மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா - `நடை சாத்தியபிறகும் ஆள் நடமாட்டம்!’

நாரதர் உலா - `நடை சாத்தியபிறகும் ஆள் நடமாட்டம்!’
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா - `நடை சாத்தியபிறகும் ஆள் நடமாட்டம்!’

நாரதர் உலா - `நடை சாத்தியபிறகும் ஆள் நடமாட்டம்!’

‘திருவண்ணாமலைக்குச் சென்றிருந்த நாரதர், இத்தனை நாளாகியும் இன்னும் வரவில்லையே..’ என்று நாம் யோசித்துக் கொண்டிருந்தபோதே, வாசல் பக்கம் நிழலாடியது. சில நொடிகளில் அறைக்குள் பிரசன்னமானார் நாரதர்.

கொளுத்தும் வெயிலில் வந்தவரிடம், உடனே தாமதத்துக்குக் காரணம் கேட்காமல், இஞ்சி, கொத்துமல்லி அரைத்துச் சேர்த்த குளிர்ந்த மோர் கொடுத்து உபசரித்தோம்.

மோரைப் பருகிவிட்டு, தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்ட நாரதரிடம் கேட்டோம்:

‘`என்ன நாரதரே... திருவண்ணாமலைக்கு அவசர அவசரமாகப் புறப்பட்டுச் சென்றீர். திரும்பி வர இத்தனை நாள்களா?’’

‘`சில நாள்கள் இருந்தாகவேண்டிய கட்டாயம். ஆகவே, அங்கேயே தங்கிவிட்டேன்’’ என்றார் நாரதர்.

நாரதர் உலா - `நடை சாத்தியபிறகும் ஆள் நடமாட்டம்!’

``அண்ணாமலையில் அப்படியென்ன விஷயம் நாரதரே?’’ என்று நாம் கேட்டதும், ‘`அவசரப்படாதீர்... சொல்லத்தானே போகி றேன்’’ என்று செல்லமாக நம்மைக் கோபித்துக் கொண்ட நாரதர், விஷயத்தை விரிவாக விளக்க ஆரம்பித்தார்.

‘‘அன்று தொலைபேசி ஒன்று வந்தது அல்லவா. போனில் பேசிய அன்பர், அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு அருகில் கடை வைத்திருக்கும் அன்பர் ஒருவர்தான். போனில் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டவர், நேரில் வரும்படி அழைத்தார். அவசியம் உணர்ந்து நானும் புறப்பட்டுச் சென்றேன். நேரில் சென்றதும்தான், பிரச்னை களையும் அவற்றின் தீவிரத்தையும் தெளிவாக தெரிந்துகொள்ள முடிந்தது’’

``விவரமாகச் சொல்லும்’’

‘‘திருவண்ணாமலை கோயிலுக்குக் கடந்த ஆண்டுதான் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆனால், அதன்பிறகு எவ்வித பராமரிப்பும் இல்லை என்று பக்தர்கள் குறைபட்டுக் கொள் கிறார்கள். நானும், எனக்கு போன் செய்த நண்பருமாக கோயிலுக்குச் சென்றோம்.

திருக்கோயிலில், அடிப்படை வசதிகளைக் கூட முறையாகச் செய்வதில்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது. தினமும் ஆயிரக் கணக்கில் பக்தர்கள் கூடும் தலம் அண்ணாமலை. ஆனால், பக்தர்கள் பயன்பாட்டுக்கான கழிப்பிட வசதிக்கான ஏற்பாடுகளும் முகம் சுளிக்கும் அளவிலேயே உள்ளன’’

``கோயில் நிர்வாகம் இதைக் கண்டுகொள்வது இல்லையோ?’’

நாரதர் உலா - `நடை சாத்தியபிறகும் ஆள் நடமாட்டம்!’


‘`எடுத்துச் சொன்னாலும் உரியவர்கள் செவிசாய்ப்பதில்லை என்று வருத்தப் படுகிறார்கள் பக்தர்கள். அவர்கள் மட்டுமின்றி கோயிலுக்கு வெளியே கடை நடத்துபவர்களும் அங்கிருக்கும் கழிப்பிடத்தையே பயன்படுத்து கின்றனர். அப்படியிருக்க, முறையாகச் சுத்தப்படுத்தப்படுவதில்லையாம். இதுகுறித்து பலமுறை ஆலய நிர்வாகத்திடம் புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை எனப் புலம்புகிறார்கள், பக்தர்கள். அதேபோல், கோயிலுக்குள் இருக்கும் கோ சாலையிலும் பராமரிப்பு மோசமாகவே உள்ளது’’ என்று அங்கலாய்த்துக்கொண்ட நாரதர், அடுத்து சொன்ன விஷயத்தைக் கேட்டதும் பகீரென்றது நமக்கு.

‘‘இரவுக் காவலுக்கு காவலர்கள் இருந்தும், இரவில் கோயிலுக்குள் ஆள் நடமாட்டம் இருக்கிறதாம்’’ என்றார் நாரதர்.

‘`இரவு நேரத்தில் கோயிலுக்குள் வெளியாள் கள் எப்படி வருவார்கள் நாரதரே’’ அதிர்ச்சி விலகாமல் கேட்டோம். நாரதர் தொடர்ந்தார்.

‘‘உம்மைப் போலவே எனக்கும் அதிர்ச்சியே!  மறுநாளும் கோயிலுக்குச் சென்றோம். திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி  மகிழேந்தி கோயிலுக்கு வந்திருந்தார். தரிசனத்துக்காக வந்திருப்பார் என்று நாங்கள் நினைத்திருக்க, திடீரென ஆய்வு மேற்கொண்டார் நீதிபதி.’’

நாரதரே பேசட்டும் என்று நாம் அமைதி காத்தோம். அவர் தொடர்ந்தார்.

‘‘கோயில் நிர்வாகம் சரியாக செயல்பட வில்லை என்று நமக்கு எப்படித் தகவல் வந்ததோ, அதேபோல் அவருக்கும் தகவல் சென்றிருக்கிறது. அதையடுத்துதான், நீதிபதியின் இந்த திடீர் ஆய்வு. அன்னதானக் கூடத்துக்குச் சென்று, பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்ன தான உணவின் தரத்தை ஆய்வு செய்ததுடன், பக்தர்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார் நீதிபதி. அடுத்து, கோயில் நிர்வாக அலுவலக அறைக்குச் சென்று, சில கோப்புகளையும் பார்வையிட்டார்’’ என்றார் நாரதர்.

‘`அன்னதானக்கூட ஆய்வுக்கும் கோப்பு களுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?’’

‘`சரியாக யூகித்துவிட்டீர்! கோயிலில் வழங்கப்படும் அன்னதானத்துக்கு யார் வேண்டுமானாலும் நன்கொடை கொடுக்கலாம். அதற்கு முறையாக ரசீது கொடுக்கப்பட வேண் டும். ஆனால், பல ஆண்டுகளாக நன்கொடை களுக்கு உரிய முறையில் ரசீது கொடுக்கப் படவில்லை. இதையறிந்த நீதிபதி, கோயில் நிர்வாகத்தை எச்சரித்திருக்கிறார்’’ என்றார் நாரதர்.

நாரதர் உலா - `நடை சாத்தியபிறகும் ஆள் நடமாட்டம்!’

‘`பலே! வேறு எங்கெல்லாம் ஆய்வு நடத்தினார் நீதிபதி?’’

‘`கோ சாலைக்கும் சென்று ஆய்வு மேற்கொண் டார் நீதிபதி. அப்போதுதான்... ‘கோயிலுக்குள் இரவில் ஆள்நடமாட்டம்’ என்ற தகவல் உறுதி யானது’’ என்ற நாரதர் தொடர்ந்து, நீதிபதியின் ஆய்வு குறித்து விவரித்தார்.

‘`நீதிபதி கோ சாலையில் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கே காலி மதுப்பாட்டில்கள் சில கிடந்தனவாம். அதுகுறித்து, அதிகாரிகளிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்பினார் நீதிபதி. ஆக, கோயில் நடைசாத்தப்பட்ட பிறகும், உள்ளே சமூக விரோதிகளின் நடமாட்டம் இருப்பது உறுதியாக தெரியவந்திருக்கிறது என்கிறார்கள் பக்தர்கள்’’

‘‘சரி! நீதிபதியின் கேள்விகளுக்குப் பதில் கிடைத்ததா இல்லையா?’’

‘`கோயில் துணை ஆணையர் ஞானசேகரனும் இந்த ஆய்வின்போது உடனிருந்தார்.  நீதிபதியின் கேள்விகளுக்கெல்லாம் மெளனத்தையே பதிலாக வைத்திருந்தார் என்கிறார்கள் அருகிலிருந்தவர்கள். மட்டுமின்றி, இரவுக் காவலில் இருந்தவர்களையும் விசாரித்தாராம் நீதிபதி. அவர்களுக்கும் எதுவும் தெரியவில்லை. உடனே, ‘இதுதான் உங்கள் நிர்வாகமா?’ என்று கோயில் நிர்வாகிகளைக் கடிந்துகொண்டாராம் நீதிபதி. அவரிடம், ‘இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்வதாக’ உறுதியளித்துள்ளாராம் துணை ஆணையர்’’ பெரும் ஆற்றாமையுடன் பேசிமுடித்தார் நாரதர்.

‘`நாரதரே.. கோடிக்கணக்கில் வருமானம் வரும் கோயிலுக்கே இந்த நிலை என்றால், வருமானம் குறைவாக இருக்கும் கோயில்களைப் பற்றி என்ன சொல்வது...’’ என்று நாம் ஆதங்கப் பட, நாரதர் தொடர்ந்தார்: ‘‘உமது ஆதங்கம் சரிதான். அதேநேரம், இன்றைக்கும் சில கோயில்கள் சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றன.  அவை பற்றியும் குறிப்பிட்டாகவேண்டும்...’’

நாரதர் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவரது போனில் ஒரு மெசேஜ் வந்து விழுந்தது. எடுத்துப் பார்த்தவர், ‘‘சரிதான்! அடுத்த உலா வும் ஒரு மலைத் தலத்துக்குத்தான்’’ என்றவர், ‘‘போனில் விரிவாகப் பேசுகிறேன்’’ என்றபடியே விடைபெற்றுக்கொண்டார்.

- உலா தொடரும்...