Published:Updated:

குமரன் இளைப்பாறிய குன்றத்தூர்!

குமரன் இளைப்பாறிய குன்றத்தூர்!
பிரீமியம் ஸ்டோரி
குமரன் இளைப்பாறிய குன்றத்தூர்!

க.புவனேஸ்வரி, படங்கள்: செ.விவேகானந்தன்

குமரன் இளைப்பாறிய குன்றத்தூர்!

க.புவனேஸ்வரி, படங்கள்: செ.விவேகானந்தன்

Published:Updated:
குமரன் இளைப்பாறிய குன்றத்தூர்!
பிரீமியம் ஸ்டோரி
குமரன் இளைப்பாறிய குன்றத்தூர்!

ருவறையில் நேருக்கு நேராக நின்றுகொண்டு பார்த்தால் முருகப் பெருமானை மட்டுமே தரிசிக்க முடியும்; வலப்புறம் இருந்து பார்த்தால் முருகப்பெருமானுடன் தெய்வானை தேவியை மட்டுமே தரிசிக்க முடியும்; இடப்புறம் நின்றுகொண்டு பார்த்தால் முருகப்பெருமானுடன் வள்ளி பிராட்டியை மட்டுமே தரிசிக்க முடியும்!

இப்படியான கருவறை அமைப்புடன் திகழும் முருக க்ஷேத்திரங்கள் வெகு அபூர்வம். அவற்றுள் ஒன்றுதான் குன்றத்தூர். சென்னைக்கு அருகில், தாம்பரத்திலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவிலும், பல்லாவரத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது குன்றத்தூர்.

குமரன் இளைப்பாறிய குன்றத்தூர்!

திருப்பரங்குன்றத்தில் தெய்வானைதேவியுடன் வடக்கு நோக்கி அருள் பாலிக்கிறார் முருகன். இந்தத் தலத்திலோ, வள்ளி-தெய்வானை தேவியர் இருவரோடும் வடக்கு நோக்கி அருள்கிறார். இங்கு முருகப்பெருமானின் கருவறை விமானம், ஷண்முகக் கடவுளின் ஷடாட்சர மந்திரத்தை உணர்த் தும் வகையில், ஷட்கோண வடிவத்தில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு!

தென் தணிகை

மூன்று சூரர்களை சம்ஹாரம் செய்வதற்காக நிகழ்ந்ததுதான் குமார சம்பவம். மூன்று அசுரர்களும்  மனிதர்களின் ஆன்மாவை மறைத்திருக்கும் ஆணவம், கண்மம், மாயை ஆகிய மூன்று மலங்களைக் குறிப்பவர்கள் ஆவர். அவர்களை சம்ஹாரம் செய்த குமரக்கடவுளை வழிபட்டால், மும்மலங்களிலும் இருந்து விடுபட்டு, பிறவாப் பேரின்ப நிலையை அடையலாம் என்பது தத்துவம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆணவ மலமாகிய சூரபத்மனை திருச்செந்தூரில் நீரின் மார்க்கமாகவும், கண்ம மலமாகிய சிங்கமுகாசுரனை திருப்பரங்குன்றத்தில் நிலத்தின் மார்க்க மாகவும், தாருகாசுரனை திருப்போரூரில் ஆகாய மார்க்கமாகவும் சம்ஹாரம் செய்தாராம் முருகன். திருப்போரூரில் தாருகாசுரனை சம்ஹாரம் செய்த குமரக்கடவுள், திருத்தணிகை செல்லும் வழியில் குன்றத்தூரில் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவர் வழிபட்ட இறைவன், ‘கந்தழீஸ்வரர்’ என்ற பெயரில் மலையடிவாரத்தில் தனிக்கோயில் கொண்டிருக்கிறார்.

திருத்தணிக்குத் தெற்கில் இருப்பதால், ‘தென் தணிகை’ என்று போற்றப்படும் இந்த மலைக் கோயிலுக்கு 84 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். படிகளின் தொடக்கத்தில் முதலில் அமைந்திருப்பது வலஞ்சுழி விநாயகர் ஆலயம். அவரை வழிபட்டு விட்டு மேலே சென்றால், மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்தை தரிசிக்கலாம்.

குமரன் இளைப்பாறிய குன்றத்தூர்!

கோயிலுக்குள் நுழைந்ததும் முதலில் கொடி மரம் அமைந்திருக்கிறது. கொடிமரத்தின் வலப் புறத்தில் ஸ்ரீவரஸித்தி விநாயகர் காட்சி தருகிறார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்கையை தரிசிக்கலாம்.

மேலும் விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், பைரவர், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி, துர்கை, வில்வ மரத்தடி விநாயகர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். தீர்த்தக் கிணறு ஒன்றும் உள்ளது.

திருக்கல்யாண மண்டபம், மகா மண்டபம் மற்றும் அர்த்த மண்டபத்துடன் திகழ்கிறது முருகனின் கோயில். கருவறையில் வள்ளி, தெய்வானை சமேதராக வடக்கு நோக்கித் திருக் காட்சி தருகிறார் முருகப்பெருமான்.

கருவறையில் நாம் முருகக்கடவுளைத் தரிசித்துக் கொண்டிருந்தபோதுதான், அய்யாசாமி என்ற அடியவர், இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

நாமும் அவர் சொன்னபடியே தரிசித்து அனுபவித்தோம் முருகனின் அருள்கோலத்தை. ஆம்! சந்நிதிக்கு நேரெதிரில் நின்று தரிசித்தபோது, முருகப்பெருமானை மட்டுமே பார்க்க முடிந்தது. அதேபோல், சந்நிதிக்கு வலப்புறத்தில் நின்று பார்த்தபோது முருகனையும் தெய்வானையையும் தரிசிக்க முடிந்தது. இடப்புறத்தில் நின்று பார்த்த போது, முருகனையும் வள்ளியம்மையையும் தரிசிக்க முடிந்தது. அற்புதம்தான்! 

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் அருளும் சிங்காரவேலர் சந்நிதியிலும் இப்படியான சிறப்பைக் காணலாம்.

தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் நிச்சயம்!

குன்றத்தூர் முருகன் ஆலயத்தில் அர்ச்சகராக இருக்கும் திருமுருகனிடம் கோயிலின் சிறப்புப் பிரார்த்தனைகள் குறித்துக் கேட்டோம்.

‘`குழந்தை இல்லாத தம்பதியர் கோயிலிலுள்ள அரசமரத்தில் தொட்டில் கட்டி முருகக்கடவுளை வழிபட்டு வேண்டிக்கொண்டால் அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், குழந்தையின் எடைக்கு எடை பழம், சர்க்கரை, வெல்லம் என்று தாங்கள் வேண்டிக்கொண்டபடி காணிக்கை செலுத்துகிறார்கள்.

குமரன் இளைப்பாறிய குன்றத்தூர்!

மேலும், குழந்தைக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால், இங்கு வந்து தவிடு மற்றும் வெல்லம் வழங்கி, ‘இந்தக் குழந்தையை நீதான் காப்பாற்றவேண்டும்’ என்று பிரார்த்தனை செய்துகொண்டு, குழந்தையை முருகனுக்குத் தத்து கொடுத்து வாங்கிச் செல்வதும் வழக்கமாக இருக்கிறது. குழந்தையை முருகன் காப்பாற்றுவார் என்று  நம்பிக்கையுடன் இந்தப் பிரார்த்தனையைச் செய்கிறார்கள் பக்தர்கள்’’ என்று சிலிர்ப்புடன் கூறினார்.

திருமணத்தடை நீங்கவும் இந்தத் தலத்துக்கு வந்து முருகப்பெருமானை மனம் உருக வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள். அவர்களின் வேண் டுதல் பலித்ததும் தம்பதி சமேதராக வந்திருந்து, சுவாமிக்குக் கல்யாண உற்சவம் செய்து மகிழ்கின்றனர்.  இந்தக் கோயிலில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும் விபூதிதான் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சேக்கிழாருக்கு தரிசனம்...

பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் பெருமான் அவதரித்தது இந்தத் தலத்தில்தான். அவரது விருப்பப்படி இரண்டாம் குலோத்துங்கச் சோழன் இந்தக் கோயிலை எழுப்பியதாக வரலாறு.

சேக்கிழார் பெருமான் தினமும் குன்றத்தூர் குமரனை வழிபடுவதை வழக்கமாகவே கொண்டிருந்தார். அதை நினைவுகூரும் வகையில், மலையடிவாரத்தில் சேக்கிழாருக்குத் தனிச் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும் நடைபெறும் சேக்கிழார் குருபூஜையின்போது, முருகப் பெருமான் மலையிலிருந்து சேக்கிழார் சந்நிதிக்கு எழுந்தருளி, அவருக்கு  தரிசனம் கொடுப்பது மரபாக இருக்கிறது. முருகனின் ஆலயத்தில் ஆடிக் கிருத்திகை, தை மாதக் கிருத்திகை, கந்தசஷ்டி விழா, மற்றும் பல  விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று ஆடிக்கிருத்திகை  திருநாள். அந்தப் புண்ணிய தினத்தில் குன்றத்தூர் சென்று அழகன் முருகனை தரிசித்து வழிபட்டு,  உங்கள் வாழ்க்கைச்செழிக்க வரம்பெற்று வாருங்கள்.

பக்தர்கள் கவனத்துக்கு...

சுவாமி: அருள்மிகு சுப்ரமணிய சுவாமி.

ஸ்தல மரம்: வில்வம்

தலச் சிறப்பு: முருகன் இளைப்பாறிய திருத்தலம். முருகனால் வழிபடப்பட்ட கந்தழீஸ்வரர் கோயிலையும் இத்தலத்தில் தரிசிக்கலாம்.   திருமண வரம் வேண்டும் அன்பர்கள் முருகப்பெருமானுக்குத் திருக்கல்யாண வைபவம் நிகழ்த்தியும், குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டிப் பிரார்த்தனை செய்தும் வழிபடுகிறார்கள்.

எப்படிச் செல்வது..? சென்னை தாம்பரத்திலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவிலும், பல்லாவரத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது குன்றத்தூர். இவ்வூரின் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில், சிறு குன்றின் மீது அமைந்திருக்கிறது திருக் கோயில். சென்னை கோயம்பேடு, தாம்பரம், பல்லாவரம் ஆகிய இடங்களிலிருந்து குன்றத்தூருக்குப் பேருந்து வசதிகள் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism