
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 11
ஓலைச்சுவடிகளாக, செவிவழிப் பாடல்களாக, அச்சிதழ்களாக வெவ்வேறு வடிவங்களில் ஒளிந் திருக்கின்றன நாட்டுப்புறத் தெய்வங்கள் பற்றிய கதைப்பாடல்கள். தொன்ம வாழ்க்கைக்குச் சான்றாகவும் திகழும் இந்தக் கதைப்பாடல்களை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க அரசுகளோ, கல்விக் கூடங்களோ முனைவதில்லை. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்ற வெகுசில நிறுவனங்களே இப்படியான கதைகளை நூல்களாக ஆவணப்படுத்துகின்றன.
தமிழகத்தில் உத்தேசமாக, ஐந்து லட்சம் ஓலைச் சுவடிகள் இருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர் கள். பெரும்பாலானவை தனி நபர்களிடம்தான் இருக்கின்றன. இவற்றில் பல அரிய சித்த மருத்துவ ஓலைச்சுவடிகளும் அடக்கம். யாரிடம் ஓலைச் சுவடிகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து, சொற்பப் பணம் கொடுத்து வாங்கி வெளிநாட்டுக் குக் கொண்டுபோகும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நிறைந்து திகழும் இந்தக் கதைப் பாடல்கள், கோயில் கொடை விழாக்களில் வில்லிசையோடு சேர்ந்து ஒலித்துக்கொண்டிருக் கின்றன. சுமார் 184 கதைப்பாடல்கள் வில்லிசைக் கலைஞர்களால் இசையோடு ஆவணப்படுத்தப் பட்டிருக்கின்றன.

சுடலைமாடன் கதை, மன்னன் கருங்காலி கதை, நளாயினி கதை, சித்திரபுத்திர நயினார் கதை, கஞ்சன் கதை, அபிமன்னன் போர்க்கதை, குலைவாழை இசக்கி கதை, கால சுவாமி கதை என ஏராளமான சாமிமார் கதைகள், அக்காலத்தில் நிலவிய சாதியக் கொடுமைகள், நம்பிக்கைகள், வாழ்க்கை நடைமுறைகள், சமூகச் சூழல் என அனைத்துக்கும் சான்றாகத் திகழ்கின்றன.
உதாரணத்துக்கு, `மன்னன் கருங்காலி வாதை' கதை. இது தென்மாவட்டங்களில் வசிக்கும் புலையர்கள், காணிக்காரர்கள், கணியர்கள், இடையர்கள், வெள்ளாளர்களின் வாழ்வை சுவாரஸ்யமாகக் காட்சிப்படுத்துகிறது. தாழக்குடி, சீதப்பால், பூதப்பாண்டி, காக்காச்சி மலை, அனந்த புரம், திட்டுவிளை என குமரி மாவட்ட நிலக் காட்சிகளையும் கண்முன்னால் நிறுத்துகிறது.
நன்கு விளைந்து நிற்கும் வாழைத்தோட்டத் தைப் பாதுகாக்க மந்திரத்துக்குப் பெயர்போன காளிப்புலையனை அழைக்கிறார்கள் நம்பிமார். அவன், நிறைமாதக் கர்ப்பிணியான தன் மனைவி பட்டுப் புலைச்சியையும் அழைத்து வந்து காவல் காக்கிறான். வாழைப் பழங்களின் வாசனையில் மயங்கிய பட்டுப்புலைச்சி, தன் கணவனிடம் பழக்குலையை வெட்டித் தரும்படிக் கேட்கிறாள்.
மனைவியின் வார்த்தையைத் தட்ட முடியாத காளிப்புலையன், குலையை வெட்டித் தர, நம்பிமார் இதைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். புலையனைக் கொலை செய்யத் துரத்துகிறார்கள். மனைவியோடு தப்பியோடும் புலையன், கால் தடுக்கி ஒரு மரத்திலிருந்து விழுந்து உயிரைவிடுகிறான். பட்டுப்புலைச்சி, அருகிலிருக்கும் இசக்கியம்மன் கோயிலுக்குள் புகுந்துகொள்கிறாள். உள்ளே நுழையும் நம்பிமார், அவளைக் கொலை செய்ததோடு அவள் வயிற்றிலிருந்த குழந்தையையும் கீறியெடுத்துக் கொன்று வீசுகிறார்கள். இசக்கியின் அருளால் பட்டுப் புலைச்சி ‘குலைவாழை இசக்கி’ என்ற பெயரிலும், அவளின் குழந்தை, ‘காளிமுத்து’ என்ற பெயரிலும், காளிப் புலையன் ‘கழுக் காரன்’ என்ற பெயரிலும் தெய்வமாகி தங்களைக் கொன்றவர்களை அழிக் கிறார்கள். காளிமுத்து, ‘மன்னன் கருங் காலி’ என்ற பெயரில் தென் மாவட் டங்களில் வழிபடப்படுகிறான்.
கசமாடசாமி கதைப்பாடல் ஒரு தீரமிக்க வீரனின் கதையைப் பாடு கிறது. கசமாடசாமிக்குத் தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் பீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, தென்மாவட்டங்களின் நாட்டுப்புற ஆலயங்களில் பீட வழிபாடே நிகழ்ந்து வருகிறது. சில கோயில்களில் சுடலைமாடனும் சில கோயில்களில் கசமாட சாமியும் தலைவனாக இருப்பர்.

சுடலையின் கோயில்களில் பிரம்ம ராட்சசி, பேய்ச்சி, அணைந்தாள், இசக்கி, முண்டன், சிவனணைஞ்சான், சந்நியாசி, முனியன் உள்ளிட்ட 21 தெய்வங்களும் பீட வடிவில் அமர்ந்திருப்பார்கள். பிரம்ம ராட்சசி சுடலையின் அம்மா. அணைந்தாள் சுடலையின் மனைவி. கசமாடசாமி தலைவனாக இருக்கும் கோயில்களில் கசத்தியம்மா, தவசித் தம்பிரான், பேச்சி, நல்லமாடன், இருளப்பன், தூசுமாடன், கரடி மாடன், சங்கிலி பூதன், பட்டவராயன், பொம்மக்கா, திம்மக்கா, முண்டன், பலவேசக்காரன் ஆகியோர் அமர்ந்திருப்பார்கள். கசமாடனின் மனைவி கசத்தியம்மா.
தென்மாவட்டங்களில், மொத்தக் காற்றிலும் கசமாடன் அரூபமாக உலவித் திரிகிறார் என்று நம்புகிறார்கள் மக்கள். மரத்தில், நீரில், காற்றில் எதன் வழியேனும் அவன் ஏறி வந்து, சிலரை வதைப்பதன் மூலம் தன் வருகையை உணர்த்துவார். அம்மக்கள், கசமாடன் வருகையை உணர்ந்து பீடம் அமைத்து படையல் போட்டபிறகு, அந்த ஊரின் காவலனாக அமர்ந்து அந்த மக்க ளைக் காப்பார்.
கசமாடசாமி, மாடப்பருக்கும் மாடிப்பிள்ளைக்கும் மகனாகப் பிறந்தவர். மிகச் சிறந்த வீரனான கசமாடனை, மந்திரி பதவியளித்து தன் அரண்மனையில் இருத்திக் கொண்டார் சோழ மன்னர். ஒரு முறை, மன்னனின் மகளுக்கு நேர்ந்த பெரும் ஆபத்திலிருந்து தனியொரு வனாக நின்று அவளைக் காத்ததால், விலையுயர்ந்த முத்துமாலை ஒன்றை கசமாடனுக்குப் பரிசாக வழங்கினார் சோழ மன்னர்.
திடீரென நாட்டை ஒரு பெரும் ஆபத்து சூழ்ந்தது. நகரின் மத்தி யிலிருந்த பொதுக்குளத்தில் முதலை ஒன்று புகுந்து மக்களை வதைக்கத் தொடங்கியது. அந்த முதலையைப் பிடிக்கும் பொறுப்பை கசமாடனிடம் வழங்கினார் மன்னர்.

இரவில் முதலைக்கு வலை போட்டுவிட்டு குளக்கரையில் காத் திருந்தார் கசமாடன். அப்போது, கள்வர்கள் சிலர் அரண்மனைக்குள் நுழைந்து பொக்கிஷங்களைத் திருடுவதற்காக வந்தார்கள்.
வழியில் கசமாடன் அமர்ந்திருப்ப தையும் அவர் கழுத்தில் விலையுயர்ந்த மாலை இருப்பதையும் கண்டு அவரைச் சுற்றிவளைத்தார்கள். அவர்களோடு சண்டையிட்ட கச மாடன் கள்வர்களைக் கொன்றார். இறுதியில் அவரும் உயிர்துறந்தார். கசமாடன் இறந்ததைக் கேள்விப்பட்டு அவர் மனைவி கசத்தியும் இறந்து போனாள்.
கசமாடனின் தியாகத்தை அறிந்த சோழ மன்னன், இருவருக்கும் மாடங்கள் அமைத்து, அவர்களைத் தெய்வங்களாக வணங்கத் தொடங் கினார். இன்றும் கசமாடனை பல்வேறு சமூகங்கள் வணங்கி வருகின்றன. ஆண்டுதோறும் கொடை நடத்தி அவரைக் குளிர்விக் கிறார்கள் மக்கள்.
- மண் மணக்கும்...
- வெ.நீலகண்டன்
படங்கள்: எல்.ராஜேந்திரன்