மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 13

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 13
பிரீமியம் ஸ்டோரி
News
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 13

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 13

ன்றளவும், தங்கள் வாழ்க்கை முறைகளையும் பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொள்ளாத பல்வேறு சமூகங்கள் நம் மத்தியில் இருக்கின்றன. நவீனத்தின் சிறு பிசிறுகள்கூட அவர்களின் பண்பாட்டிலோ, வாழ்க்கை முறையிலோ நுழைந்து மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. ஆதி ஆணிவேர் பட்டுப்போகாமல், புதுப்புதுக் கிளைகளாக படர்ந்து நிற்கின்றன.

பளியர்கள் பற்றி பெரிதாக நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது ஓர் ஆதி சமூகம். பழங் குடிகளிலேயே ஆதிப்பழங்குடி அது. இந்திய அரசு அங்கீகரித்திருக்கும் பழங்குடிகள் பட்டியலில் இதற்கும் இடமுண்டு. தமிழகத்தில், தேனி, பழநி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மலைப் பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக மிகச் சொற்ப எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள்.

பளியர்கள், வனத்தையே தேவதையாக வணங்கக்கூடியவர்கள். வாழக் குடில் தந்து, உண்ண உணவு தந்து தங்களைக் காத்து நிற்கும் வனத்துக்குச் சிறு பங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தீவிர அக்கறையுள்ள மனிதர்கள். தமிழ்தான் இவர்களின் தாய்மொழி. வனங்களில் கிடைக்கும் தேன், காய், கனிகளைச் சேகரித்து கீழ்நாட்டில் விற்பதே இவர்களின் வாழ்வாதாரம்.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 13

வனத்தின் ஒவ்வொரு திக்கிலும் ஒவ்வொரு தேவதை இருப்பதாக நம்புகிறார்கள் பளியர்கள். மந்திர சக்தி நிறைந்த தங்கள் மொழியாலான பாடல்கள் மூலம் அந்தத் தேவதைகளை தங்கள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வருகிறார்கள். வனத்தைக் கொண்டாடுவதுபோலவே, இசையையும் கொண்டாடுகிறார்கள்.

சத்தக்குழல், இவர்களின் தெய்விக இசைக் கருவி. அதிகம் முற்றியிராத மூங்கிலை வெட்டி வந்து தகுந்த பதத்தில் காயவைத்து, குறிப்பிட்ட கணக்கீட்டின்படி துளையிட்டு சத்தக்குழலைத் தயாரிக்கிறார்கள். ஒவ்வொரு தேவதைக்கும் ஒவ்வொருவிதமான குழலிசை உண்டு. குழலுடன் கூடவே, கொம்பு, மேளம், மத்தளம், தப்பு, தமுக்கு போன்ற இசைக்கருவிகளையும் வாசிக்கிறார்கள். குறிப்பிட்ட தேவதைக்கான குழலிசையை வாசிக்கும்போது, எவரோ ஒருவரின் உடலேறி அந்தத் தேவதை தன்னை அடையாளம் காட்டும்.

பளியர்களின் பிரதான தெய்வம் பளிச்சியம்மன். எல்லாக் குடியிருப்புகளுக்கும் மேலே, அடர் வனத்தில் தங்கள் தாய்க்கான கோயிலை கட்டியிருப்பார்கள் பளியர்கள். கோயிலென்றால், கனத்த மரங்களையும் புற்களையும் கொண்டு எழுப்பப்பட்ட குடில். பல பகுதிகளில் இந்தக் குடிலே இருக்காது. திறந்தவெளியில் அல்லது ஏதேனும் ஒரு மர நிழலில்தான் குடியிருப்பாள் பளிச்சி. பளியர்களைப் போலவே, பளியச்சியம்மனும் எளிமையானவள். செங்கல் வடிவிலோ, கருங்கல் வடிவிலோ, ஒரு கம்பத்தின் வடிவிலோ உறைந்திருக்கிறாள். சில இடங்களில் உருவம் வைத்தும் வழிபடுகிறார்கள்.

பளிச்சிக்கு ஒரு தொன்மக்கதையும் உண்டு.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 13அந்தக் கிராமத்திலேயே பளிச்சி அழகான பெண். அதில் பெற்றோருக்கு மட்டுமல்ல, அந்தச் சமூகத்துக்கே பெரும் பெருமை. உணவுக்கோ, வேறெந்தப் பணிகளுக்கோ வெளியில் அனுப்பாமல் வீட்டில் ராணி மாதிரி வைத்துப் பார்த்துக்கொண்டார்கள்.

பளிச்சியின் பெற்றோரும் கிராமத்தாரும் காலையில் வனத்துக்குச் சென்றார்களென்றால் மாலைதான் திரும்புவார் கள். தேனெடுத்தல், கிழங்கெடுத்தல், வேட்டையாடுதல் என அவர்களுக்கு ஏராளமான பணிகள் இருந்தன. அந்த நேரத்தில் பளிச்சி மட்டுமே வீட்டிலிருப்பாள்.

ஒருநாள்,  கீழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இளைஞன் தன் தொழில்நிமித்தம் வனத்துக்கு வந்தான். கடும் தாகம் ஏற்பட்டது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை எங்கும் சுனையோ, அருவியோ, ஊற்றோ தென்பட வில்லை. மிகவும் சோர்ந்துபோனான். ஒருவழியாக நடந்து பளியர்கள் வாழ்ந்த கிராமத்தை வந்தடைந்தான். எல்லா வீடுகளுமே அடைந்து கிடக்க, பளிச்சியின் வீடு மட்டும் திறந்திருந்தது. அந்த வீட்டின் முன்நின்று, “அம்மா கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்” என்று கேட்டான்.

வேற்று ஆண்மகனின் குரல் கேட்பதையறிந்து சற்று பயந்துபோனாள் பளிச்சி. ஆனாலும், தாகம் என்று ஒரு உயிர் தண்ணீர் கோரும்போது தராமல் இருப்பது அறமல்லவே... அதனால் ஒரு பானையில் நீரள்ளிச்சென்று அந்த இளைஞனுக்குக் கொடுத்தாள்.

தண்ணீரைக் குடித்தவன், அந்த ஊரைப்பற்றியும், மனிதர்களே இல்லாதது பற்றியும் பளிச்சியிடம் கேட்டான். அவனின் ஆண்மைத்திறனையும், கபடமற்ற பேச்சையும் பார்த்து சற்று பயம் தெளிந்தவளாக அவன் கேள்விகளுக்குப் பதில் சொன்னாள் பளிச்சி. அவள் பேசும் அழகை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த இளைஞன். அந்த நொடியே பளிச்சியின் மீது காதல் மலர்ந்தது. அவளுக்குள்ளும் காதலின் நிழல் படர்ந்தது. அந்த இளைஞனின் கண்ணியமும், கனிவும் பிடித்திருந்தன. அவனோடு உரையாடுவது பிடித்திருந்தது. இருவரும் நேரம் போனது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 13

இறுதியில் அவன் கேட்டான்... 

“பளிச்சி... நான் கண்ட பெண்களில் பேரழகும் பெருமறிவும் கொண்டவள் நீ... என்னை மணம் செய்துகொள்கிறாயா..?”

பளிச்சியின் முகம் வெட்கத்தால் சிவந்தது. தன்னையறியாமல் இசைவறிவித்தது அவள் முகம்.

“சரி... நான் வரும்வரை காத்திரு... என் பெற்றோரிடம் பேசி அனுமதி பெற்று, அவர்களை யும் அழைத்துக்கொண்டு உன்னைக் காண வருகிறேன். முறைப்படி திருமணம் செய்து கொள்வோம்” என்று கூறிவிட்டு விடைபெற்றான்.

அவன் நகர்ந்த நொடியில், வாழ்க்கையில் அதுவரை பூத்திருந்த வெளிச்சம் திடீரென மறைந்ததைப் போன்று உணர்ந்தாள் பளிச்சி. அவள் முகத்தில் பசலை படர்ந்தது. அவள் நிலை பெற்றோருக்கு பெரும் கவலையைத் தந்தது. ஊரே அவள் மாற்றத்தைக் கண்டு மனம் வருந்தியது.

பளிச்சியின் உள்ளம் கவர்ந்த அந்த இளைஞன், பெற்றோரிடம் தன் காதலைச் சொல்ல, ‘ஒரு பழங் குடிப் பெண்ணை தன் மகன் மணம் முடிப்பதா’ என்று வெகுண்டெழுத்தார்கள் அவர்கள். அவன் வாதம் எடுபடவில்லை. பெற்றோரும் உறவினர்களும் சேர்ந்து அவனை ஓர் அறைக்குள் போட்டு அடைத்துவைத்தார்கள்.

பளிச்சி காத்திருந்தாள். நாள்கள் வாரங்களாகின... வாரங்கள் மாதங்களாகின... அவன் வரவில்லை. அவனுக்கு ஏதோ நேர்ந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டாள். இனியும் காத்திருப்பது சரியல்ல என்று தீர்மானித்தாள். ஒருநாள் இரவு, வீட்டைவிட்டுக் கிளம்பினாள். அந்த இளைஞன் தடம் பார்த்து, அவன் சொன்ன செய்திகளை வைத்து அவன் வந்த பாதையில் நடக்கத் தொடங் கினாள். பலநாள் நடந்தாள். அவன் ஊரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில், ஓர் உயர்ந்த மலைமீது ஏறி, நின்றுகொண்டாள். அங்கிருந்து சுற்றிச்சுற்றி எங்கேனும் அவன் தென்படமாட்டானா என்று ஏக்கத்தோடு தேட ஆரம்பித்தாள். எத்திசையிலும் அவன் வாசனைத் தென்படவில்லை. நின்றாள்... நின்றாள்... நின்றாள்... பகல் இரவானது. இரவு பகலானது... நிலவு மலர்ந்து பெளர்ணமியானது. மறைந்து அமாவாசையானது. சிறிது சிறிதாக அவளது உடலில் இருந்து உயிர் பிரிந்தது. காலத்தின் வேகத்தில் அவள் உடல் கல்லாகிப்போனது.

பளிச்சியைக் காணாது தவித்த பளியர்கள் காடு, மலை என எல்லா இடங்களிலும் தேடி அலைந்தார்கள். இறுதியில் மலையுச்சியில் கல்லாகி நின்ற பளிச்சியைப் பார்த்துத் துடித்தார்கள். ‘இவள், இயல்பான பெண்ணல்ல, தங்களை காக்க வந்த தெய்வம்’ என்று அன்றைய நாள் முதல் அவளை வழிபட ஆரம்பித்தார்கள். பளிச்சியை தங்கள் குலக்கொழுந்தாகவே இன்றுவரை கொண்டாடுகிறார்கள் பளியர்கள். திருமணம், குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவது, விதை விதைப்பது, தேனெடுக்கச் செல்லும் திசையைத்  தீர்மானிப்பது... என எல்லாவற்றுக்கும் அவளைக் கேட்டுத்தான் முடிவெடுக்கிறார்கள்.

தலைமுறை தலைமுறையாக பளியர்களின் தலைமகளாக விளக்கும் பளிச்சி அவர்கள் குடியிருக்கும் குன்றுகள்தோறும் குடியிருந்து அவர்களை வழிநடத்துகிறாள்!

-மண் மணக்கும்...

- வெ.நீலகண்டன், படங்கள்: சக்தி அருணகிரி

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 13

`கடவுள் எங்கே இருக்கிறார்?'

குருநாதர் ஒருவரைச் சந்தித்த அன்பன் ஒருவன், ``கடவுள் உண்டு என்பதில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?'' என்று அவரிடம் கேட்டான்.

``முதலில் உட்கார். பிறகு பேசலாம்'' என்றார் குரு. அவன் அவருக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

அவனிடம் குரு சொன்னார்: ``முதலில், நீ எனது கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். பிறகுதான் உனது கேள்விக்கு நான் பதில் சொல்வேன்''

வந்தவன் ஒப்புக் கொண்டான். குரு கேட்டார்: ``நீ அமர்ந்திருக்கும் நாற்காலி உனக்கு இடது பக்கம் உள்ளதா, வலது பக்கம் உள்ளதா?''

``என்ன கேள்வி இது? நாற்காலியின் நடுவில் நான் உட்கார்ந்திருக்கிறேன்'' என்றான் அவன். இப்போது குருநாதர் சொன்னார்...

``கடவுள் தன்மை நிரம்பிய இந்த உலகத்தில் இருந்து கொண்டே, நாம் கடவுளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுவது ஏன்?''

- ஆர்.சி.சம்பத்