Published:Updated:

ராஜராஜன் திருப்பணி செய்த எண்ணாயிரம் அழகிய நரசிம்ம பெருமாள் கோயில்!

ராஜராஜன் திருப்பணி செய்த எண்ணாயிரம் அழகிய நரசிம்ம பெருமாள் கோயில்!
ராஜராஜன் திருப்பணி செய்த எண்ணாயிரம் அழகிய நரசிம்ம பெருமாள் கோயில்!

இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் சதுர்புஜ வேணு கோபாலன் நான்கு கரங்களுடனும் சங்கு, சக்கரம் ஏந்திக் கம்பீரமாகக் காட்சி தருகிறார். 

பூவுலகில் தீமையை அழித்துத் தம் பக்தர்களைக் காக்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களுள் முக்கியமானது நரசிம்ம அவதாரம். தென்னிந்தியா முழுமையும் பல்வேறு நரசிம்மர் ஆலயங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் மிகச்சிறப்பு வாய்ந்தது எண்ணாயிரத்தில் அமைந்திருக்கும் ‘ஸ்ரீஅழகிய நரசிம்ம பெருமாள்’ ஆலயம். 1000 ஆண்டுகள் பழைமையான இந்தக் கோயில் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது.

இயற்கை எழிலோடு கலையழகு கொஞ்ச அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில், அழகிய நரசிம்மர், வைகுண்டவாச பெருமாள், லட்சுமி வராகர், சதுர்புஜவேணுகோபாலன் என நான்கு பெருமாள் சந்நிதிகள் காணப்படுகின்றன. வேணுகோபாலன் என்றாலே புல்லாங்குழல் தரித்து அருள்பாலிப்பவராகக் காட்சிதருபவர். ஆனால் இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் சதுர்புஜ வேணு கோபாலன் நான்கு கரங்களுடனும் சங்கு, சக்கரம் ஏந்திக் கம்பீரமாகக் காட்சி தருகிறார். 

இந்தக் கோயிலின் அமைப்பு ஸ்ரீரங்கத்தைப் போன்றது. ஸ்ரீரங்கத்தில் ஏழு மதில்களைக் கடந்து சென்றுதான் எம்பெருமானைத்  தரிசிக்க வேண்டும். அதே போன்று இந்த ஆலயத்தில் 24 வாயிற்படிகளைக் கடந்து சென்றுதான் அழகிய நரசிம்ம பெருமாளை சேவிக்க வேண்டும்.

தற்போது சிதிலமடைந்து காணப்படும் பச்சை நிற கல்லால் ஆன சிலை தாயார் சிலையாக இருக்கலாம் எனவும்,  இந்தச் சந்நிதியில் தரிசனம் செய்யும் பக்தர்களின் மனங்களில் நல்ல எண்ணங்களை அருளும்  தன்மை உடையது என்றும் சொல்லப்படுகின்றது.  

சமணர் படுகை

முற்காலத்தில்  ஐவர்மலை அல்லது பஞ்சபாண்டவர் மலை என்று அழைக்கப்பட்ட இம்மலை இன்று எண்ணாயிரம் மலை என்றும் குன்னத்தூர் மலை என்றும் அழைக்கப்படுகின்றது. இம்மலையில் மொத்தம் 35 சமணர் படுகைகள் காணப்படுகின்றன. இவை காலத்தால்  கி.பி. 910 ஆம்  ஆண்டைச் சேர்ந்தவை என்று கல்வெட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒரே இடத்தில் இத்தனை எண்ணிக்கையில் சமணப்படுகைகள் காணப்படுவதும் இங்குதான்.            

ராமாநுஜர் திருவடி மண்டபம்

ஸ்ரீமத் ராமானுஜர் அமர்ந்து தியானம் மேற்கொண்ட இடம் எண்ணாயிரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திருநந்திபுரத்தில் திருவடி மண்டபமாக அமைக்கப்பட்டு அங்கு  அனுதினமும் அவரது திருவடி பூஜிக்கப்பட்டு வருகிறது.

நிறைவேறும் வேண்டுதல்கள்

ஸ்ரீநரசிம்ம பெருமாளுக்கு உகந்த நட்சத்திரமான சுவாதி. அன்று கோயிலின் மூலவரான  ‘அழகிய நரசிம்ம பெருமாளுக்கு’ அர்ச்சனை செய்து வழிபட்டுவரத் திருமணத்தடை நீங்கும்; குழந்தை பாக்கியம் கிடைக்கும். ‘ஸ்ரீ லட்சுமிவராக பெருமானை’  வழிபடக் கல்வி, செல்வம் பெருகுவதோடு நிலம் சார்ந்த பிரச்னைகளும் தீரும். சங்கு,சக்கரதாரியாகக் காட்சி தரும் ‘ஸ்ரீ சதுர்புஜ வேணுகோபாலனை’ வழிபட எதிரிகள் தொல்லை  குறைந்து உறவுகள் செழிக்கும்.

சோழர் கால கல்வி, கலை சிறப்புகள் - கூறும் கல்வெட்டுகள்

சோழர்களின் ஆட்சியில் இங்குக் கல்வி கேள்விகள் சிறந்து விளங்கின. அங்குக் கல்வி கற்பவர்களுக்கு ஊதியமும் வழங்கப் பட்டது. எண்ணாயிரம் ‘அழகிய நரசிம்ம பெருமாள்’ ஆலயத்தில் தான் தமிழகத்திலேயே முதன் முதலில்  ‘வேதக் கல்விக்கூடங்கள்’ தொடங்கப்பட்டு 270 மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களைக் கொண்டு இளநிலை வேத கல்வியும், 70 மாணவர்களுக்கு 10 ஆசிரியர்களைக் கொண்டு முதுநிலை வேதக் கல்வியும் போதிக்கப்பட்டுள்ளது என்னும் தகவல்களைக் கல்வெட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இளநிலை மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 6 நாழி நெல்லும், முதுநிலை மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 10 நாழி நெல்லும் ஊதியமாக ராஜராஜசோழன் காலம் முதற்கொண்டு வழிவழியாகச்  சோழ மன்னர்களால் வழங்கப்பட்டு வந்துள்ளது. அதே போல ஆசிரியர்களுக்கும் நல்லூதியம் வழங்கப்பட்டது. 

அதுமட்டுமின்றி, “ஸ்ரீ ஜெயந்தி தினத்தன்று” வேதக்கல்வி பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஒரு ‘தங்க மோதிரமும்’,‘தங்கத்தாமரையும்’, வேலைவாய்ப்பும் பரிசாக அளித்துக் கல்வி கற்கும் மாணவர்களைச் சோழமன்னர்கள் ஊக்குவித்துள்ளனர்  

வேதம், வேதாந்தம் மட்டுமல்லாமல் இலக்கணம், அறிவியல் மற்றும்  நுண்கலைகளும் இங்குப்  பாடமாகப்  பயிற்று விக்கப்பட்டன. மன்னர்கள் மட்டுமின்றி மக்களும் தங்களால் இயன்ற உதவிகளைக் கோயிலுக்கும் மாணவர்களுக்கும் செய்துள்ளனர். சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் தம்மாலான உதவிகளைச் செய்தனர். மாடு மேய்ப்பவர்கள் நெய் மற்றும் பால் தேவைகளுக்காகப் பசுக்களையும் வணிகர்கள், விவசாயிகள் ஆகியோர் பருப்பு, வெல்லம், தானியங்களையும், அரிசி, காய்கறி, விறகு போன்றவற்றையும் தானமாகக் கொடுத்துள்ளனர் என்னும் செய்திகள் கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகின்றது.

ஆலயம் செல்லும் வழி

விழுப்புரத்திலிருந்து செஞ்சி செல்லும் சாலையில் உள்ள நேமூர் வழியாகவும் சென்னையிலிருந்து திருச்சி சாலையில் செல்பவர்கள் கூட்டேரிப்பட்டு வழியாகவும் செல்லலாம். நேமூர் மற்றும் கூட்டேரிப் பட்டிலிருந்து பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோ வசதிகள் உள்ளன.

பழைமையும் பெருமையும் சிறப்பும் மிக்க இவ்வாலயத்திற்கு ஒருமுறையேனும் சென்று தரிசித்து ஸ்ரீஅழகிய நரசிம்மரின் அருள்பெறுவோம். வாருங்கள்.

அடுத்த கட்டுரைக்கு