Election bannerElection banner
Published:Updated:

ஆதிரை நாயகனின் சதுர தாண்டவம்!

திருவாதிரை தரிசனம்!

ஆதிரை நாயகனின் சதுர தாண்டவம்!
##~##
வே
ட்டைக்குச் சென்ற சோழ மன்னன், கடும் தாகத்தில் தவிக்க... அங்கே இருந்த கரும்புத் தோட்டத்துக்குச் சென்று, ஒரு கரும்பை அப்படியே பிடுங்கிச் சாப்பிட முனைந்தான். விளைவு... அங்கிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ச்சி அடைந்த மன்னன் அந்த இடத்தைத் தோண்ட உத்தரவிட, அங்கிருந்து வெளிவந்தது சுயம்புலிங்கம் ஒன்று! பிறகு ஸ்ரீஆதிநாதர் எனும் திருநாமம் சூட்டி, பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினான் என்கிறது ஸ்தல வரலாறு.

திருச்சியில், முருகப் பெருமான் கோலோச்சும் முக்கியமான ஆலயம்; அருணகிரிநாதர் உருகி உருகிப் பாடிய தலம்; திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள், இந்தத் தலத்துக்குப் பலமுறை வந்து சொற்பொழிவாற்றியதுடன், இந்தக் கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகளையும்  செய்த திருவிடம் என வயலூருக்குத்தான் எத்தனைப் பெருமைகள்?!

ஆதிரை நாயகனின் சதுர தாண்டவம்!

இது சிவ தலம் என்றாலும் முதன்மையானவர் ஸ்ரீசுப்ரமணியர்தான்! தடைப்பட்ட திருமணத்தால் கலங்கித் தவிப்பவர்கள், பிள்ளை பாக்கியம் இல்லையே என வருந்துவோர் இங்கு வந்து பிரார்த்தித்தால், விரைவில் மாங்கல்ய வரம் கிடைக்கும்; வீட்டில் தொட்டில் சத்தம் கேட்கும் என்பது ஐதீகம்! இந்தத் தலத்தில் திருமணம் செய்தால், குடும்ப ஒற்றுமையுடன், கருத்து வேற்றுமையின்றி வாழலாம் என்பதால், ஏராளமான அன்பர்கள் இங்கே திருமணம் செய்துகொள்கின்றனர்.

இந்தத் தலத்தின் கூடுதல் சிறப்பு... சதுர தாண்டவக் கோலத்தில் அற்புதத் திருமேனியராகக் காட்சி தருகிறார் ஸ்ரீநடராஜப் பெருமான். சிதம்பரம் தலத்தில் தில்லை அம்பலவாணனுக்குச் செய்யப்படுவது போலவே, அனைத்து ஆராதனைகளும்  செய்யப்படுகின்றன. திருவாதிரை நட்சத்திர நாளில், இங்கு வந்து நடராஜருக்கு அபிஷேகம் செய்து வணங்கினால், நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்கின்றனர், பக்தர்கள். தவிர, திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டால், கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்!

மார்கழித் திருவாதிரையிலும் மற்ற திருவாதிரை நாட்களிலும் இங்கு வந்து ஆதிரை நாயகனை ஆத்மார்த்தமாக வேண்டுங்கள்; அனைத்து வரங்களையும் தந்தருள்வான் ஆடலரசன்!  

  - ஆ.அலெக்ஸ் பாண்டியன் 
படங்கள்: ர.அருண்பாண்டியன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு