மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 11

ரங்க ராஜ்ஜியம் - 11
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 11

ரங்க ராஜ்ஜியம் - 11

வம்பிலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான்புக
அம்பு தன்னால் முனிந்த அழகனிட மென்பரால்
உம்பர் கோனு முலகேழும் வந்தீண்டி வணங்கும், நல்
செம்பொ னாரும் மதில்சூழ்ந் தழகார்தென் னரங்கமே!

- பெரிய திருமொழியில் திருமங்கையாழ்வார்.

ர்மவர்மா கனவில் கண்டபடியே அந்தப் புண்ணிய பூமியில் பூமாலை ஒன்று விழுந்துகிடக்க, அதன் நடுவில் கருடனும் அமர்ந்திருந்தார். அந்தக் காட்சி யைக் கண்ட விபீஷணனுக்கு, அதைவிடச் சிறப்பான வேறோர் இடம் இருக்க முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டது.

அதேநேரம், தர்மவர்மாவும் பூர்ணகும்பம் சகிதம் வந்து நின்றான். பிரணவாகாரத்தையும், தரையில் கிடக்கும் மலர் மாலையையும்,  விண்ணேகிப் பறக்கும் கருடனையும் கண்டு மெய்சிலிர்த்தான்; அவன் கனவு நனவாகி விட்டதே! அந்தச் சிலிர்ப்பு விலகாமல் விபீஷணனை வணங்கி நின்றான்.

“சோழ சாம்ராஜ்ஜியாதிபதிக்கு என் வந்தனங்கள்” என்று அவனுக்குப் பதில் வந்தனம் தெரிவித்தான் விபீஷணன். தொடர்ந்து தர்மவர்மா பேசினான்.

ரங்க ராஜ்ஜியம் - 11

“லங்காதிபதியே, தங்கள் வரவு நல்வரவாகுக. சற்று முன்தான் ஒரு கனவு கண்டேன். கனவில், ஒரு கருடப் பட்சி மாலை ஒன்றை இந்தக் காவிரிக்கரை தீரத்தில் போட்டது. அதைத் தொடர்ந்து தங்களின் வருகைச் செய்தி ஒற்றர்கள் மூலம் கிடைத்தது.

மகாரதராகிய தசரதர் புத்ர காமேஷ்டி யாகம் செய்தபோது, நானும் அயோத்திக்கு வந்திருந்தேன். அங்கே இந்தப் பிரணவாகாரப் பெருமாளை  தரிசித்தபின், என்னை இவர் பெரிதும் ஆட்கொண்டுவிட்டார். இவர் பொருட்டு நான் தவசியாகிப்போனேன். எனது தவத்தின் பயனாகவே இன்று இவர் இங்கு எழுந்தருளியுள்ளார். அதற்குக் காரணமான உங்களுக்கு என் நன்றிகள் உரித்தாகட்டும். அப்படியே, தாங்கள் எனது அரண்மனைக்கு வந்து ஓய்வெடுக்கவும் வேண்டுகிறேன்’’ என்றான்.

தர்மவர்மாவின் அன்பைக் கண்டு உச்சிக் குளிர்ந்தான் விபீஷணன். நெடுந்தூரம் பயணித்ததால் சோர்வடைந்திருந்தான் அவன். மேனியெங்கும் ரோமங்கள் பெருகி வளர்ந்திருக்க, கிட்டத்தட்ட ஒரு ரிஷியைப் போலவே காட்சி தந்தான் விபீஷணன்.

ரங்க ராஜ்ஜியம் - 11“சோழாதிபதியே! உனது உபசரணைக்கு நன்றி. நான் இப்போது அரசன் இல்லை. இந்தப் பிரணவாகாரத்தின் தொண்டன். அதனால், உன்னோடு அரண்மனைக்கு வந்து விருந்துண்ணவோ, வேறு உபசரணைக்கோ நான் ஆட்படக்கூடாது. அது அபசாரம். எனவே என்னை மன்னிப்பாயாக.

அத்துடன், இன்றைய நித்ய கர்மானுஷ்டா னங்களும் பாக்கி உள்ளன. அவற்றை நான் நதியின் மிசை நீராடிவிட்டு வந்து செய்தாக வேண்டும். பிரம்மதேவரே வணங்கிய மூர்த்தம் தனது பயணத்தில் வழிபாட்டை இழந்துவிட்டது என்றோ, இல்லை... ஏதோ பெயரளவிலான பூஜைக்கு ஆளானதென்றோ எவரும் கூறிவிடக் கூடாது” என்று பயத்தோடும் பொறுப்போடும் பேசிய விபீஷணன்,  நீராடக் கிளம்பிச் சென்றான். நதி நீரில் மூழ்கி எழுந்தான்.

அவன் உதவியாளர்கள் ஓடி வந்து மாற்று உத்தரீயத்தை அளித்தார்கள். அதை அணிந்து கொண்டவனாக பூஜைக்கும் தயாரானான் விபீஷணன். அவனோடு சேர்ந்து நீராடிய மார்க ரிஷியும் முறைப்படியான பூஜைகளில் அவனை ஈடுபடுத்தத் தொடங்கினார்.

தர்மவர்மாவோ, தனக்கு இதுபோல் ஒரு  பாக்கியம் கிடைக்கவில்லையே என்கிற ஏக்கத்துடன் அந்த பூஜையைக் கண்டான். அவனோடு சேர்ந்து உறையூர் வாழ் மக்களும் அந்த பூஜையை தரிசித்தனர். கருடன் விண்ணில் பறந்தபடியே இருந்தான். கருடனின் பார்வையில், கீழே காவிரி ஆறு ஒரு மாலை போல் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது. பெருமாளின் பார்வை ஒரு நேர்க் கோட்டில் தென் திசையிலுள்ள இலங்கையை இங்கிருந்தே பார்ப்பது போலவும் இருந்தது.

கோயிலில்லா, கொத்தளங்களில்லா, மதிலில்லா, மாடமில்லா சந்நிதி மட்டும் கொண்ட ஒரு க்ஷேத்திரமாகக் கருடனின் பார்வையில் பதிவான அந்தக் காட்சிதான் திருவரங்கத் தோற்றத்தின் முதல் காட்சி!

அப்போது, நீலி வனத்து ரிஷிகளும் தாலப்ய முனிவரும் பிரணவாகாரப் பெருமாளை வணங்கி மகிழ்ந்திட வேண்டி, தன் சீடர் குழாமுடன் வந்து கொண்டிருந்தனர். மொத்தத்தில் அந்தச் சோழ தேசத்து காவிரிக்கரைப் பகுதியானது, ஜன சமுத்திரத்தாலும் சூழப்பட்டது.

ரங்க ராஜ்ஜியம் - 11

காவிரி மையம். அந்த மையத்தில் பிரணவாகாரப் பெருமாளின் திருக்கோலம், இருமருங்கிலும் காவிரியின் கலகலவென்ற பாய்ச்சல், மீதமுள்ள அந்தத் தீவு முழுக்க திரும்பின பக்கமெல்லாம் மனிதக் கூட்டம். குறிப்பாக ஒருபுறம் சோழன் தர்மவர்மனும் அவன் சகாக்களும், மறுபுறம் நீலிவனத்து ரிஷிகளும் அவர்களின் தொண்டர் குழாமும் என்று அந்த காவிரித் தீவு ஒரு குறுநாடுபோல் பரபரப்போடு காணப்பட்டது.

வழிபாட்டுக்குப் பிறகு, விபீஷணனின் கைகளைப் பிடித்துக் கொண்டு  `சில நாட்களாவது இங்கே தங்கித்தான் செல்லவேண்டும்’ என்று தர்மவர்மன் வேண்டிக்கொள்ள, விபீஷணனும் சம்மதித்தான்.

அதனைத் தொடர்ந்து நீலிவனத்து ரிஷிகள், ``ஒரு பிரம்மோற்சவத்தை இங்கே நாம் நிகழ்த் தலாமே’’ என்றனர் முதலில். பிறகு அவர்களே, ``பிரம்மோற்சவம் என்பது நிலையாகக் குடிகொண்ட பெருமாளுக்கே சாத்தியம். இந்தப் பெருமாள் யாத்திரையில் இருப்பவர். எனவே, பிரம்மோற்சவத்துக்கு இணையான ஓர் உற்சவத்தை நிகழ்த்துவோம்’’ என்றனர்.

அதைக் கேட்டு விபீஷணன் பூரித்துப் போனான். உற்சவமும் தொடங்கியது. வேக மாகப் பந்தலிட்டு அன்னக்கூடம் அமைத்து, வேள்விச்சாலையும் உருவானது. வேள்விக்குத் தேவைப்படும் சகலத்தையும் சோழ தேசத்தின் கைங்கர்யமாக வாரி வழங்கினான் தர்மவர்மா. அதைத் தொடர்ந்து சகல நிகழ்வுகளும் ஏழு நாள்கள் நடைபெற்று நிறைவுக்கு வந்தன. விபீஷணனும் தனது யாத்திரையைத் தொடங் கத் தயாரானான்.

பிரணவாகாரத்துடன் அவன் புறப்படப் போவதை எண்ணி மனம் கலங்கினான் தர்மவர்மா. மனதுக்குள் ‘எம்பெருமானே... இப்படி ஏழே ஏழு நாள்கள் மட்டும் இங்கே நீங்கள் தங்கிச் செல்லவா நான் அன்று அத்தனை கடும் தவம் புரிந்தேன். இந்த நீலிவனத்து முனிவர்களும்கூட என்னைப் போல் தவம் புரிந்தனரே... தவத்துக்குக் காலத்தே பலன் தருவதாகக் கூறிவிட்டு, இப்படிப் பிரிந்து செல்வது தகுமா. நாவல (பாரத) தேசத்தின் பாதம் போன்றதல்லவா இந்தத் தென்னகம். திருவடி காட்டி அறிதுயில் கொண்டிருக்கும் உமக்குப் பாத பாகம் பொருத்தமானதல்லவா. இதைவிடுத்து கண்ணீர்த் துளி வடிவிலான இலங்கைக்குப் போய் நீர் கோயில் கொள்வதால், பெரிதாய் ஆகப்போவதென்ன. இரக்க மனம் கொண்ட எங்களையெல்லாம் விட்டு, அரக்க மனம் கொண்ட மண்ணுக்கா நீ செல்வது’ - என்று தர்மவர்மாவுக்குள் ஏராளமான கேள்விகள்!

இப்படி, தர்மவர்மாவின் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தபோதுதான் அந்த அதிசயம் அரங்கேறத் தொடங்கியது.

எவ்வளவு முயன்றும் விபீஷணனாலோ, அவன் சகாக்களாலோ, பிரணவாகாரப் பெருமாளை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை. விபீஷணன் களைத்துப்போய் அமர்ந்ததோடு, விண்ணைப் பார்த்து, ‘`எம்பெருமானே! இதென்ன சோதனை... ஏன் இப்படி அசைய மறுக்கிறீர்” என்று கேட்டான். அப்போது விண்மிசை ஓர் அசரீரி ஒலிக்கத் தொடங்கியது.

‘`விபீஷணா! யாம் இனி இக்காவிரி சூழ் மையத்திலேயே இருப்போம். காலமெல்லாம் இங்கிருந்துகொண்டே உலகத்தவரை ரட்சிப் போம். இந்த மகத்தான செயலைச் செய்த உன்னையும் ரட்சித்தோம். நீ பெற்ற பூத உடலுக்கான காலம் முடியும் தறுவாயில், நீ எம்மை அடைவாய். அதன்பிறகு, உனக்கு மறுபிறப்பு இல்லை. இவ்வாறு யாம் கூறுவதால், உனது இலங்கையை யாம் புறக்கணித்ததாய் பொருளில்லை. என் நேரிய பார்வை படும் ஒரு நிலப்பரப்பாய் அது திகழும். மூன்றுவிதமான தீட்சைகளில் இலகுவானது நேத்ர தீட்சை. அதற்குரிய நாடாக உன் இலங்கை திகழட்டும். வருத்தங்களின்றி நீ உனது பயணத்தைத் தொடங்கு. யாம் கோயில் கொண்ட இந்தத் தலம் உள்ளவரை நீயும் சிந்திக்கப்படுவாய்”

தர்மவர்மாவைக் குதூகலிக்கச் செய்த அந்த அசரீரி தொடர்ந்தது...

“நீலிவனத்து முனிகளே! மாண்புமிக்க சோழ மன்னனே! உங்கள் பக்தி உன்னதமானது. அதன் பொருட்டு மாத்திரமன்றி, இந்தக் காவிரியின் பொருட்டும் யாம் இங்குக் கோயில்கொள்ள உள்ளோம். `நதம்' என்றால் காத்தல் என்றொரு பொருள் உண்டு. இதிலிருந்தே `நதி' என்ற சொல் உண்டானது. நதிகளே உலகிலுள்ள உயிர்களை உணவளித்துக் காக்கின்றன. உச்சியில் தோன்றி, சமதளத்தில் நடந்து, ஆழ்கடலில் கலந்து, மீண்டும் ஆவியாகி, மேகமாகி, மழையாகின்றன. ஆறு வகை செயல்பாடுகளைக் கொண்டதால், ஆறு என்றும் அழைக்கப்படும் அந்த நதிகளில், கங்கைக்கு என் பாத சம்பந்தமிருப்பதால், சகல பாவங்களையும் போக்கும் தன்மை கொண்டு மிளிர்கிறாள்.

தனக்கும் அதுபோல் ஒரு பெருமை வேண்டும் என்று காவிரி ஒரு காலத்தில் என்னை எண்ணித் தவம் செய்தாள். `கங்கைக்குப் பாதங்களைத் தந்த நான், உன் பொருட்டு தேகத்தையே தருவேன்’ என்று அன்று நான் தந்த வரத்தின்படி இன்று இங்கே கோயில்கொண்டுவிட்டேன்.

இன்று முதல் காவிரிக்கும் கங்கைக்கு நிகரான பெருமையும் வளமையும் உண்டாகட்டும். காவிரிசூழ் புனலரங்கமாய் இந்தத் தலமும் திகழட்டும். உயிர்களின் போக்கில் மனித வாழ்வின் தன்மை, மேன்மை, கேண்மைகளை நானே ஞானியர் வடிவில் வந்து உணர்த்துவேன். அதற்கேற்ப விண்ணகத்துப் பிரணவாகாரம் மண்ணகத்தே மிளிரட்டும். அனைவர்க்கும் நல்லாசிகள்” - என்று அந்த அசரீரி முடிந்தது.

அதைக் கேட்டு ரிஷிகளும் மன்னனும் பூரித்தனர்.

ஆதிகாலத்தில், காவிரி குடகில் தோன்றி தென்னாட்டில் தஞ்சைக்கருகில் பெரும்பள்ளம் எனும் ஊர் வரை வந்து, பின்னர் பாதாள நதியாகப் பூமிக்குள் பாய்ந்து மறைபவளாகவே இருந்தாள். இன்றுபோல் தஞ்சையைச் செழிக்கச் செய்து, பூம்புகாரில் கடலில் கலப்பவளாகக் காவிரி அன்று இல்லை.

ஏரகண்டர் எனும் முனிவர் ஒருவரின் தியாகத்தாலும், தர்மவர்மாவுக்குப் பின் தோன்றிய சோழ அரசன் ஒருவனாலும்தான் காவிரி தஞ்சையில் பாய்ந்து கழனிகளைச் செழிக்கச் செய்தாள்.
அது ஓர் ஆச்சர்யமான வரலாறு!

- தொடரும்...

- இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: ம.செ