Published:Updated:

கால்நடைகளுக்காக ராஜேந்திர சோழன் எழுப்பிய ராமநாத ஈஸ்வரர் ஆலயம்!

தை மாதம் முதல் நாள் சூரியதேவன் தன் கிரணங்களால் சிவபெருமானை பூஜிக்கும் விதமாக கருவறை அமைந்திருப்பது சோழர்களின் கட்டடக்கலைச் சிறப்புக்கு ஒரு சான்றாக விளங்குகிறது.

கால்நடைகளுக்காக ராஜேந்திர சோழன் எழுப்பிய ராமநாத ஈஸ்வரர் ஆலயம்!
கால்நடைகளுக்காக ராஜேந்திர சோழன் எழுப்பிய ராமநாத ஈஸ்வரர் ஆலயம்!

லக்கியம், நடனம், சிற்பம், கட்டடக் கலைகளின் பொற்காலம் சோழர்களின் காலம் என்றே சொல்லலாம். வரலாற்று ஏடுகளில் இடம் பெற்றிருப்பது மட்டுமல்லாமல், இன்றைக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழ்வாய்வின் மூலம் கண்டெடுக்கப்படும் பல்வேறு பொருள்கள் சோழர்களின் சிறப்பை எடுத்துக் காட்டுவதாக உள்ளன. அந்த வகையில் விழுப்புரத்துக்கு அருகிலுள்ள எசாலம் என்னும் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ராமநாத ஈஸ்வரர் ஆலயம் சோழர்களின் வரலாற்றை எடுத்துக் கூறும் பல கல்வெட்டுகளைக் கொண்ட சிறப்பு மிக்க ஆலயமாகத் திகழ்கிறது.

சென்னை - திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே பேரணியில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது எசாலம். கிராமத்தின் நடுவில் அமைந்திருக்கிறது ஆலயம். செல்லும் வழியெங்கும் பசுமை போர்த்திய வயல்வெளிகள், சில்லென வீசும் காற்று, மனதுக்கு அமைதி தரும் சூழல் என்று மனதுக்கு ரம்யமான சுகானுபவத்தைத் தரும் சூழலில் அமைந்திருக்கிறது ஆலயம்.

``பிற்காலச் சோழர்களில் பெரும்புகழ் பெற்ற ராஜேந்திரசோழ மன்னரால் இந்தக் கோயில் கி.பி.1032-ல் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இன்றைக்கும் புதுப்பொலிவுடன் திகழ்கிறது கோயில். ராஜேந்திர சோழனின் ராஜகுருவாக இருந்தவர் சர்வசிவ பண்டிதர். ஒருநாள் ராஜேந்திர சோழன் நீராடிக் கொண்டிருந்த தருணத்தில், சிவபெருமானின் மகிமைகளைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தவர், ருத்ரனுக்கு ஓர் ஆலயம் அமைக்க வேண்டும் என்று கூறினார். அதன்படி அன்று 'ஶ்ரீராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில் சிவபெருமானுக்கு அழகுற ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது'' என்று கோயிலின் தொன்மைச் சிறப்பைப் பற்றி அந்த ஊரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் கூறினார். 

ஆலயத்தின் அமைப்பு:

முழுவதும் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்தக் கோயிலின் விமானம் வட்ட வடிவத்தில் அமைந்திருக்கிறது. கருவறையுடன் 16 கல் தூண்களையும் கொண்ட மண்டபமும் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றிலும் பல்வேறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோயிலின் வெளிப்புறச் சுவர்களில் நான்கு திசைகளிலும் நான்கு தேவர்களின் சிலைகள் அழகிய கலைநயத்துடன் வடிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கு நோக்கி இந்திரன்; மேற்கு நோக்கி திருமால், வடக்கு நோக்கி பிரம்மன், தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சிலைகள் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் திகழ்கின்றன. 

நுழைவுவாயில் பகுதியில் எதிரில் உள்ள விமானத்தில் ஈசனும் பார்வதியும் கயிலாயத்தில் வீற்றிருக்கும் காட்சி சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. 

ஆலயத்தில் நாம் சென்றதுமே முதலில் நாம் தரிசிப்பது அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பிகையைத்தான். குழந்தையுடன் விளையாடும் தாயைப் போன்றே கண்களில் அன்பும் கருணையும் தவழும் திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். அம்பிகையை தரிசிப்பவர்கள் எத்தகைய கல்மனம் கொண்டவர்களாக இருந்தாலும், அம்பிகையின் கருணை ததும்பும் திருமுகத்தை தரிசித்த மாத்திரத்தில் கரைந்துவிடுவார்கள்.

கருவறையில் ஒற்றை விளக்கின் சுடரொளியில் அழகுறக் காட்சி தருகிறார் அருள்மிகு ராமநாத ஈஸ்வரர். மிகப் பிரமாண்டமாகவும், அதே தருணத்தில் கம்பீரமாகவும் காட்சி தரும் சிவனாரை தரிசிக்கும்போது நம் மனதில் இனம் தெரியாத பரவச உணர்வு ஏற்படுகிறது.

தை மாதம் முதல் நாள் சூரியதேவன் தன் கிரணங்களால் சிவபெருமானைப் பூஜிக்கும் விதமாகக் கருவறை அமைந்திருப்பது சோழர்களின் கட்டடக்கலைச் சிறப்புக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. 

இந்தக் கோயிலுக்கு வந்து பசுவின் பாலும், வெண்ணெய்யும் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால், இந்திர பதவிக்குத் தகுதியுடையவராகச் செய்யும் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பதும், பசுநெய் கொண்டு பூஜிப்பவர்களுக்கு நித்திய அக்னிஹோத்ரம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதும், வண்ண வண்ண மலர்களைக் கொண்டு சிவபெருமானை அர்ச்சித்தால், எளியவர்களுக்கு 100 பசுக்களை 'கோதானம்' செய்த பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம். 

பிரதோஷ நாளில் வந்து வழிபடுபவர்களுக்குத் திருமணத்தடை, நிலத் தகராறுகள், வாழ்க்கையில் அடுக்கடுக்கான துன்பங்கள் நீங்குவதாகவும் பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

ஆலயத்தின் மற்ற தொன்மை மற்றும் கிடைத்த கல்வெட்டுகள்  குறித்தும் பன்னீர்செல்வம் சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

கல்வெட்டுச் செய்திகள்: 

தொல்லியல்துறையினர் மேற்கொண்ட ஆய்வில், ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோயில் 'ஶ்ரீராஜராஜ சதுர்வேதி மங்கலம்' என்று அழைக்கப்பட்டதாகவும், ஆலயத்தின் இறைவனுக்கு, 'திருவிராமீசுவரமுடைய மகாதேவர்' என்ற திருப்பெயர் வழங்கியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ராஜேந்திர சோழனுக்குப் பிறகு வந்த சோழ மன்னர்களும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் மேற்கொண்டதாகவும், பல்வேறு நிவந்தங்கள் வழங்கியதாகவும் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்திருக்கிறது.

கண்டெடுக்கப்பட்ட விக்கிரகங்கள்:

பல வருடங்களுக்குப் பிறகு 1987-ம் வருடம் ஆலயத்துக்குத் திருப்பணிகள் மேற்கொண்டபோது, ஓரிடத்தில் சிறு மணல் திட்டு காணப்பட்டது. அந்த இடத்தைத் தோண்டியபோது, நான்கு புறமும் சுவர்களைக் கொண்ட ஓர் அறை போன்ற அமைப்பும், அதற்குள் 23 ஐம்பொன் சிலைகள், பூஜைப் பொருள்கள், செப்பேடுகள் என்று 37 பொருள்கள் சற்றும் சிதைவடையாமல் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் நிபுணர்கள், சிலைகள் அனைத்தும் சுமார் 400 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட முகலாயர்களின் படையெடுப்பின்போது சிதைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

ஒரு வளையத்தில் கோக்கப்பட்ட 15 செப்பேடுகளும் கிடைத்துள்ளன. அந்த வளையத்தில் சோழமன்னரின் அரச முத்திரை காணப்படுவதுடன், 'இது ராஜேந்திர சோழனின் சாசனம்' என்ற வார்த்தைகள் கிரந்த மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு பக்கங்கள் வடமொழியிலும், 11 பக்கங்கள் தமிழ் மொழியிலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

கல்ராயன் சிலையின் வரலாறு:

கோயிலுக்கு வெளிப்புறத்தில் ஒரு சிலை காணப்படுகிறது. அந்தச் சிலை `கல்ராயன் சிலை' என்று மக்களால் அழைக்கப்படுகிறது. ஒருமுறை ஊரில் பாதிக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இனம் காணமுடியாத ஒரு நோய் ஏற்பட்டது. எத்தனை வைத்தியம் பார்த்தும் நிவாரணம் கிடைக்கவில்லை. பின்னர் ஒருவர் அருள் வந்து, கோயிலுக்கு வெளியில் இருக்கும் சிலைக்கு தண்ணீரால் அபிஷேகம் செய்து, அந்த அபிஷேக நீரை கால்நடைகளுக்குக் கொடுத்தால் மூன்று தினங்களுக்குள் நோய் நீங்கிவிடும் என்று கூறியிருக்கிறார். மக்களும் அதேபோல் செய்து கால்நடைகளுக்கு ஏற்பட்ட நோய்களைப் போக்கினர். அன்று முதல் இன்றைக்கும் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களும், சுற்றுப்புறக் கிராமங்களில் இருப்பவர்களும் இந்த முறையைப் பின்பற்றிப் பலன் அடைந்து வருகிறார்கள்'' என்று கூறினார் பன்னீர்செல்வம்.

நம் அனைவருக்கும் தாய் தந்தையாகவும், கேட்ட வரங்களைத் தட்டாமல் கொடுக்கும் தெய்வங்களாகவும் அருள்புரியும் திரிபுரசுந்தரி உடனுறை அருள்மிகு ராமநாத ஈஸ்வரரை வழிபடவும், ராஜேந்திரசோழனின் தெய்வபக்தி, கலைச் சிறப்பு, சோழர் தம் பெருமை பேசும் கல்வெட்டுகளைக் காணவும் ஒருமுறையேனும் எசாலம் செல்லலாமே!