Published:Updated:

‘வந்தது சித்தரா... சிவமா?’ - 212 முறை கிரிவலம்... கிரிவலத் தம்பதியின் இறையனுபவம்!

‘வந்தது சித்தரா... சிவமா?’ - 212 முறை கிரிவலம்... கிரிவலத் தம்பதியின் இறையனுபவம்!
பிரீமியம் ஸ்டோரி
News
‘வந்தது சித்தரா... சிவமா?’ - 212 முறை கிரிவலம்... கிரிவலத் தம்பதியின் இறையனுபவம்!

‘வந்தது சித்தரா... சிவமா?’ - 212 முறை கிரிவலம்... கிரிவலத் தம்பதியின் இறையனுபவம்!

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையை ஒருமுறை சுற்றி வந்தாலே கோடானுகோடி புண்ணியம் உண்டு என்கின்றன ஞானநூல்கள். அப்படியிருக்க, 20 வருடங்களுக்கு மேலாக கிரிவலம் சென்று வருகிறார்கள், ஓர் இறைத் தம்பதி. 

திருச்சியைச் சேர்ந்த வெங்கடரமணி - சுகந்தா தம்பதிதான் அந்தப் பாக்கியசாலிகள். இவர்களில் சுகந்தா, ஏற்கெனவே 108 முறை... அதாவது `மாதம்தோறும் பெளர்ணமி தினங்களில்' என்ற அடிப்படையில், 108 மாதங்கள் அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் வந்து வழிபட்டுள்ளார். பிறகு மீண்டும் நூற்றெட்டு கணக்கைத் தொடங்கியவர், கடந்த பெளர்ணமியோடு 104 முறை வலம் வந்துவிட்டார். ஆக மொத்தம் 212 முறை கிரிவலம் வந்த பெரும்புண்ணியத்தைச் சேர்த்துக் கொண்டுள்ளார் சுகந்தா.

‘வந்தது சித்தரா... சிவமா?’ - 212 முறை கிரிவலம்... கிரிவலத் தம்பதியின் இறையனுபவம்!

அமெரிக்கா செல்வதற்கான ஆயத்தப் பணி களில் இருந்த தம்பதியை, போனில் தொடர்பு கொண்டோம். பரஸ்பர அறிமுகத்தோடு ஆரம்பித்த உரையாடல், சிலிர்ப்பும் சிறப்புமாக நீடித்தது.

‘வந்தது சித்தரா... சிவமா?’ - 212 முறை கிரிவலம்... கிரிவலத் தம்பதியின் இறையனுபவம்!‘‘ஒரு முறை கிரிவலம் வருவதே பலருக்கும் பிரம்ம பிரயத்தனமாக இருக்கிறது. அப்படியிருக்க, மாதம் தவறாமல் இத்தனை வருடங்களாக கிரிவலம் வரும் உங்களை சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கத் தோன்றுகிறது. எப்போது, எப்படி ஆரம்பமானது உங்களின் இந்தப் பயணம்...?’’ நாம் கேட்டது இந்த ஒற்றைக் கேள்வி தான். வேறு கேள்விகளுக்கு இடமளிக்காதபடி விரிவாகப் பேசினார் சுகந்தா.

‘‘இதுவொன்றும் திட்டமிடப்பட்ட விஷயமல்ல. அவனருளால் அவன் தாள் வணங்கி என்பார்களே... அதுபோல், எல்லாமும் இறையரு ளால் கைகூடியது என்றே சொல்லவேண்டும். அது, 1997-ம் வருஷம். ஒருநாள்... அலுவலகத்தில் மதியம் சாப்பிட்டு முடித்துவிட்டு தோழிகள் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, தன் தங்கையின் அண்ணாமலை கிரிவல அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டாள் தோழி ஜெயந்தி. அவள் சொல்லச் சொல்ல, எங்களுக்கும் அண்ணாமலை கிரிவலம் செல்லவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அடுத்த பெளர்ணமிக்கே செல்வதென்று திட்ட மிட்டோம்.

அதன்படி, அடுத்து வந்த பெளர்ணமியன்று, மாலை ஆபீஸ் முடிந்ததும் அங்கிருந்தபடியே வேனில் புறப்பட்டுவிட்டோம்’’ என்றவர் அந்தப் பயணம் பற்றி விவரித்தார்.

‘‘ஏறக்குறைய திருவண்ணாமலையை நெருங்கி விட்டோம் என்றே சொல்லலாம். வழியில் நடுத்தர வயதுக்காரர் ஒருவர் கையைக் காட்டி வேனை நிறுத்தினார்.  `திருவண்ணாமலையில் இறக்கிவிட முடியுமா' என்று கேட்டார். நாங்கள் எல்லோருமே பெண்கள். வேனிலும் சீட் எதுவும் காலியில்லை. அதனால் நாங்கள் தயங்கினோம். ஆனாலும் அவர், ‘நான் படியிலேயே உட்காந்துக்கிறேன்’ என்றதும், சம்மதித்தோம்.

‘வந்தது சித்தரா... சிவமா?’ - 212 முறை கிரிவலம்... கிரிவலத் தம்பதியின் இறையனுபவம்!

திருவண்ணாமலையைப் பற்றி பேசிக் கொண்டே வந்தவர் எங்களிடம், ‘இதுவரை 108 தடவை கிரிவலம் வந்துட்டேன். இன்னும் ஆசை அடங்கலை. சுத்த சுத்தத்தான் அந்த மலையின் மகத்துவம் புரியும்!’ என்றார். அந்த அண்ணா மலையாரே அவர் வடிவில் வந்து தீர்க்கதரிசனம் சொன்னாரோ என்னவோ?!

விடைபெறும்போது, ‘நீங்களும் என்னைப் போல 108 முறை கிரிவலம் வரணும்’ என்று வாழ்த்திவிட்டுப் போனார் அந்தப் புதியவர்.  ஒரு வகையில் அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்னு சொல்வேன்.

முதல்முறை கிரிவலம் ரொம்பக் கடினமாகவே இருந்தது. மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க நடந்து கொண்டிருந்தபோது, ‘அந்த நபர் 108 முறை கிரிவலம் முடித்ததாகச் சொன்னாரே... அவரால எப்படி முடிந்தது’ என்ற எண்ணமும் எழாமல் இல்லை. ஒருவழியாக கிரிவலத்தை நிறைவு செய்தோம். கால் ரெண்டும் வீங்கிப்போய்விட்டன. சென்னை திரும்பியதும் என் கணவர், ‘இனிமே கிரிவலம் போற ஆசையெல்லாம் மூட்டை கட்டி வைச்சிடு..’ என்று கொஞ்சம் கோபமாகவே சொல்லிட்டுப் போனார்’’ என்று நிறுத்திய சுகந்தா, போனைக் கணவரிடம் கொடுக்க, அவர் பேசத் தொடங்கினார்.

‘‘கோபப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனாலும் இவங்களோட பயணம் தடைப்படவே இல்லை. ஒருமுறை பெளர்ணமிக்குப் பதிலாக சிவராத்திரி தினத்தன்று சென்றார்கள். அப்போது, என் அம்மாவும் விடாப்பிடியாக அவர்களுடன் சென்றார். சிவராத்திரியில் கோயிலுக்குள்ளும் 108 முறை பிராகார வலம் வருவார்கள். என் அம்மாவை கோயிலில் ஓரிடத்தில் அமரச் செய்து விட்டு, தோழிகள் அனைவருமாக 108 முறை பிராகார வலம் வந்ததுடன், கிரிவலத்தையும் முடித்து வந்தார்கள். இதில் சிலிர்ப்பான விஷயம் என்ன வென்றால், சிவராத்திரி தினத்தில் அண்ணாமலைக்கு விடாப்பிடியாகச் சென்று வந்த என் தாயார், அமரத்துவம் அடைந்ததும் ஒரு சிவராத்திரி தினத்தில்தான்’’ என்று நெகிழ்ந்தார் வெங்கடரமணி. சுகந்தா தொடர்ந்து பேசினார்.

‘‘தொடக்கத்தில் 13 பேர் என்றிருந்த எண்ணிக்கை, இரண்டு வருடங்களுக்குப் பிறகு, மெள்ள மெள்ள குறைய ஆரம்பித்தது. பிறகு, தோழி ராஜியின் காரிலேயே சென்று வரத் தொடங்கினோம். அதுவரையிலும் இவர்  எங்கள் பயணத்தில் இணையவில்லை. ரிடையர்டு ஆன பிறகே கிரிவலம் வரத் தொடங்கினார்’’ என்று தன் கணவரைப் பற்றிக் குறிப்பிட்டார் சுகந்தா.

‘வந்தது சித்தரா... சிவமா?’ - 212 முறை கிரிவலம்... கிரிவலத் தம்பதியின் இறையனுபவம்!

2010-க்குப் பிறகு திருச்சிக்கு வந்துவிட்டவர்கள், பின்னர் தம்பதி சமேதராக யாத்திரையைத் தொடர்ந்தார்களாம். சுகந்தாவின் தந்தை இறந்த தருணத்திலும்கூட, அடுத்துவந்த பெளர்ணமி கிரிவலத்தைத் தவிர்க்கவில்லை என்கின்றனர் இந்தத் தம்பதி. சுகந்தாவின் மாமியார் காலமான தருணத்தில்தான்... எல்லா சடங்குகளையும் வெங்கடரமணியே செய்யவேண்டியிருந்ததால், கிரிவலம் செல்ல இயலவில்லையாம். ``மற்றபடி எவ்விதக் காரணம் தொட்டும் எங்களின் கிரிவலம் தடைப்பட்டது இல்லை'' என்கிறார்கள். கடந்த ஜூலை மாதத்துடன் 104-வது கிரிவலம் பூர்த்தியாகியுள்ளது. அதாவது, சுகந்தாவுக்கு 212-வது கிரிவலம் நிறைவடைந்துள்ளது. சுமார் 20 வருடங்களாகத் தொடர்ந்து கிரிவலம் சென்று வரும் இந்தத் தம்பதிக்கு, அண்ணாமலையில் ஏற்பட்ட சிலிர்ப்பான அனுபவங்களும் நிறைய இருக்குமே... அதுபற்றிக் கேட்டோம். அற்புதமான ஒன்றைப் பகிர்ந்துகொண்டார், சுகந்தா.

‘‘ஒரு முறை குருஜி பிறந்த நாளன்று கிரிவலம் போகலாம்னு முடிவெடுத்தோம். நான், தோழிக ளான கஸ்தூரி, பிரேமா மூணு பேரும் அகஸ்தியர் ஆசிரமத்துக்குப் போய்ட்டு, அங்கிருந்து கிரிவலம் கிளம்பினோம். 15 வருடங்களுக்கு முன்னாடி, கிரிவலப் பாதையில் இப்போதுள்ளது போன்று மின்விளக்கு வசதிகள் கிடையாது. பாதை முழுக்க கும்மிருட்டு. எப்பவும் பௌர்ணமி கூட்டத்தில் கிரிவலம் சென்று வரும் நாங்கள், அன்று தனியே வலம் வந்துகொண்டிருந்தோம்.

குறிப்பிட்ட ஓரிடத்தில்தான் கவனித்தோம்... எங்களுக்கு முன்னால் வயதான ஒரு தம்பதி நடந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் சென்று கொண் டிருந்த இடத்தில்,  எந்த குறுக்கு சாலைகளோ, இணைப்புச் சாலைகளோ கிடையாது. அப்படி யிருக்க, திடீரென்று இந்தத் தம்பதி எங்கிருந்து வந்தார்கள் என்று எங்களுக்குக் குழப்பம்.

‘வந்தது சித்தரா... சிவமா?’ - 212 முறை கிரிவலம்... கிரிவலத் தம்பதியின் இறையனுபவம்!

கொஞ்சதூரம் நடந்தபிறகு பார்த்தால்... அவர்களைக் காணவில்லை. அதேநேரம், எங்களுக்கு முன்னால் மின்மினிப்பூச்சிகள் கூட்டமாகப்  பறந்து சென்றன. எங்களுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துப்போட்டது. ஏனெனில், மின்மினிப் பூச்சிகளை சித்தர்களின் அம்சம் என்பார்கள். அதன் பிறகு, கிரிவலத்தைப் பூர்த்தி செய்யும் வரையிலும் பாதையில் எங்கேயும் அந்தத் தம்பதி தென்படவில்லை. ஆக, எங்களுக்குப் பயமும் தயக்கமும் ஏற்பட்ட தருணத்தில், அந்த அண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மனுமே எங்களுக்குத் துணையாக வந்து சேர்ந்து, எங்களின் பயத்தைப் போக்கியிருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றியது. சிலிர்ப்போடு வணங்கி நின்றோம் அம்மை அப்பனை. மறக்க முடியாத அனுபவம் அது!’’ என்று நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார் சுகந்தா.

``அண்ணாமலை ஒரு காந்தமலை. அதைத் தரிசிப்பது என்பது பேரானந்த அனுபவம். மலையின் ஒவ்வொரு புறமும் ஒவ்வொரு வடிவம். ஈசான்யத்திலிருந்து பார்த்தால் சிவ - சக்தி ஐக்கிய ரூபம், வேறொரு திசையில் நந்தி ரூபம், இன்னொரு பக்கம் சோமாஸ்கந்த வடிவம்... இப்படி ஒவ்வொரு கோணத்திலும் புதுப்புது திருவுருவில் அருளும் அண்ணாமலையை எத்தனை ஆண்டுகள், எத்தனை முறை வலம் வந்து வழிபட்டாலும் மனம் சலிக்காது. உடம்பில் தெம்பு இருக்கும்வரை, எங்களால் இயலும் வரை கிரிவலம் செய்வோம். எங்களின் ஆயுள்பரியந்தம் அண்ணாமலையைக் கிரிவலம் வந்து வணங்க, இறைவன் அருளவேண்டும்’’ என்கிறார் வெங்கடரமணி.

அண்ணாமலையரின் அருள் நிச்சயம் கிடைக்கும். அத்துடன், நாமும் ஒருமுறை அவர்களோடு கிரிவலத்தில் இணைவோம் என்ற விருப்பத்தைச் சொல்லிக்கொண்டு விடைபெற்றோம்.

- பிரேமா நாராயணன்

படங்கள்: குமரகுருபரன்

கிரிவலம் வரும்போது...

கிரிவலத்தின்போது கீழ்க்காணும் மந்திரத்தை உச்சரித்தபடி வலம் வருவது சிறப்பு.

‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஓம் நமசிவாய துணை!’

இந்த மந்திரத்தைக் கூறியபடி கிரிவலம் வந்தால், எவ்விதத் தடங்கலும் இல்லாமல் அண்ணாமலையாரையும் அவர் அருளையும் அனுபவிக்கலாம். தடைகள் நீங்கும்; எவ்வளவு மக்கள் கூட்டம் இருந்தாலும் நமக்கு நடப்பதற்கு இடம் கிடைக்கும்.

மூன்றாம்பிறை ஸ்லோகம்

மூன்றாம் பிறை தரிசனத்தின்போது, கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டால், சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.

‘கஷீரஸாகர ஸம்பூதா
லட்சுமி ப்ரிய ஸகோதரா
ஸம்போர் மகுட வாஸாயா
பால சந்திராயதே நமஹ;’

- க. பூர்ணிமா, காரைக்குடி