ஜோதிடம்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 15

ரங்க ராஜ்ஜியம் - 15
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 15

இந்திரா சௌந்தர்ராஜன் - படம்: என்.ஜி.மணிகண்டன்

கங்கையிற் புனித மாய
காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும்
பூம்பொழிலரங்கந் தன்னுள்,
எங்கள்மா லிறைவ னீசன்
கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்கனம் மறந்து வாழ்கேன்
ஏழையே னேழை யனே!

- தொண்டரடிப் பொடியாழ்வார்

``எல்லோரையும் அரசனாகப் படைத்து விட்டால், யார் இந்த நாட்டை ஆள்வது? இதற்கு நீ சொல்லப்போகும் பதிலில்தான் எம்பெருமான் எல்லோரையும் மாறுபாடுகளோடு படைப்பதன் காரணத்துக்கான விடை உள்ளது’’ என்று நீலிவனத்து ரிஷி கூற, அதற்குக் கிளிச் சோழன் தெளிவாகப் பதில் சொன்னான்.

ரங்க ராஜ்ஜியம் - 15

“எல்லோரும் அரசன் என்றால், எவராலும் ஆள முடியாது. ஒரு நாட்டுக்கு ஓர் அரசனே இருக்க முடியும். அதேபோல் எல்லோரும் நல்லவர் எனும்போது வேறுபாடு, மாறுபாடு என்று ஏதும் இருக்காது. நான் இதை உணராமல் அவசரப்பட்டு கேட்டுவிட்டேன்.”

“உனக்குப் புரியவேண்டும் என்பதற்காகவே நானும் அவ்வாறு சொன்னேன். ஏற்ற இறக்கங்களும் வேற்றுமை வித்தியாசங்களும் நம் செயலாலேயே உருவாகின்றன. கருணை, அன்பு, பாசம் போன்ற உணர்வுகளே எல்லோருக்கும் பொதுவானவை. வீரம், செல்வம், கல்வி, ஞானம் போன்றவை அவரவர் பாடுகளுக்கேற்பவே இருக்கும். இதனாலேயே எல்லோரிடமும் அன்புகொண்டு கருணையோடு வாழும்படி உபதேசங்கள் கூறுகின்றன.

மற்றபடி, ஏற்றத்தாழ்வுகள் இருந்தே தீரும். அவற்றை, ஒருவரின் அப்போதைய நிலையாக மட்டுமே கருதவேண்டும். மாறாக, அந்த நிலையை  நிரந்தரமானதாக ஒருபோதும் கருதிவிடக் கூடாது.  அதேபோல், அந்தந்த நிலைகளுக்கேற்ப அன்பும், கருணையும், பாசமும் கொள்ளுதல் தவறாகும்.”

கிளிச்சோழன் புரிந்துகொண்டான். மகரிஷிக்கு நன்றி சொன்னான். அத்துடன், “தாங்கள் மேலும் உள்ள அவதாரச் சிறப்புகளையும் கூறுங்கள்” என வேண்டிக்கொண்டான். நீலிவனத்து ரிஷி, நரசிம்ம அவதார மகிமையைக் கூறத் தொடங்கினார்.

“தன்னையே பரப்பிரம்மமாக, எம்பெருமா னுக்கும் மேலானவனாகக் கருதிய இரண்யகசிபு எனும் அரக்கனுக்கு, அவன் மகன் மூலமே பாடம் நடத்தி, அவனை அவன் வரஸித்திக்கு ஏற்ப அழித்த மிக உக்ரமான அவதாரமே நரசிம்மம்!”

“இப்போதும் ஒரு கேள்வி...”

“தாராளமாகக் கேள்.”

“அசுரர்கள், எந்த அடிப்படையில் தங்களைப் படைத்த இறைவனைவிடவும் தங்களை மேலானவர்களாகக் கருதுகிறார்கள். எவ்வளவு பட்டாலும் திருந்தாமல், எந்தத் தைரியத்தில் திரும்பத் திரும்ப எதிர்க்கிறார்கள்?”

கிளிச்சோழனின் கேள்வியைச் செவிமடுத்து புன்னகைத்த நீலிவனத்து ரிஷி, பதில் சொல்லத் தொடங்கினார்.

‘`சோழ மன்னா! உனது கேள்விக்கான விடை மிக நுட்பமானது. என்னால் இயன்ற அளவு, உனக்குப் புரியும் விதமாகப் பதிலளிக்க முடியுமா என்று முயற்சி செய்கிறேன்.

எம்பெருமானின் திரு உள்ளக் கிடக்கையின்படி சகல ஜீவராசிகளையும் படைத்தவர் பிரம்மன். படைக்கும்போதே உயிர்களுக்கென்று ஓர் இலக்கணமும் தேவைப்படுகிறது. தாவரங்கள் என்றால் நீரும் ஒளியும், மிருகங்கள் என்றால் நீரோடு தாவரங்கள் மற்றும் மாமிசங்கள், பறவைகளுக்குப் புழு பூச்சிகள், மனிதனுக்கு ஆறுவித ருசி, ஏழு வர்ணம், எட்டுத் திசைகள், ஒன்பதுவித சக்தி என்ற கணக்கு... இதனடிப்படையிலேயே மனமும் குணமும் அமைகின்றன. அப்படி அமைந்த பிறகு,  அதனதன் தன்மைக்கேற்ப செயலாற்றுகின்றன.  இதில் எம்பெருமான் தலையிடுவதில்லை.

இதுபோலவே தேவர்களும் அசுரர்களும்! உலக மாயை, நல்லவர்களையும் கெட்டவர்களாக்க முயலும். அப்படியிருக்க, ரௌத்திர வழிமுறை களிலேயே வந்தவர்கள், தங்களின் அறிவைக் கடந்து சிந்திக்கமாட்டார்கள். அப்படிச் சிந்திக்கவும் அவர்களால் இயலாது. எனவே, அவர்கள் சுவரில்  எறிந்த பந்துபோல் மீண்டும் வருவார்கள்.”

ரங்க ராஜ்ஜியம் - 15

“அப்படியானால், அவர்களோடு மோதி அவர் களை அழிப்பதும் கட்டுப்படுத்துவதும்தான் அவதாரங்களின் நோக்கமா?''

“ஆம். அதன் மூலம் உலகத்தவர்க்கு பாடம் கிடைக்கச் செய்வதே இதன் அடிப்படையான விஷயம்.”

“மகரிஷியே! தங்களிடம் எம்பெருமான் குறித்து பேசப் பேச என்னுள் பரவசம் ஏற்படுகிறது. இந்தத் திருவரங்கக் கோயிலை புனருத்தாரணம் செய்ததை எண்ணி மிகவும் மகிழ்கிறேன். ஆயிரமாயிரம் ஆண்டுகள் இந்த ஆலயம் இந்த மண்ணில் அருள்பணியைத் தொடரவேண்டும் என்று விரும்புகிறேன்” என்ற கிளிச்சோழன், அவதாரம் மதிமையை தொடர்ந்து விளக்கும்படி வேண்டினான். அதை ஏற்றுக்கொண்ட நீலிவனத்து ரிஷி, அந்த மன்னனுக்கு ஓன்றை அறிவுறுத்தினார்.

``விளக்கமாக விவரிக்கிறேன் சோழனே. ஆனால், அதை நீ மட்டும் அறிந்தால் போதாது. இந்த ஆலயத்துக்கு வருபவர்களும் அறிவது நல்லது. அப்போது அவர்கள் உள்ளம் மேலும் நெகிழ்ந்து, எம்பெருமானிடம் அவர்கள் விரைவில் நெருங்கிட இயலும்.”

“அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?”

“இந்த ஆலயத்தில் பௌரானிகர்கள் உரை நிகழ்த்துவதற்கு ஏற்பாடு செய். அதற்கென பிரத்தியேக மண்டபமும்,  ஜனக் கூட்டம் அமர்ந்து கேட்டிட பெருவெளியும் இருக்குமாறும் செய்.”

“நல்ல ஆலோசனை...”

“பக்தியோடு பாதம் நோக நடந்து வருபவர்கள், தாக சாந்தி அடையும்விதம் தண்ணீர்ப்பந்தலும், அவர்கள் பசியாற அன்னக்கூடமும் உருவாக்கு.

அதேபோல், ஆலயத்துக்கென பிரத்தியேகமான நிர்வாக முறைகளை வகுத்து, வேதபண்டிதர்கள் அருகிலேயே இருக்கும்படியாக அவர்களுக்கு  குடில்களை அமைத்துக்கொடு.”

“நிச்சயமாகச் செய்கிறேன் மகரிஷி...”

“உன் ராஜ்ஜிய நிர்வாகத்துக்கும் இதற்கும் வேற்றுமைகள் உண்டு என்பதைப்  புரிந்துகொள். எம்பெருமான் முன்னிலையில் அரசனும் ஆண்டியும் ஒன்றே. இங்கே உயர்ந்தவன் தாழ்ந்தவன் கிடையாது.”

“புரிந்துகொண்டேன் மகரிஷி. அவ்வண்ணமே நான் செயல்படுவேன்.”

கிளிச்சோழன் அந்த நீலிவனத்து மகரிஷியின் கருத்துக்கேற்ப ஆலயத்தில் ஏற்றங்களையும் மாற்றங்களையும் செய்யத் தொடங்கினான். குறிப்பாக ஒரு கிளியால்தான் நம்பெருமானை உணர நேர்ந்தது என்பதால், ஒரு மண்டபத்தில் கூண்டுப்பந்தல் அமைத்து, அதில் கிளிகள் வந்து தங்கி இளைப்பாறவும், உண்டு களிக்கவும் ஏற்பாடு செய்தான்.

ரங்க ராஜ்ஜியம் - 15அந்த நொடிமுதல் `கிளி மண்டபம்' என்று அந்தப் பகுதி பேர் பெறலாயிற்று. மகரிஷியின் ஆக்ஞைப்படி கிளி மண்டபத்துக்கு நேர் எதிரில் அர்ஜுன மண்டபம் அமைந்திருக்க, அதையே பௌரானிகர்கள் புராணக் கதைகள் சொல்லும் இடமாக்கினான்.

கல் தூண்களில் தீப்பந்த வளையங்கள் அமைக்கப்பட்டன. அந்த வளையங்களோடு இணைந்திருக்கும் எண்ணெய்ச் சட்டிகளில் நாள்தோறும் எண்ணெய் நிரப்புபவன் செக்காளன் என்றும், அந்த எண்ணெயைக் கொண்டு தீப்பந்தங்களை எரிப்பவன் தீக்காளன் என்றும் அழைக்கப்பட்டார்கள். அவர்களுக்குத் தான்ய மான்யங்களும் வழங்கப்பட்டன.

விசேஷ நாள்களில் அர்ஜுன மண்டபத்தில் பௌரானிகர்கள் புராண முழக்கம் செய்தனர். அங்கே நிரந்தரமாக ஏடு தாங்கிகள், பாவை விளக்குகள் ஆகியவை வைக்கப்பட்டன. பௌராணிகர்கள் சிவிகைகளில் ஆலயத்துக்கு எழுந்தருளினார்கள். அவர்களுக்கு நிவந்த காணிக்கையாக அரங்கனின் பட்டு அளிக்கப் பட்டது. அதுபோக, பக்தர்கள் தங்கள் காணிக்கை பொருள்களைப் பொன்னாகவும் பொருளாகவும் பௌராணிகச் சேவர்களிடம் அளித்தனர்.

வைகுண்ட ஏகாதசியன்று இரவில் விடிய விடிய ஹரிகதா காலட்சேபங்கள் நடந்தன. அந்நிகழ்வில் கிளிச்சோழனும் பங்குகொண்டு திருவரங்கனின் ஐந்து நிலைகளை அறியப் பெற்றான்.

முதல் நிலை பரப்பிரம்ம நிலை. இந்த நிலையில் முதலும் முடிவுமான பரமாத்மா அவனே. அவனால் தோற்றுவிக்கப்பட்ட நாமெல்லோருமே ஜீவர்களாகிய ஜீவாத்மாக்கள்.

அந்தப் பரப்பிரம்மத்தை முழுமையாக நம் எவராலும் அறிய இயலாது. அப்பரப்பிரம்மமே மகாவிஷ்ணுவாகப் பாம்பணைமேல் பாற்கடலில் காட்சி தருகிறது. இது `வியூகம்' எனும் நிலை!

தேவர்களும் மானிடர்களும் பெரும் துயருக்கு ஆளாகும்போது, அவர்களின் துயர்துடைக்க எம்பெருமான் அவதாரமெடுத்து வருவார். இந்த நிலை `விபவம்' எனப்படும்.

இந்தப் பரப்பிரம்மனே ஈ, எறும்பு முதல் மானுடரான நம் ஹ்ருதயம் வரை சகலத்திலும் இருக்கிறார். அவர் இல்லாத இடம் இல்லை. இந்த நிலையே `அந்தர்யாமி' எனும் நிலை.

இந்த நான்கு நிலைகள் குறித்து நாம் எவ்வளவுதான் அறிந்துகொண்டாலும் நம்மால் கசடறப் புரிந்துகொள்ளவோ... அப்படிப் புரிந்து கொண்டு நெருக்கமாய் பக்தி செலுத்தவோ முடிவதில்லை. எனவே, நம் பொருட்டு, நம் அறியாமை மற்றும் பக்குவமற்ற நிலைக்கு ஏற்ப, அவர் அழகிய திருமேனி கொண்டு சிலா ரூபமாய் எழுந்தருளி காட்சி தருகிறார். இதுவே ஜந்தாம் நிலையான அர்ச்சை நிலை!

இப்படி அவர் அர்ச்சை நிலை கொண்டாலும், எல்லோராலும் அவரை அவரவர் இல்லங்களில் சிலா ரூபத்தில் வைத்து வணங்க முடிவதில்லை. பொருளாதாரத்தில் தொடங்கி இன்னும்பல காரணங்களால் நாம் நம்மையே பல தருணங்களில் மறந்துவிடுகிறோம். எனவேதான் எல்லோருக்கும் பொதுவாய் ஆலயங்கள் கட்டப்பட்டன. இங்கே நிகழ்த்தப்படும் வழிபாடு `பரார்த்தம்' எனப் பட்டது. வீட்டில் பிரத்யேகமாக செய்யும் வழிபாடு `ஆத்மார்த்தம்' என்றானது. இந்தப் பரார்த்த வழிபாட்டிலும் பல வழிமுறைகள் உருவாக்கப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டன.

ஆலய கோபுரம் என்பது ஒட்டுமொத்த ஆலயத்துக்குச் சமமான ஒன்று. எனவே அதைக் கண்ட மாத்திரத்தில் வழிபடுவது என்பது உயர்ந்த செயலாகும். இந்த தரிசனமே கோடிப் புண்ணியம் தரவல்லதாகவும் ஆனது.

அடுத்து கோயிலில் நுழையுமுகத்தில் பலிபீடம் அமைக்கப்பட்டிருக்கும். அங்கே, நாம் விழுந்து வணங்கி, நம் கீழ்மையான எண்ணங்களை பலி கொடுத்துவிட்டு மேன்மையான எண்ணத்தோடு உள்ளே செல்லவேண்டும்.

அடுத்து கொடிமரம்! இது விண்ணோடு தொடர்புகொண்டு மொத்த ஆலயத்துக்கும் சக்தியை ஸ்வீகரித்து அளிக்கவல்லது. இங்கேயும் வணங்கவேண்டும், பின் ஆலயத்திலுள்ள தெய்வத்தின் வாகனம். அந்த வாகனம் வணங்க வேண்டிய தெய்வத்தின் நினைவை விசிறிவிடும். அதோடு அப்படியே திருச்சந்நிதிக்குச் சென்றிட சந்நிதிக் கதவுகள் சாத்தப்பட்டிருக்கும். அங்கே எம்பெருமானின் தரிசனத்துக்காகக் காத்திருக்க சந்நிதிக் கதவுகள் திறக்கப்பட்டு கற்பூர ஆரத்தி காட்டப்படும்.

நம் ஜீவாத்மாவும் அந்த ஆரத்திச் சுடர் போல் ஒரு சுடரே! எம்பெருமானாகிய பரமாத்மாவும் ஒரு சுடரே!  இந்த இரண்டு சுடர்களுக்கு நடுவிலும் அதை ஞாபகப்படுத்துவது போல் கற்பூரச் சுடர் காட்டப்படுகிறது. அந்தச் சுடரில் நாம் ஒன்றும்போது, நமது ஜீவச் சுடர் அதோடு கலந்து, பின்னர் அச்சுடர் பரமாத்மாவுடன் கலந்து ஒரே சுடராகிறது. இவ்வாறு கலப்பதற்காகவே நாம் பிறவி எடுத்துள்ளோம்.

ஆலய வழிபாட்டில் இந்த வகைச் சடங்குகள் ஒரு பயிற்சியைப் போன்றவை. இவ்வாறு தீபச்சுடர் தரிசனம் கண்டு பரமாத்மாவுடன் தற்காலிகமாய் ஜீவாத்மா கலந்து கிடக்கும் நிலையில் ஒலிக்கும் மணி, நம் மனதில் பல்வேறு எண்ணங்கள் எழாதபடி செய்யும். மணி சத்தத்துக்கு நாதம் என்று பெயர்.

நாதமே மனமாகிய சத்தக்கூடத்துக்கு மருந்து. கண்ணில் கண்ட காட்சி - புலப்படும் சகலத்துக்கும் மருந்து! இப்படி மருந்தை உண்ட நிலையில் ஆலய வெளியில் தூய்மையான இடமாகப் பார்த்து அமர்ந்து தியானிப்பது முக்கியம். அதாவது மனதை ஒருநிலைப்படுத்துவது அவசியம். இதனால், நம்மையும் அறியாமல்... சீரான சுவாசம், சீரான இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம் என்று உடலியக்கமும் சீராக இயங்கத் தொடங்குகிறது.

உடல் மனம் என இரண்டும் ஒரு நேர்க் கோட்டில் நிற்க, ஜீவாத்மா ஒரு உன்னத அனுபவத்துக்கு ஆளாகிறது!

- தொடரும்...