Published:Updated:

``வேறெங்கும் தரிசிக்க முடியாத அற்புத ருத்ராட்ச லிங்க தரிசனம்!'' என்னென்ன பலன்கள் கிட்டும்?

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்ற விழா. அருணாசலேஸ்வரப் பெருமான் மகா தீப ஜோதியாக அருளும் திருநாள் கார்த்திகை தீபத் திருநாள்.

``வேறெங்கும் தரிசிக்க முடியாத அற்புத ருத்ராட்ச லிங்க தரிசனம்!'' என்னென்ன பலன்கள் கிட்டும்?
``வேறெங்கும் தரிசிக்க முடியாத அற்புத ருத்ராட்ச லிங்க தரிசனம்!'' என்னென்ன பலன்கள் கிட்டும்?

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்ற விழா. அருணாசலேஸ்வரப் பெருமான் மகா தீப ஜோதியாக அருளும் திருநாள் கார்த்திகை தீபத் திருநாள். லட்சக்கணக்கான பக்தர்கள் அன்று திருவண்ணாமலைக்கு வந்து மகாதீப தரிசனம் செய்வார்கள். அன்றைய தினம் உலக மக்களின் நன்மைக்காகப் பல இறைப் பணிகளை ஆத்மார்த்தமாகச் செய்யும் சக்தி விகடன் மற்றும் காளீஸ்வரி நிறுவனம் இணைந்து விதவிதமான க்ஷணிக லிங்கங்களை பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்வது வழக்கம்.

கடந்த வருடம் தர்ப்பை லிங்க தரிசனத்துக்கு ஏற்பாடு செய்திருந்த சக்தி விகடன், இந்த வருடம் ருத்ராட்ச லிங்க தரிசனத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. கிரிவலப் பாதையில் எட்டாவது லிங்கமான ஈசான்ய லிங்கத்தின் எதிரில் அமைந்திருக்கும் அம்மணி அம்மாள் சித்தர் பீடத்தில் மிகப் பிரமாண்டமான ருத்ராட்ச லிங்கம் பக்தர்களின் தரிசனத்துக்கு வைக்கப்பட்டிருந்தது.

தீபத் திருநாளுக்கு முதல் நாளான 22-ம் தேதி முதல் 26-ம் தேதி நண்பகல் வரை ஐந்து நாள்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ருத்ராட்சலிங்கத்தை தரிசித்து வழிபட்டனர். வாசகர்களும் பக்தர்களும் திரளாக வந்திருந்து பக்திப் பாடல்களைப் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் பரவசப்பட்டனர். மற்றும் சிலர் தேவார, திருவாசக முற்றோதல் செய்தும் வழிபட்டனர். விடாது பெய்த அடைமழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் திரண்டு வந்து தரிசித்துச் சென்றார்கள். ருத்ராட்ச லிங்கத்தைச் சுற்றிலும் எலுமிச்சை விளக்கு, அகல் விளக்கு எனத் தீபங்களை ஏற்றி, அந்த இடத்தையே ஒளிமயமாகச் செய்து ஆனந்தமடைந்தார்கள். வாசகர்களின் நலனுக்காகச் சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடை பெற்றன.

பலன்களை அள்ளித்தரும் இந்த ருத்ராட்சலிங்கத்தை பக்தர்கள் பலரும் பரவசத்தோடு தரிசித்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர். ருத்ராட்ச லிங்கத்தைத் தரிசிக்க வந்த பலரும், ``வேறு எங்கும் காணமுடியாத வகையில் இந்தப் பிரமாண்ட ருத்ராட்ச லிங்கத்தை அமைத்து எங்களை தரிசிக்கச் செய்த சக்தி விகடனுக்கும் காளீஸ்வரி நிறுவனத்துக்கும் மிக்க நன்றி'' என்று நெகிழ்ச்சியுடன் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இந்த லிங்கத்தை உருவாக்கித் தந்த சரவணன்மற்றும் அவருடன் வந்த அடியார்களுக்கும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டனர். ருத்ராட்ச லிங்கத்தை தரிசிக்க வந்தவர்கள் அனைவருக்கும் காளீஸ்வரி நிறுவனத்தின் சார்பில் நெகிழியால் செய்யப்பட்ட அழகிய விசிறி வழங்கப்பட்டது. அம்மணி அம்மாள் கோயிலின் நிர்வாகியான ரமேஷ் மற்றும் அவருடைய மனைவி இருவரும் ருத்ராட்ச லிங்க தரிசனத்துக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தந்து ஒத்துழைத்தனர்.

ருத்ராட்ச லிங்க தரிசனம் புண்ணியப் பலன்கள்

தர்ப்பை, மண், அரிசி மாவு, சந்தனம், மலர், அன்னம், ருத்திராட்சம் என்று பதினாறு பொருள்களில் ஒன்றினால் உருவாக்கப்படும் லிங்கம்தான் க்ஷணிகலிங்கம். அந்த வகையில் திருவண்ணாமலையில் அமைக்கப்பட்ட க்ஷணிக லிங்கம் ருத்ராட்ச லிங்கம்.
க்ஷணிகலிங்கங்களில் மிகவும் விசேஷமான ருத்ராட்ச லிங்கத்தை தரிசித்தால், அஞ்ஞானம் அகன்று ஞானம் பெருகும்; கர்மவினைகள் நீங்கும்; வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத் தரும். இம்மையில் வளமும், மறுமையில் சிவனாரின் திருவடி நிழலில் நித்திய வாசம் செய்யும் பேற்றினையும் அருளும் என்கின்றன ஞானநூல்கள்.

ருத்ராட்ச லிங்கத்தின் முன்பாக விளக்கேற்றி, சிவ நாமாக்களைப் பாராயணம் செய்தால், சிந்தை, சொல், செயல் ஆகியவற்றால் செய்த பாவங்கள் விலகும். அருமருந்தான ருத்ராட்ச மகிமையால் நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.

அம்மணி அம்மாளின் புகழ் பேசும் வடக்கு கோபுரம்

திருக்கோயில் கோபுரங்களின் பின்னணியில் பக்திப் பரவசமூட்டும் பல அரிய நிகழ்ச்சிகள் அமைந்து நமக்குச்  சிலிர்ப்பூட்டுகின்றன. அப்படி திருவண்ணாமலை கோயிலின் வடக்கு கோபுரத்தின் பின்னணியிலும் பெண் சித்தர் ஒருவரின் திவ்விய வரலாறு உண்டு.
ஆங்கிலேயர்கள் நம் தேசத்தை ஆட்சி செய்த காலத்தில், திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள சென்னசமுத்திரம் என்ற ஊரில் தோன்றியவர் அம்மணி அம்மாள் என்ற பெண் சித்தர். நாளும் பொழுதும் சித்தமெல்லாம் சிவசிந்தனையுடன் வளர்ந்த இவரை, அந்தப் பகுதியில் பிரசித்தி பெற்ற தேவி சென்னம்மாளின் மறு அவதாரம்தான் என்று ஊர்மக்கள் போற்றுகிறார்கள். சிறு வயது முதலே சிவப் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர், உரிய பருவத்தில் திருமணம் செய்துகொள்ளாமல், திருவண்ணாமலைக்குச் சென்று சிவப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். ஈசன் அருளால் பல சித்துகளைப் புரிந்தவர். இவர் கொடுக்கும் திருநீறு தீராத நோய்களையும் தீர்க்கும் அருள்சக்தி கொண்டது. இவர் பார்வை பட்டாலே போதும் திருந்தாத உள்ளங்களும் திருந்தும். அம்மையாரின் திருவருளால் பலரும் பயனடைந்தனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை கோயிலின் வடக்கு கோபுரத்தைக் கட்டி முடிக்க வேண்டுமென்று சிவபெருமானால் பணிக்கப்பட்டார் அம்மணி அம்மாள். மகா ஐஸ்வர்யமான திருநீற்றைத் தவிர வேறு எந்த ஐஸ்வர்யமும் இல்லாத அம்மணி அம்மாள், சிவபெருமானின் உத்தரவுப்படி கோபுரம் கட்டும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். பார்ப்பவர்களிடமெல்லாம் யாசகம் பெற்று, வடக்கு கோபுரத்தின் ஐந்து நிலைகளைக் கட்டி முடித்தார்.

மைசூர் மகாராஜாவிடம் சென்று தம்முடைய சித்தாடல்களால் பொருள் பெற்று 6 மற்றும் 7-ம் நிலைகளைக் கட்டி முடித்தார். மற்ற நான்கு நிலைகளையும் சிவபெருமானின் அருளால், திருநீற்றை ஊதியமாகக் கொடுத்து முடித்தார். ஆம். அவர் கொடுக்கும் திருநீறே பணியாளர்களுக்கு அவர்களுடைய பணிக்கு உரிய ஊதியமாக அமைந்தது. 

மகத்தான வடக்கு கோபுரத் திருப்பணியை முடித்த மனநிறைவுடன், ஒரு தைப்பூச நன்னாளில் ஈசானிய லிங்கத்துக்கு எதிரில் ஜீவசமாதி கொண்டார். அவர் ஜீவசமாதி அடைந்த இடமே இன்று அம்மணி அம்மாள் சித்தர் பீடமாக, அம்மணி அம்மாள் அருள்பெருகும் திருக்கோயிலாக விளங்குகிறது. அம்மணி அம்மாள் கோயிலின் பிரசாதத் திருநீறு பக்தர்களின் தீராத நோய்களையும் தீர்க்கும் சஞ்சீவி மருந்தாகப் பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு வந்து மனதை ஒருமுகப்படுத்தித் தியானிப்பவர்களிடம் அம்மணி அம்மாள் சூட்சும வடிவில் வந்து பேசுவதாக பக்தர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.

பெண் சித்தராக வாழ்ந்து வைராக்கியத்தால் வானளாவிய கோபுரத்திருப்பணியை முடித்துக் காட்டிய அம்மணி அம்மாள் இன்றும் என்றும் நிலைத்திருப்பார் கோபுர வடிவத்தில்!