Published:Updated:

மாங்கல்ய வரம்தரும் அகத்தீஸ்வரரும் அகிலாண்டேஸ்வரியும்

அகத்தீஸ்வரர்
News
அகத்தீஸ்வரர்

கோயில்...

ல்லற வாழ்க்கை என்பது மங்கலகரமானது என்பது வள்ளுவரின் வாக்கு. மங்கலகரமான இல்லற வாழ்க்கை அமைய வேண்டும் என்கிற கனவு எல்லாருக்கும் இயல்பாகவே இருக்கும். பெற்றவர்களும் தங்கள் பிள்ளைக்கு சீரும் சிறப்புமாக திருமணம் நடைபெற வேண்டுமே என்று விரும்புவார்கள்.

நியாயமான விருப்பம்தான் என்றாலும், பலருக்குப் பல்வேறு காரணங்களால் திருமண வாழ்க்கை அமைவதில் தடையோ தாமதமோ ஏற்படுகிறது. பொருளாதார வசதிக் குறைவினாலோ, தோஷங்களின் காரணமாகவோ பலருக்குத் திருமணம் நடைபெறுவதில் தடைகள் ஏற்படுகின்றன. காரணம் எதுவாக இருந்தாலும், திருமணத் தடை உள்ளவர்கள் வழிபட்டு, பலன் பெறக் கூடிய கோயில்களுக்கும் நம் நாட்டில் குறைவேயில்லை. அத்தகைய கோயில்களில் திருவாரூர் மாவட்டம் பெரியகுருவாடியில் அமைந்திருக்கும் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் குறிப்பிடத்தக்கது.

மாங்கல்ய வரம்தரும் அகத்தீஸ்வரரும் அகிலாண்டேஸ்வரியும்

திருக்கோயில் வரலாறு

சூரிய வம்சத்தில் வந்த மன்னர் சகரன் அசுவமேத யாகம் செய்ய விரும்பினார். தேசம் முழுவதும் சகல லட்சணங்களும் பொருந்திய குதிரையை அனுப்பினார். அந்தக் குதிரை வழியில் காணாமல் போய்விட்டது. குதிரையைத் தேடி வரும்படி தன்னுடைய 60,000 பிள்ளைகளை அனுப்பினார் மன்னர். குதிரையைத் தேடிச்சென்ற சகர குமாரர்கள், தாங்கள் தேடிவந்த குதிரை கபில முனிவரின் ஆசிரம வாயிலில் இருப்பதைக் கண்டனர். `கபிலர்தான் குதிரையைக் கவர்ந்து வந்துவிட்டார்’ என்று தவறாக நினைத்து, அவரை பலவாறாக இழித்தும் பழித்தும் பேசியதுடன், அவரைத் தாக்கவும் முற்பட்டனர். சகர குமாரர்களின் தகாத செயல் கண்டு கோபம் கொண்ட கபில முனிவர், அவர்களைச் சாம்பலாகும்படி சபித்துவிட்டார்.   பல நூறு வருடங்கள் அவர்கள் நரகத் துன்பத்தில் தவித்துக்கொண்டிருந்தனர். பிற்காலத்தில் சகரனின் வம்சத்தில் வந்த பகீரத மன்னர், கபில முனிவர் இட்ட சாபத்தின் காரணமாக நரகத்தில் துன்பப்படும் தன்  முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று விரும்பினார். தன் முன்னோர்களின் சாம்பல் மீது ஆகாச கங்கை படும்போதுதான் சாப விமோசனம் கிடைத்து, அவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையும் என்பதை குலகுருவின் மூலம் தெரிந்துகொண்டார் பகீரதன். ஆகாச கங்கையை பூமிக்கு வரவழைக்க, மகாவிஷ்ணுவை நோக்கிக் கடும்தவம் புரிந்தார். அவருடைய தவத்துக்கு இரங்கிய மகாவிஷ்ணு, பகீரதனுக்கு தரிசனம் தந்து, ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார். பகீரதன், ‘ஐயனே, என் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடையாமல் துன்பத்தில் உழன்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதற்காக பூமிக்கு ஆகாச கங்கை வர அருள வேண்டும்’ என்று வரம் கேட்டார். மகாவிஷ்ணுவும் அவ்வாறே வரம் கொடுத்து மறைந்தார்.

மகாவிஷ்ணு அருளிய வரத்தின்படி கங்கையும் பூமிக்கு வரச் சித்தம் கொண்டாள். ஆனால், விண்ணில் இருந்து தான் வேகமாக இறங்கும்போது, அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் உலகம் அழிந்துவிடுமே என்று தயங்கினாள். தன்னுடைய தயக்கத்தை பகீரதனிடம் தெரிவித்தாள்.
அதற்கு பகீரதன், ‘தேவி, அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். நீங்கள் வேகமாகக் கீழே இறங்கும்போது, உங்களுடைய வேகத்தைத் தாங்கிக்கொள்ளும்படி சிவபெருமானை வேண்டிக் கொள்கிறேன்’ என்றார்.

சிவபெருமானின் தரிசனத்துக்காக மறுபடியும் கடும் தவம் இயற்றினார் பகீரதன். பகீரதனின் தவத்துக்கு இரங்கிய சிவனார், பகீரதன் முன்பு தோன்றி, ‘பகீரதா! உன்னுடைய தவம் கண்டு மகிழ்ந்தோம். நீ வேண்டும் வரம் என்ன?’ என்று ஏதும் அறியாதவர் போல கேட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மாங்கல்ய வரம்தரும் அகத்தீஸ்வரரும் அகிலாண்டேஸ்வரியும்

‘ஐயனே! தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை. என் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக, விண்ணில் இருக்கும் கங்கையைப் பூமிக்கு வரப் பிரார்த்தித்துக் கொண்டேன். கங்கா தேவிக்கும் சம்மதம்தான். ஆனால், கங்கை விண்ணில் இருந்து மிகவும் வேகமாகப் பாய்ந்து கீழிறங்கும்போது, தேவியின் வேகத்தை இந்தப் பூமி தாங்காது. எனவே, தாங்கள்தான் அருள்கூர்ந்து கங்கையைத் தங்கள் திருமுடியில் தாங்கி, வேகத்தைக் குறைக்க வேண்டும்’ என்று பிரார்த்தித்துக் கொண்டார். `அவ்வாறே ஆகட்டும்’ என்று திருவருள் புரிந்த சிவனார், விண்ணிலிருந்து வேகமாக இறங்கிய கங்கையைத் தம் திருமுடியில் தாங்கிக்கொண்டார். சிவபெருமான் கங்கா தேவியைத் தன் திருமுடியில் தாங்கிக்கொண்டதைக் கண்ட அன்னை பார்வதி, சிவபெருமானுடன் ஊடல் கொண்டாள். உலக மக்களின் நன்மையைக் கருதி தேவ தேவியர் நடத்தும் நாடகம்தான் இது!

அம்பிகையின் ஊடலைத் தணிக்கவும், இந்த உலகம் செழிக்கவும் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், திருமுடியில் இருந்த கங்கையை, தம்முடைய இரு விரல்களால் எடுத்து பூமியில் விடுத்தார். அதன் காரணமாக அவருக்கு, ‘கங்கா விசர்ஜன மூர்த்தி’ என்ற திருப்பெயரும் ஏற்பட்டது.
ஐயன் கங்காவிசர்ஜன மூர்த்தியாக அம்பிகை அகிலாண்டேஸ்வரியுடன் எழுந்தருளியிருக்கும் திருத்தலம்தான் பெரியகுடையூர் என்னும் பெரியகுருவாடி திருத்தலம்.

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் - மன்னார்குடி சாலையில் திருவாரூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலுள்ளது பெரியகுருவாடி.

முற்காலத்தில் இந்தத் தலத்துக்கு வந்த அகத்தியர், ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதன் காரணமாகவே இறைவனுக்கு அகத்தீஸ்வரர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது. அம்பிகையின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி.

பிற்காலத்தில் சோழ மன்னரான வீர ராஜேந்திர சோழனின் உடன்கூட்ட அதிகாரியாக இருந்த அரங்கன் திருச்சிற்றம்பலமுடையான், தான் பிறந்த ஊரான பெரிய குருவாடியில், அகத்தியர் வழிபட்ட இறைவனுக்கு கற்றளியாக ஓர் ஆலயம் அமைத்து வழிபட்டார். அவர் வேளாளர் மரபில் பிறந்தவர் என்பதால், உலகம் செழிக்கத் தம் திருமுடியில் இருந்து கங்கையைப் பூமியில் விடுவித்த சிவபெருமானின் ‘கங்கா விசர்ஜன’ திருவுருவத்தையும் அகத்தியர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத் திருமேனிக்குப் பின்புறம் பிரதிஷ்டை செய்திருக்கிறார். மேலும், காவிரியைத் தம் கமண்டலத்தில் இருந்து விடுவித்த அகத்தியரைப் போற்றும் வகையில் கோயிலுக்கு `அகத்தீஸ்வரம்’ என்னும் பெயரையும் சூட்டினார்.

காலப்போக்கில் முற்றிலும் சிதிலமடைந்துவிட்ட ஆலயத்தை, சில வருடத்துக்கு முன்புதான் ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தினர்.

ஒரு காலத்தில் மிக பிரமாண்டமாக அமைந்திருந்த ஆலயம் இன்று சிறிய அளவில் எளிமையாகக் காணப்பட்டாலும், பரிபூரண சாந்நித்யத்துடன் திகழ்கிறது. ஆலயத்தின் கருவறையில் சதுர வடிவ ஆவுடையார்மீது லிங்கத் திருமேனியராகத் திருக்காட்சி தருகிறார் ஐயன் அகத்தீஸ்வரர். சிவலிங்க மூர்த்தத்துக்குப் பின்னால், கங்கையைத் தன் கைவிரல்களால் பூமியில் விடும் திருக்கோலத்தில் ஐயனும், ஊடல் தணிந்த நிலையில் அம்பிகையும் திருக்காட்சி தருகின்றனர். அன்னை அகிலாண்டேஸ்வரி தனிச் சந்நிதியில் எழிலுடன் திருக்காட்சி அருள்கிறாள்.

மாங்கல்ய வரம்தரும் அகத்தீஸ்வரரும் அகிலாண்டேஸ்வரியும்

கருவறையில் ஐயனும் அம்பிகையும் காட்சி தருவதால், இந்தத் தலம் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

ஆலயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் வெங்கட்ராமனிடம் திருமணத் தடை நீங்க செய்யவேண்டிய பரிகாரம் குறித்துக் கேட்டோம்.

‘`பல காரணங்களால் திருமணம் தடைப்பட்டு வருந்துபவர்கள், வளர்பிறை பஞ்சமி நாளில் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், தடை நீங்கி நல்ல வாழ்க்கைத் துணை அமையும் என்பது ஐதீகம். இரண்டு மாலைகளை வாங்கிக்கொண்டு வர வேண்டும். மாலைகளின் இரண்டு முனைகளையும் இணைக்காமல், சுவாமிக்கு  ஒரு மாலையையும், அம்பாளுக்கு ஒரு மாலையையும் அணிவித்து அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு ஆணாக இருந்தால் அம்பாளுக்கு அணிவிக்கப்பட்ட மாலையையும், பெண்ணாக இருந்தால் சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட மாலையையும் பெற்றுக்கொண்டு சென்று வீட்டுப் பூஜையறையில் வைத்துவிட வேண்டும். திருமணம் நடைபெற்ற பிறகு, தம்பதி சமேதராக கோயிலுக்கு வர வேண்டும். அப்போதும் இரண்டு மாலைகளை வாங்கி வர வேண்டும். அப்போது, முன்போல் இல்லாமல், இரண்டு மாலைகளின் நுனிகளையும் இணைத்து சுவாமிக்கும் அம்பாளுக்குச் சாத்தி, அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்’’ என்றவர் தொடர்ந்து,

‘`ஈசனுடன் அம்பிகை கொண்ட ஊடல் தணிந்த தலம் என்பதால், கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்திருக்கும் தம்பதி, இந்தக் கோயிலுக்கு வந்து 27 நெய் தீபங்கள் ஏற்றி, அர்ச்சனை செய்து வேண்டிக்கொண்டால், மறுபடியும் ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம். தன்  முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய விரும்பிய பகீரதனுக்கு அருளிய ‘கங்கா விசர்ஜன மூர்த்தி’ இங்கே உள்ளதால், இங்கு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால், பித்ரு தோஷங்கள் நீங்கிவிடுவதாகவும் ஐதீகம். மேலும், திருப்பாற்கடலில் தோன்றிய ஜேஷ்டா தேவி இந்தக் கோயிலில் மகன் விருஷபன், மகள் நமனையுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். நோய்களால் அவதிப்படுபவர்கள் ஜேஷ்டா தேவியை வழிபட்டால், நோய்கள் நீங்கி ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது’’ என்றார்.

எங்கிருக்கிறது... எப்படிச் செல்வது?

திருவாரூர் - மன்னார்குடி சாலையில் திருவாரூரில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள லெட்சுமாங்குடி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள பெரிய குருவாடிக்கு மினி பஸ் மூலம் செல்லலாம்.

- எஸ்.கண்ணன் கோபாலன்

 படம்: க.சதீஷ்குமார்