Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 13

ரங்க ராஜ்ஜியம் - 13
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 13

இந்திரா சௌந்தர்ராஜன் - படம்: என்.ஜி.மணிகண்டன்

‘சரங்களைத் துறந்து வில்வளைத்து இலங்கை மன்னவன்
சிரங்கள் பத்தறுத்துதீர்த்த செல்வர் மன்னு பொன்னிடம்
பரந்து பொன் நிரந்துநுந்தி வந்தலைக்கும் வார்புனல்
அரங்கமென்பர் நான்முகத்தயன் பணிந்த கோயிலே!’

- திருமழிசை ஆழ்வார்

ரங்க ராஜ்ஜியம் - 13

திருவரங்கம் தோன்றிவிட்டது. பிரணவாகாரப் பெருமாளுக்கு `ரங்கநாதன்' என்ற ஒரு திருப் பெயரும் விரைவில் தோன்றியது.

விண்ணகத்துப் பெருமாள் மண்ணகம் வந்து, அயோத்தி நகரில் பல தலைமுறைகளின் ராஜ பூஜைகளில் தண்ணருளைப் பிரவாகமாக்கி, பின் காலத்தால் காவிரித் தீவை அடைந்த நிலையில், சோழ மண்டலவாசிகள் எம்பெருமானை எண்ணியும் பக்தி செய்தும் ஆனந்தக் கூத்தாடினர்.
கூத்தாடுமிடம் எப்போதும் அரங்கமே...

கூத்தாடக் காரணம் எம்பெருமாளே!

எம்பெருமாளின் பொருட்டு அந்தத் தீவில் அனைவரும் ஆனந்தக் கூத்தாடியதால், அந்தத் தீவு அரங்கத் தீவு என்றாகி, பின் `திரு' சேர்ந்து திருவரங்கமானது. இந்தத் திருவரங்கத்துக்கே நாதனாக பெருமாள் விளங்கியமையால் திருவரங்க நாதர் என்ற பெயர் பிரணவாகாரப் பெருமாளுக்கு இம்மண்மிசை உண்டானது.

அவன் இவ்வுலகுக்குத் தலைவன். இவ்வுலகம் அவனால் வந்ததே... எனவே, `உலகுக்கெல்லாம் தலைவன்' எனும் பொருளில் அரங்கநாதன் எனும் திருப்பெயர் தோன்றியது என்றும் கூறுவர்.

தர்மவர்மாவின் பரம்பரையினர், எம்பெரு மானைக் கண்ணின் இமைபோல காத்து பூஜித்தனர். காலம் சுழன்றது. அதன் சக்கரச் சுழற்சியில் ஓர் ஊழிப்பிரளயம் ஏற்படும் நேரம்!

விண்ணில் வைகுண்டத்தில் பெருமாளும் பெருமாட்டியும் அதன் பொருட்டு விவாதித்தனர். பெருமாளைவிட பெருமாட்டியே அந்தப் பிரளயம் குறித்து அதிகம் வருந்தினாள். அது அவளது பேச்சிலும் நன்கு புலப்பட்டது.

“எம்பெருமானே! இதென்ன விபரீதம். பிரளய காலம் வந்துவிட்டது போல் தெரிகிறதே” என்று தொடங்கினாள்.

“ஆம் தேவி! பூலோகத்தைத் தோற்றுவித்து, அதில் மானிடர்களை வாழச் செய்து ஒரு நாகரிக சமுதாயத்தைப் படைத்துவிட்ட நிலையில், பல மன்வந்தரங்கள் கழிந்துவிட்டன. இதனால் பூமியில் பல பாகங்களில் வறட்சியும், சில பாகங் களில் குளிர்ச்சியும், இன்னும் சில பாகங்களில் மலட்டுத்தன்மையும் உருவாகிவிட்டன. மானுட வாழ்வின் பாவ புண்ணியங்களின் பாரமும் பங்கும்கூட இதன் பின்புலத்தில் உள்ளன. இவற் றைச் சுத்திகரிக்கும் செயல்பாடே பிரளயம்.”

“பிரளயம் என்றால் சுத்திகரிப்பா... அது பேரழிவு இல்லையா?”

“நீ உன் விருப்பப்படி சொல்லிக்கொள். பேரழிவு, பிரளயம், சுத்திகரிப்பு எல்லாமே ஒன்றுதான்.”

“இதனால் கோடானுகோடி உயிர்கள் அழிந்து போகுமே..?”

“ஏன் அழிவதாகக் கருதுகிறாய். உன் மானுட பாவனையை மாற்றிக்கொண்டு பார். அழிவதன் பின், ஒரு மாற்றமும் அதனால் ஏற்றமுமே நிகழப் போகிறது”

“இப்போது இதற்கு என்ன அவசியம்?”

“யுகங்களில் கலி பிறக்கப் போகிறது. அதற்கேற்ப, பூ உலகில் மாற்றங்களைச் செய்யவேண்டியது சிருஷ்டி கர்த்தாவின் கடமைகளில் ஒன்று. இதனால் புதிய மலைகள், நதிகள், தளங்கள், கனிம வளங்கள் தோன்றும். மனித சமூகம் இதனூடே தன்னை இணைத்துக்கொண்டு பணிபுரியும்.''

“அதற்கு மனித சமூகம் அழியாது இருக்க வேண்டுமே?”

“பிரளயத்தில் தப்பிப் பிழைக்கப்போகும் கூட்டங்களும் உண்டு தேவி. அவர்கள் தங்களின் அறிவு, குணம், ஆற்றல் ஆகியவற்றின் துணை கொண்டு தங்களுக்கான நாட்டை தாங்களே உருவாக்கிக்கொள்வார்கள். அதற்கு எம்மிடம் பக்தி கொண்ட ரிஷிகளும், முனிவர்களும் துணை செய்வதோடு, எனக்கான வந்தனைகளையும் பூசனைகளையும் வரையறுப்பார்கள். என் தண்ணருளும் துணை செய்யும்.”

“அப்படியானால் இப்போது உங்கள் கோயிலாக விளங்கும் திருவரங்கத்தின் நிலை?”

“அது சிறிது காலம் மண்மூடிக் கிடக்கும்.''

“இது என்ன விபரீதம்?”

“இதில் எங்கிருக்கிறது விபரீதம்?”

“ஒப்பற்ற சொர்ணப் பிரணவாகாரம் மண்மூடிப் போவதா? அதுவும் பலகாலம்! இப்படி ஒரு செயல் பாட்டை விபரீதம் என்று சொல்லாமல், வேறு எப்படிச் சொல்வது?”

“தேவி! நீயேகூட எப்படித் தோன்றினாய் என்று எண்ணிப் பார். தேவாசுர முயற்சியான அமிர்தக் கடைவில், அதன் விளைவுகளில், இடிபாடுகளில் தோன்றியவள் நீ. அமிர்தக் கடைவில் நீ மட்டுமா தோன்றினாய்? ஆலகாலம் எனும் விஷம் முதல் அமிர்த சஞ்ஜீவினி வரை முரண்பட்டவையும் தோன்றின. அந்த அமிர்தக் கடைவும் பிரளயத்துக்கு இணையானதே. அன்று அது நிகழாமல் போயிருந் தால் இன்று நீ இல்லை, தேவர்கள் இல்லை, அசுரர்கள் இல்லை. அட்சய பாத்திரம் முதல் காமதேனு, கற்பக விருட்சம் என்று எதுவுமே இல்லாமல் போயிருக்கும்.”

“நீங்கள் வரிசைப்படுத்தியவற்றைக் கடைந்து தான் பெற்றிருக்கவேண்டுமா? தாங்கள் நினைத்த மாத்திரத்தில் மானச சிருஷ்டியாக அவற்றை... ஏன் என்னையும்தான், உருவாக்கியிருக்கலாமே? எதற்காக அப்படி ஒரு நிகழ்வு..?”

“மானசங்கள் காலத்தைக் காட்டாது. காலத்தா லேயே சம்பவங்கள்... சம்பவங்களில் இருந்தே வரலாறுகள் தோன்ற முடியும்! வரலாற்றைக் கொண்டே கால பரிமாணத்தை அறிய முடியும், வரும் காலத்தில் வாழப்போகிறவர்கள், தங்கள் வாழ்வில் கால ஞானம் பெறவும் வினைப்பாடு களைப் பற்றிய அறிவைப் பெறவும் அவற்றை உள்ளடக்கிய சம்பவங்கள் அவசியம்.”

“அப்படியானால் இப்போது நேரிடப் போகும் பிரளயமும், தாங்கள் சொல்வதுபோன்ற கால ஞானத் தையும், அறிவையும் பெற உதவுமா?”

“ஆம். சில காலம் என் பிரதிமையும் பிரணவாகாரமும் பூமிதேவியின் மண் சம்பந்தம் கொண்டு புதைந்து கிடக்கப் போகிறது! சரியான ஒரு தருணத்தில் சரியான ஒருவனாலோ, ஒருத்தியாலோ அந்தப் பிரதிமை திரும்ப வெளிப்பட்டு, வழிபாடுகள் எனப்படும் வழிப்பாடுகள் தொடரும்.''

“ஆஹா! வழிபாடு - வழிப்பாடு. என்ன ஒரு சொல் நயம். வழிபாடுதான் சிறந்த வழிப்பாடா பிரபு?''

“ஆம். அகந்தை உள்ளவர்களால் வழிபட இயலாது. ‘நான்’ எனும் அகந்தையின்மையே வழிபாட்டின் முதல்பொருள். மானுடர்கள் அகந்தையின்றி இருக்கவே வழிபாடுகள் உதவுகின்றன!”

“வழிபாடுகளின்றி ஒருவரால் சிறந்த வழிப்பாட்டில் செல்ல இயலாதா பிரபு.?”

“இயலாது தேவி.'’

“அகந்தை அத்தனை கொடியதா?”

“ஆம். அதுவே புத்தியை பக்தியற்றதாக்கி சுயநலத் தோடும் சுய பிரதாபத்தோடும் வாழச் செய்துவிடும்.”

“ `அசுரர்கள் போல்' என்றும் கூறலாமல்லவா?”

“சரியாகச் சொன்னாய். சுரம் தப்பினால் அசுரம்! புலனடக்கம் மற்றும் ஒடுக்கம் எனும் தவம் மிகுந்தால் தேவம். தேவம் வளர பக்தி துணை செய்யும். அசுரம் வளர அகந்தை துணை செய்யும்.”

“அற்புதமான விளக்கம். உலக நாயகனாகவும் அரங்கநாதனாகவும் உள்ள தங்களின் சிருஷ்டி விநோதங்கள் வியக்கவைக்கின்றன. இருளாகவும் பகலாகவும் பூமி இருப்பது போல், தேவமாகவும் அசுர மாகவும் மானுடர்கள் இருப்பதன் பின்புலம் எனக்குப் புரிகிறது. இவர்கள் அனைவருக்கும் பொதுவாக தாங்கள் இருப்பதும் புரிகிறது.”

- லட்சுமிதேவி நெகிழ்ந்துபோனாள். பிரளயம் குறித்து தொடக்கத்தில் அஞ்சியவள், நிறைவில் `அது ஒரு புதிய தொடக்கத்துக்கான மாற்றம்' என்று பரந்தாமனாலேயே அறியப்பெற்றாள். எல்லாம் அறிந்திருந்தும் அறியாதவள் போல், அவள் மானுடர் பொருட்டே கேள்விகளைக் கேட்கவும் செய்தாள். பதிலும் கிடைக்கப் பெற்றாள்.

காலத்தால் பிரளயத்துக்கு இணையாக இயற்கை சீறியதில் கடல் ஒரு புறமும் நதிகள் மறுபுறமும் பொங்கிப் பிரவாகித்தன. திருவரங்கத் தீவே நீரில் மூழ்கி, நிலப்பரப்பே தெரியாதபடி ஜல சமுத்திரமானது.

பாற்கடலில் ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்ட பெருமானாய் யோகம், தாமசம் எனும் நித்திரைகளில் ஜகத் திரையை அகற்றி, காட்சிகளை அரங்கேற்றும் எம்பெருமான், தான் படைத்த பூ உலகில் - தான் படைத்த காவிரிக்குள், நீர்ச் சம்பந்தத்தோடு சில காலமும், பின் அதன் மண் வாரிதியால் மூடப்பட்டு சில காலமும் கிடக்கத் தொடங்கினார்.

விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்து கோயில் கொண்ட தடயங்களே இல்லாதபடி எங்கும் மண் வாரிதி! ஏழு வீதிகளோடும் மாடங்களோடும் திருவரங் கம் புதைந்துகிடந்தது!

கோயில் இருந்ததற்கான சாட்சிகளாய் கல்வெட்டோ, நூல்வெட்டோ, முதிர்ந்தோர் ஞாபகக் கூற்றோ எதுவும் இல்லாதபடி காலம் சுழன்றது.

ரங்க ராஜ்ஜியம் - 13

தர்மவர்மனின் குடிப்பிறப்புகள் மாத்திரம் இதற்கு நடுவில் எப்படியோ தொடர்ந்தார்கள். அவர்கள் நடுவே நீலிவனத்து ரிஷி பரம்பரையும் தொடர்ந்தது. இந்தப் பரம்பரையில் வந்தவர்களே, தங்களின் ஆழ்ந்த தவத்தால் தங்கள் முன்னோர் பற்றியும், அவர்கள் போற்றித் துதி செய்த பிரணவாகாரப் பெருமாளான அரங்கநாதப் பெருமாள் குறித்தும் அறியத் தொடங்கினர்.

இவர்களே பிரணவாகாரப் பெருமாள் புதையுண்ட வரலாற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்தனர். அதன் மூலம் `அரங்கம் மீள வேண்டும்; மக்களால் மீண்டும் சூழ வேண்டும்' என்று விரும்பி வழிபாடுகள் செய்யத் தொடங்கினர்.

வழிபாடுதானே வழிப்பாடு? வழியும் புலனாகத் தொடங்கியது.

துதான் பெற்றோர் இட்ட பெயர் என்று திண்ண மாகக் கூற முடியாத நிலையில், சோழர் பரம்பரையில் வந்து உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சோழ மன்னன் ஒருவன், ஒருநாள் காவிரி ஆற்றின் பக்கம் வந்தான்.

ஜலசமுத்திரமாய் திருவரங்கத்தையே விழுங்கி ஓடியபடி இருந்த காவிரி, காலத்தால் திரும்ப மாலை போல் பிரிந்து, திருவரங்க நிலப்பரப்பை வெளிக்காட்டிய படி இருந்தாள். நீந்திக் குளித்த சோழ மன்னன் மறுகரை எனும் தீவுப்பகுதிக்குள் கால் வைத்தான்! அவனை அந்த நன்னீர்த் தீவு இருகரம் நீட்டி வரவேற் றது. எங்கு பார்த்தாலும் அடர்ந்த மரங்கள் - மரங்களில் கனிகள், இடைப்பட்ட இடங்களில் மலர்ச்செடிகள். மரங்களில் ஏராளமாய் பட்சிகள்... குறிப்பாய் கிளிகள்!

சோழ மன்னன் அந்தக் காட்சிகளைக் கண்டு மனம் சிலிர்த்தான். கிள்ளைகளின் மொழி அவனுக்குச் சங்கீதமாய் தித்தித்தது. அவன் உடம் பெங்கும் ஒரே பரவசம்! அவன் தன் வாழ்நாளில் அதுபோல் ஓர் அனுபவத்துக்கு ஆட்பட்டதே இல்லை எனும்படியான பரவசம் அது. அப்போது அவன் காதில் ஒரு மந்திரப்பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

`காவேரி விரஜா ஸேயம் வைகுண்டம் ரங்கமந்திரம்
ஸ வாசுதேவோ ரங்கேச: ப்ரத்யட்சம் பரமம் பதம்
விமாநம் ப்ரணவாகாரம், வேதச்ருங்கம் மஹாத்புதம்
ஸ்ரீரங்கசாயீ பகவாந் ப்ரணவார்த்த ப்ரகாசக:'


- என்று அவன் காதில் ஒலித்த மந்திரப் பாடலை ஒரு கிளிதான் பாடியபடி இருந்தது. திரும்பத் திரும்பப் பாடியதோடு, ஒரு மண்திட்டின் மேல் சென்று அமர்ந்து தன் சிறகால் படபடத்து மணலைக் கிளறிக் காட்டியது!

சோழ மன்னன் உடனே புரிந்துகொண்டான். அவனோடு வந்திருந்த வேத விற்பன்னர்களில் ஒருவர் நீலிவனத்தோடு தொடர்பு உடையவர். அவருக்கு அந்தக் கிளி சொன்ன ஸ்லோகப் பாடல் தெளிவாகப் புரிந்தது. அவர் மன்னனுக்கு அதன் பொருளைக் கூறத் தொடங்கினார்.

“அரசே! இது சாதாரண பட்சி ஜன்மக் கிளியல்ல. சுகர் எனும் ரிஷிபுருஷர் போல மிகுந்த ஞானமுள்ள கிளி. பட்சிகளில் கிளியும் காகமுமே மானுடர்களின் பழக்க சம்பந்தமுடையவை. காகம் மனிதர்களைப் போல் அக்னி சம்பந்தத்தால் சமைக்கப்பட்ட உணவை உண்ணும். கிளி மனிதர் களைப்போலப் பேசும்!

இதில் காகம் கருப்பு நிறம் கொண்டு மறைந்து விட்ட பித்ருக்களின் சம்பந்தத்தை நமக்கு உணர்த்துபவை. கிளியோ செழிப்பின் நிறமான பச்சை நிறத்தைக் கொண்டு, தாவர சம்பந்தத்தை நமக்கு உணர்த்துபவை. அப்படிப்பட்ட இரு பறவைகளில் காகம் சனியின் வாகனம். கிளியோ எம்பெருமானின் பச்சை மாமலை போன்ற மேனி சம்பந்தம் கொண்டு, அவர் நினைவை நமக்குள் ஊட்டுகின்ற ஒன்றாகும்.

அவ்வகையில் இந்தக் கிளி வேத மொழியான சம்ஸ்க்ருதத்தின் வழி நின்று பாடிய பாடலின் பொருளைச் சொல்கிறேன் கேளுங்கள்.

`எம்பெருமானின் வைகுண்டத்தில் விரஜை எனும் நதி ஒன்று ஓடியபடி உள்ளது. அந்த நதிதான் பூ உலகில் இதோ ஓடுகின்ற காவிரியாகக் காட்சி தருகிறது. அதனால், நாம் நிற்கும் இந்த நிலப்பரப்பும் பூலோக வைகுண்டமாகும். அதுபோல் ஸ்ரீரங்க விமானமே ஸ்ரீவைகுண்டத்தில் அவர் இருக்கும் இடத்தைக் குறிப்பதாகும். அதில் பரமபதநாதனாக அவர் காட்சி தருகிறார்.  அவரே ரங்கநாதனாக இங்கு எழுந்தருளியுள்ளார்’ என்பதே இப்பாடலின் பொருளாகும்” என்று கூறி முடித்தார்.

சோழன் அதைக் கேட்டு மகிழ்ந்தான்.

``விரஜா நதியா இந்தக் காவிரி... இந்த இடம்தான் பூலோக வைகுண்டமா... அப்படியானால், பரமபத நாதனாக அவர் எழுந்தருளிய அந்த ஸ்ரீரங்க விமானம் எங்கே'' என்றும் கேட்டான்.

கிளி தன் சிறகால் படபடத்து மண்ணைக் கிளறியதை ஒரு தூண்டுதலாகக்கொண்டு, அந்த இடத்தைத் தோண்டப் பணித்தான். மணலானது அப்புறப்படுத்தப்பட்டு, முதலில் ஸ்ரீரங்க விமானம் தட்டுப்பட்டது. பின் பரமபத நாதர் தட்டுப் பட்டார். பல்லாண்டு காலம் மண்மிசை மூடிக் கிடந்த நிலையிலும் விமானத்தில் துளி மாசில்லை - மருவில்லை!

அந்தக் காட்சியில் சோழன் உயிரே சிலிர்த்தது. அந்த நொடியே அந்தச் சோழன் கிளிச்சோழன் என்றானான். அவனது மேற்பார்வையில் ஆயிரக் கணக்கானோர் ஒன்றிணைந்து புதையுண்ட திருவரங்கத்தை மீட்கத் தொடங்கினர்.

அசாதாரண மீட்சி!

சப்த பிராகாரங்களும், மதில்களும், மாடங்களும் வெளிப்பட்டன. அவையே அந்தத் தீவு ஒரு மனித சமூகமானது பெரும் பக்திச் சிறப்போடு ஒரு பெருவாழ்வு வாழ்ந்ததைச் சொல்லி நின்றன.

`அந்த நாளிலேயே இப்படி ஒரு மேலான வாழ்வை நம் முன்னோர்கள் வாழ்ந்துள்ளனர். இந்த நாளில் அதனினும் மேலான ஒரு வாழ்வை நாம் வாழ்ந்து காட்டவேண்டும்' என்று கிளிச் சோழன் தனக்குள் எண்ணிக்கொண்டான்.

நீலிவனத்து ரிஷிகளும் வந்து நின்று, திருவரங் கத்தின் பூர்வச் சிறப்பை வைவஸ்வத மனுவில் தொடங்கி, அது ஒரு பிரளயத்தால் மண்மூடிப் போனது வரை கூறி முடித்தனர். அதை அப்படியே பதிவு செய்து ‘கோயிலொழுகு’ போன்ற ஒரு ஏடகத்தையும் உருவாக்கினான் கிளிச்சோழன்.
பூலோக வைகுண்டமும் புத்துயிர்ப்போடு தன் அருளாட்சியை மீண்டும் தொடங்கியது!

- தொடரும்...

ரங்க ராஜ்ஜியம் - 13

துளசி தீர்த்த மகிமை!

பாண்டுரங்கனின் பக்தரான சாங்கதேவர், பேதரி என்ற இடத்தில் தனது அடியார்களுடன் கூடி நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது அங்கே வந்த முதியவர் ஒருவர், ``அரசனின் மகள் பாம்பு கடித்து இறந்து மூன்று நாள்கள் ஆகின்றன. எனவே அரசன் துக்கத்திலிருக்கிறான்.இங்கு பக்திக்கும் பாகவதர்களுக்கும் இடமில்லை. உடனே ஊரைவிட்டு வெளியே சென்றுவிடுங்கள்’’ என்றார்.

``பாம்புக்கடியானால்... நானே அரசரின் மகளை எழுப்புகிறேன் என்று அவரிடம் போய் சொல்லுங்கள்’’ என்றார், சாங்கதேவர்.

அப்படியே மன்னனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. `என்ன செய்தும் பிழைக்காத பெண்ணை, இவர் மட்டும் எப்படி எழுப்புகிறார் என்று பார்ப்போம்' என்று எண்ணிய மன்னர், சாங்கதேவரை தன் மகளின் உடம்பு இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றார்.

பாண்டுரங்கனை மனதில் ஜபித்தபடி துளசி தீர்த்தத்தை எடுத்து மன்னனிடம் கொடுத்த சாங்கதேவர், ``இந்தத் தீர்த்தத்தை உனது மகளின் மீது தெளி’’ என்றார். மன்னனும் அப்படியே செய்ய, மறுகணம் துயில் எழும் பெண்ணைப் போல் அவள் எழுந்தாள். அரசன் திகைத்தான்; சாங்கதேவரை வணங்கி பணிந்தான். அரண்மனை ஆனந்தத்தால் மூழ்கியது! `பகவான் அருளிருந்தால், பாகவதன் சொல் எப்படி பொய்யாகும்’ என்பதற்கு சாங்கதேவர் சரிதம் ஓர் உதாரணம்.

- எம். வி. குமார், மதுராந்தகம்

ரங்க ராஜ்ஜியம் - 13

பகவானின் கருணை!

பரமபக்தையான எச்சம்மாள், தன் வீட்டில் ஒரு லட்சம் தளிர் இலைகளால் `லக்ஷ பத்ர பூஜை’ செய்யவிருப்பதை பகவான் ரமணரிடம் தெரிவித்தாள். பகவான் வெறுமனே கேட்டுக்கொண்டார்.

எச்சம்மாளும் அர்ச்சனையை ஆரம்பித்து செய்துவந்தார். ஐம்பதாயிரம் ஆகியிருக்கும்போது, கோடை வந்தது. தாவரமெல்லாம் கருகின. பகவானிடம் தமக்கு தளிர் கிடைக்காததை கூறினார் எச்சம்மாள்.

``ஓஹோ! இலை கிடைக்கவில்லையா? அப்படீன்னா... உன்னையே கிள்ளி கிள்ளி அர்ச்சனை பண்றதுதானே’’ என்றார் ரமணர். இந்தப் பதிலை எதிர்பாராத எச்சம்மாள் ``பகவானே! அது சித்ரவதையாக இருக்காதா'' என்றார்.

``அதுசரி... உன்னைக் கிள்ளிண்டால் உனக்குச் சித்ரவதையாக இருக்கும்னா, கொழுந்தைப் பறிச்சா மரம் செடிகளுக்கு மட்டும் அப்படி இருக்காதா’’ என்று கேட்டார். பகவானுக்கு உவக்காததை செய்தோமே என வருந்திய எச்சம்மாள் ``சுவாமி! முன்னமேயே நீங்கள் ஏன் இப்படிச் சொல்லவில்லை’’ என்று கேட்டார்.

பகவான் ரமணர் பதில் சொன்னார்: ``உன்னை கிள்ளிண்டா உனக்கு வலிக்குதுன்னு நான் சொல்லியா தெரிஞ்சுண்டே? உன்மாதிரித்தான் அந்தச் செடி- கொடிகளும். இது, நான் சொல்லித்தான் தெரியணுமா?''

உண்மை உணர்ந்தார் எச்சம்மாள்!

- வி.லக்ஷ்மணன், மயிலாடுதுறை