சுந்தரபுரிப் பகுதியின் (காங்கேயத்துக்கு அருகில் உள்ளது) வேட்டுவ இளவரசன் சிவபாலன் வேட்டைக்குக் கிளம்பினான். தற்போதைய ஊதி மலைக்காட்டில் (அப்போது கந்தமலை) வேட்டைகளை முடித்துக்கொண்டு மலை உச்சியில் இருந்த சுனை அருகே ஓய்வெடுத்துக்கொண்டான். தனது உடைவாளில் உறைந்திருந்த ரத்தத்தைச் சுனை நீரில் தேய்த்துக் கழுவினான். அந்த நீரானது ஓடி, கொல்லப்பட்டுக் கிடந்த விலங்குகள்மீது பட்டது. அவ்வளவுதான். உயிரிழந்து கிடந்த மான்களும் முயல்களும் உயிர்பெற்று எழுந்து ``வாழ்க சிவன்; வாழ்க சித்தன்; வாழ்க வாழ்கவே’’ என்று வணங்கி விரைந்தோடின. இளவரசன் விழித்தான், `சிவன் சரி; யார் அந்தச் சித்தன்' என்று குழம்பினான். கூட வந்த படையினரை நாட்டுக்கு அனுப்பிவிட்டு, அந்தச் சித்தனைக் கண்டறியக் காடெங்கும் சுற்றினான்.

அன்று நள்ளிரவில் சிவபாலனுக்குக் காட்சியளித்த போகமகரிஷி அவனை வாழ்த்தினார். `நீயே அந்தச் சித்தன் என்றும், உனக்கான பெயரை ஒரு பெண்மணி விரைவில் கூறுவார்' என்றும் உரைத்தார். போகர் கூறியவாறு பல ஆண்டுகள் அந்த மலையில் ஒரு சந்திரகாந்தக் கல் தூணில் தவமிருந்தார் சிவபாலன். போகரின் ஆசியால் பல சித்துகளைக் கற்றுக்கொண்டார். போகரின் ஆலோசனைப்படி திருமாளிகைத்தேவரிடம் சென்று சமய தீட்சை, நிர்வாண தீட்சை பெற்றார். இந்திய தேசமெங்கும் வலம்வந்து மக்களைச் சந்தித்தார். அப்போது பெரும்பாலான மக்கள் ஏழ்மையால் வாடுவதைக் கண்டார். மனம் உருகினார். மீண்டும் ஊதிமலையில் சொர்ணாகர்ஷண பைரவரை நோக்கித் தவமிருந்தார். கடுமையான தவத்துக்குப் பலனாக, ஆவணி மாத கோகுலாஷ்டமி தினத்தில் பைரவர் காட்சியளித்து அவன் விரும்பியவாறு, `நினைத்தது, தொட்டது யாவும் தங்கமாகும்' என்ற வரத்தை அளித்தார். நாடெங்கும் சுற்றி வறியவர்களுக்குத் தங்கம் வழங்கிய பெருமிதத்தால் `தான் என்ற அகந்தை' கொண்டார்.

ஒருமுறை தம்மீது எச்சமிட்ட பறவையை சுட்டெரிக்கும் பார்வை பார்த்து பஸ்பமாக்கினார். கடும்பசியோடு வள்ளுவ நாயனார் வீட்டுக்குச் சென்ற சிவபாலன் பிட்சை கேட்டுக் குரல் எழுப்ப, வள்ளுவரின் தர்மபத்தினி வாசுகி அம்மையோ, தன் கணவருக்கான பணிவிடைகளை முடித்துக்கொண்டு வெகு நேரம் கழித்துவந்தார். சினத்தால் தம்மைச் சுட்டெரிக்குமாறு பார்த்த சிவபாலனை நோக்கி, ``கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா'' என்று பரிகசித்துக் கேள்வி எழுப்பினார். ஒருகணம் ஆடிப்போனார் சிவபாலன். ஆம், கொங்கு தேசத்தின் இளவலான சிவபாலன் கொங்கணவர் ஆனார். போகமகரிஷி கூறியபடியே வாசுகி அம்மையார் மூலம் கொங்கணவர் என்ற பெயர் பெற்றார் சிவபாலன்.

தமது பிழையை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டு, வாசுகி அம்மையார் பிட்சையிட்ட மண் பாத்திரத்தைப் பொன்னாக்கி அளித்தார். அந்தப் பாத்திரத்தை வாசுகி அம்மையார் வள்ளுவரிடம் காண்பிக்க, அவரோ சிரித்தபடி, தான் குடித்துவிட்டு வைத்திருந்த நீரை வெளியே இருந்த பாறைமீது ஊற்றினார். பாறை சொக்கத் தங்கமாக மின்னியது. இது கண்டு வியந்த கொங்கணவரை வள்ளுவர் கடிந்து கொண்டு, `உழைப்பால் வரும் செல்வமே நிலைக்கும்; தான் நினைத்தால் ஜகத்தையே தங்கமாக்க முடியும்' என்று புத்தி சொல்லி அனுப்பினார். மந்திர தந்திரங்கள் நிலையானது அல்ல என்று உணர்ந்த கொங்கணவர், இனி தங்கம் வரவழைக்கும் மந்திரத்தை உபயோகிப்பதில்லை என்று முடிவெடுத்தார். மீண்டும் ஊதி மலை சென்று கடும் தவமியற்றினார். 800 ஆண்டுகள் கழிந்தன.

நாடெங்கும் பஞ்சமும் பசியும் செழித்திருக்க, மக்கள் இளைத்திருந்தார்கள். கருணை மனம் கொண்ட கொங்கணவர் மீண்டும் தங்கத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இம்முறை அபூர்வ மூலிகைகளைக் கொண்டு சாதாரண உலோகங்களை ரசவாத முறையின்படி தங்கமாக்கினார். அப்போது அவருக்கு முன்பாகத் தோன்றிய போகர், தங்கத்தை உருவாக்கும் முயற்சியைக் கைவிடச் சொன்னார். எனினும் கொங்கணவர் தங்கத்தை உருவாக்கி மக்களுக்கு விநியோகித்தார். மண் குழாய்களைக் கொண்டு பொன்னை ஊதி ஊதி உருவாக்கியதால், அந்த மலை மக்களுக்குப் பொன்னூதி மாமலையானது. சித்தரால் தங்கம் கிடைக்கிறது என்பதால், எங்கும் குழப்பம் உண்டானது. கொலையும் கொள்ளையும் பெருகின. கொங்கணவச் சித்தரைச் சுற்றிலும் மக்கள் கூட்டம் மண்டியது. தான் செய்த தவற்றை உணர்ந்தார். ஊதி மலையை விட்டு விலகினார். கர்நாடகாவின் கொள்ளேகால் பகுதிக்குச் சென்று தங்கினார். மக்கள் கூட்டம் தொடர்ந்து வந்தது. குடகு மலைக்கு ஆகாய மார்க்கமாகச் சென்ற கொங்கணவர், அங்கு தங்கத்தை உருவாக்கும் ஓலைச்சுவடிகளை எரித்து பஸ்பமாக்கினார்.

மக்களின் அறியாமையால் மனம் வெறுத்த சித்தர், தஞ்சைக்குச் சென்று நந்திக்கு நடுவே நின்று சிவனை தரிசித்தார். அப்போது தனக்கு இடையூறாக வந்த சித்தனை கோபத்தோடு நோக்கியது நந்தி. `பாரெங்கும் 9 பல் கொண்ட நந்தி, இங்கு 11 பல் கொண்ட கோலத்தால் அல்லவா கோபிக்கிறது' என்று வெகுண்ட கொங்கணவர், அப்போது தோன்றிய ஜோதியை இன்னதென்று அறியாமல் தனது சடாமுடிக்குள் அடைத்துவிடுகிறார். ஜோதியாக எழுந்தது சிவன் என்று உணர்ந்த இந்திரன், புலி வேடத்தில் கொங்கணவரிடம் சண்டைக்கு வர, அவரையும் அடக்கி தனது காலுக்குக் கீழே அடக்கிக் கொள்கிறார் சித்தர். இறுதியில் சிவனே காட்சி தந்ததும் சினம் தணிந்து அமைதியாகிறார். இதனால் தஞ்சை மேலவீதியில் வீற்றிருக்கும் ஈசன் கொங்கணேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார். அங்கு கொங்கணவரும் இந்திரனை அடக்கிய கோலத்தில் மகிழ மரத்தடியே இன்றும் வீற்றிருக்கிறார்.

`போதும் இந்தப் பிறவி' என்று எண்ணிய கொங்கணவர், மீண்டும் ஊதி மலைக்குச் சென்று தவமியற்றினார். போகர் பழநியில் பிரஷ்டை செய்த நவபாஷாணச் சிலையைப்போல தானும் மூலிகைகளால் உருவாக்கிய உத்தண்ட வேலாயுத ஸ்வாமி சிலையை மலைக்கு இடையே நிறுவி வழிபட்டார். பல ஆண்டுகள் தொடர்ந்த வழிபாட்டின் பலனாக ஈசன் தோன்றி, `பொன்னை உருவாக்கிப் புகழ்கொண்ட சித்தனே, திருமலைக்குச் சென்று சமாதி நிலை கொள்' என்றார். அவ்வாறே வேங்கடவனின் காலின்கீழே ஐக்கியமாகி இன்றும் திருமாலின் ஆணைப்படி செல்வவளத்தை வருபவருக்கு வழங்குகிறார் கொங்கணவர்.

பொன்னுருக்கி, சித்துகளைச் செய்த கொங்கணவர் தவமியற்றிய சந்திரகாந்தக் கல்லில் தாமே சுயம்புவாக இன்றும் ஊதி மலையில் காட்சியளிக்கிறார். கொங்கணவர் தவமிருந்த கொங்கணவ குகை அபூர்வமானது. பிறப்பை அறுக்கக்கூடிய வல்லமை கொண்டது. உள்ளே நுழைந்தால் 50 பேர் தியானிக்கக் கூடிய இடம் உள்ளது. இந்தக் குகையிலிருந்து பழநி, அமராவதி ஆற்றங்கரையில் இருக்கும் அப்பரமேஸ்வரர் கோயிலுக்குச் செல்ல சுரங்கப்பாதை இருந்ததாம். தங்க வேட்டையாடிய மக்களின் தொல்லை தாளாமல் பின்னர் இந்தப் பாதை அழிக்கப்பட்டு விட்டது என்கிறார்கள். அதுமட்டுமா? கொங்கணவர் உருவாக்கிய உத்தண்ட வேலாயுத ஸ்வாமி சிலையே தங்கத்தால் ஆனது என்று நினைத்த சிலரால் முருகப்பெருமானின் திருப்பாதங்கள் பின்னப்படுத்தப்பட்டது. அது தங்கமில்லை என்று அறிந்ததும் அந்தச் சிலை காட்டுக்குள் வீசப்பட்டது. முருகன் சிலை பின்னமானதும் அந்த ஊரே பாழ்பட்டுப் போக, பிறகு சித்தரின் சீடர்கள் அறிவுரையால் மீண்டும் அதே சிலை பாதங்களை மறைக்கும் அளவுக்கு மண்ணால் புதைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால்கூட இந்த மலையில் சித்தரால் உபயோகிக்கப்பட்ட மண் குழல்கள், மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் பாழ்பட்டன. அதனால், சித்தர் உலாவிய அந்த இடங்கள் தற்போது வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. கொங்கணவர், போகர், கருவூரார் மட்டுமன்றி, கொங்கணவரின் சீடர்களான 108 சித்தர் பரம்பரை மகான்களும் உலவிய மலையிது. உலாவும் இடமிது என்கிறார்கள்.

மலை அடிவாரத்தில் விநாயகர் கோயிலில் இருந்து படிகள் தொடங்குகின்றன. வழியில் இடும்பன் சந்நிதி தாண்டி உத்தண்ட ஸ்வாமி கோயில் விஸ்தாரமாகக் காட்சியளிக்கிறது. கோயிலுக்கு இடது புறமாக மலைப்பாதையில் 3 கி.மீ பயணித்தால் கொங்கணவர் கோயிலை அடையலாம். மலைப்பாதை இடையே தம்பிரான் சமாதியைக் காணலாம். கடுமையான முட்செடிகள் நிறைந்த பாதையைக் கடந்து உச்சியை அடைந்தால் கொங்கணவர் கோயிலை அடையலாம். கருவறையில் அழகிய கம்பீர வடிவில் காட்சியளிக்கிறார். கோயிலிருந்து 200 மீட்டர் தொலைவில் கொங்கணவர் குகை உள்ளது. கோயிலுக்கு முன்னே இறந்துபோன விலங்குகளை எழுப்பிய `உயிர்ச்சுனை' உள்ளது.

பௌர்ணமி, தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை ஏகாதசி நாளில் இங்கு வந்து தரிசிக்கலாம். சித்திரை மாத உத்திராட நட்சத்திரத்தில் கொங்கணவரின் திரு அவதார விழா கொண்டாடப்படுகிறது. 108 மூலிகைகளை இடித்துக் காய்ச்சி, வடித்து ஒரு மூலிகை நீர் தயாரிக்கிறார்கள். அதைக் கொங்கணவருக்கு அபிஷேகித்து அந்த நீரை இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கிறார்கள். எல்லாவித நோய்களையும் தீர்க்கும் இந்த அபூர்வ நீர், இனிப்பு தவிர ஐந்து வகை ருசிகளையும் கொண்டிருக்கிறது. இது வேறெங்குமே கிடைக்காத அற்புத மருந்து என்கிறார்கள். முன்பு 246 மூலிகைகள் கொண்டு தயாரானதாகவும் தற்போது அவ்வளவு மூலிகைகள் கிடைப்பதில்லை என்றும் கோயில் நிர்வாகத்தினர் கூறுகிறார்கள். கொஞ்சம் பருகியதுமே எல்லாக் களைப்புகளும் நீங்கிவிடுகிறது. பச்சைப்பயிறு சாதமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மூலிகை நீரை வடித்தெடுத்த மூலிகைத் திப்பிகளே யாகசாலையில் எரிக்கப்பட்டுத் திருநீறாக வழங்கப்படுகிறது. இதுவும் அருமருந்து என பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு வருவதற்கே ஒரு கொடுப்பினை வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு மர்மங்களும், புராணக் கதைகளும், அதிசய இடங்களும் நிறைந்துள்ள மலையிது. பொன்னூதி மாமலையில் பௌர்ணமி இரவில் தங்கினால், பல அபூர்வ அனுபவங்களைப் பெறமுடியும் என்கிறார்கள் பக்தர்கள். முக்கியமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மனோகாரகனான சந்திரனின் ஆதிக்கம் பெற்ற பௌர்ணமியில் இங்கு வந்து கோயிலுக்கு வெளியே கிடைக்கும் சந்திரகாந்தக் கல்லின் மீது அமர்ந்தால், படிப்படியாக குணமாவார்கள் என்கிறார்கள். ஆனைமலை புலிகள் சரணாலயத்துக்குச் சொந்தமான காங்கேயம் வனச்சரகத்துக்கு உட்பட்ட இந்த ஊதி மலை மூலிகைகள் கொட்டிக்கிடக்கும் ஓர் அபூர்வ மலை. கொங்கண கிரி என்று சொல்லப்படும் இந்த மலையில் கோயில் கொண்டிருக்கும் முருகனை, அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

ஈரோடு அல்லது திருப்பூரிலிருந்து காங்கேயம் வந்தால், அங்கிருந்து 13 கி. மீ தொலைவில் பொன்னூதி என்னும் ஊதி மலை உள்ளது. மலையின் கீழே பழைமையான சிவன் கோயிலும் உள்ளது. பழநி 52 கி.மீ தொலைவிலும், வட்டமலை முத்துக்குமாரசுவாமி கோயில் 5 கி.மீ தொலைவிலும், சென்னிமலை 35 கி.மீ தொலைவிலும், சிவன்மலை 18 கி.மீ தொலைவிலும் எனச் சுற்றிலும் பல புண்ணியத் தலங்களை இங்கு வந்தால் தரிசிக்கலாம். சிவபாலனைக் கொங்கணவராக்கி, வெறும் மண்ணையும் கல்லையும் பொன்னுருவாக்கி மாயங்கள் பல செய்த இந்த ஊதி மலை இறையனுபவம் தேடும் அன்பர்களுக்கு மட்டுமல்ல, இயற்கையை விரும்பும் யாத்ரீகர்களுக்கும் இனிமையை அளிக்கக்கூடியது. கொங்குப் பகுதிக்குச் செல்பவர்கள் இங்கு சென்று பாருங்கள். ஒருவேளை சித்தர்களின் அண்மை உங்களுக்குச் சிலிர்ப்பான அனுபவத்தைத் தரலாம்.

- மு.ஹரி காமராஜ், படங்கள்: ம.நா.சுபாஸ்