Published:Updated:

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 14

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 14
பிரீமியம் ஸ்டோரி
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 14

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 14

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 14

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 14

Published:Updated:
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 14
பிரீமியம் ஸ்டோரி
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 14

மண்ணச்சியம்மன்

ழிபாடென்பது, மானுட வரலாறு நெடுக வெவ்வேறு வடிவங்களையும் காரண காரியங்களையும் கொண்டது; பல வரையறை களைக் கடந்து இன்றைய நிலையை எட்டியுள்ளது. அவற்றை இலக்கியங்களும் வரலாறும் காட்சியாக்குகின்றன.

குறிப்பாக, வனதேவதை வழிபாடு,  பழங்குடி வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கிறது. நன்மையும் தீமையும் விளைவிக்கக் கூடிய பெண் தெய்வங்களை அடர்ந்த வனத்தினுள்ளே வைத்து வணங்குவது பழங்குடி மரபு. அப்படியொரு வனதேவதையே மண்ணச்சியம்மன்.

உலகின் ஆதிப்பழங்குடிகளில் ஒன்றான காடர் பழங்குடியின் தெய்வம் மண்ணச்சியம்மன். மருத்துவத்துக்கு உரியவளாக இவளைக் காடர்கள் வணங்குகிறார்கள். நோய்வாய்ப்பட்ட, விஷம் தீண்டிய மனிதர்களுக்கு மூலிகை களைக் கொடுத்து, அவர்களை மண்ணச்சியம்மனின் காலடியில் போட்டுவிட்டு வந்துவிடுவார்கள். மண்ணச்சியே அவர்கள் உடல்புகுந்து குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைப்பாள் என்பது நம்பிக்கை. 

திருவள்ளூருக்கு அருகில் ஓர் அமானுஷ்ய வனத்தில் குடியிருக்கிறாள் மண்ணச்சி. அவள் குடியிருக்கும் இடம், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்மனிதர்கள் வாழ்ந்த குகை. 2 லட்சம் ஆண்டுகளுக்குமுன் ‘ஹோமினாய்ட்’ மனிதர்கள் வாழ்ந்த பத்துக்கும் மேற்பட்ட குகைகள்  திருவள்ளூருக்கு அருகேயுள்ள அல்லிக்குழி மலைத்தொடரில் கண்டறியப்பட்டுள்ளன. இதன்வழி,  உலகின் ஆதிமனிதர்கள் உலவிய இடம் தமிழகம்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்தப்பகுதி ‘மண்ணச்சியம்மன் கோனே’ என்று அழைக்கப்படுகிறது.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 14

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில், `சீத்தஞ்சேரி' என்ற இடம் வருகிறது. இங்கிருந்து மேற்கில் விலகும் சாலையில் பயணித்தால், நம் கண்ணில் விரிகிறது அல்லிக்குழி மலைத்தொடர். தமிழகத்துக்கும் ஆந்திரத்துக்கும் இடையிலான முகடாகப் படர்ந்துகிடக்கும் இந்த மலைத்தொடரின் அடிவாரத்தில் இருக்கிறது, குடியம் என்ற கிராமம். இந்தக் கிராமத்தையொட்டியே ஆதிமனிதர்களின் குகைகள் அமைந்திருக்கின்றன.

இதன் வரலாற்றுப் பெருமைகள் ஒரு பக்கமிருக்க, இந்தக் குகைகளை குடியம் பகுதி மக்கள் மிகவும் புனிதமான இடமாகக் கருதுகிறார்கள். தங்கள் குலமகளான மண்ணச்சியம்மன் வாழ்ந்த இடம் இதுதான் என்பது அவர்களது நம்பிக்கை.

அமாவாசை, பெளர்ணமி, பொங்கல், தீபாவளி... எதுவாக இருந்தாலும், கால்களைக் குத்திக்கிழிக்கும் சரளைக் கல் பாதையில் ஆறு கிலோமீட்டர் நடந்துபோய், மண்ணச்சியை ஒரு எட்டு பார்த்து கையெடுத்து வணங்கிவிட்டுத்தான் பிற அலுவல்களைக் கவனிக்கிறார்கள்.  

அடர்ந்த புதர்க்காடு. அமானுஷ்யமான சூழல்! புதர்களை விலக்கி விலக்கித்தான் நடக்கவேண்டும். சில இடங்களில் தவழ்ந்தும் சில இடங்களில் குனிந்தும் செல்லவேண்டும். நான்காவது கிலோ மீட்டரில் முதல் குகை.  இந்தக் குகையை ஒட்டி ஒரு சுனையும் உண்டு. இங்குதான் கோயிலுக்கு வருபவர்கள் ஓய்வெடுப்பார்கள். சிலர் சமைத்துச் சாப்பிடுவதும் உண்டு.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 14

இதைக்கடந்து நடந்தால்,  அடுத்த இரண்டு கிலோ மீட்டரில் ஒரு பெரிய உருண்டைக்கல். மஞ்சள் பூசி குங்குமமிட்டிருக்கிறார்கள்.

அருகில், சற்றுமுன் படைக்கப்பட்ட பொங்கலையும் பழங்களையும் எறும்புகள் ருசித்துக்கொண்டிருக்கின்றன. ஊதுவத்தியின் மணம் அந்தச் சூழலை தெய்விகமாக்குகிறது. அங்கிருந்து சொற்ப தூரத்தில் இருக்கிறது, ‘மண்ணச்சியம்மன் கோனே’. நம் மூத்தோர்கள் வாழ்ந்த இரண்டாவது குகை.

அந்தக் குகையின் முகப்பில் மூன்று செங்கற்களைச் சந்தனம் குங்குமமிட்டு, மாலை சாற்றி நிறுத்தியிருக்கிறார்கள். குகையைச் சுற்றிலும் சொட்டுச்சொட்டாக நீர் சுரந்து வடிந்துகொண்டிருக்கிறது. குகைக்கு மேலே கண்படும் இடமெல்லாம் தேனடைகள்... தேனீக்களின் ரீங்காரம்! எந்தத் தருணத்திலும் தேனீக்கள் நம் திசைநோக்கி படையெடுக்கலாம். குகையின் மையத்தில், கரடுமுரடான சுவரையொட்டி ஆங்காரமாக அமர்ந்திருக்கிறாள் மண்ணச்சியம்மன்.

அம்மனுக்கு அருகில் செல்ல படி அமைத்திருக்கிறார்கள். ‘`நல்லநாள் கெட்ட நாளெல்லாம் பார்க்கமாட்டோம். எப்போ தோணுனாலும் மண்ணச்சியைப் பார்க்க வந்திருவோம். மண்ணச்சி எங்க குடும்பத்துல ஒரு ஆளு. இந்தக் குகையில பழங்காலத்து மனுஷங்கள்லாம் வாழ்ந்ததா சொல்றாங்க. எங்களைப் பொறுத்தவரைக்கும் மண்ணச்சிதான் இந்தக் கிராமத்தோட ஆதி மனுஷி...'’ என்கிறார் இந்தப் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன்.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 14
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 14

தொடக்கத்தில் ஒரு கல்லையே மண்ணச்சியாகக் கருதி வணங்கியிருக்கிறார்கள். காலப்போக்கில் ஒரு சுதைச்சிற்பம் நிறுவியிருக்கிறார்கள். மண்ணச்சியம்மனின் பூர்வீகக் கதை யாருக்கும் தெரியவில்லை. ஆனாலும் மிகுந்த பக்தியோடும், அச்சத்தோடும், மரியாதையோடும் அம்மன் இடம்நாடி வந்து வணங்குகிறார்கள்.

`‘பங்குனி கடைசி நாளும், டிசம்பர் கடைசி நாளும் இந்தச் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நிறையபேர் மண்ணச்சி அம்மனைக் கும்பிட வருவாங்க. அதுக்கு முன்னால, இளைஞர்களெல்லாம் சேர்ந்து புதர்களை வெட்டி பாதை செஞ்சி வச்சிருவோம். முதல்நாள் ராத்திரியே  எல்லாரும் வந்திடுவாங்க.

இரவில் அம்மனுக்கு அபிஷேகம் பண்ணி சிறப்புப் பூசை செய்வோம். எல்லாரும் இந்தக் குகையில தங்கிட்டு மறுநாள் காலையில எழுந்து அம்மனைக் கும்பிட்டுவிட்டு ஊருக்குத் திரும்புவோம்.

தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு ரெண்டும் பிறக்குற நேரத்துல மண்ணச்சி அம்மனோட இருந்தா வாழ்க்கை நல்லா இருக்கும்கிறது இந்தப்பகுதி மக்களோட நம்பிக்கை’' என்கிறார் கமலக்கண்ணன்.

மண்ணச்சியம்மனுக்கு எதிரே, சிறு சிறு குதிரைச் சிற்பங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் குள்ளமான மனிதர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அந்த அடர்ந்த வனக்காட்சியை அழகிய சித்திரமாக மாற்றுகின்றன அந்தச் சுதைச் சிற்பங்கள்.  அவை  எப்போது இந்த இடத்துக்குக் கொண்டு வரப்பட்டன என்று எவருக்கும் தெரியவில்லை.  ஆனால் பெரிதாக சிதைவில்லை.

மண்... மக்கள்... தெய்வங்கள்! - 14

அந்தச் சிற்பங்களுக்கு அருகில் பலியிடும் இடம். ஆடு, கோழிகளைப் பலியிட்டு முதல் குகைக்குக் கொண்டு வந்து சமைப்பார்களாம். மண்ணச்சியம்மனின் காலடி மண்ணை அள்ளிச் சென்று திருநீறாக இட்டுக்கொள்வதும் இப்பகுதி மக்களின் வழக்கமாக இருக்கிறது.

காலத்தின் ரேகைகளைச் சுமந்துகிடக்கும்  ஊழிப்பெருங்காலத்தில் உருவான சரளைக்கல் மலைகள், பெருவனத்தின் காற்றெங்கும் உறைந்திருக்கும் ஆதி மனிதர்களின் ஆன்மா, விதவிதமாக ஒலிக்கும் புதிது புதிதான பூச்சியினங்களின் ஒலிகள் என அந்த வெளி வித்தியாசமாக இருக்கிறது.

அரமவற்ற அந்தக் காட்டில் ஒவ்வோர் அசைவையும் தன் மாறாப் புன்னகையோடு பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாள் மண்ணச்சி அம்மன்.

- மண் மணக்கும்...

- வெ.நீலகண்டன், படங்கள்: க.பாலாஜி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism