
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அழகிய லிங்கத் திருமேனியில் திருத்தளிநாதராக மூலவர், சகல தோஷங்களையும் போக்கி சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரும் ஸ்ரீயோக பைரவர், பத்துத் திருக்கரங்களுடன் கௌரி தாண்டவ கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீநடராஜ பெருமான்... எனக் கோயிலும் அதன் தொன்மையும் பிரமிக்க வைக்கின்றன. ஸ்ரீதிருத்தளிநாதர், ஸ்ரீசிவகாமி அம்பாள், ஸ்ரீயோக பைரவர், ஆடல்வல்லான் என அனைவரும் யோக நிலையில் இருப்பதாக ஐதீகம். எனவே இந்தத் தலத்தை, யோக பூமி எனத் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.
இங்கு வந்து, ஸ்ரீதிருத்தளிநாதரையும் அம்பிகையையும் வணங்கித் தொழுதால், வாழ்வில் எல்லா நலனும் பெற்று, ஞானமும் யோகமும் கிடைத்து வாழலாம் என்பது ஐதீகம். தேய்பிறை அஷ்டமியில் ஸ்ரீயோக பைரவருக்கு வடைமாலை சார்த்தி வழிபட்டால், எதிரிகள் தொல்லை ஒழியும்; வியாபாரத்தில் வெற்றியும் லாபமும் நிச்சயம் என்கின்றனர்.
மாணிக்கவாசகர் வணங்கிய தலம்; வியாக்ரபாத முனிவர் வழிபட்ட ஆலயம் எனப் போற்றப்படுகிற இந்தக் கோயிலில், திருக்கார்த்திகை தீப விழாவும் ஐப்பசி அன்னாபிஷேகமும் சிறப்புறக் கொண்டாடப்படுகின்றன. ஆனித் திருமஞ்சன நாளில், சிவகங்கை மாவட்ட மக்கள் பலரும் திரள்வார்களாம்!
குறிப்பாக, ஆருத்ரா தரிசன வைபவம் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. மார்கழி திருவாதிரை நாளில், ஸ்ரீநடராஜரின் உத்ஸவத் திருமேனி, சர்வ அலங்காரத்துடன் வீதியுலா வரும் அழகே அழகு!
திருவாதிரை நாளில், ஸ்ரீதிருத்தளிநாதர் கோயிலுக்கு வாருங்கள். வாழ்வில் நல்ல திருப்பங்கள் நிகழ்வதை உணர்வீர்கள்!
- ஆர்.கே.சஞ்சீவ்குமார்
படங்கள்: ச.லட்சுமிகாந்த்