ஜோதிடம்
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 14

ரங்க ராஜ்ஜியம் - 14
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 14

இந்திரா சௌந்தர்ராஜன் - படம்: என்.ஜி.மணிகண்டன்

‘மரவடியை தம்பிக்கு வான் பணயம்
வைத்துப் போய் வானோர் வாழ
செருவுடைய திசைக்கருமம் திருத்திவந்
துலகாண்ட திருமால் கோயில்,
திருவடிகன் திருஉருவும் திருமங்கை
மலர்க் கண்ணும் காட்டி நின்று,
உருவுடைய மலர் நீலம் காற்றாட்ட
ஓசலிக்கு மொளிய ரங்கமே!

- பெரியாழ்வார் திருமொழி

கிளிச் சோழனால் மீட்சி பெற்ற திருவரங்கம், ஜனக்கூட்டத்தால் சூழப்பெற்று அன்றாட ஆராதனைகளால் வழிபாடு கண்டு வழிப்பாடும் தொடங்கிற்று. கிளிச்சோழன் அனுதினமும் ஆலயத்துக்குச் சென்றான். அவனோடு அடியார்களும் பொதுமக்களும் சென்றனர்.

 இப்படி ஆலயத்துக்குச் செல்கையில், உடன் வந்த அடியார்களிடமும், நீலிவனத்து ரிஷிகள் மூலமாகவும் பல அரிய செய்திகளை கேட்டு அறிந்தான். அதில் பிரதானமானது, எம்பெருமானின் அவதாரங்களில் இது மூன்றாவது அவதாரம் எனும் செய்தியே! எம்பெருமான் இந்த உலகை நிலைநிறுத்தும் பொருட்டு முதலாக எடுத்தது மத்சாவதாரம், அடுத்தது கூர்மம்!

ரங்க ராஜ்ஜியம் - 14

மூன்றாவது இன்றுள்ள உலகோர் கணக்குப்படி வராகம். ஆனால் மூன்றாவது அவதாரமாய் பிரணவாகார விமானத்தில் அர்ச்சாரூபம் கொண்டு அவதாரமெடுத்தார். எனவே இந்த ஸ்ரீரங்கநாதனும் அவதாரமூர்த்தியே என்ற கருத்தை நீலிவனத்து ரிஷியானவர் கிளிச்சோழனுக்கு கூறிட, சோழனும் உற்சாகமாகி, ‘`முந்தைய இரு அவதாரங்கள் எதற்கு என்பதை எனக்கு விளக்கவும். அப்படியே மற்ற அவதாரங்களையும் அறிய துடிக்கிறேன்” என்றான். நீலிவனத்து ரிஷியும் உற்சாகத்துடன் கூறத் தொடங்கினார்.

“சோழமன்னா! உலகைப் படைத்து அதில் உயிர்களைப் படைத்தால் ஆயிற்றா? அந்த உயிர்கள் எப்படி வாழவேண்டும் என்பதைக் கூறுவதோடு, உலகில் பிறந்த உயிர்கள் திரும்பவும் அவரிடம் சென்று சேர பெரிதும் துணை செய்பவை வேதங்களே! வேதவழி நடப்பவருக்கு ஒரு குறைவும் வராது. அவர் ஞானியாகத் திகழ்ந்து தன்னைச் சார்ந்தவர்களையும் ஞானியாக்கி மகிழ்வார். எப்போதும் எந்த ஒரு விஷயத்துக்கும் எதிர்ப்பதமாய் ஒன்று இருப்பதே உலக இயற்கை. அந்த வகையில் வேதம் பெரிது என்று சொல்லும்போது, இல்லையில்லை அது கொடிது என்று சொல்லவும் சிலர் இருந்தனர். அவர்களே அசுரர்கள் எனப்பட்டனர்.

எப்படி வாழ வேண்டும் என்பதற்கு தேவம் ஓர் உதாரணம் எனில், எப்படியெல்லாம் வாழக் கூடாது என்பதற்கு அசுரம் ஓர் உதாரணம். இந்த அசுரர்களையும் எம்பெருமானே படைத்தார். தான் படைத்த அந்தத் தகாதவர்களோடு மோதவும் செய்து திருவிளையாடல்களும் புரிந்தார்.

அந்த வகையில் மனித வாழ்வை நெறிப்படுத்தும் வேதங்களை அசுரர்கள் அழிக்க முற்பட்டனர். அவற்றைத் தந்திரமாக பிரம்மாவிடமிருந்து கவர்ந்து சென்று கடலுக்கு அடியில் சோமுகாசுரன் தலைமையில் ஒளித்தும் வைத்தனர். அதன்பின் அந்த வேதங்களைக் கண்டறிய எவராலும் இயலவில்லை.

இந்த நிலையில், எம்பெருமானிடம் தேவர்கள் சரண் புகுந்தனர். எம்பெருமான் வேதங்களை மீட்கும் பொருட்டு எடுத்ததே மத்சாவதாரமாகும். மீன் அவதாரம் எடுத்து, கடலுக்குள் புகுந்து சோமுகாசுரன் எனும் அசுரனால் கவரப்பட்ட வேதங்களை அவனிடமிருந்து மீட்டெடுத்தது இவ்வேளையில்தான்.

பூ உலகில் அப்போது சத்தியவிரதன் என்பவன் அரசனாகத் திகழ்ந்தான். சப்தரிஷிகளும் அவனுக்கு வழிகாட்டிகளாக விளங்கினர். இவர்களே மூலிகைகள், பலவித தாவர வித்துக்களை சத்தியவிரதனுக்கு வழங்கிட, சத்தியவிரதன் அவற்றைக்கொண்டு மூலிகை வனங்களை உருவாக்கி மனிதர்கள் நோயின்றி வாழ வழி செய்தான்.

ரங்க ராஜ்ஜியம் - 14சோமுகாசுரனுடன் எம்பெருமான் மத்ஸாவதாரம் எடுத்து போரிட்ட நேரம், கடலானது பொங்கி நாடு நகரங்கள் அழியப் பார்த்தன. அவ்வாறு நேராதபடி சோமுகாசுரனைக் கொன்று பூ உலகைக் காப்பாற்றியது மத்சாவதாரமே. இதனாலேயே இன்று இந்த மண்ணில் வேதங்கள் உள்ளன. மூலிகைகள் மற்றும் பலவித தாவரங்களும் உள்ளன'' என்று மத்சாவதாரச் சிறப்பைக் கூறி முடிக்கவும் கிளிச் சோழன் பூரித்தான்.

“அற்புதம்... அடுத்து கூர்ம அவதாரச் சிறப்பையும் கூறுங்கள்” என்றான் கிளிச்சோழன்.

“கூறுகிறேன்... கூர்ம அவதாரம் எந்த வதையும் செய்யவில்லை. மாறாக இந்த உலகத்துக்கு அது பல அதியசங்களை அள்ளித் தந்தது...”

“அதிசயங்களா... என்ன அவை?”

“கூறுகிறேன்... மனிதர்களில் நல்லவர் கெட்டவர் போல், விண்ணுல கில் தேவர்கள் அசுரர்கள் திகழ்ந்தனர். இவர்களில் எப்போதும் அசுரர்கள் கையே ஓங்கி, தேவர்கள் அசுர சக்திக்கு அஞ்சி நடுங்கும் நிலை இருந்தது. இதனால் வருந்திய தேவர்கள், அசுரர்களுக்கு மேலான சக்தியோடு அழியா தன்மை கொண்டவர்களாகத் திகழ்ந்திட என்ன வழி என்று யோசித்து, எம்பெருமானிடம் பிரார்த்தித்தனர். அதன் பொருட்டு நிகழ்த்தப்பட்டதுதான் அமிர்தக் கடைசல்!”

ரிஷியானவர், ‘அமிர்தக் கடைசல்’ என்று பாதியில் நிறுத்தவும், கிளிச்சோழன் மேலும் உற்சாகமானான். ‘`மகரிஷியே... அமிர்தக் கடைசல் என்று ஒரு வார்த்தையில் கூறினால் எப்படி? விவரமாகக் கூறுங்கள்...” என்று கேட்டுக்கொண்டான்.

“நிச்சயமாக நானறிந்ததைக் கூறுகிறேன். அமிர்தக் கடைசல் நிகழ்வு என்பது, தேவாசுர வரலாற்றில் ஒரு மைல்கல் நிகழ்வு. எம்பெருமான் பள்ளிகொண்டிருக்கும் பாற்கடலை, மேரு மலையையே மத்தாகக் கொண்டு, வாசுகி எனும் பாம்பைக் கயிறாக்கி, மலையோடு போட்டு பிணைத்துக் கட்டி, ஒரு புறம் தேவர்களும் மறுபுறம் அசுரர்களும் தயிர் கடைவது போல் கடைந்த செயலே அமிர்தக் கடைசல் நிகழ்வாகும்.

ரங்க ராஜ்ஜியம் - 14

இவ்வாறு கடைவதன் மூலம் பாற்கடலானது அமிர்தத்தை உருவாக்கித் தரும். அதைப் பருகினால் அழியாப் பெருவாழ்வு வாழலாம். எனவேதான் இந்த நிகழ்வு நிகழ்த்தப்பட்டது. இது உண்மையில் அசுர சக்திகளுக்கு எதிரானது. ஆனால், இதில் அசுரர்களைத் தவிர்க்க முடியவில்லை. அவர்கள் சக்தியும் பெரிதும் தேவைப்பட்டது. எனவேதான் அவர்கள் ஒருபுறமும், மறுபுறம் தேவர்களும் அமிர்தக் கடைசலில் பங்குகொண்டனர்.

இது ஒரு பிரமாண்ட நிகழ்வு. மனித மனத்தால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத நிகழ்வு. இந்த நிகழ்வில் மூலாதாரமாய் விளங்கியதே கூர்மாவதாரமாகும். முதலில் மேரு மலையை மத்தாக்கிக் கடைந்தபோது மலை சரிந்து விழுந்தது. அது நின்று இயங்கக் கடலுக்கு கீழே ஸ்திரமான நிலம் இல்லை. அதனால், இந்த அபூர்வ நிகழ்வுக்கு இனி வழியில்லை என்று எல்லோரும் எண்ணிய தருணம், எம்பெருமான் கூர்மம் எனும் ஆமை வடிவம் கொண்டு கடலுக்கு அடியில் படுத்து, தன் முதுகையே நிலப்பரப்பாக ஆக்கிட, அதன் மேல் மேருமலையும் ஸ்திரமாக நின்றது.

ஓர் உலக்கை போல் நின்ற அதனை வாசுகிப் பாம்பு வளைத்துப் பிடித்துக்கொள்ள அதன் தலைப் பகுதியில் தேவர்களும், வால் பாகத்தில் அசுரர்களும் நின்று தயிர் கடைவது போல் கடைந்தனர்.

இந்த நிகழ்வில் அகலபாரத்தையும் கூர்ம வடிவில் எம்பெருமான் தாங்கிக்கொள்ள, தொடக்கத்தில் வலி தாளாது வாசுகிப் பாம்பானது கதறியது. அப்போது, அதனிடமிருந்து ஆலகாலம் எனும் விஷம் பீறிட்டுக் கிளம்பியது. அதை முகர்ந்தாலே எல்லோரும் இறந்துவிடுவர் என்கிற நிலையில், பரமேஸ்வர மூர்த்தி தாமே முன்வந்து அந்த விஷத்தை எல்லாம் உறிஞ்சி, அது எங்கும் எதிலும் கலந்துவிடாதபடி தடுத்து, விழுங்க முற்பட்டார்.

அதைக் கண்ட அவரின் சரிபாதியான பார்வதி தேவி, அந்த விஷம் அவரது கழுத்தைக் கடந்து வயிற்றில் இறங்கி விடாதபடி தடுத்து நிறுத்தினார். இதனால் பரமேஸ்வர மூர்த்தி நீலகண்டர் எனும் புதியதொரு நாமம் பெற்றார்; அவர் நீலகண்டராகிய அந்த வேளை, ப்ரதோஷ வேளை என்றானது.

இதன் பின் வாசுகிப் பாம்பின் விஷம் தீர்ந்து அதன் வலியும் குறைந்த நிலையில் கடைசல் தொடர்ந்தது. அந்தக் கடைசலில் முதலில் காமதேனு எனும் பசு வெளிவந்தது. அடுத்து உச்சைசிரவஸ் எனும் சிறகுகள் கொண்ட வெண்குதிரை, அதனைத் தொடர்ந்து வெள்ளை யானை எனும் ஐராவதம், பின் பஞ்ச தருக்கள் எனப்படும் அரிசந்தன மரம், கற்பக மரம், பாரிஜாத மரம், சந்தன மரம், மந்தாரம் ஆகியவை தோன்றின. அடுத்து கெளஸ்துப மணி மாலை தோன்றியது. பின் ஜேஷ்டாதேவி எனும் மூதேவி தோன்றினாள். இவளைத் தொடர்ந்து 60 கோடி தேவலோகப் பெண்கள், மது, சுராதேவி, சிந்தாமணி என்று அதிசயமான அதுவரை உலகம் காணாதவை தோன்றியபடியே இருந்தன. பின் மகாலட்சுமி எனும் ஸ்ரீதேவி தோன்றினாள்.

ஸ்ரீதேவியைத் தொடர்ந்து சீந்தல் கொடி, அட்டைப்பூச்சி, அமிர்தகலசமுடன் கதாயுதம் சகிதம் இறுதியாக தன்வந்திரி தோன்றினார். தன்வந்திரி வசம் இருந்த அமிர்தக் கலசத்து அமிர்தம் அதன்பின் தேவர்கள் வசமானது. அதைத் திருடப் பார்த்த அசுரர்களுக்கு, பின்னர் அது மறுக்கப்பட்டது! இந்நிகழ்வால் ராகு கேது எனும் இரு சாயா கிரகங்களும் தோன்றினர்...”

நீலிவனத்து ரிஷி கூர்மாவாதரச் சிறப்பைக் கூற வந்த நிலையில், அது தொடர்பான அதிசயங்கள் அவ்வளவையும் பட்டியலிட்டு முடித்தவராய்,  ‘`இவ்வளவும் கிடைக்க முழுமுதற் காரணம் அடித்தளத்தில் அசராது நின்ற கூர்ம வடிவிலான எம்பெருமானின் பெருங்கருணையே” என்று முடித்தார். கிளிச்சோழன் பிரமிப்பில் ஆழ்ந்தான்!

``முதலில் சப்தப் பிரபஞ்சத்தை படைத்து,  அதன் ஆணிவேராக வேதங்களை உருவாக்கி, அதன்பின் பிரம்மனைப் படைத்து, அந்த பிரம்மன் மூலம் உலக உயிர்கள் அனைத்தையும் உருவாக்கி, வேதங்களை அசுரர்கள் ஒளித்த தருணம் அதை மத்சம் எனும் மீன் வடிவம் எடுத்து மீட்டார். பின்னர், அமிர்தக்கடைசல் நிகழ்வுக்குக் காரணமாகி கூர்மமாக நின்று மேரு மலையைத் தாங்கி, அதன் காரணமாய் காமதேனு தொடங்கி மகாலட்சுமி வரை பல அரியவை கிடைக்கவும் காரணமானார். இன்று இந்த உலகம் நாம் காணும் இவ்விதத்தில் திகழக் காரணமே எம்பெருமான்தான். விண்ணில் இந்த இரு அவதார நிமித்தம் செய்த செயல்கள் ஒருவிதம் என்றால், அதே விண்ணில் அதே அவதார நிமித்தம் எடுத்த இந்த அர்ச்சா சொரூபமும் இன்னொரு விதம். இதுவே மூன்றாம் அவதாரம்!

ஆனால் தோன்றி மறைகின்ற, குறித்த காலம் கொண்ட அந்த அவதாரங்களைப் போல் இன்றி, என்றும் அழியாமல் காலங்களை வென்று வாழ்வதே இந்த அரங்கநாத அர்ச்சா ரூபம். ஆகையால்தான், தோன்றி மறைந்துவிட்ட அந்த அலங்காரங்களின் வரிசையில் இந்த அர்ச்சா ரூப அவதாரம் இடம் பெறவில்லை.” என்று திருவரங்க நாதனிடம் வந்து நின்றார் அந்த மகரிஷி!

“அற்புதம் அற்புதம்! இந்த திருவரங்கப் பெருமானை அறியப் புகுந்ததால் முதலிரண்டு அவதாரச் சிறப்பையும் அறிந்தேன். மற்ற அவதாரச் சிறப்புகளோடு எம்பெருமானுக்கு உகந்த வழிபாட்டு முறைகளையும் அதன் கொள்கை கோட்பாட்டினையும் கூற இயலுமா மகரிஷி?’’ என்று கேட்ட கிளிச்சோழன் தொடர்ந்து அறியலானான்.

‘`சோழமன்னா! அவதாரம் என்றால் விண்ணில் இருந்து இந்த மண்ணுக்கு இறங்கி வருவதைக் குறிக்கின்ற செயலாகும். எப்போதெல்லாம் தர்மம் தடுமாறி அதர்மம் அதிகரிக்கிறதோ, அப்போதெல் லாம் அதைச் சீர்செய்ய, படைப்பாளன் எனும் முறையில் படைத்தவனே இறங்கி வருகின்ற நிகழ்வே அவதாரம்.

அந்த அவதாரங்களில் ஒன்பது அவதாரங்கள் நிகழ்ந்து முடிந்துவிட்டன. பத்தாவது அவதாரம் கல்கி எனும் பெயரில், வரும் நாள்களில் தர்மம் பெரிதும் நலியும்போது நிகழப் போவதாம்.

நிகழ்ந்த ஒன்பது அவதாரங்களில் முதல் இரண்டாகிய மத்சாவதாரம் மற்றும் கூர்மம் பற்றி நீ அறிந்துகொண்டாய். அடுத்தது வராகம்!

இரண்யாட்சகன் எனும் அசுரனை அழிப்பதற் காகப் பன்றி வடிவில் எடுத்த அவதாரமே வராக அவதாரம். அந்த அசுரன் பாதாள உலகில் போய் ஒளிந்துகொண்டதால், அவனை எவராலும் கண்டறிய இயலவில்லை அவனால் தேவர்கள் மிகவும் துன்புற்றனர். அவனை அழித்தாலன்றி தேவர்களைக் காக்க இயலாது எனும் நிலை வந்தபோது, பாதாளத்தில் ஒளிந்திருந்த அசுரனைக் கண்டறிய ஏதுவாக, எம்பெருமான் எடுத்த அவதாரமே வராக அவதாரமாகும். இதில் இரண்யாட்சகன் வதம் செய்யப்பட்டான்''  என்று ரிஷியானவர் கூறிமுடிக்கவும் கிளிச்சோழனுக்குள் ஒரு கேள்வி.

“மகரிஷியே எம்பெருமான் எல்லோரையும் பக்தி உடையவர்களாயும் சாந்தமான குணக் குன்றுகளாகவும் படைத்துவிட்டால், அவர் படைத்த ஒன்றை அவரே வந்து அழிக்கத் தேவை இல்லைதானே?”  என்ற அவனது அந்தக் கேள்வி ரிஷியைப்  புன்னகைக்கச் செய்தது.

“என் கேள்விக்கு புன்னகையா பதில்?”

“இந்தப் புன்னகைக்கு பல பொருள்கள் உள்ளன மன்னா. உனக்கு ஒரு சில வரிகளில் இதற்கொரு பதிலை நான் கூறிவிட முடியும். இந்த சோழ மண்டலத்துக்கே நீ ஒருவன்தான் அரசன். இங்கே எல்லோரையும் அரசனாகப் படைத்து விட்டால், யார் இந்த நாட்டை ஆள்வது? இதற்கு நீ சொல்லப்போகும் பதிலில்தான், எம்பெருமான் எல்லோரையும் மாறுபாடுகளோடு படைப்பதன் காரணத்துக்கான விடை உள்ளது.''

கிளிச்சோழன் பதில் சொல்ல ஆரம்பித்தான்.

- தொடரும்..
.

ரங்க ராஜ்ஜியம் - 14

மகா விஷ்ணு அமைத்த கூட்டணி!

அறிவில் சிறந்தவன் மனிதன்.
ஆற்றலில் சிறந்தது சிம்மம்.

இரணியனை அழிக்க அறிவு, ஆற்றல் இரண்டுமே அவசியம்.

எனவேதான், அறிவையும் ஆற்றலையும் இணைத்து நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை அழித்தார் மகாவிஷ்ணு.

ஒழிக்கப்படவேண்டிய ஒரு தீய சக்தியை வெல்ல, கூட்டணி அமைக்கவேண்டும் என்பதை முதலில் உணர்த்தியவரே மகாவிஷ்ணுதான்!

- வாரியார் சுவாமிகள்

ரங்க ராஜ்ஜியம் - 14

முள்வாய் விளங்க நின்ற பெருமாளே!

அருணகிரிநாதர் தமது திருப்புகழில் `முள்வாய் விளங்க நின்ற பெருமாளே' என்று போற்றிப் பாடியுள்ளார். அருணகிரியார் `முள்வாய்' என்று போற்றும் தலம் எது? திருப்புகழ் ஆராய்ச்சியாளர் தணிகைமணி அவர்கள் இதுகுறித்து `இடம் இன்னதென்று விளங்கவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், முருகவேள் முன்னின்று உணர்த்தினால் புலப்படாததும் உண்டோ?

வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் அருகே, கோணலம் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து சுமார் 5 கி.மீ சென்றால் முள்வாய் என்ற கிராமத்தை அடையலாம். இதனை `முள்வாய் பாளையம்' என்று கூறுகிறார்கள்.

இதுவே அருணகிரியார் போற்றிய தலம் என்கிறார்கள், முருகன் அடியார்கள்!