Published:Updated:

பகைவனுக்கும் அருளும் பரந்தாமனைப் போற்றிப் பாடடி தோழி! - திருப்பாவை-10

பகைவனுக்கும் அருளும் பரந்தாமனைப் போற்றிப் பாடடி தோழி! - திருப்பாவை-10
பகைவனுக்கும் அருளும் பரந்தாமனைப் போற்றிப் பாடடி தோழி! - திருப்பாவை-10

நட்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து தனது நண்பனுக்காக கடைசிவரை தோள் கொடுத்து நின்றவன் கர்ணன். பகைவனுக்கும் அருளும் நல்லவனாம் நம் மன்னவன் பரந்தாமனை... மணமிக்க துளசிமாலையை அணிந்த நாராயணனை... அவன் புகழைப் போற்றிப் பாட துயிலெழுந்து வருவாயாக என்று பத்தாம் நாளன்று அழைக்கிறாள் கோதை...!!

``நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் 
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய்..!"

``பாவை நோன்பிருந்து, அந்தப் புண்ணியத்தால் சொர்க்கம் செல்ல நினைக்கும் பெண்ணே..!  வாசல் திறவாமல் போனாலும் பேசவும் கூடாதா என்ன..? நறுமணமிக்க துளசி மாலையை அணிந்த நாராயணனை நாம் போற்றிப் பாடினால் நமக்குப் புண்ணியம் தர ஆயத்தமாக இருக்கிறான்..!தூக்கத்தை வரமாகப் பெற்று, பின் ராவணனுக்காகப் போரிட்டு இறந்த கும்பகர்ணன், அவனுடைய பெருந்தூக்கத்தை உனக்கு வரமாகத் தந்துவிட்டானோ..? ஆழ்ந்த தூக்கத்தை உடையவளே..! நல்ல ஆபரணம் போன்ற ஒளியுடன் திகழ்பவளே..! உறக்கம் தெளிந்து கதவைத் திறந்திடுவாயாக..!'' என்று தோழியை கோதை அழைக்கிறாள்..!

`கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்...' ராவணனின் தம்பியான கும்பகர்ணன், தன்னுடைய தமையனுக்காக, ராமனுடன் போரிட்டு சொர்க்கம் தழுவியவன். 
அவன் இறக்கும்போது,  அவன் தான் பெற்ற வரமான பெருந்தூக்கத்தை உனக்குப் பரிசாக தந்துவிட்டானோ.? என்று உறக்கம் விழிக்காத தோழியிடம் கேட்கிறாள் கோதை...
ராமாயணத்தில், கும்பகர்ணன் ஓர் அலாதியான பாத்திரம்..
ஆறு மாத உறக்கம், ஆறு மாத விழிப்பு என்ற வரத்தை வாங்கி வந்த அசுரன் அவன்... புத்திசாதுர்யம் மிக்கவன். தொடர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி, ``போருக்குப் போ.." என்று ராவணன் கூறியதும், எதுவுமே கேட்காமல் ராமனுக்கு எதிராக யுத்தகளத்தில் நின்றவன் தம்பி கும்பகர்ணன்... காரணம்.. செஞ்சோற்றுக்கடன்..! 
ராமாயணத்தில் கும்பகர்ணனையும், அவனது செஞ்சோற்றுக் கடனையும் சொல்லும்போதே உடனடியாக மகாபாரதத்தில் கர்ணனை நினைக்கத் தோன்றுவது ஏனென்று தெரியவில்லை... பெயரிலேயே இருக்கும் ஒற்றுமைகூட காரணமாக இருக்கலாம்..!

கர்ணன்..
பேரன்பு, பெருங்கருணை, நீங்காத வள்ளல்குணம் என்று அனைத்தும் ஒன்று சேர்ந்த மாவீரன்... கர்ணனை `தேரோட்டியின் மகன்'  என்று கிருபாசாரியார் அரச சபையில் இழிவுபடுத்தியதும், அவனை அங்க நாட்டு மன்னனாக முடிசூட்டிய துரியோதனனை, நண்பனாக அல்ல, தனது கடவுளாகவே ஏற்றுக் கொண்டவன் கர்ணன்... தனது நண்பனுக்காக, தனது சகோதரர்களைப் பகைத்துக்கொண்டு பாரதப் போரில், பாண்டவர்களுக்கு எதிரியாக நின்றவன்... துரியோதனனுக்காக தனது உயிரையும் விடத் துணிந்தவன்..
குருக்ஷேத்திரப் போரில், அம்புகள் தைத்து கீழே கிடந்தபோது, அந்தணர் ரூபத்தில் யாசகம் கேட்டுவந்த கண்ணனிடம்.. ``எனது உயிர் துரியோதனனுக்கு உரியது...  அதைத் தவிர, என்னிடம் வேறு எதையாவது கேள்.." என்று மரணப் படுக்கையிலும், துரியோதன பக்தனாகவே வாழ்ந்தவன் கர்ணன்..
துரியோதனனுக்கு, கர்ணன் நண்பனாக இருந்தான். ஆனால், நல்ல நண்பனாக இருந்தானா என்பதுதான் கேள்வி..!
``அழிவினவை நீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.." என்கிறது குறள். நண்பனைத் தீய வழியில் செல்லாமல் தடுத்து, அவனை நல்ல வழியில் செலுத்துவதே உண்மையான நண்பனுக்கு உரிய இலக்கணமாகும்.
கர்ணன், தர்ம சாஸ்திரங்களைக் கற்றவன்தான் என்றாலும், தன்னுடைய நண்பனை நல்வழிப்படுத்தத் தவறியவன்... நண்பன் சூதாடியதைத் தடுக்கத் தவறியவன்.. . சபையில் ஒரு பெண்ணை - திரௌபதியை அவமானப்படுத்தும்போது, துரியோதனனுக்குத் துணை நின்றவன்...
தூது வந்த கண்ணனை துரியோதனன் அவமானப்படுத்தும்போது, தானும் சேர்ந்து கண்ணனை அவமானப்படுத்தியவன்...
துரியோதனனின் மகிழ்ச்சிக்காக அவனுடைய செயல்களில் இருந்த நன்மை, தீமைகளை ஆராய்ந்து பார்க்காமல், நண்பன் அறம் பிறழ்ந்தபோதும் அவனுக்குத் தோள் கொடுத்து நின்றவன்..

பதினேழாம் நாள் போரில், அர்ஜுனனின் அம்புகள் கர்ணனைத் துளைத்தபோதும், அவனுடைய உயிர் பிரியவில்லை. அவன் செய்த தர்மத்தின் பலன்கள், அவனுடைய உயிரைக் காத்து நின்றனவாம்..
அத்தகைய நல்லவனாக இருந்தபோதும், அவ்வளவு தர்மங்கள் செய்தபோதும், புண்ணியங்கள் பல புரிந்தபோதும், சரணடைந்த இடம் தவறாக இருந்ததால் அனைத்தும் வீணாகப் போனது...
தான் செய்த தர்மத்தின் இறந்த கால, நிகழ்கால, எதிர்காலப் பலன்களை எல்லாம் தானமாக வழங்கிய பிறகுதான் கர்ணனுக்கு மோட்சம் தந்து அவனை ஆட்கொள்ள முடிந்தது கடவுளான கண்ணனால்..!
அங்கே கிருஷ்ணாவதாரத்தில் கர்ணன் என்றால், இங்கே ராமவதாரத்தில் எதிர்நின்றவன் கும்பகர்ணன்..!


ராவணனிடம், சீதையின் மீது அவன் வைத்திருப்பது பொருந்தாக் காமம் என்றும், தன்னுடைய தமையன் மாற்றான் மனைவியைக் கவர்ந்து வந்தது பெருந்தவறு என்றும் இடித்துரைத்தவன் தம்பி கும்பகர்ணன்...
தான் விழித்திருக்கும்போது இது நடந்திருந்தால் இவையனைத்தையும் தடுத்திருப்பேனே என்று வருந்தியவன்.
`திட்டியின்விடம் அன்ன கற்பின் செல்வியை விட்டிலையோ...' என்று ராவணனுக்கு சீதையை விட்டுவிடும்படி அறிவுறுத்துகிறான் கும்பகர்ணன்...
ராவணன் அவனது அறிவுரையை ஏற்காதபோது...
``வென்று இவண் வருவென் என்று உரைக்கிலேன்... விதி நின்றது.."
என்று கூறி ராமனுக்கு எதிராகப் போருக்குச் செல்ல முன்னின்றவன்...
கர்ணனை விட கும்பகர்ணன் உயர்ந்து நிற்பது இந்த இடத்தில்தான்..!
யுத்த காண்டத்தில் ராமனுக்கு எதிராகப் போரில் நிற்கும்போது, அவன் முதன்முதலில் கண்டது தன் தம்பி விபீஷணனை..
கும்பகர்ணன் உறங்கச் செல்லும்போது தம்பி விபீஷணன் கும்பகர்ணனுடன் இருந்தான்...
உறக்கம் விழித்துப் பார்த்தபோது, எதிரணியில் ராம, லட்சுமண, சுக்கிரீவனுடன் நிற்கின்றான்..
போர்க்களத்தில் விபீஷணன் தன்னை நோக்கி வருவதைக் கண்ட கும்பகர்ணன், எங்கே தனது தம்பி, ராவணனுக்காக தன்னுடன் சேர்ந்து, உயிரை விட்டுவிடுவானோ என்று கலங்குகிறான்...
ஆனால், தன்னையும் ராமனிடம் அழைத்துப் போகவே விபீஷணன் வந்துள்ளான் என்பதை அறிந்தவுடன்,
` ``நெடிது நாள் வளர்த்துப் பின்னை, போர்க்கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது போகேன்...'  தந்தை, தாய் யாரென்று அறியாத என்னை வளர்த்து, ஆளாக்கி, வீரனாக்கி, `போருக்கு போ...' என்று கட்டளையிட்ட ராவணனின் செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவே, நான் இங்கு இருக்கிறேன்... எதிரே ராம, லட்சுமணனுடன் எனது விதியும் சேர்ந்தே நிற்கிறது என்று தெரிந்துதான், ராவணனுக்குத் துணையாக நிற்கின்றேன்'' என்கிறான் கும்பகர்ணன்...
மேலும், ``தர்மத்தின் வழி வாழ்கின்ற நீ ராமனுடன் இருப்பதுதான் உனக்கு நியாயம்... தாய் தந்தையற்ற நம்மை வளர்த்த அண்ணனுக்காக நான் போரிட்டு மடிவதுதான் எனக்கு நியாயம்... என்னை நினைத்து வருந்தாமல் போ... நீ இருக்கிறாய் என்ற நிம்மதியில் நான் இறப்பேன்...'' என்று தேற்றுகிறான் தம்பி விபீஷணனை..
யுத்தத்தில், முழு மூச்சுடன் மூர்க்கமாகப் போராடி, ராமனுடைய அம்பினால் வீழ்ந்தபோது, ராமனிடம் வரம் ஒன்றைக் கேட்கிறான் கும்பகர்ணன்...
``நீதி நெறி தவறாத எனது தம்பி விபீஷணனுக்கு அடைக்கலம் தருவாயாக...  உன்னையும், உன் தம்பி லட்சுமணனையும், அனுமனையும் விட்டு என் தம்பி என்றும் பிரியாதிருக்கும் வரம் ஒன்று எனக்குத் தருவாயாக.." என்றபடி ராவணனுக்குத் தம்பியாகவும் விபீஷணனுக்கு அண்ணனாகவும் தன் பொறுப்பைச் செவ்வனே செய்து உயிர் நீக்கிறான்..

இரண்டு அவதாரங்கள்..
இரண்டு செஞ்சோற்றுக் கடன்கள்..
இரண்டு கர்ணன்கள்..
கும்பகர்ணனோ..
நன்மை தீமைகளை ஆராய்ந்து, 
ராமனுக்கு எதிரான போரை நிறுத்த ராவணனுக்கு அறிவுரை வழங்கியவன்...
ராவணன் தனது அறிவுரையை ஏற்காதபோது, தமையனுக்காக ராமனுக்கு எதிராகப் போரில் இறங்கியவன்..

கர்ணனோ..
நண்பனின் மகிழ்ச்சிக்காக, நண்பனின் செயல்களில் இருந்த நன்மை, தீமைகளை ஆராய்ந்து பார்க்காமலே, நட்புக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து தனது நண்பனுக்காகக் கடைசிவரை தோள் கொடுத்து நின்றவன்...

கர்ணனுக்கு மோட்சத்தை மட்டுமே அருளிய பகவான், கும்பகர்ணனுக்கு வீரசொர்க்கத்துடன் ஒரு வரத்தையும் சேர்த்தே கொடுத்தான்.
`பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே..' என்ற பகவான் தான் சொன்னபடியே கும்பகர்ணனின் தம்பியைத் தன் தம்பியாக ஏற்றான்.
`குகனொடும் ஐவரானோம் முன்... பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவரானோம்... எம்முறை அன்பின் வந்த அகமலர் காதல் ஐய நின்னொடும் எழுவரானோம்...'
என்று நண்பன் விபீஷணனைச் சகோதரனாகவும் ஏற்றுக்கொண்டு இலங்கையை அரசாளவும் வைத்தான்..
இப்படிப்பட்ட...
பகைவனுக்கும் அருளும் நல்லவனாம் நம் மன்னவன் பரந்தாமனை... மணமிக்க துளசிமாலையை அணிந்த https://www.vikatan.com/news/spirituality/92197-which-thing-karnan-never-donate-in-his-life.htmlனை... அவன் புகழைப் போற்றிப் பாட துயிலெழுந்து வருவாயாக என்று பத்தாம் நாளன்று அழைக்கிறாள் கோதை...!!

அடுத்த கட்டுரைக்கு