Published:Updated:

லளிகம் - பொன்னியம்மன் கோயில்

லளிகம் - பொன்னியம்மன் கோயில்

லளிகம் - பொன்னியம்மன் கோயில்

லளிகம் - பொன்னியம்மன் கோயில்

Published:Updated:
லளிகம் - பொன்னியம்மன் கோயில்
##~##
பெ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ண் ஏர் கட்டி உழுது அம்மனுக்குத் திருவிழா செய்தால், அந்த முறை அமோக விளைச்சலைத் தந்தருள்கிறாள் பொன்னியம்மன்!  

தருமபுரி- சேலம் சாலையில் உள்ளது நல்லம்பள்ளி. இங்கிருந்து கிழக்கில், சுமார் 4 கி.மீ. பயணித்தால், லளிகம் எனும் கிராமத்தை அடையலாம். ஊருக்கு வடக்கே, சுமார் அரை கி.மீ. தொலைவில், அழகுறக் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீபொன்னியம்மன். சுற்று வட்டாரத்தில் உள்ள 12 கிராமங்களுக்கும் இவள்தான் கண்கண்ட தெய்வம்!  

ஏழு வருடங்களுக்கு ஒருமுறை, ஆடி மாதத்தில், விமரிசையாக நடைபெறுமாம் திருவிழா! விழாவுக்கு 22 நாட்களுக்கு முன்பே, நோன்பு சாட்டுதல் நடைபெறுகிறது. இதை யாரும் பார்க்கக்கூடாது. பிறகு, நள்ளிரவு 12 மணிக்குப் பொன்னிக்கும் பொன்னனுக்கும் திருமணம் நடைபெறுவதை அனைவரும் தரிசிப்பார்கள். கிட்டத்தட்ட இதையே நோன்பு சாட்டுதல் வைபவமாக்கிக்கொண்டனர் பக்தர்கள்! கிராமங்களில் உள்ள அனைத்து சமூகத்தவரும் கோயில் விழாவில் பங்கு கொள்வதால், இங்கே வேற்றுமைகள் ஏதுமில்லை என்று பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், கிராம மக்கள்.

16-ஆம் நாள் விழாவில், மிட்ராரெட்டி ஹள்ளி எனும் ஊரில் உள்ள ஸ்ரீஆகாசபெருமாள் கோயிலில் பூ மிதித் திருவிழா நடைபெறும். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்களது நேர்த்திக்கடனாக பூ மிதிக்கின்றனர். மறுநாள், 'பெண் ஏர் கட்டுதல்’ எனும் நிகழ்ச்சி நடைபெறும்.

இதுதான் கோயிலின் மிக முக்கியமான வைபவம்!

லளிகம் - பொன்னியம்மன் கோயில்

பெண் கரக வீடு எனும் குடிசை அமைத்து, திருவிழா நிறைவுறும்வரை பெண் அங்கே விரதமிருப்பார். இதே போல், ஆண் கரக வீடு எனும் குடிசையில் ஆண் ஒருவர் விரதமிருப்பார். இந்த நாளில் ஊர் நாட்டாமை, தர்மகர்த்தாக்கள், கிராம மக்கள் என அனைவரும் திரண்டு, மேளதாளத்துடன் வந்து அழைப்பார்கள். குடிசையில் உள்ள பெண் எடுத்து வரும் கரகத்துக்குப் பூசைகள் நடைபெறும். இரண்டு பேர் வெப்பாலைக் கொம்பினைத் தலையில் கொம்புபோல் கட்டிக்கொண்டு, மாடுகள்போல் வேடமிட்டு நிற்க, அந்தப் பெண் இவர்களை இழுக்க, பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கலப்பையைப் பிடிக்க, இன்னொருவர் விதை தானியங்களை விதைப்பது போல் தூவியபடியே வருவார். அப்போது அவர் வைத்திருக்கும் பாத்திரத்தில், ஊர்மக்கள் விதை தானியங்களை நிரப்பியபடியே இருப்பார்கள். கீழே விதைத்த தானியங் களை எடுத்து நிலத்தில் விதைத்தால், அந்த முறை விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது நம்பிக்கை!

இதன் பிறகு, மாவிளக்கு கட்டுதல் எனும் நிகழ்ச்சி நடைபெறும். சுற்றுவட்டார ஊர்ப்பெண்கள் அனைவரும் மாவிளக்கேற்றி, பொன்னியம்மனை வழிபடுவார்கள். மூன்றாம் நாள் பொங்கல் படையலிடுவர்! இதேபோல்  நிலத்தில் விளைந்த தானியங் களைக்கொண்டு வருடந்தோறும் அம்மனின் திருப்பாதத்தில் வைத்து பூஜை செய்து, பொங்கலிட்டு வழிபடுகின்றனர்.  

இவளது திருச்சந்நிதிக்கு வந்து, தங்களது குறைகளை இறக்கி வைத்துப் பிரார்த்தித்தால் போதும்; திருமணத் தடை அகலும்; பிள்ளை பாக்கியம் உண்டாகும்; தீராத நோயும் தீரும் என்கின்றனர் 12 ஊர்க்காரர்களும்!

காவிரி நதியின் இன்னொரு பெயர்... பொன்னி! பொன்னி நதி பாய்ந்தோடுகிற ஊரில் வசித்து, மொத்த ஊர்களையும் காப்பதால், அம்மனுக்கும் பொன்னி எனத் திருநாமம் அமைந்ததாம்!

பொங்கல் நன்னாளில் பொன்னியை வணங்குவோம்; நிலத்தை வளமாக்கி, மனத்தை மகிழ்வூட்டுவாள், பொன்னி அம்மன்!

  - து.அர்ச்சனா
படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism