Published:Updated:

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 9

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 9
பிரீமியம் ஸ்டோரி
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 9

வெ.நீலகண்டன், படங்கள்: சாய் தர்மராஜ்

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 9

வெ.நீலகண்டன், படங்கள்: சாய் தர்மராஜ்

Published:Updated:
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 9
பிரீமியம் ஸ்டோரி
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 9

‘கிராம தெய்வ வழிபாடு என்பது சாதிப் படிநிலையைத் தூக்கிச் சுமக்கிறது’ என்றொரு கருத்து ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுவது உண்டு. சாதிய பாகுபாடுகளில் மனித சமூகம் சிக்குண்ட காலத்துக்கு முன்பிருந்தே இந்த ஆதிவழிபாடு இருக்கிறது.

கல்லாக, மரமாக, செடியாக, கொடியாக, மலையாக, கடலாக என்று பல வழிகளில் மக்கள் இயற்கையையும் தங்கள் மூத்தோரையும் வழிபட்டே வந்திருக்கிறார்கள்.  சாதிய அடுக்கு கள் உருவான காலகட்டத்துக்குப் பிறகு, பெருந் தெய்வ வழிபாட்டின் தாக்கம் அதிகரித்தாலும், மக்கள் தங்கள் மரபுசார்ந்த வழிபாட்டு முறை களில் சமரசம் செய்துகொள்ளவில்லை. 

தங்கள் குடும்பத்தின் தலைவனைக் குடும்ப தெய்வமாக்கியவர்கள், தங்கள் சமூகத்தின் தலை வனைக் குலதெய்வமாக்கினார்கள். நிலத்தின் தலைவன், காவல் தெய்வமானான்.  சிறுதெய்வங்கள், காவல் தெய்வங்கள் குறித்த கூர்ந்த ஆய்வில், சாதிய வேறுபாடுகளில்லாமல் அனைத்து சமூகங் களைச் சேர்ந்தவர்களும் தெய்வ நிலையை எட்டி யிருப்பது புலனாகிறது. இன்னும் நெருக்கமாக அவதானித்தால், விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பிற சமூக வழி பாட்டில் தெய்வங் களாக உயர்ந்து நிற்கிறார்கள்.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 9

எல்லா தெய்வங்களுக்குப் பின்னும் ஒரு கதை இருக்கிறது. நெகிழ்ச்சி, அன்பு, அச்சம் என ஏராள மான உணர்ச்சிகள் அந்தக் கதையில் வேரோடி நிற்கின்றன. உதாரணத்துக்கு, வண்ணார மாடன் கதை. தென்மாவட்டங்களின் பல கிராமங்களில் பொதுவழிபாட்டில் இருக்கிறார் வண்ணாரமாடன். இவரைப்பற்றி ஊருக்கு ஒரு கதை உலவுகிறது. புலவர் அருதக்குட்டி நாடார் என்பவர் ஓலைச் சுவடியில் வடித்த கதையொன்று வண்ணாரமாடன் பற்றிய உயிர்ப்புள்ள சித்திரத்தை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது.

‘தென்மாவட்டத்தைச் சேர்ந்த குறுநில மன்னன்  ஒருவனின் மகன் முண்டுசாமி. ஆட்சி அதிகாரத் தைக் கைப்பற்ற நினைக்கும் பங்காளிகள், முண்டு சாமி குடும்பத்தையே இல்லாது ஒழிக்க முனைகிறார்கள். ஒருநாள், அரச காவலாளிகளின் துணையோடு முண்டுசாமியின் அப்பாவையும் அம்மாவையும் கொலை செய்கிறார்கள். ஆண் வாரிசான முண்டுசாமியையும் கொலை செய்ய முயற்சிகள் நடக்கின்றன. முண்டுசாமியின் சகோதரி, தங்கள் உறவினர்களின் சூழ்ச்சியறிந்து தன் தம்பியைக் காப்பாற்றி அழைத்துக்கொண்டு அரண்மனையைவிட்டு வெளியேறுகிறாள்.

ஒரு குக்கிராமத்தில் சலவைத் தொழில் செய்து வரும் குயிலானின் வீட்டை இருவரும் வந்தடை கிறார்கள். குயிலான், அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகளில் துணியைப் பெற்று, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உவர் மண்ணிட்டு துணிகளை வேகவைத்து, வெள்ளாவி செய்து, அங்குள்ள நதியில் துவைத்து சுத்தம் செய்து, தீப்பாத்திரம் கொண்டு தேய்த்து கொண்டுபோய் கொடுப்பான். முண்டுசாமியும் அவன் சகோதரியும்,  தங்களை மன்னன் குடும்பத்தினர் என்று சொல்லாமல், ஆதரவற்றவர்களாக அடையாளம் காட்டிக் கொண்டார்கள். குயிலானும் தன் பணிக்கு உதவியாக இருக்குமே என்று அவர்களை உடன் வைத்துக்கொண்டான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குயிலானுக்கு ஒரு மகள். பேரழகி. அவள் மீது காதல்வயப்பட்டான் முண்டுசாமி. அவளுக்கும் முண்டுசாமி மீது காதல் பற்றுகிறது. இலைமறையாக இந்தச் செய்தி குயிலான் காதுகளுக்கு வருகிறது.

முண்டுசாமியை அழைத்து, “உண்ட வீட்டுக்கு வஞ்சகம் செய்வது மானுட குணமில்லை.  அவள் உன் தங்கை போன்றவள்” என்று புத்திமதி சொன் னான். ஆனால் காதலுக்கு கண்களுமில்லை... காது களும் இல்லை. இருவரும் காதல் வானில் சிறகடித் துப் பறந்தார்கள். குயிலான் கோபமடைந்தான். தன் ஆட்கள் மூலம் முண்டுசாமியையும் அவனது சகோதரியையும் கொன்றான்.

கொலைசெய்யப்பட்ட முண்டுசாமியும் அவன் சகோதரியும் வாதையாக உருப்பெற்று குயிலான் குடும்பத்தைப் பலிவாங்கத் தொடங்கினர். தன் தவறுணர்ந்த குயிலான், இருவருக்கும் படையலிட்டு  அவர்களைத் தெய்வமாக வணங்க, குடும்பத்தைப் பீடித்திருந்த துயரங்கள் நீங்கின’ என்று  முடிக்கிறார் புலவர்  அருதக்குட்டி. இன்று சாதிப் பாகுபாடில் லாமல் பலரும் வண்ணாரமாடனை அதாவது முண்டுசாமியை குலதெய்வமாக, காவல் தெய்வ மாக வணங்குகிறார்கள்.

தமிழகமெங்கும் பல பகுதிகளில் தீக்குதித்த அம்மன் வழிபாடு தழைத்திருக்கிறது. ‘தீக்குளித்த அம்மன்’ என்றும் சொல்வார்கள். ஒவ்வொரு தீக்குதித்த அம்மனுக்கும் ஒரு கதை இருக்கிறது. பெரும்பாலும், கணவன் இறந்த பிறகு உயிரோடு அவனது சிதையில் குதித்து உயிரிழந்த பெண்களே தீக்குதித்த அம்மனாக வணங்கப்படுகிறார்கள். ஆனால், தென்மாவட்டங்களின் சில பகுதிகளில் தீக்குதித்த அம்மன் வழிபாடு வேறுமாதிரியிருக்கிறது.

சிவகங்கை - மதுரை சாலையில் முத்துப்பட்டி என்னும் கிராமத்தில் ஒரு கோயில் இடிந்து சிதிலம் அடைந்துகிடக்கிறது. உள்ளே ஒரு நடுகல்லும், சூலாயுதத்தின் ஒரு பகுதியும் மட்டுமே மிச்சமிருக் கின்றன. இந்தக் கோயிலை,  ‘தீக்குதித்த அம்மன் கோயில்’ என்கிறார்கள். இந்தக் கோயில் பற்றிய செவிவழிப்பாடல்களில், குயிலி என்ற பெண்ணே தீக்குதித்த அம்மனாக மாறியதாகப் பாடுகிறார்கள் பாட்டிமார்கள். குயிலி, இந்திய சுதந்திரப் போராட் டத்தில் பங்கேற்று உயிர்நீத்த பெண். சிவகங்கை சமஸ்தானத்தின் பெண்கள் படையான ‘உடையாள் பெண்கள் படை’க்குத்  தலைமை ஏற்றவர். சிவகங்கைச் சீமையை ஆட்சி செய்த முத்துவடுகநாதர், ஆங்கிலேயர்களை எதிர்த்து நடத்திய யுத்தத்தில் கொல்லப்பட்டபிறகு, இழந்த நாட்டை மீட்க, சிவகங்கைச் சீமையின் படைக்கு வேலுநாச்சியார் தலைமையேற்றார்.

எட்டு ஆண்டுகள் வனங்களில் தலைமறை வாக சுற்றித் திரிந்து ஒரு வலுவான படையை கட்டமைத் தார். அப்போது வேலுநாச்சியாரின் தனிப் பாது காவலராக இருந்தார் குயிலி. சிலம்பம், வாள் வீச்சு, குத்தீட்டி யுத்தம் என சகல வீரக்கலைகளிலும் வல்லமை பெற்றவர் குயிலி.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 9

தகுதிவாய்ந்த ஒரு படை தயாரானபிறகு சிவகங்கைச் சீமையை மீட்க,  விருப்பாச்சி என்ற இடத்திலிருந்து படைநடத்திச் சென்றார் வேலு நாச்சியார். படையின் பெண்கள் அணிக்கு தலைமையேற்றார் குயிலி. வழிநெடுக வெள்ளை யர்களையும், அவர்களுக்கு உதவி செய்யும் உள்ளூர்த் தலைவர்களையும் கொன்றொழித்துக் கொண்டே படை நகர்ந்தது. ஆனால், சிவகங்கைக் குள் அவ்வளவு எளிதாக நுழைய முடியவில்லை. காளையார்கோவிலிலிருந்து சிவகங்கை வரை அடிக்கு ஒரு வெள்ளைக்கார போர்வீரன் நிறுத்தப் பட்டிருந்தான். காளையார்கோவிலில் படையை நிலைநிறுத்திய வேலுநாச்சியார், குயிலியை அழைத்து ‘மாறுவேடமிட்டு சிவகங்கைக்குள் நுழைந்து விபரமறிந்து வரப் பணித்தார். சென்று வந்த குயிலி,  “நாளை விஜயதசமி என்பதால், சிவகங்கை ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலுவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பெண்கள் மட்டுமே அதில் பங்கேற்பார்கள். நாம் மாறுவேடத்தில் கோயிலுக்குள் நுழைந்து அங்கிருந்து போரைத் தொடங்குவோம்” என்றார். 

நாச்சியார், குயிலியின் கருத்தை ஏற்றுக் கொண் டார். ‘உடையாள் பெண்கள் படை’யினர் சாதார ணப் பெண்களைப் போல கோயிலுக்குள் நுழைந் தனர். ஆயுத பூஜை வழிபாட்டுக்காக, ஆயுதங்கள் அனைத்தும் கோட்டையின் முற்றத்தில் வைக்கப் பட்டிருந்தன. எல்லோரும் வழிபாட்டில் ஆழ்ந் திருக்க, நாச்சியார் கையை உயர்த்தி,  ‘வெற்றிவேல்’, ‘வீரவேல்’ என்று முழக்கமிட்டார். பெண்களின் ஆடைக்குள் மறைந்திருந்த வாள் வெள்ளையர்களை இலக்கு வைத்துப் பாய்ந்தது. ஆங்கிலேயர்கள் சுதாரிப்பதற்குள் பலரின் தலைகள் உருண்டன. மிஞ்சியோர் பூஜையில் வைக்கப்பட்டிருக்கும் தங்கள் ஆயுதங்களை எடுக்க முற்றத்துக்கு ஓடினார்கள்.

குயிலி, விளக்கேற்றுவதற்காக இருப்பு வைக்கப் பட்டிருந்த எண்ணெயை எடுத்து தன் உடலில் ஊற்றிக்கொண்டார். வெள்ளையர்களுக்கு முன்பாக ஓடி முற்றத்தில் குதித்தார். எரிந்து கொண்டிருந்த தீப்பந்தத்தை எடுத்து தன் மேனியில் தீ வைத்துக் கொண்டார். எண்ணெயில் ஊறியிருந்த உடையும் உடலும் பற்றிக்கொண்டது. அவரின் உடலோடு சேர்ந்து வெள்ளையர்களின் ஆயுதங்களும் வெடித்துச்  சிதறின. ஆயுதமற்று திகைத்து நின்ற வெள்ளையர்களின் படையினரை நாச்சியாரின் படையினர் துவம்சம் செய்தனர். 

அன்றைய தினத்திலிருந்து தங்கள் மண்ணைக் காக்கத் தன் உயிரையே அளித்த குயிலியைத் தெய்வமாகவே வழிபட ஆரம்பித்தார்கள் சிவகங் கைச் சீமை மக்கள். ‘தீப்பாய்ந்த அம்மன்’ என்று பெயரிட்டு, முத்துப்பட்டி கிராமத்தில் ஒரு கோயிலையும் எழுப்பினார்கள். இன்றும் சாலை யோரத்தில் உள்ள அந்த சிதிலமடைந்தக் கோயி லைக் கடப்பவர்கள் கையெடுத்து வணங்கி விட்டுத்தான் செல்கிறார்கள். யாரோ சிலர், தவறாமல் மாலை வாங்கி நடுகல்லின் மேல் சாற்று கிறார்கள்.

இதுதான் நம் வழிபாட்டு மரபு. இப்படித்தான் நம் வழிபாடுகள் தொடங்கின. மண்ணுக்கும், மக்களுக்கும், தெய்வத்துக்குமான பந்தம் இந்த உணர்ச்சி இழையில்தான் பற்றிப் படருகிறது.

- மண் மணக்கும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism