Published:Updated:

‘இமைப்பொழுதும் உனை மறவேன் ஈசனே!’

‘இமைப்பொழுதும் உனை மறவேன் ஈசனே!’
பிரீமியம் ஸ்டோரி
News
‘இமைப்பொழுதும் உனை மறவேன் ஈசனே!’

கி.வெங்கடேஷ் பாபு - ஓவியம்: ம.செ

நித்தமும் சிவனாரின் அறக்கருணையை எண்ணிச் சிலிர்க்கச் செய்யும் சம்பவம் என் வாழ்வில் நிகழ்ந்தது. அப்பா, அம்மா, தங்கை என சிறிய குடும்பம். வாழ்க்கையின் அடி மட்டத்திலிருந்து முன்னேறியவன் நான். சிறிய நிறுவனத்தில் நிலையில்லாத வேலை. மிகுந்த சிரமத்துக்கிடையே நல்ல வரனாகப் பார்த்து தங்கைக்குத் திருமணம் முடித்து வைத்திருந்தேன். கல்யாணக் கடன்கள் கழுத்தைப் பிடித்துக்கொண்டிருந்த நேரம் அது,

2004-ம் வருடம். பேரிடியாய் என்னைத் தாக்கியது அந்த நிகழ்வு. நன்றாக உலவிக்கொண்டிருந்த அம்மா, ஒருநாள் காலை முதுகெலும்பில் வலி என்று கதறித் துடித்தார். நண்பர்கள் உதவியோடு மருத்துவமனைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தோம். ஏகப்பட்ட ஆய்வுகள். இறுதியில், முதுகுத் தண்டில் ஏதோ சிக்கல் என்றும் இதைக் குணப்படுத்துவது கடினம் என்றும் சொல்லி விட்டார்கள் மருத்துவர்கள்.

சென்னையின் பிரபலமான மருத்துவமனைகள் அத்தனையும் ஒருசேரச் சொன்னது, ‘இதற்கு அறுவைச் சிகிச்சை செய்தாலும் பலனிருக்காது’ என்பதே.  தினமும் மருத்துவமனைகளுக்கு அலைந்ததால் வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. வேலையை விட்டுவிடலாமா என்ற யோசனை வேறு. சுற்றிலும் கடன், அம்மாவின் அவஸ்தை, ஆதரவற்ற நிலை என உலகமே என்னைத் தண்டித்துவிட்டது போன்ற துயரம் என்னை அழுத்தியது. யாருக்கும் தெரியாமல் அழுவேன். எவரிடமும் உதவி கேட்கத் தயக்கம். சிறுவயது முதலே தொழில் மீது மட்டுமே ஆர்வம் இருந்ததால் கடவுள் நம்பிக்கை என்று பெரிதாக இல்லை.

‘இமைப்பொழுதும் உனை மறவேன் ஈசனே!’

ஆனால், என் அம்மாவோ எல்லா விசேஷ நாள்களிலும் விரதம் இருப்பார். எல்லா தெய்வங்களுக்கும் பூஜை செய்வார். ஆனாலும் இப்படியோர் அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டதே அவருக்கு என்று மிகவும் வருந்தினேன். சுற்றிலும் நம்பிக்கை இல்லாத சூழலில் என் மனம் மிகுந்த அழுத்தத்துக்குள்ளாகித் தவித்தது. எந்த நேரம் போன் வருமோ? அம்மாவுக்கு என்னவாகுமோ என்ற பயம் தொடர்ந்து நீடித்தது. ஒரு தெய்வம்கூட கண்ணைத் திறக்கவில்லையா என்ற கோபம் என் முன் எழுந்தது.

அப்போது என்னுடன் இருந்த நண்பர்கள் சிலர் அம்மாவுக்காக வேண்டிக் கொண்டார்கள். நிச்சயம் அவருக்குக் குணமாகி நடமாடுவார் என்று சொல்லி நம்பிக்கையூட்டினார்கள். அத்துடன், என் தங்கையும் நண்பர்களும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடச் சொன்னார்கள். `மருத்துவருக்கு எல்லாம் மருத்துவனாகத் திகழும் அந்த மருந்தீஸ்வர பெருமான் நலமே அளிப்பார்' என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள். மனிதர்கள் மீது நம்பிக்கைக் குறையும்போது ஆண்டவன் மீது நம்பிக்கை எழும் போலும்! ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் கோயிலுக்குச் சென்றேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
‘இமைப்பொழுதும் உனை மறவேன் ஈசனே!’

கலங்கிய கண்களோடும், கனத்த இதயத்தோடும் ராஜகோபுரம் தாண்டி உள்ளே நுழைந்தேன். கணபதியை வணங்கிவிட்டு, மகாமண்டபத்தில் இருந்த தியாகராஜ பெருமானையும் வணங்கி விட்டு அங்கேயே அமர்ந்தேன். மருந்தீஸ்வரனை வணங்க உள்ளே செல்லத் தயங்கினேன். என்னவென்று வணங்குவது? எல்லா தரப்பிலும் எழுந்து நிற்கும் என் சிக்கல்களை எப்படிச் சொல்வது? நிலையில்லாத வேலை, கடன்கள், அம்மாவின் துயரமான நிலை என அடுத்தடுத்து எழுந்த சோகங்கள் என்னை அங்கேயே கண்ணீர் சிந்த வைத்தன. மனதால் தொழுது மருந்தீஸ்வரனின் திருவடியை வணங்கினேன். ‘என்னை என்ன செய்யப்போகிறாய் ஈசனே?’ என்று அழுதேன். ஆச்சர்யமாக அருகில் எங்கேயோ ஒலித்த ஒரு குரல் என்னை அதட்டியது.

‘இமைப்பொழுதும் உனை மறவேன் ஈசனே!’‘எழுந்து போ! எல்லாம் நல்லதாக நடக்கும், நான் இருக்கிறேன்’ என்றது அந்தக் குரல். திடுக்கிட்டுப் போய் திரும்பிப் பார்த்தேன். யாரோ பெரியவர் ஒரு பெண்ணுக்குச் சொல்லிக் கொண்டி ருந்தார். அது எனக்காக சொல்லப்பட்டதாகவே உணர்ந்தேன். எதிரே தியாகராஜப் பெருமானைப் பார்த்தேன். அவரின் புன்னகையும் எனக்குள் ஏதோ உணர்த்தியது. நம்பிக்கையாக எழுந்து மருந்தீஸ்வரரை வணங்கிவிட்டு வீடு திரும்பினேன்.

சொன்னால் நம்புவீர்களோ இல்லையோ, சென்னை சோழிங்கநல்லூரில் இருந்த தனியார் மருத்துவமனை ஒன்று என் தாயாரின் முதுகுத் தண்டுப் பிரச்னையை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அறுவைச் சிகிச்சை செய்வதாகவும், பாதி அளவு கட்டணம் செலுத்தினால் போதும் என்றும் கூறி எனக்கு ஆறுதல் தந்தார்கள். மருத்துவமனையில் சேர்த்த ஒருவாரம் கழித்து ஒரு நாள் காலை சற்றுத் தாமதமாக அங்கு சென்றேன். வார்டில் என் அம்மா இல்லை. அருகிலிருந்தவர்கள், அம்மாவை அறுவைச் சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு போய் விட்டார்கள் என்றும் சிகிச்சை முடிந்தது என்றும் கூறினார்கள்.

‘இமைப்பொழுதும் உனை மறவேன் ஈசனே!’

மருந்தீஸ்வர பெருமானை மனமாரத் தொழுதபடி அம்மாவைப் பார்க்க ஓடினேன். அறுவைச் சிகிச்சை முடிந்த சில வாரங்களில் அம்மா பூரண நலம் பெற்றார்கள். இன்றுவரை எந்த பெரிய தொல்லையும் இல்லை. அதே நேரம் வேறு ஒரு நல்ல நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலையும் கிடைத்தது. மெள்ள மெள்ள கடன் தொல்லைகளும் விலகின.  பிரச்னைகள் தீரத் தீர, அதற்குக் காரணமான ஈசனின் மீதும் பிடிப்பு அதிகமானது. அவனைப் பிடித்துக்கொண்ட காரணமோ என்னவோ தெரியவில்லை. இப்போது சொந்த வீடு, மனைவி, ஒரு பெண் குழந்தை என என் வாழ்க்கையே அழகிய நந்த வனமாக ஆனந்தமாக மாறியுள்ளது.

ஒரு நிலையில் உயிரை விட்டுவிடலாமா என்று சிந்தித்து வருந்தியவனை, அளவற்ற கருணையுடன் அரவணைத்துக் காப்பாற்றியவர் அந்த மருந்தீஸ்வரர்தான். நம்பியவருக்கு, ‘நமசிவாய’ மந்திரம் நல்லருள் புரியும் என்பதை என் வாழ்க்கையிலிருந்தே உணர்ந்துகொள்ளலாம். தாய்க்கும் தாயான என் மருந்தீஸ்வரனை எந்நாளும் மறவேன்.

அன்பார்ந்த வாசகர்களே!

இறையருளால் உங்கள் வாழ்வில் நிகழ்ந்த சிலிர்ப்பான அனுபவங்களை நீங்களும் எழுதியனுப்புங்கள். கடிதம் மூலமோ, கீழ்க்காணும் வாட்ஸப் எண்ணுக்கு,

குரல் பதிவாகவோ உங்களின் இறையனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.

தேர்வு செய்யப்படும் சிறப்பான அனுபவங்கள், சக்தி விகடன் இதழில் இடம்பெறுவதுடன், அவற்றுக்குச் சிறப்புப் பரிசும் காத்திருக்கிறது.

கட்டுரையைத் தேர்வு செய்வதில் ஆசிரியரின் முடிவே இறுதியானது.

அனுப்பவேண்டிய முகவரி:

`வாசகர் இறை அனுபவம்',
சக்தி விகடன்,
757, அண்ணாசாலை,
சென்னை- 600 002

sakthi@vikatan.com                
89390 30246