Published:Updated:

நல்லது நடந்தது!

நல்லது நடந்தது!
பிரீமியம் ஸ்டோரி
News
நல்லது நடந்தது!

ஆதிகுருவின் அருள்சுரக்கும் சிவாலயத்தில் வாசகர்களின் உழவாரப் பணி!

னிதப் பிறவியின் லட்சியமே, இனி ஒரு பிறப்பில்லாப் பேரின்ப நிலையை அடைவதுதான். அதற்கான உபாயங்களாக நான்கு சிவ புண்ணிய காரியங்கள் பற்றி சிவாகம நூல்கள் கூறுகின்றன.

அவை: சிவாலயங்கள் நிர்மாணிப்பது, இடை விடாமல் யாகங்கள் செய்வது, அடியார்களுக்குத் தொண்டு செய்வது, உழவாரப் பணிகள் மேற்கொள்வது. இந்த உன்னதப் பணிகளில், முதல் மூன்றை நிகழ்த்துவதற்குப் பொருள்வளம் தேவை. ஆனால், உழவாரத் திருப்பணிக்கு உடலுழைப்பு வழங்கினாலே போதும்.

இந்தத் திருப்பணி குறித்த வேண்டுகோள் ஒன்றை நம் வாசகர்களும் உரிமையோடு முன்வைத்திருந்தார்கள்.

நல்லது நடந்தது!

``ஆலயம் தேடுவோம், வேல்மாறல் பாராயணம், திருவிளக்கு பூஜை என்று வாசகர் கள் பங்குபெறும் வகையில், பல தெய்விகப் பணிகளை முன்னெடுத்து நடத்திவரும் சக்தி விகடன், திருக்கோயில்களில் உழவாரப் பணிகளையும் மேற் கொள்ளலாமே’’ என்பதுதான் அவர்களது வேண்டுகோள்.

 இறையருள் கூடிவந்தது. ஆன்மிக அன்பர்களின் உதவி மற்றும் ஒருங்கிணைப்புடன்... கடந்த 16-ம் தேதி, திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரத்தை அடுத்துள்ள இலம்பையங்கோட்டூர்- அருள்மிகு கனககுசாம்பிகை உடனுறை அருள்மிகு தெய்வ நாயகேஸ்வரர் திருக்கோயிலில், சக்தி விகடன் வாசகர்களின் முதல் உழவாரப் பணி தொடங்கியது.

இதுபற்றிய அறிவிப்பு இதழில் வெளியானதுமே வாசகர்கள் பலரும், மிக ஆர்வத்துடன் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொண்டார்கள்.

குறிப்பிட்ட நாளில் அற்புதமாக நடந்தேறியது உழவாரப்பணி. முன்னதாக, இலம்பையங்கோட்டூர் தலத்தின் மகிமையைப் பார்க்கலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நல்லது நடந்தது!காஞ்சி மகான் போற்றிய திருத்தலம்

தொண்டைநாட்டுத் திருத்தலங்களில் மேன்மையானது என்று காஞ்சி மகா பெரியவர் போற்றிய திருத்தலம் இது. இங்கு வந்து இறைவனை வழிபடுபவர்களுக்கு அழகும் இளமையும் கூடும் என்பது நம்பிக்கை.

தேவலோக மங்கையரான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர் இந்தத் தலத்துக்கு வந்து, ஈஸ்வரனைக் குரு வடிவில் வழிபட்டு, சாபத்தின் காரணமாக தாங்கள் இழந்த அழகு, இளமை ஆகியவற்றைத் திரும்பப் பெற்றார்கள். அதனால் இந்தத் தலத்துக்கு `அரம்பையங்கோட்டூர்’ என்ற பெயர் ஏற்பட்டு, அதுவே மருவி தற்போது இலம்பையங்கோட்டூர் என்று வழங்கப்படுகிறது.

ஈஸ்வரன், திரிபுராசுரர்களை சம்ஹாரம் செய்யப் புறப்பட்டபோது, அவர் அணிந்திருந்த கொன்றை மாலை இத்தலத்தில் விழுந்து சிவ லிங்கமானது. இந்த நிகழ்ச்சியை திருஞானசம்பந்தப் பெருமான், ‘திருமலர் கொன்றையன்’ என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

நல்லது நடந்தது!

இங்கே, ‘தீண்டாத் திருமேனிநாதர்’ என்ற சிறப்புடன் அருள்பாலித்து வருகிறார், தெய்வ நாயகேஸ்வரர். தரிசித்த மாத்திரத்திலேயே நம்முடைய பாவங்களையெல்லாம் பொசுக்கி, இக-பர சுகங்களை அருளும் ஸ்வாமி இவர் என்கிறார்கள் பக்தர்கள்.

அம்பாள் கனககுசாம்பிகை அழகே வடிவாகக் காட்சி தருகிறாள். அன்னையின் திருப்பாதத்தில் காஞ்சி மகாபெரியவர் அருளிய ஸ்ரீசக்கரத்தை தரிசிக்கலாம்.

யோகப்பட்டயத்துடன் ஸ்ரீதட்சிணாமூர்த்தி

உலகுக்கே ஆதிகுருவாகத் திகழும் ஸ்ரீதட்சிணா மூர்த்தி, யோக வடிவில் சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்த தலம் இது. ஆகவே, குரு வழிபாட்டுக்கு உகந்த க்ஷேத்திரமாகவும் திகழ்கிறது இவ்வூர்.

சின்முத்திரை காட்டும் திருக்கரத்தை மார்பின் மீது வைத்து, கால் மாற்றி அமர்ந்த நிலையில் அருள்கிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. அவரின் வலக் காலில் யோகப்பட்டயம் அமைந்துள்ளது. அவருடைய இருவிழிகள் சற்றே தாழ்ந்து திருவடி களில் உபதேசம் பெறும் சனகாதி முனிவர்களைக் காணும் வண்ணம் உள்ளன.

`வெகு அபூர்வமான உத்குடியாசன திருக் கோலம் இது’ என்கிறார்கள் சிவனடியார்கள். இவரை தரிசித்தால் யோகமும் ஞானமும் பெருகும். மேலும் இந்தத் தலத்து இறைவனை சந்திரன் வழிபட்டு, இழந்த தன்னுடைய கலை களைத் திரும்பப் பெற்றதால், சந்திரனுக்கு உரிய பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது இவ்வூர்.

நல்லது நடந்தது!

மல்லிகா புஷ்கரணி, சந்திர புஷ்கரணி ஆகிய இரண்டு தீர்த்தங்களைக் கொண்டுள்ள இந்தத் திருத்தலத்தில்தான் சுயம்பிரகாச சச்சிதானந்த சுவாமிகள் ஜீவசமாதி அடைந்தார். மேலும், சருமம் தொடர்பான பிணிகள் போக்கும் தலமாகவும் திகழ்கிறதாம் இவ்வூர்.

இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலங்களைச் சேர்ந்த 6 கல்வெட்டுகள், இந்தக் கோயிலின் பழைமைச் சிறப்பையும் பல சுவாரஸ்ய தகவல்களையும் குறிப்பிடுகின்றன.

உள்ளம் மகிழ உழவாரப் பணி...

இப்படி பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ஆலயத்தில்  உழவாரப் பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது நாம் செய்த பாக்கியமே! உழவாரப்பணி நடைபெற்ற அன்று காலையிலேயே, வாசகர்களும், அகத்தியர் பசுமை உலகம் அமைப்பின் நிறுவனர் சரவணன்  தலைமையில் உழவாரத் திருப்பணித் தொண்டர் களும், ஆலயத்தில் குழுமிவிட்டனர்.

காஞ்சிபுரம், மாமண்டூர் பகுதிகளைச் சேர்ந்த உழவாரத் தொண்டர்கள், இந்தத் தலத்துக்குரிய ‘எனதுரை தனதுரையாக...’ சிறப்புப் பதிகத்தின் பாடல்களைப் பாடி, உழவாரப்பணியைத் தொடங்கினர். வாசகர்களும் மிக உற்சாகமாகப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். முதற்கண், சுமார் 2 ஏக்கர் அளவுக்குப் பரந்து விரிந்திருந்த திருக்கோயிலின் சுற்றுப்புறத்தைச் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டார்கள்.

நல்லது நடந்தது!

தொடர்ந்து, குழந்தைகள் முதல் 60 வயதைக் கடந்த முதியவர்கள் வரை  அனைவரும்... குப்பை களை அகற்றுவது, தூண்களில் படிந்திருக்கும் தூசியைத் துடைப்பது, பூஜைப் பாத்திரங்களைத் துலக்குவது, நந்தவனத்தைத் தூய்மைப்படுத்துவது, கோஷ்ட மூர்த்தங்களின் திருமேனியில் படிந் திருக்கும் அழுக்குகளை நீக்குவது, கோயில் தரையைக் கழுவி கோல மிடுவது, சுவர்களில் படிந்திருந்த எண்ணெய்ப் பிசுக்கை அகற்றுவது... என்று பலதரப்பட்ட பணிகளும் மளமளவென நடந்தேறின.

பால சிவனடியார்கள்!

வேறுசில அடியார்கள் மலர் தொடுப்பதிலும், அடியார்களுக்கான உணவு சமைப்பதிலும் ஈடுபட்டிருக்க, இளைஞர்கள் சிலர் கோயிலின் திருக்குளங்களைச் சீர்ப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள். உச்சி வெயில் கடுமையாக வாட்டிய நிலையிலும், சற்றும் சோர்வும் தொய்வும் இல்லாமல் ஒவ்வொருவரும் சுறுசுறுப்பாக பணியாற்றியவிதம், அவர்களின் இறைப்பற்றை நன்கு உணர்த்தியது.

`நாங்களும் சும்மா இருப்பதில்லை’ என்பது போல், பால சிவனடியார்கள் ஒன்றுசேர்ந்து, தங்களுக்குத் தெரிந்த பதிகங்களைப் பாடி, திருப்பணியில் ஈடுபட்டிருந் தவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

உழவாரப்பணியில் ஈடுபட்ட வர்களுக்கு, காலை உணவாகக் கம்பும் பச்சைப் பயறும் கலந்து செய்த கஞ்சியும், ஊறுகாயும் வழங்கப் பட்டன. 11 மணியளவில் பானகம் தரப்பட்டது. மதியம் சாம்பார் சாதமும், வாழைப்பூ கூட்டும், பிஞ்சு வாழைக்காய் பொரியலும் வழங்கப் பட்டன.  மூன்று மணிக்கு நவதானிய சுண்டலை உண்டு  மகிழ்ந்தனர் வாசகர்கள். மாலை நான்கு மணிக்கு உழவாரப் பணிகள் நிறைவுபெற்றன. ஒட்டுமொத்த கோயிலும் புதுப்பொலிவுடன் திகழ்ந்ததைக் கண்டபோது, உள்ளம் சிலிர்த்துப்போனோம். அடுத்து, அடியார்கள் பதிகங்கள் பாட, தெய்வநாய கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகளுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. திருப்பணியைத் தலைமையேற்று நடத்திய சரவணன், பூஜைக்கான ஏற்பாடுகளை பிரமாண்டமாகச் செய்திருந்தார்.

அருள் தரிசனம்... அற்புத வழிபாடு!

எண்ணெய், பால், வாசனைத் திரவியம், மஞ்சள், விபூதி என ஏழு வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேக வேளையில் சிவலிங்கத்தில் சாட்சாத் பரமனின் திருவுருவத்தை தரிசித்த பரவசத்தில், அடியார்கள் பஞ்சாட்சரம் முழங்கி இறைவனைப் போற்றினர். தொடர்ந்து, சிவனடியார்கள் தேனினும் இனிய தேவாரப் பதிகங்களை கண்ணீர்மல்கிக் கசிந்துருகிப் பாட, தாமரை, செண்பகம், ரோஜா, அரளி உள்ளிட்ட ஒன்பது வகை மலர்களால் இறைவனுக்கு அர்ச்சனை நடைபெற்றது. பின்னர் அம்பிகைக்கும் பூஜைகள் நடைபெற்றன.

நல்லது நடந்தது!

கோயில் அர்ச்சகர் பிரம்மேச சிவம், திருக்கோயிலின் வரலாறு, பெருமைகள், உழவாரத் திருப்பணியின் மேன்மை ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துரைத்து, ஒவ்வொரு வாசகரின் பெயரிலும் அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்கினார்.

அன்பர் சரவணன், வாசகர்களுக்கும், உழவாரப்படையினருக்கும் சைவ ஆகம நெறிகள் பற்றி விரிவாக விளக் கினார். திருப்பணி, அருள் தரிசனம், அற்புத வழிபாடு ஆகியவற்றால் மிகவும் நெகிழ்ந்துபோனார்கள் நம் வாசகர்கள்.

‘`இனி, சக்தி விகடன் நடத்தும் அனைத்து உழவாரப்பணிகளிலும் தவறாமல் கலந்துகொள்வேன்’’ என்று உறுதிமொழியே எடுத்துக்கொண்டார், கொளப்பாக்கம் கல்யாணசுந்தரம். 

10 மணிக்குள் கோயிலுக்கு வந்து விடவேண்டும் எனும் ஆர்வத்துடன்,  வேப்பம்பட்டு வாசகி ஜெயமணி சுமார் 7 கி.மீ தூரம் நடந்து வந்ததைக் கூறியபோது மற்றவார்கள் மனதாரப் பாராட்டினார்கள் அவரை.

தாம்பரத்தைச் சேர்ந்த சீராளன்-தேவி தம்பதி, ‘`இந்தத் திருப்பணியில் எங்களையும்  கலந்துகொள்ள வைத்த ஈசனுக்கும், சக்தி விகடனுக்கும் நன்றி கூறிக்கொள்கிறோம்’’ என்றனர் மிகவும் நெகிழ்ச்சியோடு.

திருக்கோயில்களைப் புனரமைத்து சீர்செய்வது என்பது வழிபாடு மட்டு மல்ல, நம் வரலாற்றை, பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் அரும்பணி. இந்தப் பணியில் ஈடுபடும் அன்பர்கள் மட்டுமின்றி, அவர்கள் வம்சத்தில் 21 தலைமுறையினரும் பிறவாப் பேரின்ப நிலையை அடைவார்களாம்.

அப்படியான பெரும்பாக்கியத்தை அளித்த அந்த ஈசனுக்கும், அவன் அடியார்களுக்கும் மனதார நன்றி கூறித் தொழுதோம். தொடர்ந்து திருப்பணியில் ஈடுபடும் பெரும்பேற்றினை அளிக்கவும் வேண்டி விடைபெற்றோம்... மனநிறைவோடு!

- மு.ஹரிகாமராஜ்

- படங்கள்: சி.ரவிக்குமார், ராகேஷ்

அடுத்த உழவாரத் திருப்பணி எங்கே, எப்போது? விவரம்... அடுத்த இதழில்!