Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 12

ரங்க ராஜ்ஜியம் - 12
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 12

இந்திரா சௌந்தர்ராஜன் - படம்: என்.ஜி.மணிகண்டன்

சோழ தேசத்தின் ஒரு பாதியோடு பாதாள நதியாகிவிடும் காவிரியை எண்ணி சோழமன்னன் ஒரு நாள் வெகு நேரம் சிந்தித்தான். ‘பாயும் புனல் இப்படியா பாதாளத்தில் விழுந்து பாழாகவேண்டும்? சமுத்திர சம்பந்தம் இல்லாத நதிகள் பாவத்தைப் போக்கும் சக்தியற்றவையாகி விடுகின்றன. சமுத்திரக் கலப்பின்போதுதான் அவை பெரும் சக்தி படைத்தவையாகின்றன. எனவே, காவிரி குறித்து யாது செய்வது ’ என்று எண்ணியவன், கொட்டையூர் எனும் ஆமணக்குச் செடி விளையும் ஊரில், ஓர் ஆமணக்குச் செடியின் அருகில் தவம் செய்யும் ஏரகண்டரிடம் சரண் புகுந்தான்.

ஏரகண்டர் அரசனின் பொதுநல நோக்கை எண்ணிப் பூரித்தார். ‘`ஓர் அரசன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல் உதாரணம் நீ’’ என்றவர் தொடர்ந்து, `‘காவிரியின் கணவனான அகத்தியரும் என் போல் ஒரு முனியே. எனவே, அவரை நாடிச் சென்று இதற்கொரு விடையைக் கண்டு வருகிறேன்’' என்று கூறிவிட்டு, அகத்தியர் தவம் செய்யும் பொதிகைமலை நோக்கிப் புறப்பட்டார்.

ரங்க ராஜ்ஜியம் - 12

அங்கே அகத்தியரை தரிசித்து, ‘`காவிரி சோழ மண்டலம் முழுக்க பாய்ந்திட உதவவேண்டும்’’ என்றார். அகத்தியர் அதை எண்ணி மகிழ்ந்தாலும் “மண்மிசை ஒரு நதியைப் பெற  நாடோ இல்லை ஊரோ... அவை உரிய பாக்கியம் செய்திருக்க வேண்டும்'' என்றார்.

“மண்கூடவா பாக்கியம் செய்திருக்க வேண் டும்?” என்ற ஏரகண்டர் கேள்வி எழுப்ப, பதில் சொன்னார் அகத்தியர்.

‘`மண்ணே பிரதானம். மனிதன் பின்னேதான். ஒரு மனிதன் தனது வாழ்நாளில் ஒருமுறைதான் மண்ணைக் காண்கிறான். ஆனால் மண்ணோ பலகோடி மனித வாழ்வை அனுதினமும் பார்த்த படி உள்ளது. எனவே, மண்ணை மலிவாகக் கருதி விடாதே. அதிலிருந்தே பசிக்கான உணவும் கிடைக்கிறது” என்றார்.

அத்துடன், ‘`மண்ணுக்கான மதிப்பு அதன்மேல் வாழும் மனிதர்களாலும் உருவாகும். குறிப்பாக, தியாகிகள் வாழும் மண்ணில் நன்மைகள் விரைந்து ஏற்படும். எனவே, சோழன் தன் நிலத்தில் காவிரி பாய விரும்பினால், அவள் விரும்பும் ஒரு பெரும் தியாகத்தைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் காவிரி பாய்ந்து மண்ணும் செழிப்புறும்” என்றார்.

ரங்க ராஜ்ஜியம் - 12


ஏரகண்டர் அதைக் கேட்டு ஒரு முடிவுக்கு வந்தார். சோழ அரசனுக்குப் பதில் தாமே பெரும் தியாகத்தைச் செய்வதென முதலில் தீர்மானித்தார். சோழன் இதற்கு முதலில் சம்மதிக்கவில்லை. ஏரகண்டர் அவனைச் சமாதானம் செய்தார். பின்னர், `பெரும் பள்ளம்' எனும் பகுதியில் பாதாளத்தில் காவிரி பாயும் இடத்தில் போய், காவிரியை மனதாரப் பிரார்த்தித்துக்கொண்டு தன் உயிரைத் தரும் விதமாகப் பள்ளத்து நீருக்குள் குதித்துவிட்டார்!

இதைக் காவிரி சற்றும் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சமும் சுயநலமில்லாமல் பிறர் நலன் கருதி உயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்த ஏரகண்ட ரின் மரணத்துக்கு, தான் காரணமாகிவிடக் கூடாது என்று கருதியவள், உள்ளே குதித்த முனிவரை வெளியேற்றும் நோக்குடன் திரும்பிப் பாய்ந்து, மண்மேல் அவரைத் தள்ளிவிட்டு ஓடத் தொடங்கினாள். ஏரகண்டரும் பிழைத்து காவிரி யும் சோழ நாட்டுக்கு முழுமையாய்க் கிடைத்தாள். அதன்பின் காவிரி, தஞ்சை மண்டலம் முழுக்கப் பாய்ந்து சமுத்திர ராஜனுடன் இணைந்து கரைந் தாள். இதனால் உச்சம், மத்திமம், ஆழம் எனும் மூன்றும் கொண்டவளாக விளங்கினாள்.

மலையில் விளைவதால் உச்சமும், நிலத்தில் தவழ்வதால் மத்திமமும், கடலில் கலப்பதால் ஆழமும் அவளுக்கு ஏற்பட்டது. அதன் காரண மான பெரும் விசைப்பாடே அவளுக்குப் புனிதத் தன்மையையும் ஏற்படுத்திற்று. எல்லாம் பிரணவாகாரம் காவிரித் தீவில் கோயில் கொள்ளத் தொடங்கியதால்தான் என்றும் கூறலாம்.

தர்மவர்மன் அதன்பின் பிரணவாகாரப் பெருமானுக்கு ஏற்ற ஒரு கோயிலைக் கட்டத் தீர்மானித்தான். அவனது முயற்சிக்கு நீலிவனத்து ரிஷிகள் உதவி செய்யத் தொடங்கினர்.

எந்த ஓர் ஆலயமும் மூன்றுவித சிறப்போடு இருத்தல் அவசியம். அதில் முதலானது மூர்த்தி. அடுத்தது தீர்த்தம். மூன்றாவது விருட்சம். இதில் மூர்த்தியின் சிறப்பைச் சொல்ல எந்த மொழி களிலும் சொற்களில்லை. எம்பெருமானே தன்னைச் சிலாரூபமாக்கித் தந்த சிறப்பு கொண் டது. தீர்த்தச் சிறப்புக்குக் காவிரி ஒருபுறம் இருந் தாலும், தீர்த்தக்குளங்களும் வேண்டுமே!

ஓடும் நதியில் நாம் நம்முடைய கர்மங்களைத் தொலைக்க, நதி கடலில் சேர்ந்து இறுதியாக விண்ணை அடையும்.  குளங்களே அருள்கதிர்களை தன்னுள் மூழ்குபவர்களுக்கு அள்ளித் தரும். இதனாலேயே தீர்த்தவாரிகள் குளங்களில் நிகழ்த்தப்படுகின்றன. விடுவதற்கு ஆறு எனில், பெறுவது குளத்தில்தான். எனவே, பிரணவாகாரப் பெருமாளான அரங்கன் ஆலயத்துக்கென அருள்மிகுந்த குளங்களை உருவாக்க முதலில் ஆலோசனை கூறினர்.

அதற்கேற்ப ஆலயம் அமைந்த இடத்துக்கு அருகில் இயற்கையாகவே ஒரு குளம் சந்திர புஷ்கரணியாக விளங்கிற்று. சந்திரபுஷ்கரணி என்றால் மூழ்குபவர்க்கு மன அமைதியும் தெளிவும் தரும் குளம் என்று பொருள். அந்தக் குளத்தை மையமாகக் கொண்டு எட்டுத் திசை களிலும் எட்டு திருக்குளங்களை தர்மவர்மன் உருவாக்கினான்.

ரங்க ராஜ்ஜியம் - 12

வில்வ தீர்த்தம், நாவல் தீர்த்தம், அரசு தீர்த்தம், புன்னை தீர்த்தம், மகிழ தீர்த்தம், புரசு தீர்த்தம், கடம்ப தீர்த்தம், மா தீர்த்தம் என எட்டு விருட்சங் களின் பெயர்களையும் சுவைகளின் குணங் களையும் கொண்ட திருக்குளங்கள் உருவாயின. வில்வ தீர்த்தம் ஒருவருக்குச் செல்வம் தரும்; நாவல் தீர்த்தம் நோயகற்றும்; அரசு பிள்ளைப்பேறு தரும்; புன்னை மங்கலங்கள் எல்லாம் தரும்; மகிழ தீர்த்தம் புகழைத் தரும்; புரசு ஞானம் தரும்; கடம்பம் உறுதியான தன்மைகளைத் தரும்; மா தீர்த்தம் சகல சௌபாக்கியங்களையும் தரும்.

இந்த எட்டு தீர்த்தங்களிலும் நீராடி, நிறைவாக சந்திரபுஷ்கரணியிலும் நீராடி பிரணவாகாரப் பெருமாளை வழிபட, பிறப்பின் நோக்கம் தெளிவாகி, அவரின் திருவடி நிழலில் அகல மாட்டாத இடம் கிடைக்கும்.

இந்தத் தீர்த்தங்களை உருவாக்கும்போதே குளக் கரையில் அதற்கான விருட்சங்களும் இடம் பெற்று தழைத்து வளர்ந்ததோடு, நவசக்தி தரும் ஒரு க்ஷேத்திரமாக திருவரங்கத்தை ஆக்கின. இதனால் நவகிரகங்களால் அரங்கன் பக்தர்களை ஆட்டுவிக்க இயலாதபடி ஓர் இயலாமை தோன்றிற்று.

தீர்த்தச் சிறப்பைத் தொடர்ந்து, ஒரு கோயிலின் சிறப்பும் பலமும் அதன் விமானம் அமைவதில் இருக்கிறது. இதன் சூத்திரத்தை அறிந்தவன் தேவருலகில் மயன் ஆவான். விஸ்வகர்மாக்களும் இதை அறிந்தவர்களே, அவர்களின் துணையோடு அரங்கன் சந்நிதியின் சொர்ண விமானம் வடிவமைக்கப்பட்டு அதில் பரவாசுதேவனாய் அரங்கனே காட்சி தரும் கோலம் உருவாக்கப்பட்டது. உள்ளே பிரணவாகார அரங்க தரிசனம் முடிந்து, புறத்தில் பரவாசுதேவனையும் வணங்கு வது என்பது, உள்ளும் புறமும் அவரே நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்துவதாகும்.

இந்த அரங்கக் கோபுர விமானக் கலசங்கள் காயத்ரியின் தலைப்பகுதிகளாகும். கீழுள்ள அரங்க மண்டபமோ 24 தூண்களை உடையது. இவை காயத்ரியின் இருபத்து நான்கு அட்சரங்களை எதிரொலிப்பதாகும். ஆலயம் இப்படிப் பெரும் மந்திரச் சிறப்போடும் வலிவோடும் உருவாக்கப்பட்ட அதே தருணத்தில் அரங்கன் ஆலயத்தைச் சுற்றி ஏழு மதில்கள் உருவாக்கப் பட்டன. ஏழு மதில்களுக்கு இடையில் ஏழு சுற்றுகள்!

இந்த ஏழு சுற்றுகளையும் சுற்றி முடிந்து, காயத்ரியின் அட்சர வலிமையுள்ள அரங்க மண்டபத்தில் நுழைந்து, உள்ளே சயனக் கோலத்தில் அருளும் அரங்கனை தரிசனம் செய்வதே பிறவித்தளையிலிருந்து விடுபடச் செய்வதாகும்.

ஏழு சுற்றுகளும் ஏழு உலகங்கள் இருப்பதையும், ஓர் உயிர் எடுக்கும் எழு பிறப்புகளையும் குறிப்பன. பூலோகம், புவர்லோகம், ஸுவர் லோகம், மஹர்லோகம், ஜநோ லோகம், தபோலோகம், சத்யலோகம் என்று ஏழு உலகங்கள் இருப்பதையே இந்த சுற்றுகள் காட்டுகின்றன.

இந்த மதில்களும் சுற்றுகளும் தொடக்கத்தில் பூலோகச் சுற்று, புவர்லோகச் சுற்று, சுவர்லோகச் சுற்று, மஹர்லோகச் சுற்று என்று அந்தந்தப் பெயர்களிலேயே அழைக்கப்பட்டன. இறுதிச் சுற்று இவற்றை அடைந்து கடக்கும் சுற்று. அது ‘அடையவளைஞ்சான்’ என்றழைக்கப்பட்டது.

ஒவ்வொரு சுற்றின் நடுவிலும் வாயில்கள் அமைக்கப் பட்டன. வாயில்களின் மேல் கோபுரங்கள் அமைக்கப் பட்டன. இதில் ஆறு, ஏழு, அடையவளைஞ்சான் ஆகிய சுற்றுகளில் மனிதர்கள் வீடுகளோடு வசித்தனர். ஏனைய சுற்றுகள் ஆலயத்துக்குள் அமைந்த சுற்றுகளாயின. இதன் பொருட்டே, திருவரங்கத்துச் சிறப்பினை நூற்றியெட்டு திருப்பதியந்தாதியானது இப்படிச் சிறப்பிக்கிறது...

சீர்வந்த வுந்தித் திசைமுகனா லல்லாதென்
சோர்வந்த சொல்லிற் சுருங்குமோ? ஆர்வம்
ஒருவரங்கக் கோயிலுகந்தவரை யாள்வான்
திருவரங்கக் கோயிற் சிறப்பு

இந்தச் சுற்றுகளே திரிவிக்ரமசோழன் சுற்று, கிளிச் சோழன் சுற்று, திருமங்கை மன்னன் சுற்று, குலசேகரன் சுற்று, ராஜமகேந்திரசோழன் சுற்று, தர்மவர்மன் சுற்று என்று காலத்தால் பெயர் மாற்றம் கொண்டன.

அப்படி அவை பெயர்மாற்றம் கொள்ளுமுன், இத்தனைச் சிறப்பான இந்த ஆலயமானது தர்மவர்மன் காலத்துக்குப் பின் சிலகாலம் மண்மூடியும் போனது! காவிரிதான் பொங்கிப் பெருகி வந்து, பூமியின் நிகரில்லாத இந்த ஆலயத்தை சில காலம் மண்ணுக்குள் புதையச் செய்தாள். 

ஏன்... எதனால்?

- தொடரும்...

ரங்க ராஜ்ஜியம் - 12

தேங்காய் உடைக்கும்போது...

பூஜைக்குத் தேங்காய் உடைக்கும்போது, `க்ஷீரபலா ஸப்த பலா பரசுராம சுபம், சுபம்’ என்றபடி உடைக்கவேண்டும். காரணம், தேங்காய் பரசுராமரால் பூமிக்குக் கொண்டுவரப்பட்டது என்பர். தேங்காய் மூன்றில் இரு பங்காக உடைந்தால் மனமகிழ்ச்சி உண்டாகும்; ஐந்தில் இரு பங்கானால் செல்வம் சேரும். உடைக்கும்போது, தேங்காய் கைதவறி கீழே விழுந்தாலோ, அழுகியிருந்தாலோ மனக்கலக்கம் தேவையில்லை. வேறு தேங்காயை உடைத்து வழிபடலாம்.

- ரமணா, பெங்களூரு

ரங்க ராஜ்ஜியம் - 12

நவகிரகங்களும் நிவேதனங்களும்

நவகிரகங்களை ஆலயங்களில் 9 முறை வலம் வந்து பணிந்து துயர்களிலிருந்து விடுதலை பெறுவது வழக்கம். அத்துடன், விசேஷ காலங்களில் கீழ்க்காணும் நிவேதனங்களைச் சமர்ப்பித்து வழிபட்டால் சகல நலன்களும் கைகூடும்.

சூரியனுக்குச் சர்க்கரைப் பொங்கலும், சந்திரனுக்கு பால் பாயசமும், செவ்வாய்க்கு வெண்பொங்கலும், புதனுக்கு புளியோதரையும், குருவுக்கு தயிர் சாதமும், சுக்கிரனுக்கு நெய் சேர்த்த பொங்கலும்,

சனி பகவானுக்கு எள் சாதமும், ராகுவுக்கு உளுந்து சாதமும், கேதுவுக்கு சித்ரான்னமும் சமர்ப்பித்து வழிபடவேண்டும்.

- கே.சித்ரா, கடலூர்