Published:Updated:

அன்பே தவம் - 2

அன்பே தவம் - 2
பிரீமியம் ஸ்டோரி
அன்பே தவம் - 2

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படம்: கே.ராஜசேகரன் - ஓவியம்: ம.செ.,

அன்பே தவம் - 2

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படம்: கே.ராஜசேகரன் - ஓவியம்: ம.செ.,

Published:Updated:
அன்பே தவம் - 2
பிரீமியம் ஸ்டோரி
அன்பே தவம் - 2

ம் திருக்கோயில்கள் இறைவனை வழிபடும் நிலையங்களாக மட்டும் இருக்கவில்லை; மனித சமூகத்தை வழிநடத்துகிற நிறுவனங்களாகவும் இயக்கமாகவும் இருந்தன. அங்கே கல்வி கற்றுத்தரும் கலாசாரம் இருந்தது; கோயில் வளாகத்திலேயே கல்விச்சாலைகள் இயங்கின. திருஞானசம்பந்தர் பாடுவார்... `கற்றல், கேட்டல் உடையார் பெரியார்.’ கற்றலும் கேட்டலும் கோயிலுக்குள் நிகழ்ந்தன. 

அன்பே தவம் - 2

ஊரை மேலாண்மை செய்யும் ஊராட்சி அமைப்பை முதலில் மனித சமூகத்துக்குக் கற்றுத் தந்தது திருக்கோயில் வாழ்க்கை முறைதான். கல்வெட்டுகள் மூலம் நாம் அதை அறியலாம். ஊரை மேலாண்மை செய்கிற குழுவினரைக் குடவோலை மூலம் தேர்ந்தெடுக்கிற ஜனநாயக முறை திருக்கோயில் வளாகத்தில் நடந்திருக்கிறது. ஊர்ப் பிரச்னைகளை, சமூகப் பிரச்னைகளை, மனிதர்களுக்கு ஏற்படுகிற சிக்கல்களை, வழக்குகளைத் தீர்க்கிற பெரும் பொறுப்பைத் திருக்கோயில் வளாகத்தில் இருந்த சான்றோர்கள் செய்துவந்தார்கள். 
 
இறைவனே ஒரு வழக்கை திருவெண்ணெய்நல்லூர்த் திருக்கோயிலுக்குக் கொண்டு வந்தார். அதுவும் யார் மீது வழக்கு..? நற்றமிழ் சுந்தரர் மீது. இறைவனே  கோயிலில் ஊர்ச் சான்றோர்களைக் கூட்டி வழக்கை எடுத்துவைத்தார். இவை மட்டுமல்ல... நம் திருக்கோயில்கள் பண்பாட்டு நிறுவனங்களாக, கலைகளை, முத்தமிழை வளர்க்கிற பல்கலைக்கழகங்களாக இயங்கிவந்தன. நம் சமய அமைப்பு மனிதகுலத்தோடு இணைந்து பணியாற்றிவந்திருக்கிறது. அதனால்தான் `கோயிலில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று சொல்வார்கள்.

`திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும்,
திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும்,
பருக்கு ஓடிப் பத்திமையால் பாடா ஊரும், பாங்கினொடு
பல தளிகள் இல்லா ஊரும்,
விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும், விதானமும்
வெண்கொடியும் இல்லா ஊரும்,
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும்,
அவை எல்லாம் ஊர் அல்ல; அடவி- காடே!’
என்று அப்பர் பெருமான் தனித்திருத்தாண்டகப் பாடலில் குறிப்பிடுகிறார்.

திருக்கோயில்கள், உறவை, நட்பை, காதலை வளர்க்கும் இடமாக இருந்தன. இன்றைக்கெல்லாம் ஒருவரைப் பார்த்தால் சிரித்துப் பேசுகிறோம்; நலம் விசாரிக்கிறோம்; கைகுலுக்குகிறோம். கைகுலுக்கும்போதே உள்ளுக்குள் `எப்போது இவனைத் தொலைத்துக் கட்டலாம்?’ என்று ஓர் எண்ணம். உதட்டில் சிரிப்பு; உள்ளத்தில் வெறுப்பு. இப்படித்தான் இரு வேறு நிலைகளில் இன்றைக்கு நட்புலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

இன்றைக்கு நண்பர்கள் தினம் கொண்டாடுகிறோம். எல்லாவற்றுக்கும் தினம். கால வெள்ளத்தில் கரைந்துபோகாமல், நிலைத்து நிற்கவேண்டிய உறவை நீர்க்குமிழிகள்போல் தினம் தினம் கொண்டாடித் தீர்த்துவிடுகிறோம். தேநீர்க்கடைச் சந்திப்புகள், மாலை நேரத்தில் மதி மயங்குகிற சந்திப்புகள்... இவற்றிலெல்லாம் லாப நோக்கம் மட்டுமே. ஆனால், கால வெள்ளத்தில் கரைந்துபோகாமல் கல்வெட்டுபோல் நிலைத்து நின்ற உறவாகவும் நட்பு இருந்திருக்கிறது. பழம்பெரும் இலக்கியங்களில், இதிகாசங்களில் பல அற்புதமான தோழமைகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. 

அன்பே தவம் - 2

பறம்புமலை... முல்லைக்குத் தேர் கொடுத்த பாரிக்கு, எதுவும் பெறாத கபிலர் செய்த தியாகத்துக்கு ஈடு இணையில்லை. பாரி மறைந்துவிட்டான். அவன் மகளிர் கையறு நிலையில் இருந்தார்கள்... அந்த நேரத்தில் பாரியின் மகளிருக்கு உதவினார் கபிலர். பொருத்தமான இடத்தில் அவர்களைத் திருமணம் செய்து கொடுத்து, ஒரு நண்பனாகக் கடமையை நிறைவேற்றினார். நண்பன் இல்லாதபோது அவன் செய்யவேண்டிய கடமையைச் செய்வதுதான் உண்மையான நட்பின் அடையாளம். கடமையை நிறைவேற்றியாகிவிட்டது. பிறகு..? நண்பன் இல்லை... அவன் செய்யவேண்டியதையும் செய்தாகிவிட்டது...இனி வாழ்வதற்கு ஒன்றுமில்லை என்று பாரியை நினைத்தே வடக்கிருந்து உயிர் துறந்தார் கபிலர்.

வலது கை கொடுப்பதை, இடது கை அறியாமல் வாரி வழங்கியவன் கர்ணன். உயர்ந்தநிலையில் கர்ணன் இருந்தான். இறைவனோ, அவன் சந்நிதானத்தில் கேட்டுப் பெறவேண்டிய தாழ்ந்த நிலையிலிருந்தான். அவன் பிறப்பு ரகசியம் தெரிகிற நேரம்... அவனைப் பெற்ற தாய் வந்தாள். `நீ நான் பெற்ற முதல் மகன், தருமனுக்கும் மூத்தவன். நீதான் இந்நாட்டின் அரியணை ஏற வேண்டும். அஸ்தினாபுரத்து அரண்மனை உனக்காகவே காத்திருக்கிறது’ என்று அழைப்பு விடுத்தாள். கர்ணன் இப்போது என்ன செய்வது என்று யோசிக்கவேயில்லை. அன்னையிடம் தீர்க்கமாகச் சொன்னான்... `அம்மா, இந்த நேரத்தில் நான் நண்பனை, துரியோதனனை விட்டுவிட்டு விலகுவது நியாயமல்ல. நட்புக்காக என் உயிரைத் தருவதற்கு இதுவே தகுந்த தருணம்.’ சொன்னபடி, நட்புக் கோயிலுக்குத் தன் உயிரை பலியாகத் தந்தவன் கர்ணன்.

இது, இடஒதுக்கீடு குறித்துப் பேசுகிற காலம். ஆனால், இறப்பதற்கு ஓர் இடஒதுக்கீட்டை ஒருவன், தன் நண்பனுக்கு வழங்கியிருக்கிறான். கோப்பெருஞ்சோழன் என்கிற மன்னன்... அவனுக்கும் அவன் மக்களுக்கும் பிணக்கு. தன்னைத் தானே மாய்த்துக்கொள்ள, வடக்கிருந்து உண்ணா நோன்பிருந்தான்... அவன் ஒருநாள்கூட பார்த்திராத, பேசியிராத, பழகியிராத, எந்தப் பரிசிலும் பெற்றிராத பிசிராந்தையார் என்று ஒரு நண்பர் அவனுக்கு. உள்ளுணர்வால் கோப்பெருஞ்சோழன் சொன்னான்... `என் வலப் பக்கம் யாரும் அமர வேண்டாம். அந்த இடத்தில் அமர்ந்து உயிர் துறக்க பிசிராந்தையார் வருகிறார். அவர்தான் அங்கே அமர வேண்டும்.’ அவன் சொன்னபடியே பிசிராந்தையார் அவன் வலப்பக்கம் வந்து அமர்ந்து உயிர் துறந்தார்.  

அன்பே தவம் - 2

இறைவனுக்கும் சுந்தரருக்கும் இருந்த நட்பு மகத்தானது. சுந்தரர், பரவை நாச்சியாரைக் கண்ட இடம் கோயில் வளாகம். பார்த்த மாத்திரத்தில் அவர் இதயத்தில் ஒரு பரபரப்பு. அந்த அம்மையாருக்கும் சுந்தரரைப் பார்த்தவுடன் இதயத்தில் காதல் பூக்கிறது. ஒரு கட்டத்தில், சுந்தரருக்குத் தனி வாழ்வு, அக வாழ்வு, காதல் வாழ்வில் பிரச்னை. அதைத் தீர்த்துவைக்க இறைவனைத் தூது அனுப்பினார். அதற்குத் தன் நட்புரிமையை எடுத்துக்கொண்டார்...இறைவனைப் பார்த்து சுந்தரர் ஆணையிட்டார்.

`நாயன் நீரே நான் உமக்கிங்கு அடியே னாகில் நீர்
எனக்குத் தாயின் நல்ல தோழருமாம் தம்பிரா
னாரேயாகில் ஆயஅறிவும் இழந்து அழிவேன்
அயர்வுநோக்கி அவ்வளவும் போய் இவ்விரவே
பரவையுறு புலவி தீர்த்துத் தாரும்’ என்கிறார்.


`இந்த இரவிலேயே, கழுகு ஓய்வெடுக்கும் இந்த நள்ளிரவிலேயே, திருடர்கள்கூட ஓய்வெடுத்துக்கொள்ளும் இந்த நேரத்தில், எனக்காக, என் துணைவியோடு ஏற்பட்ட பிணக்கைத் தீர்ப்பதற்காக நீ தூது போக வேண்டும்’ என்று கேட்கிறார் சுந்தரர். இந்த ஆணையை இறைவன் ஏற்றுக்கொள்கிறான். இறைவன் தூது செல்லும் காட்சியை சேக்கிழார் அழகாக வர்ணித்திருப்பார்... உலகத்தின் தலைவன், அளவற்ற பரம்பொருளான இறைவனே இறங்கி வந்து, தன் தோழன் என்பதற்காகத் தூது சென்றது, நட்பை இறைவனே போற்றியதற்கு உதாரணம்.

அன்பே தவம் - 2`உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு
’ என்கிறது திருக்குறள். தலைவனும் தலைவியும் கலந்து வாழவேண்டிய காதல் வாழ்க்கை உடல் சார்ந்த வாழ்க்கையாக இருக்கலாம். ஆனால், அது உயிர் சார்ந்த வாழ்க்கையாகவும் இருக்க வேண்டும். இன்பம், துன்பம், சுகம், துக்கம், நன்மை, தீமை, வாழ்வு, தாழ்வு, ஏற்றம், இறக்கம்... எல்லா நிலைகளிலும் பின்னி, பிணைந்து, கனிந்து, நெகிழ்ந்து, மகிழ்ந்து வாழ்வதுதான் தோழமை வாழ்க்கை. அதுதான் தூய வாழ்க்கையாக இருக்கும்.

திருவள்ளுவர் நட்பை அளந்து பார்க்கிறார். 

`உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்’
என்கிறார். தன் தராசில் மூன்று பேரை நிறுத்துகிறார். என்ன ஆதாயம் கிடைக்கும் என்று பழகுகிறவன், பெறுவது கொள்வார், திருடன். பெறுவது கொள்வார், திருடன் இருவருக்கும் பொருள்தான் பிரதானம். இவர்கள் பொருள் மட்டும் கிடைத்துவிட்டால், நம் உயிரை வதைக்காமல் விட்டுவிடுவார்கள். ஆனால், ஆதாயத்துக்காகப் பழகுகிறவனுக்கு நம் உயிரை எடுக்கிற சந்தர்ப்பம் கிடைத்தால், அதையும் எடுக்கத் தயங்க மாட்டான். உண்மையான நண்பனாக இல்லாமல், நண்பன்போல் பழகுகிறவன் மோசமானவன். நட்பின் மேன்மையைப் புரிந்துகொள்ள, அடியார் ஒருவரின் நட்புக்காக இறைவனே காதலுக்குத் தூது சென்ற சம்பவம் ஒன்றுபோதும்.

(புரிவோம்...)

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்... 

பிகள் நாயகம் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். ஒருவர் பேரீச்சம்பழக் கூடையை எடுத்துக்கொண்டு வந்தார். அவரிடம் நபிகள், `இந்தப் பேரீச்சம்பழத்தை எல்லோருக்கும் கொடுத்துவிடுங்கள்’ என்றார்.

சுமந்து வந்தவர் கேட்டார்... `நீங்கள் கொடுப்பதுபோலக் கொடுக்க வேண்டுமா... ஆண்டவன் கொடுப்பதுபோலக் கொடுக்க வேண்டுமா?’

`நான் கொடுப்பதுபோலக் கொடுங்கள்.’

அவர் கூட்டத்தில் இருந்த தலைகளை எண்ணிப் பார்த்தார். பேரீச்சம்பழங்களையும் எண்ணினார். எல்லோருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்தார்.

அடுத்த நாளும் அதே கூட்டத்துக்கு அவரே இன்னொரு பேரீச்சம்பழக் கூடையைச் சுமந்து வந்தார். நபிகளிடம் கேட்டார்... `இப்போது இவற்றை எப்படிக் கொடுப்பது?’

`ஆண்டவன் கொடுப்பதுபோலக் கொடுத்துவிடுங்கள்.’

கூடையைச் சுமந்து வந்தவர் பேரீச்சம்பழங்களை சிலருக்கு அதிகமாக, சிலருக்குக் குறைவாக, சிலருக்கு ஒன்றுமில்லாத அளவுக்கு வாரி வழங்கினார். கிடைக்காதவர்கள் நபிகளிடம் வந்து குறைப்பட்டுக்கொண்டார்கள்.

நபிகள் சொன்னார்... `சிலருக்கு அதிகமாக, சிலருக்குக் குறைவாக, சிலருக்கு இல்லாமற்போகும் அளவுக்கு... இப்படித்தான் இறைவன் கொடுப்பார். யார் அதிகமாகப் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் பெறாதவர்களுக்கு, இல்லாதவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும். அதற்காகத்தான் இப்படிக் கொடுக்கிறார்.’ இதுதான் இயற்கை நியதி.