
அன்னை தந்த பிள்ளை வரம்!
தாய்மை அடையும் போதுதான் ஒரு பெண் முழுமையடைகிறாள் என்பார்கள். திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன பிறகும் நான் தாய்மைப் பேற்றை அடையாமல் பட்ட அவஸ்தைகள், எழுத்தில் வடிக்க முடியாதவை.
என் புகுந்த வீடு எனக்கு ஆதரவாக இருந்தபோதும், சொல்ல முடியாத துன்பத்தில் ஒவ்வொரு நாளும் கலங்கி வந்தேன். போகாத மருத்துவமனைகள் இல்லை. லட்ச லட்சமாகச் செலவு செய்தும் பலனேதுமில்லை. ஆண்டுகள் செல்ல செல்ல, `இனி குழந்தைப் பாக்கியமே எனக்கு இல்லையோ' என்ற பயம் வர ஆரம்பித்தது.
சுற்றியுள்ளவர்கள், ஆளாளுக்கு அறிவுரை சொன்னார்கள். எதுவும் பலனளிக்காத நிலை.
ஒரு கட்டத்தில், ‘எனக்கு ஒரு மழலை மட்டும் கிடைத் தால் போதும்; அதன் பிறகு என் உயிரைக்கூட எடுத்துக் கொள்ளுங்கள்' என்று எல்லா கடவுள்களிடமும் வேண்டிக் கொள்ள ஆரம்பித்தேன்.
என் கணவரோ, `‘விட்டுவிடு சிவகாமி, குழந்தை பாக்கியம் நமக்கு இல்லை என்பது விதியானால், அப்படியே இருந்துவிடுவோம்'’ என்றார்.

அதற்கு என் மனம் ஒப்ப வில்லை. விதியை மாற்றும் வல்லமை என் மகமாயிக்கு உண்டு என்று நம்பினேன். மழலை வரம் கொடுக்கும் வரை அவளை நிம்மதியாக இருக்க விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அழுது தீர்த்தேன். என் வேண்டுதலுக்கு செவிசாய்க்க வேண்டுமென்று தொடர்ந்து அவளைப் பூஜித்து வந்தேன்.
அம்மன் நினைவாகவே இருந்ததாலோ என்னவோ, ஒரு நாள் என் கனவில் சர்வ அலங்கார பூஷிதையாக அம்பாளின் காட்சி! அபயகரம் நீட்டி என்னை ஆசிர்வதிக்கிறாள். வந்தது எந்தத் தேவி என்று தெரியவில்லை. நீண்ட காதணிகள் மட்டும் என் நினைவிலிருந்தன. எங்குச் சென்று அவளை வழிபடுவது என்று தெரியவில்லை. ஆனால், அடிக்கடி என் கனவில் வந்து அபயம் அளித்தாள்.
இந்நிலையில், யதேச்சையாக குடும்பத்துடன் திருவானைக்காவல் கோயிலுக்குச் சென்றேன். அங்கு அகிலாண்டேஸ்வரியை தரிசித்த கணம், மெய்சிலிர்த்தது.
‘இவளேதான்... என்னைக் கனவில் வந்து ஆட்கொண்ட வள் இவளேதான்' என்று மனம் உணர்த்த, அவளின் பாதக் கமலங் களை மனதாரப் பற்றிக்கொண்டேன்.

‘`தாயே! என் நிலைமை நீ அறியாததா. உன்னை விட்டால் வேறு கதியில்லை. எனக்காக இல்லாவிட்டாலும் என் குலம் விளங்க, என் கணவரின் ஏக்கம் தீர, ஒரு மழலையை எனக்குத் தரக் கூடாதா?’ என்று கண்ணீர் மல்க பிரார்த்தித்துவிட்டு வந்தேன்.
கோயிலுக்குச் சென்று வந்த அடுத்த சில நாள்களில் சூல்கொண்டேன். ஆம்! அம்மன் கண் மலர்ந்தாள்; என் குலம் தழைத்தது. இப்போது என் மகனுக்கு 4 வயது. அவன் அகிலாண்டேஸ்வரி எனக்கு அளித்த அருள்பிரசாதம் என்றே எண்ணுகிறேன்.
தண்ணீர் இருந்தால் பயிர் பிழைக்கும்; தாயே உன் தண்ணருள் கிடைததால் அல்லவா என் உயிர் பிழைத்தது. அகிலாண்டேஸ்வரி தாயே, சரணம் உன் தாளே!
- இ. சிவகாமி,
சென்னை - 41
அன்பார்ந்த வாசகர்களே!
இறையருளால் உங்கள் வாழ்வில் நிகழ்ந்த சிலிர்ப்பான அனுபவங்களை நீங்களும் எழுதியனுப்புங்கள். கடிதம் மூலமோ, கீழ்க்காணும் வாட்ஸப் எண்ணுக்கு, குரல் பதிவாகவோ உங்களின் இறையனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.
தேர்வு செய்யப்படும் சிறப்பான அனுபவங்கள், சக்தி விகடன் இதழில் இடம்பெறுவதுடன், அவற்றுக்குச் சிறப்புப் பரிசும் காத்திருக்கிறது.
கட்டுரையைத் தேர்வு செய்வதில் ஆசிரியரின் முடிவே இறுதியானது.
அனுப்பவேண்டிய முகவரி:
`வாசகர் இறை அனுபவம்',
சக்தி விகடன்,
757, அண்ணாசாலை,
சென்னை- 600 002
Mail Id: sakthi@vikatan.com
WhatsApp: 89390 30246