Published:Updated:

`மங்கள வாத்தியம் முழங்கத்துடன் சொர்க்க வாசல் திறப்பு!’- வேலூரில் குவிந்த பக்தர்கள்

`மங்கள வாத்தியம் முழங்கத்துடன் சொர்க்க வாசல் திறப்பு!’- வேலூரில் குவிந்த பக்தர்கள்
`மங்கள வாத்தியம் முழங்கத்துடன் சொர்க்க வாசல் திறப்பு!’- வேலூரில் குவிந்த பக்தர்கள்

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவ விழாவையொட்டி இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆற்காடு, காவேரிப்பாக்கம், சோளிங்கர், பனப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் திருப்பாற்கடல் கோயிலுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

வேலூர் அடுத்த பள்ளிகொண்டா அரங்கநாயகி உடனுறை உத்திர ரங்கநாதர் கோயிலில் நேற்று மாலை மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று அதிகாலை உற்சவருக்குப் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ராணிப்பேட்டை சிப்காட் திருவள்ளுவர் நகரில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோயிலில் மங்கள வாத்தியம் முழங்கத் திருப்பள்ளி எழுச்சியுடன் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

இதேபோல் வேலூர் வேலப்பாடி வரதராஜ பெருமாள் கோயில், ஆற்காடு வரதராஜ பெருமாள் கோயில், சேரி ஐயம்பேட்டையில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சேரி பரமபதநாதர் கோயில், காட்பாடி ரோடு விஷ்ணு துர்க்கையம்மன் கோயில், அரசமரப்பேட்டை லட்சுமி நாராயண பெருமாள் கோயில், கலாஸ்பாளையம் கோதண்டராமசுவாமி கோயில், தொரப்பாடி வெங்கட்ரமண சுவாமி கோயில், ரங்காபுரம் கோதண்டராம சுவாமி கோயில், காட்பாடி கோபாலபுரம் வெங்கடாஜலபதி கோயில், குடியாத்தம் வரதராஜ பெருமாள் கோயில், தாட்டிமானபல்லி பெருமாள் கோயில், மீனூர் மலை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில், சோளிங்கர் நரசிம்மர் கோயில், சிங்கிரி கோயில் லட்சுமி நரசிம்மர், நரசிங்கபுரம் யோக நரசிம்மர் கோயில், ஒடுகத்தூர் அகரம் கஜேந்திரவரதராஜ பெருமாள் கோயில், அணைக்கட்டு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில், ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோயில், பள்ளிகொண்டா அகரம்கில்லா சீனிவாச பெருமாள் கோயில் உட்பட மாவட்டம் முழுவதிலும் இருக்கிற பல்வேறு கோயில்களில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

இதேபோல் வேலூரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான கோயிலில் சுவாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.