
காசிக்குச் செல்பவர்கள் அங்கே அவசியம் தரிசிக்கவேண்டிய கோயில் காசி துண்டீர கணபதி திருக்கோயில். அந்தக் காலத்தில் எல்லோராலும் எளிதில் காசிக்குச் சென்றுவிடமுடியாது. காசி தலத்துக்குச் செல்ல முடியாதவர்கள் மட்டுமல்ல, காசியிலிருந்து ராமேஸ்வரத்துக்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களும், இங்கே தென்னகத்தில் காசி துண்டீர கணபதியை வழிபட வேண்டும் என்று விரும்பினார் காசியார் எனும் சித்தபுருஷர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அவரால் சுமார் 250 வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட கோயில்தான் காசியார்மடம் காசி கணேசர் கோயில். கோயிலை ஒட்டியே அன்னதான மண்டபம் ஒன்றும் ஏற்படுத்தினார். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இந்த விநாயகரை வழிபட்டு, அன்னதான மண்டபத்தில் பசியாறி, ஓய்வெடுத்துச் சென்றனர். தொடர்ந்து 180 வருடங்களுக்கும் மேலாக,
இக்கோயிலில் நித்திய பூஜைகளும் அன்னதானமும் சிறப்பான முறையில் நடைபெற்று வந்தன. ஆனால், காலப்போக்கில் கோயில் சிதிலமடைந்துவிட்டதுடன், அன்னதானமும் தடைப்பட்டது. தற்போது, அந்த ஆலயத்தையும் அன்னதான மண்டபத்தையும் புதுப்பிக்க காசி கணேசர் திருவுள்ளம் கொண்டுவிட்டார் போலும்!

ஆம்! காசியார் சித்தரின் வம்சத்தைச் சேர்ந்த முகேஷ் கண்ணா என்பவர், ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் கோயிலையும் அன்னதான மண்டபத்தையும் புதுப்பிக்கும் திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலுக்கு அருகிலுள்ள அமரடக்கி என்ற ஊருக்கு அருகில், காசியான் மடம் என்ற இடத்திலுள்ள காசி கணேசர் ஆலயத்தை தரிசிக்கச் சென்றோம். முற்காலத்தில், யாத்ரீகர்களது வருகையால் எப்போதும் கோலாகலத்துடன் திகழ்ந்த ஆலயமும் அன்னதான மண்டபமும் சிதிலம் அடைந்து கிடப்பதைப் பார்க்கும்போது, ‘தானத்தில் சிறந்த அன்ன தானம் நடைபெற்ற கோயிலும் மண்டபமும் இப்படியா சிதிலமடைந் திருப்பது?’ என்ற எண்ணம் நமக்கு ஏற்படுத்திய சோகம், மனதைப் பாரமாக அழுத்தியது.

கோயில் திருப்பணிகளை மேற்பார்வை செய்துகொண் டிருந்த திருப்பணிக் குழுவைச் சேர்ந்த முகேஷ் கண்ணா விடம் பேசினோம். அவர் நம்மிடம், கோயிலும் மடமும் உருவான திருக்கதையை விவரித்ததுடன், மேலும் சில விவரங்களையும் பகிர்ந்துகொண்டார்.
‘`எங்கள் காசியார் சித்தர், காசியிலிருந்து எடுத்து வந்த புனித கங்கை தீர்த்தம் மற்றும் மண் ஆகியவற்றுடன் பூமி பூஜை செய்து, கோயிலும் அன்னதான சத்திரமும் கட்டி முடித்தார். விநாயகருக்குக் `காசி கணேசர்' என்ற பெயரும் சூட்டி, கும்பாபிஷேகம் செய்துவைத்தார். பிறகு வந்தவர்களும் மிகச் சிறப்பான முறையில் கோயிலையும் அன்னதான சத்திரத்தையும் நிர்வகித்து வந்தனர். கோயிலில் பூஜைகளும் விழாக்களும் நடைபெறவும், அன்னதானம் செய்யவும் பக்தர் ஒருவர் இரண்டு ஏக்கர் நிலம் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.

சுமார் 70 - 80 வருடங்களுக்கு முன்பு, அப்போதிருந்த சூழ்நிலையின் காரணமாக, எங்கள் முன்னோர்கள் வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர். கோயிலையும் நிர்வகிக்க முடியாமல் போய்விட்டது. கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்கும் வரத்தைக் கேட்டபடியே அருளும் வரப்பிரசாதி இந்தக் காசி கணபதி. இவரை வழிபடுபவர்களுக்குத் தீயசக்திகளால் ஏற்படும் தொல்லைகள் விலகும்; தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை’’ என்ற முகேஷ்கண்ணா, விநாயகர் அருளால் நடந்த ஓர் அற்புதத்தையும் பகிர்ந்துகொண்டார்.
‘‘100 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேய அதிகாரி ஒருவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். பல சிகிச்சைகளை மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி தீரவேயில்லை. காசியார் சித்தரின் மகிமை களையும், காசி கணேசரின் அருள்திறம் பற்றியும் கேள்விப்பட்டு, கோயிலுக்கு வந்து காசி கணேசரை வழிபட்டுச் சென்றார். சில மாதங்களிலேயே அவரது நோய் குணமானது. ஆகவே, அவர் மீண்டும் இங்கு வந்து கோயிலுக்கென்று ஒரு குளம் ஏற்படுத்திக் கொடுத்தார் என்பது செவிவழிச் செய்தி. `காசியான் குட்டை' என்று அழைக்கப்படும் அந்தக் குளம் இன்றைக்கும் கோயிலுக்குப் பின்புறம் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

இப்போது, கோயில் மற்றும் அன்னதான மண்டபத்தைப் புதுப்பிப்பதுடன், கோயிலில் நித்திய பூஜைகள்-விழாக்கள் நடைபெறவும், அன்னதான மண்டபத்தில் ராமேஸ்வர யாத்ரீகர்களுக்கு அன்னதானம் வழங்கவும் திட்டமிட்டு, திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வினைகளையும் காரிய விக்கினங்களையும் அகற்றி, பக்தர்களின் வாழ்வில் அனைத்து நலன்களையும் அருளும் காசி கணேசரின் ஆலயம் விரைவில் புதுப்பொலிவு பெறவேண்டும்; பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அன்னதானம் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
ஓர் உன்னத நோக்கத்துக்காகக் காசியார் சித்தரால் ஏற்படுத்தப்பட்ட இந்தக் கோயிலின் திருப்பணிகளும் அன்ன தானமும் தடையில்லாமல் சிறப்புடன் நடைபெற நாமும் நம்மால் இயன்ற பொருளுதவி செய்வோம். கணேசப் பெருமானின் திருவருளைப் பெறுவோம்.

பக்தர்கள் கவனத்துக்கு:
ஸ்வாமி: அருள்மிகு காசி கணபதி
தலம்: காசியார்மடம் காசி கணபதி திருக்கோயில்
பிரார்த்தனைச் சிறப்பு: இந்தப் பிள்ளையாரை வழிபடுபவர்களுக்குத் தீய சக்திகளால் ஏற்படும் தொல்லைகள் விலகும்; தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை
எப்படிச் செல்வது?: புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில், பிரதான சாலையை ஒட்டியே அமைந்திருக்கிறது காசியார் மடம். ஆவுடையார் கோவிலிலிருந்து பேருந்து வசதி உண்டு.
வங்கிக் கணக்கு விவரம்:
Kasiyarmadam Arulmigu Sri Kasi Ganesar Trust
City Union Bank
A/C.No. 500101011590956
IFSC: CIUB0000004
Kumbakonam Main Branch.
மேலும் விவரங்களுக்கு: முகேஷ் கண்ணா (09443176687)
- எஸ்.கண்ணன் கோபாலன், படங்கள்: தே.தீட்ஷித்

கையில் கொழுக்கட்டையுடன், ஒரு குழந்தையைப் போன்று தவழும் கோலத்தில் அருளும் பிள்ளையாரை, வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தரிசிக்கலாம்.