Published:Updated:

`ஐயப்பன நிம்மதியா தரிசிக்கிற காலம் இனி வருமா?’ - சபரிமலை சென்று வந்த ஐயப்ப பக்தர் குமுறல்

`ஐயப்பன நிம்மதியா தரிசிக்கிற காலம் இனி வருமா?’ - சபரிமலை சென்று வந்த ஐயப்ப பக்தர் குமுறல்
`ஐயப்பன நிம்மதியா தரிசிக்கிற காலம் இனி வருமா?’ - சபரிமலை சென்று வந்த ஐயப்ப பக்தர் குமுறல்

``முன்னாடி பம்பைலேருந்து கோயிலுக்குப் போறதுக்கு பஸ் செலவு 20 ரூவாதான். அப்புறம் 40 ரூவா வாங்குனாங்க. இப்ப 150 ரூவா வாங்குறாங்க!”

``பரிமலை, ஐயப்பன் கோயில் ஐப்பசி மாச நடை திறப்புக்குப் போயிருந்தேன். அப்பல்லாம் இந்த மாதிரி போலீஸ் கெடுபிடி எதுவும் இல்ல. ஆனா, இந்த மாசம் அவ்ளோ கெடுபிடி. எங்க பார்த்தாலும் போலீஸ்தான் நிக்கிறாங்க. குடிக்க தண்ணி கெடைக்கல. சாப்பாடு இல்ல. ஏகப்பட்ட கெடுபிடிகள். கோயில்ல 10 நிமிஷத்துக்கு மேல உக்கார விடமாட்டேங்கிறாங்க...” 

- ஐயப்ப பக்தரான போஸ் குருசுவாமி, கார்த்திகை மாத மண்டல பூஜை செய்ய சபரிமலைக்குச் சென்று வந்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

‘சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க பெண்களையும் அனுமதிக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்புக்கு எதிராகச் சபரிமலையிலும், கேரளாவிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் சபரிமலைப் பகுதியைச் சுற்றிலும் போலீஸார் 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பைச் செயல்படுத்த கேரள அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ஆனால், அதற்குப் பக்தர்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், மண்டல பூஜையை முன்னிட்டு, கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டது. அன்று முதலே என்றுமில்லாத அளவுக்குச் சபரிமலையில் பெரும் கெடுபிடியுடன் செயல்படுகிறார்கள் காவல் துறையினர். காவல் துறையின் கெடுபிடியாலும் தாக்குதலாலும் வெளி மாநிலத்திலிருந்து செல்லும் பக்தர்கள் பலர் ஐயப்பனை தரிசிக்காமலே திரும்பிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். 'சபரிமலையில் இரவு தங்குவதற்கும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக்கூடக் கேரள அரசு செய்து தரவில்லை' என்ற குற்றச்சாட்டுகளும் எழுகின்றன. சமீபத்தில்கூட ‘சரணம் ஐயப்பா...’ என்று சபரிமலை கோயிலுக்குள் முழக்கமிட்ட பக்தர்களைக் காவல் துறையினர் கைது செய்து விடுவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாயின. சில இடங்களில் பக்தர்கள் மீது தாக்குதலும் அரங்கேறியிருக்கிறது என்று கூறப்படுகிறது.

பக்தர்கள் மீதான தொடர் கெடுபிடிகளாலும், தாக்குதல்களாலும் எப்போதுமில்லாத அளவுக்குச் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும், கோயிலுக்கு வரக்கூடிய வருமானமும் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் சபரிமலையில் 63 சதவிகித வருமானம் குறைந்திருக்கிறது.

``பகவான் பரசுராமர் தன்னோட கோடரியால சீர்ப்படுத்தி, செம்மைப்படுத்திய புண்ணிய பூமி கேரளா. அவர் அச்சன் கோயில், ஆரியங்காவு, குளத்துப் புழை, எரிமேலி, பாபநாசம் சொரிமுத்து ஐயனார், சபரிமலைன்னு ஆறு புண்ணிய க்ஷேத்திரங்கள உருவாக்குனாரு. சபரிமலைல மட்டும்தான் பரசுராமர் யோக நிலைல ஐயப்பன நிறுவியிருக்காரு. அதனாலதான் இங்க மட்டும் பெண்கள அனுமதிக்கறது இல்ல. இது கோயில் ஐதிகம். கேரளாவுல குருவாயூருக்கு அப்புறமா அதிக பக்தர்கள் வந்து, வருமானம் குவியிற இடம் சபரிமலைதான். கோயிலோட புண்ணியத்த சிதைக்கிறதுக்கு கேரள அரசும் காவல் துறையும் சேர்ந்து செயல்படறாங்க. எப்பவும் இல்லாத அளவுக்குப் பக்தர்கள் மேல அதிகமா கெடுபிடி பண்றாங்க.

ஐயப்பன் கோயிலுக்குன்னு ஒரு பாரம்பர்யம், ஐதிகம் இருக்கு. அந்த ஐதிகத்தையும், நம்பிக்கையையும் சிதைக்க பார்க்குறாங்க. உச்ச நீதிமன்ற தீர்ப்ப ஏத்துக்காத ஐயப்பன் சுவாமி பக்தர்கள் மேல தாக்குதல் நிகழ்த்துறாங்க. பம்பைலேருந்து ஐயப்பன் சந்நிதானம் போறதுக்கு ரெண்டுலேருந்து மூணுமணி நேரம் ஆகும். ஆனா, இப்போ 45 நிமிஷத்துல மலையேறிட்டு சாமிய தரிசனம் செஞ்சிட்டு உடனே பம்பை திரும்பிடணும்னு போலீஸ் சொல்றாங்க. பக்தர்கள் ஒரு மண்டல விரதம் இருந்து கட்டுப்பாடா கோயிலுக்கு வர்றதே ஐயப்பன தரிசிச்சி, நெய் அபிஷேகம் செஞ்சி வழிபடத்தான். அப்பதான் மனசு நிறைவடையும். நடுராத்திரிக்கு வர்ற பக்தர்கள் கோயில்ல இருக்கற நடைப் பந்தல்ல தங்கி, அதிகாலைலேருந்து பகல் 12 மணிவரைக்கும் நெய் அபிஷேகம் செய்வோம்.

ஆனா, இப்ப அந்த நடைப் பந்தல்ல யாரும் படுக்க முடியாத அளவுக்கு ஃபையர் ஹோஸ்னால தண்ணிய அடிச்சி சேறாக்கிட்டாங்க. ராத்திரி வர பக்தர்கள்ட்ட இருக்கற நெய்ய வாங்கிட்டு அப்படியே அனுப்பிடறாங்க. இது பக்தர்களுக்கு இழைக்கப்படற மிகப்பெரிய அநீதி. ‘சரணம் ஐயப்பா’னு கோஷம் போட்டா போலீஸார் தாக்குறாங்க. தலைல இருக்கற இருமுடி ஐயப்பனுக்கு நிகரானது.

கோயிலுக்குப் போற ஒவ்வொருத்தரும் இருமுடியா ஐயப்பன கட்டிக்கிட்டு போயி, கோயில்ல இறக்கி வச்சிட்டு வரோம். ஆனா, போலீஸ் இருமுடி கட்டிருக்கற பக்தர்களையே தாக்குறாங்க. வந்த களைப்பு தீர கீழ உக்காரலாம்னு பார்த்தா விட மாட்டேங்கறாங்க. நிம்மதியா கோயிலுக்குப் போயி ஐயப்பன தரிசனம் செஞ்சிட்டு திரும்பற காலம் இனி வருமான்னு தெரில... முன்னாடி பம்பைலேருந்து கோயிலுக்குப் போறதுக்கு பஸ் செலவு 20 ரூவாதான். அப்பறம் 40 ரூவா வாங்குனாங்க. இப்ப 150 ரூவா வாங்குறாங்க” என்று கலங்கியபடி, சபரிமலையில் தனக்கு ஏற்பட்ட கெடுபிடிகளை ஆதங்கத்துடன் பகிர்ந்துகொண்டார் போஸ் குருசுவாமி. இவர் எப்போதும் தவறாமல் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசித்து வருபவர்.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதுத் தொடர்பாக பலருக்கு மாற்றுக் கருத்துகள் இருப்பினும், அதையெல்லாம் தாண்டி அப்பாவி பக்தர்களுக்குக் கெடுபிடிகளின் காரணமாக மன உளைச்சல், வெறுப்பு ஏற்படாதவாறு பார்த்துகொள்வது அரசின் பொறுப்பு. விரைவில், அங்கே இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்ப்போம். 

இருமுடிகட்டி, சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் கவனத்துக்கு...

* சபரிமலையில் அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. முடிந்தவரைத் தண்ணீர், உணவு ஆகியவற்றைக் கையோடு, வீட்டிலிருந்து கொண்டு செல்வது நல்லது.

* தற்போதிருக்கும் சூழலில், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சபரிமலை பயணத்தைத் தவிர்த்துவிடுவது நல்லது. மாதம்தோறும் நடை திறக்கும்போது குழந்தைகளை அழைத்துச் செல்வது நல்லது. 

* ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதனால், வெளியில் தங்க நேரிட்டால் குளிர் தாங்கும் அளவுக்குப் போர்வையை எடுத்துச் சென்று விடுங்கள்.

* கோயிலில் இரவு தங்கி அதிகாலை பூஜை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அதனால், அதிகாலை நேரத்தில் கோயிலை அடையுமாறு பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு