
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சிவனார் மூலவராகவும், வன்னிமரத்தடியில் ஸ்ரீபிரம்மாவும் தனிச்சந்நிதியில் ஸ்ரீவீர நாராயணபெருமாளும் காட்சி தருகிற தலம் இது! மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கிற இந்தத் திருத்தலத்தில், ஸ்ரீநடராஜரும் அழகு ததும்பக் காட்சி தருகிறார் என்பது கூடுதல் சிறப்பு!
பித்ருக்களின் தோஷம் போக்கும் இந்தத் தலத்தில், வருடம் முழுவதும் விழாக்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் குறைவில்லாத கோயில் இது எனக் கொண்டாடுகின்றனர், அன்பர்கள். சித்திரை மாதத்தில் நடைபெறும் வருஷாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்களாம்!
மார்கழியில் கொண்டாடப்படுகிற திருவாதிரைத் திருநாள் மட்டும் என்னவாம்?! இங்கு, ஆனந்தத் தாண்டவக் கோலத் தில் காட்சி தரும் ஸ்ரீநடராஜபெருமானுக்கும் ஸ்ரீசிவகாமி அம்பிகைக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்து, அலங்காரங் கள் செய்து, விசேஷ பூஜைகள் செய்கிற வைபவத்தைத் தரிசிக்க, காணக் கண் கோடி வேண்டும்.
தினமும் ஒரு அலங்காரத்தில் ஸ்ரீநடராஜர் திருவீதியுலா வரும்போது, அந்தத் தில்லையம்பலத்தானே இங்கு வந்துவிட்டதுபோல் பிரமிப்பு ஏற்படும் என்கின்றனர் பக்தர்கள்.
திருவாதிரை நோன்பு இருந்து, ஸ்ரீஆடல்வல்லானின் திருதரிசனத்தைக் கண்ட பிறகு, விரதத்தை முடிக்கின்றனர் அன்பர்கள். இந்த விரதம் மேற் கொண்டால், திருமண பாக்கியம் மட்டுமின்றி, சகல செல்வங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்!
திருவாதிரை நாளில், இங்கு வந்து, பால், தயிர், பஞ்சாமிர்தம், பழங்கள் ஆகியவற்றால் ஆடல்வல்லானுக்கு அபிஷேகம் செய்து தரிசியுங்கள். ராகு - கேது மற்றும் சனி கிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை!
கட்டுரை, படங்கள்: மு.கார்த்திகேயன்