Published:Updated:

420 டன் பெருமாள் சிலை பெங்களூர் செல்வதில் தடைகள் ஏன்?

420 டன் பெருமாள் சிலை பெங்களூர் செல்வதில் தடைகள் ஏன்?
420 டன் பெருமாள் சிலை பெங்களூர் செல்வதில் தடைகள் ஏன்?

பெருமாள் சிலை செய்வதற்காக வெட்டி எடுக்கப்பட்ட பாறையில் தற்போது ஒரு முகம், இரு கரம், ஒரு சங்கு, மற்றும் ஒரு சக்கரம் ஆகியன மட்டுமே வடிக்கப்பட்டுள்ளன.

டந்த இரு வாரங்களாகவே சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்படும் செய்தி பெங்களூருக்குக் கொண்டு செல்லப்படும் ஒரே கல்லால் ஆன 420 டன் எடை கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலைதான்.  

இதிகாசச் சிறப்புப் பெற்றது தனுஷ்கோடியில் உள்ள கோதண்ட ராமர் கோயில். அதே போல் ஒரு கோயிலை 60 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு ஈஜிபுரத்தில் கட்டியது ஒரு தனியார் நிறுவனம். இந்த ஆலயத்தின் உரிமையாளர் சதானந்தா. அவர் கல்லாலான பிரமாண்ட பெருமாள் சிலை ஒன்றைப் பெங்களூரு கோதண்ட சுவாமி ஆலயத்தில் நிறுவ விரும்பினார். அத்தகைய பிரமாண்டமான கல் ஒன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரியகொரக்கோட்டை என்னும் ஊரில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய மாநில அரசுகளின் அனுமதியோடு சிலை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டன.

தொடக்கத்தில், 108 அடி உயரத்தில் பீடத்துடன் சேர்ந்த ஆதிசேஷன் உள்ளிட்ட 11 முகம் மற்றும் 22 கைகள் கொண்ட விஸ்வரூப பெருமாள் சிலை வடிக்கவே  திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்கேற்ற பெரிய கல் கிடைக்காத காரணத்தால், ஆதிசேஷன் மற்றும் பெருமாள் சிலையைத் தனித் தனி சிலைகளாகச் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணியின் ஒரு பகுதி மட்டுமே தற்போது முடிந்துள்ளது. 

420 டன் பெருமாள் சிலை பெங்களூர் செல்வதில் தடைகள் ஏன்?

பெருமாள் சிலை செய்வதற்காக வெட்டி எடுக்கப்பட்ட பாறையில்  தற்போது  ஒரு முகம், இரு கரம், ஒரு சங்கு, மற்றும் ஒரு சக்கரம் ஆகியன  மட்டுமே வடிக்கப்பட்டுள்ளது.  இதுவே 64 அடி உயரமும், 24 அடி அகலமும் கொண்டு பிரமாண்ட வடிவில் 420 டன் எடையோடு அமைந்துள்ளது.

இந்தச் சிலையினை பெங்களூருக்கு எடுத்துச் செல்லும் முயற்சியைக் கோயில் தேவஸ்தானம் தொடங்கியது. மூன்று பெரிய வால்வோ வாகனங்கள் இணைத்து உருவாக்கப்பட்ட 170 சக்கரங்கள் கொண்ட கார்கோ வாகனத்தில் சிலை ஏற்றப்பட்டது. அப்போது, சிலையின் எடை தாங்காமல் வாகனத்தில் பத்துக்கும் மேற்பட்ட டயர்கள் ஒரே நேரத்தில் பயங்கரச் சத்தத்துடன் வெடித்தன. மீண்டும் கடந்த நவம்பர் மாதம் 250 டயர்கள் கொண்ட வாகனத்தில் சிலை ஏற்றப்பட்டது.

பாறை வெட்டி எடுக்கப்பட்டுள்ள மலைப்பகுதியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெள்ளார் சாலைக்கு வாகனம் வந்து சேர மொத்தம் 20 நாள்கள் ஆனது. அதன் பின் டிசம்பர் 12 -ம் தேதி வெள்ளிமேடை என்னும் பகுதிக்கு வாகனம் வந்து சேர்ந்தது. அங்குச் சாலையின் அகலம் குறைவாக இருந்ததால் தொடர்ந்து பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. வேறுவழியின்றி சாலையின் ஓரம் இருந்த மின்கம்பங்கள், 13 கடைகள் மற்றும் ஒரு வீடு ஆகியன இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வாறு இடித்து அகற்றப்பட்ட வீடு மற்றும் கடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

420 டன் பெருமாள் சிலை பெங்களூர் செல்வதில் தடைகள் ஏன்?

சாலை விரிவாக்கத்துக்குப் பின்பு தொடர்ந்த சிலையின் பயணம் ஆகூர் கிராமத்தை நெருங்கிய போது வாகனத்தின் ஒரு டயர் வெடித்ததன் காரணமாக மீண்டும் நிறுத்தப்பட்டது. டயரை மாற்றுவதற்கு வாகனம் நிறுத்தப்பட்ட போது வாகனத்தைக் கிராம மக்கள் சூழ்ந்து கொண்டனர். குங்குமம் மற்றும் மஞ்சள் நீரால் சிலையை அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கிவிட்டனர். 
சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் மக்கள், இந்த விஸ்வரூப பெருமாளை வழிபட அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர்.  அந்த இடத்தில் சிறு சிறு கடைகள் முளைத்துவிட்டதுடன், அந்த இடமே திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. மாணவர்கள் பலரும் பெருமாள் சிலையில் தங்கள் தேர்வு எண்ணையும், பெயரையும் எழுதத் தொடங்கிவிட்டனர். 

தற்போது வாகனம் தீவனூர் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளது. திண்டிவனம்-செஞ்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்ல மத்திய அரசின் அனுமதி இன்னும் பெறப்படவில்லை என்றும் இதன் காரணமாகத்தான் கடந்த 15 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை சிலை அதே இடத்தில் நிற்கிறது என்றும் கூறப்பட்டது. 

இது குறித்து கோதண்ட சுவாமி தேவஸ்தானத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவரிடம் கேட்டபோது, ``தற்போது இங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதற்குக் காரணம் மக்கள் அனைவரும் தரிசனம் பெற வேண்டும் என்பதற்காகத்தான். பெங்களூர் கொண்டு செல்வது தொடர்பான போக்குவரத்து குறித்த அனைத்து அனுமதிகளையும் மத்திய மாநில அரசுகளிடம் பெற்று விட்டோம். இன்னும் 20 தினங்களுக்குள்ளாகப் பெங்களூர் சென்று விடுவோம். செல்லும் வழியில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் மட்டுமே காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது" எனக் கூறினார்.

சிலை பெங்களூர் செல்ல இன்னும் இருபது நாள்கள் ஆகும் எனக் கூறப்படும் நிலையில் இன்னும் எத்தனை தடைகளை சந்திக்கப் போகிறது என்பதையும், உடனடிச் சிக்கலான தொண்டி ஆற்றின் பாலத்தைக் கடக்கும் முயற்சி வெற்றிபெறுமா என்பதையும் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு