தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 10

ரங்க ராஜ்ஜியம் - 10
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 10

இந்திரா சௌந்தர்ராஜன் - ஓவியம்: ம.செ

விரும்பிநின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணிணை களிக்கு மாறே.


-தொண்டரடிப்பொடியாழ்வார்

ஸ்ரீராமபிரான், தன்னையே பிரணவாகாரப் பெருமாள் வடிவில் ஒப்படைத்துவிட்டதாக நினைத்துப்  பூரிப்புடன் இருந்த விபீஷணனிடம், சூரிய வம்சத்தின் குலகுரு வசிஷ்டர் புன்னகையுடன் பேசத் தொடங்கினார்.

‘`இலங்கை வேந்தனே! நீ பெரும் புண்ணியவான். மற்றவர்கள் தவத்தின் பயனாகப் பெற்ற மூர்த்தியை நீ பரிசாகவே பெற்றுவிட்டாய்.  இந்த மூர்த்தி யைப் பெறுவது பெரிதல்ல. உரிய முறையில் போற்றி வழிபடவும் வேண்டும். இல்லாவிட்டால்...’’ என்று எச்சரிப்பது போல் கூறிய வசிஷ்டர் சற்றே நிறுத்த, விபீஷணன் கூர்ந்து கேட்கத் தொடங்கினான்.

‘`ஆசார அனுஷ்டானங்கள் துளியும் தவறக் கூடாது. தர்ம சிந்தையோடும் இருக்கவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், இந்தப் பிரணவாகாரம் தன் வழியைத் தானே பார்த்துக்கொண்டுவிடும். இதை நாம் பயன்படுத்தவோ இயக்கவோ முடியாது. இதுவே நம்மைப் பயன்படுத்தி இயக்குகிறது எனும் ஞானமும் மிக முக்கியம்’’ என்று வசிஷ்டர் கூறி முடித்தார். கூடுதலாய் இன்னொன்றையும் கூறினார்.

ரங்க ராஜ்ஜியம் - 10

“விபீஷணச் சக்ரவர்த்தியே! இந்தப் பிரணவாகார விமானத்தை முதலில் சுமந்தவன் கருடன். அடுத்து சுமந்தவன் அனுமன். மூன்றாவதாய் நீ சுமக்க இருக்கிறாய். உன் பொருட்டு எவரும் இதைச் சுமப்பது எளிதல்ல. எந்த ஒரு வினைக்கும் ஒரு பதில் வினை உண்டு என்பதால், இதைச் சுமப்பவருக்கும் ஒரு பதில் வினை உண்டு. அது, நித்யசூரியாய் வைகுண்டத்தில் வாசம் புரிவ தாகும். பாக்கியத்துக்கு உரிய அந்த வினைக்கு நான்கூட இன்னும் தகுதி படைத்தவனாக ஆனேனா எனத் தெரியவில்லை. எனவே, உனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை நீ நன்கு பயன்படுத்திக்கொள். இலங்கைக்குச் சென்று சேரும்வரை இதை நீயே உன் தலையில் சுமந்து நடக்கவேண்டும். உன்னால் இயலுமா?”

வசிஷ்டர் கேட்ட விதமே. ‘அது உன்னால் முடியாது’ என்று கூறுவது போலவும் இருந்தது. விபீஷணனோ அதைக் கேட்டு பதறிப்போனான்.

‘`மாமுனியே! இது என்ன கேள்வி? இயலுமா என்று கேட்டுவிட்டீரே..! இயன்றாகவேண்டும். யாருக்குக் கிடைக்கும் இப்படி ஒரு பாக்கியம்? என் வரையில் இது பாக்கியம் மட்டுமல்ல... பரிகாரமும் கூட. பாழ்பட்டு கிடக்கும் என் இலங்கை மண்ணை ரட்சிக்கப்போகும் இப்பெருமானை நான் சுமக்காவிட்டால் வேறு யார் சுமப்பார்? வேறு யாரும் முன் வந்தாலும் நான் அதற்குச் சம்மதிக்கமாட்டேன். எப்பாடு பட்டாவது இப்பெருமானை என் சென்னிமேல் வைத்துச் சுமப்பேன். இது சத்தியம்” என்று விபீஷணன் உணர்ச்சிப் பிரவாகமானான்.

ரங்க ராஜ்ஜியம் - 10


அனைத்தையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீராமனும் சீதாவும், விபீஷணனை அதன் நிமித்தம் ஆசீர்வதித்தனர். அத்துடன்,  பூசனைக்குரிய சாளக்ராமக் கற்கள் மற்றும் தீர்த்தப் பாத்திரங்கள், சாற்று நகைகள் கொண்ட ஒரு பெட்டியையும் ஆலயத்து வைதீகர் முன்வந்து ஒப்புவித்தார் (ஆலய கைங்கர்யம் புரிவோரைப் பட்டர்கள் என்று விளிக்கும் ஒரு வழக்கம், விஜய நகர சாம்ராஜ்ஜியம் தோன்றியபிறகே உருவாயிற்று).

பிரணவாகாரப் பெருமாளை விபீஷணன் சுமக்கத் தொடங்கவும் கூட்டம் கோஷமிட்டது. விபீஷணனோடு வந்த அவன் உபகர்த் தர்கள் அந்தப் பெட்டியைத் தங்கள் சென்னிமேல் வைத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட எத்தனித்தனர்.

விபீஷணனைத் தொடர்ந்து சுக்ரீவன், ஜாம்பவான் உள்ளிட் டோரும் அவரவர் ஊருக்குப் புறப்பட் டனர். அவர்களை வழியனுப்பும் சம்பவம் ஒரு விழா போல நடைபெறத் தொடங்கியது. அயோத்தி நகர எல்லை வரை அரசவைப் பிரதி நிதிகளும், ஊர்ஜனங்களும் சென்று வழியனுப்பினர்.
விபீஷணனும் தன் சிரத்தின் மீது பிரணவாகாரப் பெருமாள் விக்கிரகம் இருந்திட, கம்பீரமாய் நடக்கலானான். வீதிமருங்கில்  சூழ்ந்திருந்தவர்கள் பிரணவாகாரப் பெருமாள் மேல் மலர்களைத் தூவி கைகூப்பி வணங்கினர். சிலர் விபீஷணனை முறைத்துப் பார்த்தனர். ‘நீ பட்டாபிஷேக வைபவத்தில் கலந்துகொள்ள வந்தாயா... இல்லை, எம்பெருமானைக் கவர்ந்து செல்ல வந்தாயா?’ என்று மனதுக்குள் கேள்வி கேட்டு முணுமுணுத்தனர்; வெளிப்படையாகக் கேட்கத் தோன்றினாலும் ஸ்ரீராமனின் நிமித்தம்   அதை மனதுக்குள் அடக்கிக்கொண்டனர்.

அதேநேரம், ஓர் அதிசயம் போன்று விண்ணில் வருணனும் மேகம் கொண்டு பந்தலிட்டு, விபீஷ ணன் நடக்கும் வழியெங்கும் இதமான நிழலைப் பரப்பியதுடன், குளிர்ச்சியான பூந்துளிகளையும் தெளித்து தன் பங்குக்கு சேவை செய்தான். சூரியனும் அவ்வப்போது எட்டிப்பார்த்து, தன் குல தெய்வத்தை வணங்கி தனது பக்தி உணர்வைக் காட்டினான். வாயுவும் இதமாக வீசி விபீஷணன் மேனியைக் குளிர்வித்தான். விண்ணவர்களில் மற்றவர்களும் பூவுலகில் நிகழும் அந்தக் காட்சியை கண்கொட்டாதபடி பார்த்து மகிழ்ந்திருந்தனர்!

வைகுண்டத்தில் எம்பெருமாட்டியிடம் மட்டும் சிந்தனை கலந்த தோற்றம்! எம்பெருமான் விடுவாரா என்ன?

“லட்சுமி! எது குறித்து இத்தகைய சிந்தனை?”

“நீங்கள் நிகழ்த்தும் நாடகம் குறித்துதான்...”

“நீ எதைச் சொல்கிறாய்?”

“அயோத்தியை விட்டுப் பிரிந்து புறப்பட்டு விட்டீர்களே... அதைச் சொல்கிறேன்.”

“அங்கேதான் நான் ராமனாக நடமாடிக் கொண்டே இருக்கிறேனே..?''

“அப்படியானால், என்னைச் சிறைப்பிடித்து சித்ரவதை செய்த இலங்கைக்குச் செல்வதில்தான் இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியா?”

“அதில் தவறென்ன... காயத்துக்குத்தானே மருந்து தேவை?”

“மருந்துக்கு ஒரு விபீஷணன் போதுமா?”

“போதாதென்று கருதுகிறாயா?”

“தாங்கள் அறியாததா? அந்த மண்ணை நினைத் தாலே என் சிறைப்பாடல்லவா நினைவுக்கு வருகிறது?”

“லட்சுமி... கடலில் விளைந்தவள் நீ. நிலம் கோதக் கிடைத்ததால் ‘கோதை’ என்றானவள். அதனாலோ என்னவோ அந்த மண் மக்கள் போலவே நீயும் பேசுகிறாய். உனக்குள்ளுமா சாமான்யப் பெண் பாவனை?”

“நான் எனக்காக எங்கே பேசுகிறேன். என்னை யொத்த பெண்ணினம் எப்படிச் சிந்திக்கும் என்றெண்ணிப் பேசுகிறேன்.”

“முடிவாக என்ன சொல்ல விழைகிறாய்?”

“நான் சொல்ல என்ன இருக்கிறது. நீங்கள்தான் சிலருக்கு வாக்குக் கொடுத்துள்ளீர்கள். அதனை எண்ணிப் பாருங்கள்.”

“சோழ அரசன் தர்மவர்மாவையும், நீலி வனத்து ரிஷிகளையும் நீ எனக்கு ஞாபகப்படுத்து கிறாயா... நான் அவர்களை மறக்கவில்லை...”

“அவர்களை மறக்காத நிலையில், விபீஷணன் வசம் ஏன் சேர்ந்தீர்கள்? அதுதான் புரியவில்லை...”

ரங்க ராஜ்ஜியம் - 10

“முதலில் பட்சியாகிய கருடன், அடுத்து விலங் காகிய அனுமன் மூன்றாவதாய் மனிதனாகிய விபீஷணன் என்று மூவர் சென்னிகளும் பட விரும்பினேன். பட்டுவிட்டன! தனது தவத்தின் போது அண்ணன் ராவணனைப் போல், ‘அது வேண்டும், இது வேண்டும்’ என்று விபீஷணன் எங்கே கேட்டான்? என்னை மறவாத உள்ளம் வேண்டும் என்று மட்டுமே வேண்டினான். அப்படிப்பட்ட அவனையும் எவரும் மறந்து விடக் கூடாதல்லவா... அதற்காகவே அவனுக்கு இந்த வாய்ப்பு.”

“நீங்கள் சொல்லச் சொல்லத்தான் நுட்பங்கள் புரிகின்றன. உயிரினங்களில் வேற்றுமை எனக் கில்லை என்பதை கருடன், அனுமன், விபீஷணன் மூலம் உணர்த்துவதும் புரிகிறது. அதேநேரம் சோழனையும் ரிஷிகளையும் எப்படித் திருப்திப் படுத்துவீர்கள்?

“என் திருப்திதானே அவர்கள் திருப்தி. அவர்கள் வேறு நான் வேறா என்ன?”

“அப்படியானால் விபீஷணனோடு செல்வதில் தான் உங்களுக்குத் திருப்தியா? இலங்கையில் கோயில் கொள்வதுதான் உங்கள் விருப்பமா?”

“அது கூடாது என்பது போல் நீ பேசுவது புரிகிறது. ஏன் கூடாது என்பதற்குச் சரியான பதிலைச் சொல். நான் சிறைப்பட்ட இடம், காயப் பட்ட இடம் என்றெல்லாம் சராசரியாகப் பேசாதே.”

“பிரபோ... நான் பேசுவதெல்லாம் என் பேச்சா என்ன? என் பேச்சு மூச்சு என்று எல்லாமே நீங்கள் தானே? அதனடிப்படையில் கூறுகிறேன். இலங்கை யில் கோயில் கொண்டால், வேதியர் ஆராதனைகள் எவ்வாறு நிகழும்? அவர்கள் அனுமன் போல் கடல் கடந்தல்லவா வரவேண்டும். அது வேதியர்க்குத் தோஷமாகிவிடுமே... தோஷமுள்ள வழிபாடுகள் உரிய பயனைத் தராதே. ஒருவேளை அதற்கென ஒரு பரிகாரத்தை தாங்கள் உருவாக் கினாலும், ஒரு சிறு தீவா உங்களின் முதல் கோயிலாய் ஆவது?”

- லட்சுமிதேவி உணர்ச்சி மேலிடக் கேட்டு முடிக்கவும் பெருமாளும் பதிலுக்குப் புன்னகைத் தவராக “இனி என்ன நடக்கப் போகிறது என்று பார்...” என்றார். லட்சுமிதேவியும் `‘ஆவலாயிருக் கிறேன்'’ என்றார்!

சோழ மண்டலம்! உறையூர்ப் பெருநகரம். அரண்மனையில் உறக்கத்திலிருந்த சோழ அரசன்  தர்மவர்மாவின் கனவில் ஒரு கருட பட்சியானது காவிரியின்மிசை வட்டமடித்துக் கொண்டே இருந்தது. அதன் கால்களில் ஒரு பூமாலை!

அந்தப் பூமாலை அதன் கால்களில் இருந்தும் நழுவி, கீழே காவிரி இருகூறாகப் பாய்ந்த நிலையில் நடுமையில் இருக்கும் நிலப்பரப்பின் ஒரு பகுதி மேல் வந்தும் விழுந்தது. கனவும் கலைந்து போனது. எழுந்து அமர்ந்த தர்மவர்மா சிறிது சிந்தனைக்குப் பின் மந்திரிப்பிரதானிகளை அழைத்து, தான் கண்ட கனவு குறித்துக் கூறினான்.

“அரசே இது ஒரு நல்ல கனவுதான். கருடன் கனவில் வருவது மிக விசேஷம். ஏதோ நல்லது நடக்கப்போவதாக நான் கருதுகிறேன்” என்றார் ஒருவர்.

“ஆம்! இது ஒரு சுபசகுனம். கருட புருஷர் எம்பெருமானின் ஆப்த தூதர். எனவே, எம்பெருமான் தொடர்பான ஒரு நிகழ்வு நடக்கப் போவதாகவும் கருதலாம்”  என்றார் இன்னொருவர்.

அதற்கேற்ப சற்றைக்கெல்லாம் ஒற்றன் ஒருவன் ஒரு செய்தியுடன் வந்து நின்றான்.

“அரசே! லங்காதிபதி ஸ்ரீ ஸ்ரீ விபீஷணச் சக்கரவர்த்தி, அயோத்தி நகரிலிருந்து பிரணவா காரப் பெருமாள் சகிதம், காவிரி மார்க்கத்தில் வந்து கொண்டிருக்கிறாராம். நம் சோழ தேசம் கடந்து பாண்டிய நாடு வழியாக, சேதுப்பாலம் எழுப்பிய கடற்பகுதிக்குச் சென்று, அங்கிருந்து கடல் மார்க்கமாக இலங்கையை அடைவது அவரது பயணத்திட்டமாம்.”

“அப்படியா! பிரணவாகாரப் பெருமாள் சகிதம் வருகிறாரா... நன்றாகத் தெரியுமா?”

“செய்தியில் பிழையேதும் இல்லை அரசே. இன்று மதியம் அவர்கள் கருவூரைக் கடந்துவிடக் கூடும். அதன்படி பார்த்தால், மாலைக்குள் அவர்கள் நம் சோழ தேசத்து காவிரிப்படுகைக்கு எழுந்தருளக் கூடும்.”

ஒற்றனின் செய்தி தர்மவர்மாவை ஆச்சர்யத்தில் மட்டுமல்ல, சலனத்திலும் ஆழ்த்தியது.

“எதற்காக இந்தச் சலனம் அரசே?” - என்று மந்திரி ஒருவரும் கேட்டார்.

“நான் நமக்கென விரும்பிய பிரணவாகாரப் பெருமாள் இலங்கைக்குச் செல்கிறார் என்பதை ஏனோ என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அன்று நான் புரிந்த தவத்துக்கு, பிரணவாகாரப் பெருமாளின் விஜயம் மட்டும்தானா பரிசு?”

‘`கவலை வேண்டாம் மன்னா. எம்பெருமான் சித்தத்தை உணரும் வல்லமை நம்மில் ஒருவருக்கும் கிடையாது. அதே தருணம், தாங்கள் கண்ட கனவின்படி பார்த்தால், எம்பெருமான் இங்கே வருவதையே தங்களுக்கு உணர்த்தியுள்ளார். அநேகமாக கருடன் மாலையைப் போட்ட இடம் அவர் எழுந்தருளப் போகும் இடமாகவும் இருக்க லாம் அல்லவா?'' - இப்படி அவர்கள் பேசிக்கொண்டனர்.

அதற்கேற்பவே எல்லாமும் நடந்தன. காவிரி ஆற்றில் ஒரு பெரும் படகில் பயணித்தபடி வந்த விபீஷணன், ஆற்றோரமாக சோழ மக்கள் நின்று பார்ப்பதை அறிந்து, படகைக் கரையோரம் நிறுத்தக் கட்டளையிட்டான். பின்னர், சென்னியின் மீது பிரணவாகாரப் பெருமாளை சுமந்த நிலையிலேயே தரையிறங்கியவன், தொடர்ந்து நடந்தான். சகாக்கள் பின்தொடர்ந்தனர். விபீஷணனோடு எப்போதும் உற்ற துணை யாயிருக்கும் மார்கரிஷி என்பவர், ‘`அரசே! இன்றைய நித்ய பூசைக்கும் நாளைய பூசனைகளுக்கும் இந்த இடமே மிக உகந்த இடம். அனைவரும் நீராடிட காவிரி ஆறு உள்ளது. உண்டு பசியாறிட அருகிலேயே உறையூர் நகரும் உள்ளது. எனவே, நாம் இங்கே தங்குவதே சாலச் சிறந்தது” என்றார்.

விபீஷணனுக்கும் பயணக் களைப்பு! உடனே, ‘சரி’ என்றான். அப்படியே தன் சிரசில் இருக்கும் பெருமாளை இறக்கிவைக்க உகந்த இடத்தைப் பார்த்தபோது, அற்புதமான ஓரிடம் கண்ணில் பட்டது.

- தொடரும்...

ரங்க ராஜ்ஜியம் - 10

யிர்கள் அனைத்திலும் வெறுப்பின்றி, நட்பும் கருணையும் உடையவனாக, தன்னடக்கம் உடையவனாக, திட சித்தம் உள்ளவனாக, என்னிடத்தில் மனம் புத்தியைச் சமர்ப்பித்தவனாக எவன் பக்தனாகிறானோ... அவனே எனக்குப் பிரியமானவன்.

- பகவத் கீதை