்றினால்தான் வீடும் நாடும் உயரும். வம்சத்தை விருத்தியடையச் செய்வதிலிருந்து,  வாழ்க்கை  நல்வழியில் பயணிக்கவும் உறுதுணையாக இருப்பவள் பெண்ணே.

அம்பிகையின் அருள்சக்தி அவர்களிடம் அதிகம் இருப்பதால்தான், பெண்கள் ஆதிசக்தி யைப் போன்றே சிருஷ்டி காரியத்துக்கு மூல காரணமாகத் திகழ்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சுவாஸினி எனப் போற்றப்படுகிறார்கள்.

‘சு’ எனில் நல்ல; ‘வஸ்’ எனில் இருப்பது அல்லது தங்குவது எனப் பொருள் (வசிக்கிறாள் என்று சொல்கிறோம் அல்லவா). ஆக, உலகிலுள்ள அனைத்து சேதன அசேதனங்களும் அம்பிகையின் படைப்புகளாக இருந்தாலும், பெண்களிடத்தில் அந்தச் சக்தியின் தன்மை அதிக மாக இருப்பதால், அவர்கள் போற்றப்பட வேண்டியது மிக அவசியம். நமது கலாசாரம் என்பதும் அதுதான்.

? முக்கிய பூஜைகளின்போது மஞ்சள் பிள்ளையார் பிடித்துவைத்து வழிபடுகிறோம். பூஜை முடிந்ததும் மஞ்சள் பிள்ளையாரை வடக்கு நோக்கி நகர்த்தி வைக்கிறோம். இது ஏன்?

-
எஸ்.சூரியபிரகாசம், பெங்களூர்


நாம் செய்யக்கூடிய அனைத்து வழிபாடு களையும் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி செய்வது மரபு. நாம் செய்யும் பூஜைகள் எந்த விக்கினமும் இல்லாமல் நிறைவேறவேண்டி, மஞ்சளால் பிள்ளையார் பிடித்து, சங்கல்பம் செய்துகொள்கிறோம்.

வழிபாடுகள் பூர்த்தியடைந்ததும், நாம் நம்முடைய கைகளில் வைத்திருக்கும் அட்சதை, தர்ப்பை போன்றவற்றையும் வடக்கிலேயே விட்டு விடுவது முறை. வழிபாடுகளின் பலனாக மேன்மேலும் நல்ல காரியங்கள் நடைபெற வேண்டும்; கடவுளின் அனுக்கிரகம் நமக்கு மட்டு மல்லாமல், நம் சந்ததிக்கும் கிடைக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துக்காகத்தான் மஞ்சள் பிள்ளையாரை வடக்கு நோக்கி நகர்த்திவைப்பது போன்ற வழிமுறைகளைப் பின்பற்றுகிறோம்.

கேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா?

? கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள் பெரியோர்கள். ஆனால், வீட்டின் எதிரிலேயே தினமும் கோபுர தரிசனம் செய்தும் எனக்குக் குழந்தை பாக்கியம் இல்லையே, ஏன்?

- கா.கணபதி சுப்பிரமணியன், மயிலாடுதுறை

தாங்கள் இன்னும் அதிக நம்பிக்கையுடன் கோபுரத்தைக் கடவுளின் பாதக்கமலங்களாக எண்ணி வழிபடுங்கள். உங்களுடைய கர்ம பலன்களுக்கு ஏற்ப விரைவில் இறைவன் அருள்பாலிப்பார்.

இறை நம்பிக்கையைவிட வலிமையானது வேறு எதுவும் இல்லை. `எல்லாம் அவனே... அவனின்றி ஓர் அணுவும் அசையாது' என்று முழு நம்பிக்கையுடன் செயல்பட்டால், நிச்சயம் ஒருநாள் பலன் கிடைக்கும்.
அனுதினமும் நடைபெறும் வழிபாடுகளால் ஆலயங்கள் இறையாற்றல் மிகுந்து திகழ்கின்றன.  ஆகவே கோயில்களுக்குச் செல்லும் பக்தர்கள், மிகுந்த பக்தியுடனும், நம்பிக்கையுடனும், நியமங் களுடனும் ‘நீயே துணை’ என்று கடவுளை வழிபட் டார்கள் எனில், பொல்லாத கர்மவினைகள் அனைத்தும் நிச்சயம் குறையும். நாள்பட நாள்பட அவை முற்றிலும் ஒழிந்து, நமக்கு நற்பயன்கள் ஏற்படும். ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்று கூறுவார்கள். அதுபோல், பொறுமையாக நாம் அன்றாடம் செய்யும் கடமைகளைச் சரிவரச் செய்து வந்தாலே, இறைவன் நல்ல பலனை அளிப்பார்.

தங்களுக்கும் அதுபோன்று நிறைந்த பலனை அளிப்பதற்கே கோபுரத்துக்கு எதிரில் உங்களைக் குடியிருக்க வைத் திருக்கிறார் என்று கருதி, இறை வனைப் போற்றி வழிபட்டு வாருங்கள். விரைவில் நன்மை கிடைக்கும்.

? சில வீடுகளில், பச்சை மிளகாய் - காய்ந்த மிளகாய் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றைக் கட்டித் தொங்கவிட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். இதற்கு என்ன காரணம்?

- எம்.ராஜாராம், சென்னை - 50

தீய சக்திகளை விரட்டி நம்மைப் பாதுகாப்பதற்கு, பல வழிமுறைகள் நம் சாஸ்திரங்களில் சொல்லப் பட்டுள்ளன. வேறுசில சம்பிரதாயங்களையும் நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தார்கள்.

அவற்றில் ஒன்றுதான் நீங்கள் குறிப்பிடுவதும். மிளகாய், எலுமிச்சை போன்றவற்றை வீட்டின் வாசலில் தொங்கவிடுவதால் தீய எண்ணங்களோ, தீயச் செயல்களோ நம்மை அணுகாது என்பதை அவர்கள் தங்களது அனுபவத்தின் மூலம் அறிந்து வைத்திருந்தார்கள். அப்படி, அவர்கள் சொல்லிச் சென்ற விஷயங்களையே நாமும் கடைப்பிடித்து வருகிறோம்.

கேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா?

? ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் ஆகிய தெய்வங் களின் ஜாதகங்கள், வாஸ்து பகவானின் படம் போன்ற வற்றை பூஜையறையில் வைத்து வழிபடலாமா?

- ஆ.சரவணக்குமார், திருத்தணி

சுவாமி திருவுருவங்களின் சிலை வடிவங்கள், படங்கள், யந்திரங்கள் என்று... யாருக்கு, எந்த முறை பிடித்தமானதாகவும் வழிபாடுகள் செய்ய வசதியாகவும் உள்ளதோ, அந்த முறையில் வழிபட்டு இறையருளைப் பெறலாம்.

அவ்வகையில், நம்மில் சிலர் தெய்வ அவதாரங்களான ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோரின் திவ்ய ஜாதகங்களை வைத்து வழிபடுவது சரியே.

இறைவன் பிறப்பும் இறப்பும் அற்றவர். எனினும் அவர் நம்மை ரட்சிக்கும் வகையில் இந்த உலகில் திருஅவதாரம் செய்த நாளையே ஜயந்தி திருநாளாகக் கொண்டாடி வருகிறோம்.

ராமனும் கிருஷ்ணனும் புண்ணிய பூமியான நம் பாரதத் தில் அவதரித்து, தர்மம் செழிக்கும் வகையில் வாழ்ந்து வழிகாட்டியவர்கள்; வரலாற்று நாயகர் கள். சிலர் கூறுவது போல், அவர்களின் சரிதம் கட்டுக்கதைகள் அல்ல. அவர்களின் திவ்ய சரிதங் களை நாம்  தினமும் நினைத்தும் படித்தும் போற்றி மகிழ, இறை ஜாதக வழிபாடு உதவும்.

அதேபோல், வாஸ்து புருஷனின் திவ்ய உருவத் தையும் வழிபடலாம். அதேநேரம், நாம்  இதுபோன்று எவ்வுருவத்தை வைத்து வழிபடுவ தாயினும், அதுகுறித்து சாஸ்திரங்களில் சொல்லப் பட்டுள்ளதா, ஞானநூல்களில் ஏதேனும் வழிகாட்டல் உண்டா என்று அருகிலுள்ள பெரிய வர்களிடம் கேட்டுத் தெளிந்து, தூய்மையாகவும் நித்யமாகவும் ஆராதிப்பது மிகுந்த பயனைத் தரும்.

? கணவன் - மனைவி இருவரும் சேர்ந்துதான் கயாவில் சிராத்தம் செய்ய வேண்டுமா, இயலாத  சந்தர்ப்பத்தில் கணவன் மட்டும் தனியே கயா சிராத்தம் செய்யலாமா?

- கே.ராமகிருஷ்ணன், சென்னை - 24

‘ஸஹதர்மசாரினீ’ என்கிறது சாஸ்திரம். ஒரு மனிதன் செய்யும் அனைத்து தர்ம காரியங்களிலும் உடனிருந்து நல்வழியில் பயணிக்கக்கூடியவள் பெண். எனவே, இருவரும் சேர்ந்து சிராத்தம் செய்வதே சிறந்தது.  எனினும், உடல்நலக் குறைபாடு முதலான  தவிர்க்க முடியாத காரணங் களாலும் பயணம் செய்ய முடியாத நிலையிலும்,  கணவன் மட்டும் சிராத்தம் செய்வது தவறாகாது.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை காளிகாம்பாள் கோயில்  சிவஸ்ரீசண்முக சிவாசார்யர்.

கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: கேள்வி-பதில், சக்தி விகடன் 757, அண்ணாசாலை, சென்னை-600 002