மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்!

நாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்!
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்!

நாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்!

“தேனமர் சோலையாம் கதம்பவனம்; அங்கு வானளாவும் சிக்கல் வழியெங்கும்'' என்று கானம் பாடியபடி நுழைந்தார்  திரிலோக சஞ்சாரியான நாரதர்.

“என்ன நாரதரே! மதுரை என்றாலே சிக்கல் என்று முடிவுகட்டிவிட்டீர்கள் போலும்...” என்று நாம் கேட்டதும் சிரித்தார்.

“உண்மைதான். மதுரையில் கோலோச்சும் சில அரசியல்வாதிகளின் குளறுபடிகளால் திருக்கோயிலின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி உள்ளது என்று கவலைப்படுகிறார்கள் பக்தர்கள். அதுபற்றி முதலில் சொல்லிவிடுகிறேன் கேளும்...” என்றபடி, விவரங்களைச் சொல்ல ஆயத்தமானார். அவருக்குச் சுடச்சுட தேநீர் கொடுத்து உபசரித்தோம். தேநீரைப் பருகிக் கொண்டே விவரங்களைக் கொட்டத் தொடங் கினார் நாரதர்.

“கடந்த பிப்ரவரி மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கிழக்குக் கோபுர வாசலில் உள்ள கடைகளில் ஏற்பட்ட தீவிபத்தால் புகழ் பெற்ற வீரவசந்தராயர் மண்டபம் மிகுந்த சேதத்துக்குள்ளானது நினைவிருக்கும்.

இந்தக் கடுமையான விபத்தால் 400 ஆண்டுகள் பழைமையான வீரவசந்தராயர் மண்டபத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தீயின் வெம்மை காரணமாக  கற்தூண்களிலும் விரிசல் ஏற்பட்டது.

நாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்!

இதனால் கோயில் வளாகத்திலுள்ள 115 கடைகளைக் காலிசெய்து நடவடிக்கை எடுக் கப்பட்டது. பிறகு, கடையின் சொந்தக் காரர்கள்,  தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவ தாகச் சொல்லி, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரைச் சந்தித்தார்களாம். அடுத்த சில நாள்களிலேயே கோயில் வளாகத்தில் மீண்டும் கடை நடத்த அனுமதி வழங்கப்பட்டதாம். இந்த முறை நிறைய கட்டுப்பாடுகளுடன்தான் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாம். எனினும், பக்தர்கள் தரப்பிலிருந்து இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது'' என்றார்.

“பாதுகாப்புக்கே சவாலாகத் திகழ்கின்றன இந்தக் கடைகள் என்றுதானே, அவற்றைக் காலி செய்யச் சொன்னார்கள். இப்போது மீண்டும் அனுமதித்தால் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பார்களா? சரி, இது குறித்து கோயில் நிர்வாகத்திடம் விசாரித்தீரா?''

“விசாரிக்காமலா? `தீ விபத்து நடந்ததை அடுத்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன. அதன் ஒருபகுதியாக, கோயில் வளாகத்துக்குள் கடைகள் திறக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தினோம். இதில் அறநிலையத்துறையும் கண்டிப்புடன் இருந்தது.

எனினும் அரசியல் கட்சிகளுடன் தொடர்பு உடைய கடைக்காரர்கள் சிலர், அந்த அரசியல் பிரபலங்களின் மூலம் தங்களின் தேவையை சாதித்துவிட்டார்கள்' என்கிறார்கள் கோயில் நிர்வாகத் தரப்பில்'' என்றார் நாரதர்.

நாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்!அவரே தொடர்ந்து, “இதுபோன்று திருக் கோயிலை வணிகத் தலமாகவே மாற்றும் செயல்பாடுகள், மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பல கோயில்களில் நடைபெறவே செய்கின்றன'' என்று அலுத்துக்கொண்டார்.

பிறகு மீண்டும் மதுரை விஷயத்துக்கே வந்தவர், வேறொரு விஷயத்தைப் பகிர்ந்தார்.

``விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதியைப் பழைமை மாறாமல், ஆகம விதிப்படி புனரமைப்பு செய்யும் பணி தொடரும் சூழலில் மற்று மொரு திடுக்கிடும் சம்பவமும் நடந்துள்ளது...''

``அதென்ன...'' கவலையோடு விசாரித்தோம் நாம்.

“மீனாட்சி அம்மன் கோயில் முதல் பிராகாரத்தின் வடக்கு பகுதியில் மகாலட்சுமி சந்நிதி அருகில் பொற்படியான் சந்நிதி அமைந்துள்ளது. பக்தர்களில் பலர், தங்கள் வீட்டில் சுப விசேஷங்களின்போது, அழைப்பிதழ் தயாரானதும் அதை இந்தச் சந்நிதியில் கதவு இடுக்கு வழியே உள்ளே போட்டு வழிபாடு செய்வது வழக்கமாம்.

கடந்த வாரத்தில் ஒருநாள், இந்தச் சந்நிதிக்குள்ளிருந்து திடீரென புகை வந்துள்ளது. தகவல் அறிந்ததும் கோயில் ஊழியர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தார்களாம். இதனால் பெரும் அசம்பா விதம் தவிர்க்கப்பட்டது என்கிறார்கள்.

 விசாரணையில், பக்தர் ஒருவர் ஏற்றிவைத்து சென்ற கற்பூரத் தீபம் அங்கு கிடந்த பத்திரிகை யின் மீது பட்டு தீப்பற்றியது தெரியவந்ததாம்.மொத்தத்தில், பொறுப்பற்ற சிலசெயல்பாடு களாலும் பாதுகாப்பற்ற சூழலுமே இதுபோன்ற விபத்துகளுக்குக் காரணமாகின்றன. இனி, இப்படியான விஷயங்கள் நடைபெறாமல் இருக்க மீனாட்சியம்மைதான் அருள்புரிய வேண்டும்'' என்று முடித்தார் நாரதர்.

அதேநேரம் ஏதோ தகவல் ஒன்று வாட்ஸ் அப்பில் வந்து சேர, அதைப் பார்த்ததுமே நாரதரின் முகத்தில் வாட்டம்.

நாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்!

``என்ன விஷயம்...?'' என்று நாம் விசாரித்ததும் அதுபற்றி பகிர்ந்துகொண்டார்.

“இது சென்னை தகவல். சென்னை நுங்கம்ப் பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில் திருக்குளத்தின் கிழக்குக் கரையில், பித்ரு வழிபாடு செய்வதற்காக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. சென்னையின் பல பகுதிகளிலிருந்தும் வரும் பக்தர்கள், இந்த இடத்தில்தான் பித்ரு வழிபாடு செய்வார்கள்.

குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து முன்னோர் வழிபாடு செய்யும் நிலையில், தடுமாறி குளத்துக்குள் விழுவதற்கும்  வாய்ப்பு இருந்ததால்,  குளக்கரையில் இதற்காகத் தனியாக மண்டபம் கட்டப்பட்டது. சமீபத்தில் இந்த மண்டபம் இடிக்கப்பட்டிருக்கிறது. இதைக் கண்டித்து பொதுமக்கள் கோயில் நிர்வாகத்தை முற்றுகையிட்டிருக்கிறார்கள்.

அந்த இடத்தில் தேர் நிறுத்தம் வர இருப் பதால் மண்டபம் இடிக்கப்பட்டதாக கோயில் நிர்வாகத் தரப்பில் பதிலளித்தார்களாம்.

`தேர் நிறுத்தத்தை கோயில் மாடவீதிகளில் எங்கு வேண்டுமென்றாலும் வைக்கலாமே, குளக்கரையில் பித்ரு வழிபாட்டு மண்டபத்தை இடித்துவிட்டுத்தான் தேர்நிறுத்தம் அமைக்க வேண்டுமா?' என்று கொந்தளிக்கிறார்கள் இந்த பகுதி மக்கள்.

இதுகுறித்து அமலராஜ் என்ற அன்பர்,  இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் கவனத்துக்கும் கொண்டு சென்றிருக்கிறார். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் தரப்பில் சொல்லியிருக்கிறார்களாம்'' என்று நாரதர் சொல்லிமுடிக்கவும், அவருக்கு ஃபோன் அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

எடுத்துப் பேசியவர், ``எங்கே... திருவண்ணா மலையிலா...'' என்று பேசியபடியே, நம்மிடம் கை சைகையாலேயே விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார்.

- உலா தொடரும்...

நாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்!

மேலே பெண் உருவம், கீழே புலி போல் தோற்றம். இப்படி ஒரு விநாயகரை 'வியாகர சக்தி விநாயகர்' என்று மதுரை மீனாட்சி அம்மன் ஆலய கொடி மரத்தின் அருகில் தரிசிக்கலாம்.