மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திருவருள் செல்வர்கள்! - 15 - ஸ்ரீவிஜயீந்திரர் (தொடர்ச்சி)

திருவருள் செல்வர்கள்! - 15 - ஸ்ரீவிஜயீந்திரர் (தொடர்ச்சி)
பிரீமியம் ஸ்டோரி
News
திருவருள் செல்வர்கள்! - 15 - ஸ்ரீவிஜயீந்திரர் (தொடர்ச்சி)

திருவருள் செல்வர்கள்! - 15 - ஸ்ரீவிஜயீந்திரர் (தொடர்ச்சி)

மைதியாக இருப்பவர்கள் முட்டாள்கள்; ஆர்ப்பாட்டம் செய்பவர்களே அறிவாளிகள் - என்ற எண்ணம் பொதுவாகவே உண்டு. என்ன செய்ய? கத்திக் கூச்சல் போட்டு விளம்பரம் செய்தால்தான், மதிக்கிறார்கள். அதை விடுத்து, அனைவருக்கும் உதவிசெய்வதுடன், “நான் என்ன செய்தேன்? தெய்வம் என் மூலமாக அவர்களுக்கு உதவி செய்தது. அவர்கள் செய்த பாக்கியம் அது. இறைவன் கையில் உள்ள கருவி நான். என்னிடம் என்ன இருக்கிறது” என்று அமைதியாக ஒதுங்கினால், ஆர்ப்பாட்டம் செய்யும் உலகம், உத்தமர்களான அந்த ஞானிகளைச் சீண்டிப் பார்க்கும்! 

திருவருள் செல்வர்கள்! - 15 - ஸ்ரீவிஜயீந்திரர் (தொடர்ச்சி)

மந்திரவாதி, நம் சுவாமிகளைப் போட்டிக்கு அழைத்ததும் அவ்விதமே!

நெற்றியில் பெரிய சந்தனப்பொட்டு. அதில் முக்கால் பங்கு அளவு - சந்தனத் திலகத்தை மறைக்கும்படி ரத்தச் சிவப்பில் குங்குமப்பொட்டு. கழுத்தில் சிவந்த மலர்களால் ஆன மாலை. இடுப்பிலோ செந்நிற ஆடை. செக்கச்செவேலென துருத்திய கண்கள்... இப்படிப்பட்ட தோற்றத்தோடு, மந்திரவாதி வந்தார். அவரைப் பார்த்த மக்கள் பதறி நடுங்கினார்கள்.

சற்றுநேரத்தில் ஸ்ரீசுவாமிகள் வந்தார். பளிச்சென்று பிரகாசிக்கும் காவி ஆடை; கையில் தண்டம், கமண்டலம்; நெற்றியில் கோபி சந்தன நாமம்; கழுத்தில் துளசி - தாமரைமணிகளால் ஆன மாலைகள் எனக் கம்பீரமும் அடக்கமும் கலந்த தோற்றத்தோடு ஸ்ரீசுவாமிகள் வந்தார். மக்கள் அனைவரும் எழந்து நின்று கைகளைக் கூப்பி வணங்க, அவர்களுக்கு ஆசி வழங்கிய ஸ்ரீசுவாமிகள் அமர்ந்தார். ஸ்ரீசுவாமிகளின் உத்தரவின் பேரில், மக்களும் அமர்ந்தார்கள்.

பெரிய ஆர்ப்பாட்டத்தோடு மந்திரவாதி எழுந்தார். ஸ்ரீசுவாமிகளை நோக்கி எச்சரிக்கையும் விடுத்தார். “சுவாமிகளே! என்னுடன் போட்டி போட்ட யாருமே உயிருடன் திரும்பியது கிடையாது. துறவிக்கும் என் வித்தைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. வீணாக உயிரை இழக்காதீர்கள். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நான் வெற்றி பெற்றுவிட்டதாக எழுதிக்கொடுத்துவிட்டுத் தப்பிப் பிழையுங்கள்!'' என்று ஆடி முடித்தார் மந்திரவாதி.

அவரின் தோற்றமும், குரலும், ஆர்ப்பாட்டமும், ஆட்டமும் மக்களை அச்சுறுத்தின. இடிக்குப் பின்னால் வரும் மழைபோல், ஸ்ரீசுவாமிகள் கருணையோடு பேசத் தொடங்கினார்.

“யாரும் பயப்படாதீர்கள்! என் சுவாமி ஸ்ரீமூலராமர் என்னைக் காப்பதை, கண்ணெதிரில் பார்க்கப் போகிறீர்கள். ஸ்ரீமூலராமரின் மகிமையை நிலைநாட்டுவதற்காகவே, நான் இந்தச் சவாலை ஏற்றேன்” என்றார். கூடவே மந்திரவாதியின் பக்கம் திரும்பி, போட்டியைத் தொடங்கலாம் என்று உத்தரவும் கொடுத்தார்.

திருவருள் செல்வர்கள்! - 15 - ஸ்ரீவிஜயீந்திரர் (தொடர்ச்சி)

மந்திரவாதி, பெருங்குரலில் மந்திரங்களை உச்சரித்தவாறே, ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு வளையங்களைத் தரையில் போட்டு, அவற்றின் நடுவில் ஓர் எலுமிச்சம்பழத்தை வைத்தார். பிறகு, அந்தப் பழத்தின் மேலும் கீழுமாகக் குங்குமத்தைத் தூவினார். அனைவரும் அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மந்திரவாதி, “சுவாமிகளே! இந்த வட்டங்களில் புகுந்து, எலுமிச்சம்பழத்தை எடுங்கள் பார்க்கலாம். இப்போதே கூறிவிடுகிறேன். முதல் வளையத்தில் புகுந்ததும் நெருப்பு மழை கொட்டும்; நீங்கள் சாம்பல்தான். அதில் பிழைத்து, இரண்டாம் வளையத்தில் புகுந்தால், கருநாகங்கள் படையெடுக்கும். அதிலும் தப்பினால், சூலங்கள் சீறிப்பாய்ந்து வரும். இப்படி ஒவ்வொன்றாகத் தாண்டி, எலுமிச்சம்பழத்தை எடுத்தால், உங்கள் கதை முடிந்தது” என்று கத்தினார்.

மந்திரவாதியைப் பற்றி விவரம் அறிந்தவர்கள், பதைபதைத்தார்கள். ஸ்ரீசுவாமிகளோ, அமைதியாக தம் சீடர்கள் பக்கம் பார்த்தார். அவர்களில் பீமசேனன் என்பவரை அழைத்து, கமண்டலத்தின் தீர்த்தத்தை அவர் தலைமேல் தெளித்து, “அப்பா! பயப்படாதே! நம் சுவாமியிருக்கிறார்; நான் இருக்கிறேன். உனக்கு ஓர் ஆபத்தும் வராது. நீ போய் எலுமிச்சம்பழத்தை எடு” என்றார்.

குருநாதரை வணங்கி ஆசிபெற்ற சீடர், முதல் வளையத்துக்குள் பயமில்லாமல் நுழைந்தார். மறுகணம், அந்தச் சீடரின்மேல் நெருப்புமழை கொட்டத் தொடங்கியது. ஸ்ரீசுவாமிகள் அதைப் பார்த்தார்; அதே விநாடியில் தீ மழை சந்தன மழையாக மாறியது. சீடரின் உடலும் மக்களின் மனங்களும் குளிர்ந்தன. மந்திரவாதியின் முகமோ, முள் குத்திய பலூனைப் போல் சுருங்கத் தொடங்கியது. அடுத்த வளையத்தில் சீடர் நுழைய, பெரும் சீற்றத்துடன் ஏராளமான கருநாகங்கள் வந்தன. ஸ்ரீசுவாமிகள் ஆகாயத்தை நிமிர்ந்து பார்க்க, பாம்புகளைவிட வேகமாகக் கருடப் பறவைகள் பறந்து வந்து, பாம்புகளைக் கொத்திக்கொண்டு, அப்படியே வானத்தில் பறந்தன. பயம் நீங்கி, மகிழ்ச்சிக் குரல் எழுப்பினர் மக்கள். இவற்றையெல்லாம் கவனிக்காமல், தன் கருமத்திலேயே கண்ணாக இருந்த சீடர், அடுத்த வளையத்துக்குள் நுழைய, ஏராளமான சூலங்கள்  பாய்ந்து வந்தன.

அவற்றை ஸ்ரீசுவாமிகள் பார்க்க, அவை மாலைகளாக மாறி, சீடரின் கழுத்தில் விழுந்தன. பிறகு என்ன? சுலபமாக ஏழு வளையங்களைத்  தாண்டிய சீடர், எலுமிச்சம்பழத்தை எடுத்துக் கொண்டு ஓடோடி வந்து, குருநாதரின் திருவடிக ளின் கீழே வைத்து வணங்கினார்.

சுவாமிகளின் மகிமையை அறிந்த மந்திரவாதி, ஓடிவந்து, ஸ்ரீசுவாமிகளின் திருவடி களில் விழுந்து, மன்னிப்பு கேட்டார். அவருக்கு நற்புத்தி கூறி ஆசி வழங்கியதுடன், நிறைய சன்மானங்களையும் கொடுத்து அனுப்பிவைத்தார் ஸ்ரீசுவாமிகள்.

கல்வி-கேள்வி, கலைகள், ஞானம் என அனைத்திலும் சிறந்து விளங்கிய ஸ்ரீவிஜயீந்திரர், கருணையிலும் சிறந்து விளங்கினார்.  தமிழ்நாட்டில் மத்வ சித்தாந்தம் அழியாமல் காப்பாற்றிய பெருமை, ஸ்ரீவிஜயீந்திரரையே சேரும். ஸ்ரீவியாசராஜரின் சீடர்களில் முக்கியமானவர் ‘ஸ்ரீவிஜயீந்திரர்’. இவருடைய சீடப்பரம்பரையைச் சேர்ந்தவரே,  ஸ்ரீராகவேந்திர சுவாமிகள்.

ஸ்ரீஸ்ரீவிஜயீந்திரரின் பிருந்தாவனம், கும்ப கோணம் சோலையப்ப முதலித் தெருவில் உள்ளது. ஞானத்தின் வடிவான  ஸ்ரீவிஜயீந்திர ஸ்வாமிகளின் பிருந்தாவனத்தைத் தரிசித்து, அவரின் திருவருளால் நலமும் வளமும் பெறுவோம்.

- திருவருள் பெருகும்...

சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன் படங்கள்: ம.அரவிந்த்