Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

Published:Updated:
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!


நைவேத்தியமும் இல்லை; புத்தாடையும் கிடையாது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
ஒரு
தேசம் செழித்து வளரவேண்டுமெனில், அந்த தேசத்தில் விவசாயம் சீரும் சிறப்புமாக நடைபெறவேண்டும். விளைச்சல் அமோகமாகத் திகழ வேண்டுமானால், அங்கே நீர்நிலைகள் அதிகம் இருக்கவேண்டும்; உழுவதற்கு நல்ல திடகாத்திரமான விவசாயிகளும், அவர்களுக்குப் பக்கபலமாக போஷாக்கான மாடுகளும் தேவை.

விளைச்சல் அபரிமிதமாக இருந்தால்தான், தானியம் குறைவின்றிக் கிடைக்கும். தானியம் குறைவறக் கிடைத்தால்தான், உணவு குறித்த எந்தக் கவலையுமின்றி தேசத்தின் மீதும், தேச நலனின் மீது கவனம் செலுத்துவார்கள் மக்கள். நாடு குறித்து சிந்திக்க, பக்கத்து வீட்டுக்காரர்கள் குறித்தும், அடுத்த தெருக்காரர்கள் குறித்தும் அன்புடன் நலம் விசாரிப்பார்கள்; சகோதர பாசமும் தோழமையும் இழையோடும். இவை அனைத்தும் இம்மியளவும் பிசகாமல் நடந்தேறவேண்டுமெனில், பண்புடனும் பரிவுடனும் வீரத்துட னும் விவேகத்துடனும் செயல்படுகிறவனே மன்னனாக இருக்கவேண்டும்.

ஒய்மா தேசத்தை ஆட்சி செய்த நல்லியக்கோடன் அப்படிப்பட்ட மன்னன். அவனை ஊரே புகழ்ந்தது; அவனது நல்லாட்சியைக் கொண்டாடியது. மக்களும் பசுக்களும் நலமுடன் வாழவேண்டும் என்று இடையறாது சிந்தித்துச் செயல்பட்டான், மன்னன். ஆறு- குளங்களை வெட்டினான்; கல்வி மற்றும் மருத்துவச் சாலைகளை நிறுவினான். புலவர்களை அழைத்துப் பொன்னையும் பொருளையும் வழங்கினான். சங்க இலக்கியமான சிறுபாணாற்றுப்படையில், பாட்டுடைத் தலைவனாகப் புகழப்பட்டிருக்கிறான் நல்லியக்கோடன். ஊரும் உலகமும் மன்னனையும் மன்னனைப் போற்றி எழுதப்பட்ட நூலினையும் தலையில் வைத்துக் கொண்டாடியது!

ஆலயம் தேடுவோம்!

தற்போதைய திண்டிவனம் பகுதியை அடுத்துள்ள 'கிடங்கில்’ எனும் பகுதியைத் தலைமை இடமாகக்கொண்டு, சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தான் நல்லியக்கோடன். மக்கள், அவனை அரசனாகப் பார்க்காமல், ஆண்டவனாகவே பார்த்தனர். ஆனால் அவனோ, இந்தத் தேசம் செழிப்பதற்கு இறைவனே காரணம் என்பதில் உறுதியாக இருந்ததால், கடவுளின்மீது மாறாத பக்திகொண்டிருந்தான். ஒய்மா தேசத்துக்கு உட்பட்ட இடைக்கழிநாடு, எயிற்பட்டினம், ஆமூர், மூதூர் (தற்போது முன்னூர் என வழங்கப்படும் இந்த ஊரில் அமைந்துள்ள சிவாலயத்தில் ஸ்ரீமுருகப்பெருமான் அழகுத் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இவர்தான், நல்லியக்கோடனுக்கு இஷ்டதெய்வம்; குலதெய்வம் எல்லாமே!) வேலூர், மாவிலங்கை ஆகிய பகுதிகள் நகரங்களாக வளர்ந்தன. இவற்றில், தீனசிந்தாமணி நல்லூரும் ஒன்று.

இன்றைக்கு, 'நகர்’ என்றழைக்கப்படும் கிராமம் அது. சரி... அதென்ன தீனசிந்தாமணி நல்லூர்?!

முதலாம் குலோத்துங்க சோழனுடைய மனைவியின் பெயர் மதுராந்தகி. இவருக்கு அவனி முழுதும் உடையாள், புவனம் முழுவதும் உடையாள், தீனசிந்தாமணி ஆகிய பெயர்களும் உண்டு என்கின்றன கல்வெட்டுக்கள்! எனவே, இந்த ஊரையும், கோயிலையும் முதலாம் குலோத்துங்கன் உருவாக்கியிருக்கலாம் என்கின்றனர் சரித்திர ஆய்வாளர்கள்.

ஊரின் நடுநாயகமாக அமைந்துள்ளது, ஸ்ரீராதா ஸ்ரீருக்மிணி சமேத ஸ்ரீநாகவர்ணபெருமாள் கோயில். நாடுடைய பெருமாள், வாளால் வழி வகுத்த பெருமாள் எனப் பெருமாளின் திருநாமங்களைத் தெரிவிக்கிற கல்வெட்டுக்கள் உள்ளன. அதுமட்டுமா?! விஜயராஜேந்திர வளநாடு, நாடுடைய பெருமாள் நல்லூர் என்றும் இந்த ஊருக்குப் பெயர்கள் இருந்தனவாம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயத்தில் தினமும் திருவாராதனை நடைபெறவும், அபிஷேக-அலங்காரங்கள் நடைபெறுவதற்கும் ஏராளமான நிலங்களை தானமாக அளித்துள்ளான் நல்லியக்கோடன். அதேபோல், குலோத்துங்க சோழன், பிற்கால பாண்டிய மன்னர்கள், விஜயநகரப் பேரரசர்கள் ஆகியோரும், ஆலயத்தில் விளக்கெரிவதற்காகவும், விழாக்கள் கோலாகலமாக நடைபெறுவதற்காகவும் நிலங்களையும், மாடு- கன்றுகளையும், கிராமங்களையும் கோயிலுக்குத் தானமாக தந்துள்ளதைக் கல்வெட்டுகளின் மூலம் அறியமுடிகிறது.

ஆக, தீனசிந்தாமணி நல்லூர் என்று அழைக்கப்பட்டு, தற்போது 'நகர்’ என்று அழைக்கப்படும் கிராமத்தில், ஸ்ரீநாகவர்ணபெருமாள் ஒரு காலத்தில் சர்வ அலங்காரங்களுடன் வீதியுலா வந்திருக்கிறார்; விழாக்கள் விமரிசையாக நடந்தேறியுள்ளன; ஆடிப்பூர விழாவும் வைகுண்ட ஏகாதசியும் பிரமாண்டமாக நடந்துள்ளன. மேலும், புரட்டாசி மாதத்தில், பெருமாளைத் தரிசிக்க, சுற்றுவட்டார ஊர்களில் இருந்தெல்லாம் மாட்டு வண்டிகளைப் பூட்டிக் கொண்டு ஏராளமானோர் இங்கு வந்துள்ளனர்.

'இந்தப் பெருமாள்தான் நம் தேசத்தைச் செழிக்கச் செய்கிறார்’ என்று நல்லியக்கோடன் இங்கு வந்து மனமுருகி வழிபட்டுச் சென்றிருக்கிறான். ஆனால், அந்த ஸ்ரீநாகவர்ணபெருமாள் கோயில் இன்றைக்கு அலங்கோலமாகக் கிடக்கிறது.

ஆலயம் தேடுவோம்!

முழுக்க முழுக்கக் கருங்கல் திருப்பணியால் ஆன ஆலயம், இன்றைக்கு வெறும் கற்குவியலாகக் காட்சி தருகிறது. ஆலய நுழைவாயிலே மிக மோசமாகச் சிதைந்திருக்கிறது. சுற்றியுள்ள மதில் ஒரு காலத்தில் பிரமாண்டமாக இருந்திருப்பதை, இடுப்பளவு மதிலும், அருகில் குவிந்துகிடக்கும் கற்களும் உறுதிப்படுத்துகின்றன.

''மன்னர் பெருமக்கள் ஆலயத்தையும், ஆலயத்தில் குடியிருக்கும் இறைத் திருமேனிகளையும் பார்த்துப் பார்த்து சிரத்தையுடன் வடித்துள்ளனர். யோக நிலையில் காட்சி தரும் ஸ்ரீநரசிம்மர், கையில் ராமாயண காவியத்தைப் படித்தபடி தரிசனம் தரும் ஸ்ரீஅனுமன் (ஸ்ரீராமரும் ஸ்ரீஅனுமனும் முதன்முதலில் சந்தித்த இடமான நவபிருந்தாவனத்தில் இதுபோல் காட்சி தருகிறார் ஸ்ரீஅனுமன்), அழகு கொஞ்சும் திருமுகத்துடன் ஸ்ரீஆண்டாள், கருடாழ்வார்... முக்கியமாக, நின்ற கோலத்தில் ஸ்ரீராதா ஸ்ரீருக்மிணியுடன் அருளும் ஸ்ரீநாகவர்ணபெருமாள் ஆகியோரைத் தரிசித்துக்கொண்டே இருக்கலாம்.

ஆனால் என்ன... பட்டாடையுடன் காட்சி தரவேண்டிய பெருமாளுக்கு, மாற்றுத் துணிகூட இல்லை. நைவேத்தியம், அபிஷேகம், அலங்காரம் என எந்தச் சந்தோஷங்களும் இன்றி இருக்கிறார் பெருமாள்'' என வருந்துகின்றனர் ஸ்ரீநாகவர்ண பெருமாள் வைணவ சபையினர்.

ஆலயம் தேடுவோம்!

''அர்த்தமண்டபம், மகா மண்டபம் கருவறை என இருந்தும் இல்லாதது போல்தான்! கருவறைக்கு மேற்கூரையே இல்லை; மண்டபங் களில், செடி- கொடிகளின் புண்ணியத்தால் வளர்ந்து வருகின்றன விரிசல்கள்! பாதுகாப்பு கருதி, இறைத் திருமேனிகளை ஒரு கொட்டகையில் வைத்திருக் கிறோம். கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து, கோபுரங்கள் அமைத்து, கும்பாபிஷேகத்தை நடத்தி விட வேண்டும் என்பதுதான், ஊர்மக்களின் ஒட்டு மொத்த ஆசையும் பிரார்த்தனையும்!'' என்று கண்ணீருடன் தெரிவிக்கிறார் ராமானுஜதாசன் எனும் பெரியவர்.  

'மாதங்களில் நான் மார்கழி’ என்று புகழ்ந்தார் பகவான். அந்த மார்கழியில், எல்லாப் பெருமாள் ஆலயங்களிலும் திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி, சுடச்சுட நைவேத்தியம், மணக்க மணக்க மலர் மாலைகள், பளபளக்கும் பட்டாடைகள், ஊரே கூடி நடத்துகிற உற்ஸவங்கள் என கொண்டாட்டம், குதூகலம், வழிபாடுகள், வாணவேடிக்கைகள் என அமர்க்களப்படும்! அதே வேளையில், இவை எதுவுமின்றி, களையிழந்து காட்சி தரும் நகர் பெருமாள் கோயிலுக்கு, அதன் கருவறை மண்டபத் துக்கு, ஸ்ரீநாகவர்ணபெருமாளுக்கு, உங்களால் முடிந்த அளவுக்கு உதவுங்களேன்; நெடுங்காலமாக வழிபாடின்றி, நைவேத்தியமின்றி, புத்தாடையின்றிப் பரிதாபமாகத் திகழும் இந்தக் கோயிலில், அடுத்த வருட மார்கழிக்குள்ளாவது கும்பாபிஷேகம் விமரிசையாக நடக்கட்டுமே..! அணில் பங்கு உதவியே ஆனாலும், அந்தப் புண்ணியம், உங்களையும் உங்களது வம்சத்தையும் இன்னும் சிறப்புற வாழவைக்கும்.

ஸ்ரீநாகவர்ணபெருமாள் ஆலயத்துக்கு நம்மாலான கைங்கர்யத்தைச் செய்வோம்; நம் வாழ்வை இனிமையாக்குவார் ஸ்ரீநாகவர்ணபெருமாள்.

படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism