Published:Updated:

சிவனே குருவாகி அன்னைக்கு அருள்பாலித்தத் தலம் - திருவானைக்காவல்

திருவானைக்காவல் ஆலயத்தில் இறைவனையும் இறைவியையும் வணங்கி வழிபட திருமணத்தடை நீங்கும் , சகல தோஷங்களும் விலகும் , குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை

சிவனே குருவாகி அன்னைக்கு அருள்பாலித்தத் தலம் - திருவானைக்காவல்
சிவனே குருவாகி அன்னைக்கு அருள்பாலித்தத் தலம் - திருவானைக்காவல்

சிவபெருமான் பஞ்சபூத வடிவானவர். நிலம், நீர் , நெருப்பு, ஆகாயம்,. காற்று என ஐம்பூதங்களாய் இறைவன் கோயில் கொண்ட தலங்கள் சிவ வழிபாட்டில் சிறப்புப் பெற்றவை. அவற்றுள் நீர்த் தலமாகக் கருதப்படுவது திருச்சியில் காவிரி மற்றும் கொள்ளிட ஆற்றுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியில் அமைந்துள்ள திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் கோயில்.

புகழ் பெற்ற இந்தத் திருத்தலத்தின் பிரதான கும்பாபிஷேக விழா நாளை (12.12.18) நடைபெறவிருப்பதை முன்னிட்டு,  அந்தத் தலத்தின் சிறப்பம்சங்களைக் காண்போம்.
 * சிவனை வழிபட பூவுலகம் வந்த அம்பிகை, காவிரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்து வழிபட்டார். நீரால் ஆனதால் அந்த லிங்கம் ஜம்புகேஸ்வரர் எனப் பெயர் பெற்றது  என்கிறது புராணம். இந்தத் தலத்தில் சிவன், அன்னைக்கு குருவாக இருந்து உபதேசம் செய்கிறார்.
* கயிலாயத்தில் வாழ்ந்த புட்பதந்தன், மாலியவான் என்ற இருவருக்குள் சிவபக்தியில் சிறந்தவர் யார் என்று ஒருமுறை போட்டி ஏற்பட்டது. போட்டியின் காரணமாக ஒருவரையொருவர் சிலந்தியாகவும், யானையாகவும் மாறும்படி சபித்துக்கொண்டனர். தங்களுக்கு தாங்களே கொடுத்துக்கொண்ட சாபத்திலிருந்து விடுபட அவர்கள் இருவரும் வழிபட்ட தலம் திருவானைக்கா திருத்தலம்.

* மாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யானையாகவும் மாறி தினமும் இந்தத் தலத்து  இறைவனை வழிபட்டனர். தினமும் சிலந்தி வலை பின்னி, இறைவன் மீது வெயில், மழை படாமல் பாதுகாத்தது. ஆனால், பூஜை செய்ய வந்த யானை, இறைவனின் மீது சிலந்தி பின்னிய வலையைப் பிய்த்துப் போட்டது. ஒரு கட்டத்தில் தான் பின்னிய வலையை யானை பிய்த்துப் போட்டதைக் கண்ட சிலந்தி, யானையின் துதிக்கையில் புகுந்து துன்புறுத்தியது. இரண்டும் போராடி மடிந்தன. அந்த சிலந்திதான் கோச்செங்கட்சோழனாகப் பிறந்தான்.
* கோச்செங்கட்சோழன், தன்னுடைய பூர்வஜன்ம நினைவாக யானை ஏறமுடியாதவாறு குறுகலான படிகளைக் கொண்ட கோயில்களைக் கட்டினான் என்று சொல்லப்படுகிறது. அவனே திருவானைக்கா கோயிலைக் கட்டியதாக தலவரலாறு கூறுகிறது. அவன் இந்தத் திருக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்ததை நினைவுகூரும் வகையில் அவனுக்கு தனிச் சந்நிதி அமைந்துள்ளது. 
* இந்த ஆலயம் சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான  மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும், ஐந்து பிராகாரங்களும் கொண்டு பிரமிப்பூட்டுவதாக அமைந்துள்ளது.  

* கோயிலின் நான்காவது திருச்சுற்று மதில் திருநீற்றான்  மதில் என்று அழைக்கப்படுகிறது.  இந்த மதிற் சுவரை அப்போது அந்தப் பகுதியை ஆட்சி செலுத்தி வந்த மன்னன் ஒருவன் கட்டத் தொடங்கினான். போர் குறுக்கிடவே அவனால் அந்தப் பணியை முழுமையாக முடிக்க முடியவில்லை. அவனுடைய பக்திக்கு இரங்கிய இறைவன் சித்த புருஷராகத் தோன்றி மதில் சுவர் கட்டும் பணியைத் தொடங்கினார். தினமும் பணி முடிந்ததும் சித்தராகத் தோன்றிய இறைவன் பணியாளர்களுக்குத் திருநீறு கொடுப்பார். அந்தத் திருநீறு அவரவர் செய்த பணிக்கேற்ப தங்கமாக மாறும் அதிசயம் நிகழ்ந்தது. இதன் காரணமாக அந்த மதில், 'திருநீற்றான் மதில்' என்று அழைக்கப்படுகிறது.


* மூலரான ஶ்ரீஜம்புகேஸ்வரர், ஐந்தாம் உள் பிராகாரத்தினுள் நீர் லிங்கமாக எழுந்தருளியுள்ளார். லிங்கம் அமைந்துள்ள இடத்தில், கோடையிலும் கூட எப்போதும் தண்ணீர் கசிவு காணப்படும் .
* அன்னை அகிலாண்டேஸ்வரி நான்காம் பிராகாரத்தினுள் கிழக்கு நோக்கிய சந்நிதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னை அனுதினமும் காலையில் லட்சுமிதேவியாகவும், உச்சிக் காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். அம்பாள் இங்கு கன்னியாக உறைகிறார் . எனவே, இந்தக் கோயிலில் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுவதில்லை. 
* முற்காலத்தில் அம்பிகை மிகவும் உக்கிரமாகக் காணப்பட்டாள். அப்போது அந்தத் தலத்துக்கு விஜயம் செய்த ஸ்ரீஆதிசங்கரர்  ஸ்ரீசக்ர ரூபமான காதணிகளை அம்பிகையின் திருச்செவிகளில் பிரதிஷ்டை செய்து அன்னையின் உக்கிரத்தைத் தணித்தார் என்கிறது தல வரலாறு.

* இந்த ஆலயத்தில் தினமும் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்குத் தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின்போது சிவாசாரியார் ஒருவர் அன்னை அகிலாண்டேஸ்வரிபோல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்துகொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல, சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இந்தத் தலத்தில் மட்டுமே நடைபெறும் சிறப்பு வழிபாடாகும்.  

* பல்வேறு மன்னர்கள் இந்தத் திருத்தலத்தில் திருப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.  சிவனடியாரான வீரசோம ஈசுவரன் என்னும் ஹொய்சாள மன்னன் இந்த ஆலயத்தில் ஏழுநிலைகளைக் கொண்ட கோபுரத்தை கிழக்கு திசையில் எழுப்பியதாகச் சொல்லப்படுகிறது. 
* இந்தத் தலத்துக்கு ஜம்புகேஸ்வரம் என்றும், இறைவனுக்கு ஜம்புகேஸ்வரர் என்றும் பெயர் உண்டு. தலத்தின் தலவிருட்சம் வெண்நாவல் மரம்.
* முற்காலத்தில் இந்தப் பகுதியில் இருந்த வெண்நாவல் வனத்தில் ஜம்புமாதவன் என்னும் முனிவர் சிவபெருமானைக் குறித்துக் கடும் தவம் இயற்றினார். ஒருநாள் முனிவரின் மடியில் கிடைப்பதற்கு அரிய வெண்நாவல் பழம் விழுந்தது. அதை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்க விரும்பிய முனிவர், கயிலைக்குச் சென்று ஈசனிடம் கனியை சமர்ப்பித்தார். கனியை உண்ட ஈசன், விதையை உமிழ, முனிவர் அந்த விதையைக் கீழே விழாமல் கையில் ஏந்தி உண்டுவிட்டார். 
* விதையை உண்ட முனிவர் உடனே வெண்நாவல் மரமாக மாறிவிட்டார். அவருடைய பக்தித் திறம் கண்டு பெரிதும் வியந்த சிவபெருமான் முனிவரிடம், ``நீ எம்மிடம் கொண்ட பக்தி எம்மை மகிழ்விக்கிறது. விருட்சமாக இருக்கும் உம் நிழலிலேயே நாம் கோயில் கொள்ள விரும்புகிறோம். நீ காவிரிக்கரையில் அம்பிகை தவமியற்றிக்கொண்டிருக்கும் திருவானைக்கா தலத்துக்குச் செல். யாம் அங்கே வந்து உம் நிழலில் சந்நிதி கொள்வதுடன், உம்முடைய பெயரையே யாம் ஏற்று அருள்புரிவோம்'' என்று அருளினார். 
* ஆடிவெள்ளியன்று அதிகாலை 2 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரையில் நாள் முழுவதும் நடை திறந்திருக்கும். 
* மற்ற தலங்களில் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால், இந்தத் தலத்து இறைவனுக்கு வைகாசி மாதம் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
* ஆடி மாதம் தெப்பத் திருவிழா, நவராத்திரி, தைமாதம் தெப்பத் திருவிழா, பங்குனி மாதம் தேர்த்திருவிழா போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன.
* ஆறு ஆதாரத் தலங்களில் இந்தத் தலம் சுவாசிஷ்டானத் தலமாகும். தேவாரம் பாடிய மூவராலும் பாடப் பெற்ற சிறப்புடைய தலம் .  
* வாழ்வில் துன்பமும் துயரமும் நீங்க உள்ளத்தில்  நாம் தொழவேண்டியது ஆனைக்காவில் அமைந்துள்ள ஈசனையே என்று திருநாவுக்கரசர் பாடிப்  போற்றிய தலம். 
 துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர் 
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின் 
எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு
 அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே” 

* இந்த ஆலயத்தின் இறைவனையும் இறைவியையும் வணங்கி வழிபட திருமணத்தடை நீங்கும் , சகல தோஷங்களும் விலகும் , குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
* காளமேகப் புலவருக்கு அன்னையால் ஞானம் கிடைத்த இடம் என்பதால் சிறந்த கல்வியறிவு, கலைஞானம் பெற பக்தர்கள் அம்பாளுக்குத் தாம்பூலம் படைத்து வழிபடுகின்றனர்.