
கல்யாண வரம், குழந்தை வரம் கேட்டு வருபவர்களுக்கு இல்லேன்னு சொல்லாம அள்ளியள்ளிக் கொடுத்திடுவாள் மாசி, மல்லி..!
மல்லி அப்பன் வெவசாயி. வீட்டுல ஏகப்பட்ட மாடு கன்னுக. அதுகளைப் பாத்துக்கறதுக்கு ‘வெள்ளான்’னு ஒரு வேலைக்காரனை வெச்சிருந்தார். பய ரொம்ப பொறுப்பான ஆளு. நேர்மையான பயலும்கூட. மல்லி எங்காவது வெளியில போகணுமின்னா கூண்டு வண்டி கட்டி அவன்தான் கூட்டிக்கிட்டுப் போவான். மல்லிக்கு வெவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து வெள்ளான், மல்லி வீடே கதின்னு கிடக்குறான். அவனுக்கு ஆயி அப்பன் யாருன்னு தெரியாது. மல்லிக்கு அவன் மேல ஒரு கரிசனம் உண்டு. நல்லாப் பேசுவா. காயி, கறின்னு கைநிறைய அள்ளி வெச்சு சோறு போடுவா. தன் வீட்டுலயே வளர்ந்ததால புள்ளைக்கு வித்தியாசம் தெரியலே. தன் வீட்டு மனுஷன்ல ஒருத்தனா நெனச்சுக்கிட்டா.
அந்தப் பயலுக்கோ மல்லி மேல ஒரு கண்ணு. எல்லாப் பேருக்கும் வட்டிலில கஞ்சித்தண்ணி ஊத்துறபோது, இவமட்டும் கறியும் சோறுமாப் போடுறது தன்னைக் கட்டிக்கப்போறவங்கிற நினைப்புலதான்னு எண்ணம் அவனுக்கு.

மவளுக்கு ஒரு கல்யாணம் காச்சிப் பண்ணிப் பாக்கணுங்கிற ஆசை அப்பனுக்கு. மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாச்சு. ‘ஆகா... நம்ம கனவு கருகிரும்போலிருக்கே. ஏதாவது செய்யணுமேனு வெள்ளானுக்கு ஒரே யோசனை. ஒரு முடிவோடு அப்பங்காரங்கிட்டப் போனான். “அய்யா... நான் நம்ப மல்லியை உயிருக்குயிரா நேசிக்கிறேன்யா. எனக்குக் கல்யாணம் பண்ணிக் குடுங்கய்யா”னு கேட்டான். மல்லி அப்பங்காரனுக்கு மீசை துடிச்சிருச்சு. ‘தன் வீட்டுல பண்ணை வேலை செய்யற பய... தன்கிட்ட சரிக்குச்சமமா வந்து பேசுனது மட்டுமில்லாம, உன் மவளைக் கட்டித்தான்னு வேற கேக்குறானே’னு வேகம்... உள்ளே போயி, திருக்கை வாலை எடுத்துக்கிட்டு வந்து, “ஏலே... போக்கத்த பயலே... யாருக்கிட்ட வந்து பொண்ணு கேக்குறே... உனக்குச் சோறு போட்டு வளத்ததுக்குக் காட்டுற விசுவாசமாடா இது”னு சொல்லிக்கிட்டே விளாசி எடுத்துட்டான். உடம்பெல்லாம் ரத்தக்காயம். தட்டுத்தடுமாறி எல்லையில இருக்கிற ஏரிக்கரைப் பக்கம் போயிப் படுத்துட்டான் வெள்ளான்.
மல்லி மனசளவுலகூட வெள்ளானைப் பத்தி தப்பா நினைச்சதில்லை. ‘தாயாப் புள்ளையா பழகுன நம்மைப் பத்தி இப்படியொரு நினைப்பை வளத்துக்கிட்டானே. அவன் அடிவாங்க காரணமா இருந்துட்டமே’னு மனசுக்குள்ள வருத்தம்.
மல்லி அப்பன் விறுவிறுன்னு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சார். எங்கெல்லாம் அவன் போயி மாப்பிள்ளை பாக்குறானோ, அங்கெல்லாம் இந்த வெள்ளான் பய போயி, இல்லாதது பொல்லாதது சொல்லி பேச்சுவார்த்தையை நிறுத்திப்புட்டான்.
பாக்குற மாப்பிள்ளைகள்லாம் `வேணாம்... வேணாம்'னு போறதால மல்லி மனசுடைஞ்சு போனா. மல்லிக்குக் கல்யாணம் தள்ளிப் போகுதேன்னு அவளுடைய உயிர்த்தோழி மாசிக்கு வருத்தமாப் போச்சு. மாசிக்கு ஓர் அண்ணங்காரன். பேரு மாசான். அவன் கிட்டப் போயி, ‘நீ மல்லியக் கல்யாணம் பண்ணிக்கிறீயா’னு கேட்டா. அவன் சம்மதிச் சான். மல்லி அப்பனுக்கு மட்டும் கொஞ்சம் யோசனை. `வேற சாதி... உறவுகளெல்லாம் என்ன சொல்லுமோ’ன்னு ஒரு பயம். ஒருகட்டத்தில, ‘புள்ளைக்கு வயசாகிக்கிட்டே போவுதே... சரி முடிச்சிருவோம்’னு கல்யாண ஏற்பாடுகள்ல இறங்கிட்டான்.
ஊரை வளைச்சு பந்தல் போட்டிருக்காக. ஏழூரு சனங்களுக்கும் பத்திரிகை அடிச்சுக் கொடுத்திருக்காக. கூட்டமுன்னா கூட்டம்... ஒருபக்கம் சட்டி சட்டியா விருந்து தயாராகிக்கிட்டிருக்கு. மல்லியைத் தேவதை மாதிரி அலங்கரிச்சு மணவறைக்குக் கூட்டியாறாக.
திடீர்னு உள்ளே நுழைஞ்சான் வெள்ளான். கண்ணெல்லாம் செவந்திருக்கு. தலையெல்லாம் கலைஞ்சிருக்கு. “மல்லி எனக்குன்னு பெறந்தவ. அவளை எப்படி இன்னொருத்தனுக்குக் கட்டித் தருவே”னு மல்லி அப்பன்கிட்ட சண்டை போட்டான். எல்லாரையும் திமிறி, தள்ளிட்டு மேடையைப் பாத்தான் வெள்ளான். மல்லிக்குப் பக்கத்துல மணக்கோலத்துல மாசான் உக்காந்திருந்தான். அந்தக் காட்சியைப் பாத்தவுடனே இன்னும் கோபம் தலைக்கேறியிருச்சு. விறுவிறு மணமேடைக்குப் போனான். இடுப்புல செருகியிருந்த கத்தியை எடுத்து மாசான் மூக்கை அறுத்துப்போட்டுட்டு ஓடிட்டான்.

எல்லாரும் அதிர்ந்து போயிட்டாக. ஒருத்தனைக் கழுத்தறுக்கிறதைவிட கொடுமை, மூக்கறுக்கிறது. மானம், மருவாதி எல்லாத்தையும் அறுத்துப்போட்டுப் போறதா அர்த்தம். மாசான் மயங்கிச் சரிஞ்சுட்டான். மல்லி திகைச்சுப்போயி நின்னா.
தன் அண்ணங்காரன் மூக்கறுபட்டு நிக்கிறதை பாக்கச் சகிக்கலே மாசிக்கு. இத்தனை சனங்க இருந்தும் அண்ணனை மூக்கறுக்கவிட்டுத் தன் குடும்பத்தையே அவமானப்படுத்திட்டாங்களேன்னு ஆதங்கம் அவளுக்கு. தானும் அதுக்குக் காரணமாயிட்டமேன்னு வருத்தம். இறுகிப்போய் உக்காந்திருந்த மாசி, அப்படியே எழுந்து நடக்க ஆரம்பிச்சா. எல்லா சனங்களும் ஓடிப்போயி அவளைத் தடுத்தாக. நிக்கலே. கண்ணுல தண்ணி வடியுது. நிலைக்குத்தி நிக்குது பார்வை. தோழி இப்படி நிலைகுலைஞ்சு போறாளேன்னு மல்லிக்கு வருத்தம். அவளும் எழுந்து மாசி பின்னாடி ஓட ஆரம்பிச்சா. ரெண்டு புள்ளைகளும் கை கோத்துக்கிட்டு காடு, மலை பாக்காம நடந்துக்கிட்டே இருந்துச்சுக. அவுக பின்னாடி வந்த சனங்களால, அதுகளுக்கு ஈடுகொடுத்து நடக்க முடியலே.
இப்படிப் போன புள்ளைக வனாந்திரத்துக்குள்ள இருந்த ஒரு மாட்டுப்பட்டிக்குள்ள போயி, “சாப்பிட ஏதாவது குடுங்க”ன்னு கேட்டுச்சுக. பட்டிக்காரு, `யாரு, என்ன’ன்னு விசாரிச்சாரு... நடந்த கதைகளைச் சொல்லி, “எங்களுக்கு அந்த ஊருக்குள்ள வாழவே பிடிக்கலே...”னு அழுதுச்சுக. பட்டிக்காரர் இரக்கப்பட்டு சோறு பொங்கி, நெய்விட்டுக் கொடுத்தாரு.
நாலைஞ்சு நாளு பட்டியில தங்கியிருந்த மாசியும் மல்லியும், “அய்யாப் பட்டிக்காரரே... நாங்க மேற்குமலை அடிவாரத்துல இருக்கிற எங்க சொந்தக்காரக வீட்டுக்குப் போகப் போறோம்... எங்களுக்குக் கொஞ்சம் சந்தனக் கட்டைகளையும் ஒரு தீக்கடைக்கோலும் தர முடியுமா”னு கேட்டுச்சுக. அவரும் கொடுத்தாரு. ஆளுக்கொரு பக்கம் நின்னு சந்தனக் கட்டை வண்டியை இழுத்துக்கிட்டு அப்படியே எதிர்ப்பக்கமிருந்த அடிவாரத்தை நோக்கி நடக்க ஆரம்பிச்சுச்சுக.
மேற்குமலை அடிவாரத்துல ஓர் ஆலமரம். அதுக்குக் கீழே வண்டியை நிறுத்துனாக. போட்டிருந்த நகைகளையெல்லாம் கழற்றி ஆலமரத்து வேருக்குள்ள வெச்சாக. வண்டியில இருந்த சந்தனக் கட்டைகளை இறக்கி அடுக்குனாக. தீக்கடைக்கோலை எடுத்து கடைய, அதுல இருந்து தீ கங்குகள் வந்து விழுந்துச்சு. அதை சந்தனக் கட்டைகள் மேல வெச்சு தீ மூட்டினாக. ‘திகுதிகு’ன்னு நெருப்பு எரிய ஆரம்பிச்சுச்சு. மாசியும் மல்லியும் இறுக்கமா கையைக் கோத்துக்கிட்டு அந்த நெருப்புக்குள்ள பாஞ்சாக. தீ மளமளன்னு பத்திக்கிட்டு எரியுது.
மாசியையும் மல்லியையும் தேடிவந்த சாதிசனம், எல்லாரும் அந்த ஆலமரத்தடியில புகை வர்றதைக் கண்டு பதறி ஓடியாறாக. அதுக்குள்ள எல்லாம் அடங்கிருச்சு. வெறும் சாம்பல் மட்டுந்தான் மிஞ்சிக்கிடக்கு. ஆலமர வேருக்குள்ள மாசியும் மல்லியும் போட்டிருந்த நகைகள்லாம் இருந்துச்சு.
‘இந்தப்புள்ளைக செத்துப்போக நாம காரணமா இருந்துட்டோமே’ன்னு பட்டிக்காரருக்கு மன வருத்தம். அந்த வருத்தத்துலயே மாரடைப்பு வந்து செத்துப் போனாரு. மூக்கறுத்துட்டு ஓடுன வெள்ளான் ஏரிக்கரையில படுத்திருந்தப்போ பாம்பு தீண்டிச் செத்துப்போனான்.
மல்லி அப்பனும் மாசி அப்பனும் தங்களுடைய பிள்ளைகள் தெய்வப்பிள்ளைகள்னு புரிஞ்சுக்கிட்டு ரெண்டு கல்லை நட்டு படைப்புப்போட்டு குலதெய்வமா கும்பிட ஆரம்பிச்சாக.
திண்டுக்கல் மாவட்டத்துல முருநெல்லிக் கோட்டைன்னு ஊரிருக்கு. அங்கே தூண் வடிவத்துல நிக்குறாக மல்லியும் மாசியும். அந்தத் தூணைக் கூர்ந்துபார்த்தா, மாசி ஆன்மாவும் மல்லி ஆன்மாவும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா உறைஞ்சு கிடக்கிறதை உணரமுடியுது. கல்யாண வரம் கேட்டு வரவகளுக்கும், குழந்தை வரம் கேட்டு வரவகளுக்கும் இல்லேன்னு சொல்லாம அள்ளியள்ளிக் கொடுத்துக்கிட்டிருக்காக ரெண்டு பேரும்!
- வெ.நீலகண்டன்
ஓவியம் : ஸ்யாம் படங்கள் : வீ.சிவக்குமார்