ஆனந்த விகடன் 1961-ம் வருட தீபாவளி மலரில் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கிய ஆசிச் செய்தி:

அன்பின் சக்தி!
‘நாட்டில் தற்போது ஒற்றுமையைப் பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. ஒற்றுமை என்பது வேற்றுமை பாராட்டாமல் இருப்பது அல்ல. வேற்றுமையே கிடையாது என்று தெளிவதுதான் அது. பரம்பொருள் ஒன்றுதான் உண்டு. அதைத் தவிர வேறு வஸ்து தனியாகக் கிடையாது.
அந்தப் பரம்பொருளைப் பற்றிய நினைவு ஒன்றுதான் எல்லோரையும் சேர்த்துவைக்கக் கூடியது. மதமும் பக்தியும் எல்லோரும் ஒன்றாக வாழ்ந்து சந்தோஷமாக இருக்க ஏற்பட்டவை. ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு துன்பப்பட அல்ல.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பக்திதான் பாரத நாட்டை இணைத்துவைத்த பெரிய சக்தி. வடக்கில் காசியிலிருந்து தெற்கேயுள்ள ராமேசுவரத்துக்கும் தெற்கேயிருந்து வடக்கேயுள்ள க்ஷேத்திரங்களுக்கும் ஜனங்கள் தரிசனம் செய்யப் போய்க்கொண்டேயிருந்தார்கள். இன்றும், எத்தனை மாறுதல்கள் ஏற்பட்டும் அந்தப் பழக்கம் மாத்திரம் விட்டுப்போகவில்லை. பாக்ஷை, ராஜ்ஜிய எல்லைகள், இதர பழக்கவழக்கங்கள் மாறினாலும், இந்த அடிப்படையில்தான் சகலவித ஜனங்களும் மற்ற எல்லாவற்றையும் மறந்து ஒன்று சேருகிறார்கள். அழிவற்ற, ஒரே வஸ்துவால் ஏற்படும் இந்த உண்மையான ஒற்றுமை அழியவே அழியாது.
பக்திக்கு ஆதாரம் அன்பு. ஆண்டவன் கருணைக் கடல். அந்த அன்புக்குக் கட்டுப்படாத ஜீவராசியே கிடையாது. அதேபோல், பக்தனின் அன்புக்குக் கட்டுப்படாத ஆண்டவன் இல்லை. அன்பின் சக்தி மகத்தானது. அன்பு அன்பையே வளர்க்கும். தேச மக்கள் அனைவருமே அன்பு எனும் வெள்ளத்தில் மூழ்கவேண்டும். அதற்கு உள்ளங்கள் தூய்மையாகவேண்டும். தர்மம் செழித்தால் உள்ளம் சுத்தி பெற்றுவிடும். நமது வேதம்தான் தர்மத்தின் இருப்பிடம். அது அநாதியானது. உலகத்துக்கே பொதுவான பொக்கிஷம். அது நாடு பூராவும் முழங்க வேண்டும்.
தர்ம சிந்தையும், தெய்வ வழிபாடும், கருணை உள்ளமும் நம் பாரத நாட்டின் சிறப்பான அம்சங்கள். ஒற்றுமையை வளர்க்க வேண்டுமானால் இவற்றை வளர்க்கவேண்டும்.
இது உலகம் பூராவும் பொருந்தும். அன்பில் விளைவதுதான் உண்மையான சாந்தி. ஒவ்வொருவருக்கும் மனதில் சாந்தி ஏற்பட்டு விட்டால் உலகில் அமைதி தானாக நிலைத்துவிடும். முதலில், `வேற்றுமை உண்டு' என்ற அறியாமை விலகவேண்டும். இந்த இருள் நீங்கி ஒளி பிறக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு இந்த தீபாவளியன்று மங்களம் ஸ்நானம் செய்வோமாக.’
இந்த ஆசிச் செய்தியை இளையாத்தங்குடியில் முகாமிட்டிருந்த மகா பெரியவாவிடமிருந்து பரணீதரன் பெற்று வந்த அனுபவம் சுவையானது...
“நீங்கள் இன்று இரவே இளையாத்தங்குடிக்குப் புறப்பட்டுச் சென்று, பெரியவாளிடம் ஆசிச் செய்தி வாங்கிக்கொண்டு வந்து விடுங்கள்...” என்று பரணீதரனிடம் கூறியிருக்கிறார், விகடனின் அப்போதைய உதவி ஆசிரியர் கோபாலகிருஷ்ணன்.
பரணீதரனின் முகம் இறுக்கமானது. தான் தவிர்த்துக்கொண்டிருந்த பயணம், தன்மீது திணிக்கப்பட்டுவிட்டதாக உணர்ந்தார். காரணம், நான்கு வாரங்களுக்குமுன் ‘மயிலாப்பூரில் லவகுச’ என்ற தலைப்பில் விகடனில் அவர் எழுதியிருந்த கட்டுரை.
அப்போது உபன்யாசச் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் பற்றிய விமர்சனக் கட்டுரை அது. அவரும் அவர் சகோதரர் நாராயண தீட்சிதரும் இணைந்து செய்த அருமையான ராமாயண உபன்யாசத்தில், சில அநாவசியங்கள் குறுக்கிட்டு, அபஸ்வரமாக ஒலித்திருக்கிறது பரணீதரனுக்கு. வார்த்தைகள் சற்றுக் கடுமையாக வெளிப்பட விமர்சனம் எழுதிவிட்டார் அவர்!
விமர்சனத்துக்கு, ஒரு பக்கம் பாராட்டு; இன்னொரு பக்கம் கண்டனக் கடிதங்கள்! ஸ்ரீமடத்தின் தீவிர சீடர்களான பெரும்புள்ளிகளில் ஓரிருவர், இந்தப் பொறுப்பற்ற விமர்சனம் சுவாமிகளின் மனதைப் புண்படுத்திவிட்டதாகவும் அதனால் பெரியவர் கோபமாக இருப்பதாகவும் பயமுறுத்தியிருந்தார்கள். “நீங்கள் சுவாமிகளிடம் நல்லா வாங்கிக்கட்டிக்கப் போறீங்க...” என்று வயிற்றில் புளியைக் கரைத்தார்கள்!
அலுவலக நண்பர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி யுடன் இளையாத்தங்குடிக்குப் பயணமானார் பரணீதரன். விடியற்காலை ஐந்து மணி. ஸ்ரீசந்திரமௌலீச்வரர் சந்நிதியில் நின்றபடி முதியவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார் மகா பெரியவா. பரணீதரனையும் நண்பரையும் பார்த்தார். இருவரும் வந்தனம் செய்து எழுந்தார்கள்.
பெரியவரின் திருமுக மண்டலத்தையும் கருணை பொழியும் கண்களையும் நேருக்கு நேர் தரிசிக்கும் தைரியம் வரவில்லை பரணீதரனுக்கு. எந்தக் கணமும் ‘லவகுச’ கட்டுரை தன்னைத் தாக்கும். என்ன பதில் சொல்வது, அதை எப்படிச் சொல்வது என்ற தவிப்பு அவருக்கு.

“தரிசனத்துக்கு வந்தேளா?” - சுவாமிகளின் பரிவான விசாரிப்பு, அவர் காதுகளில் அமுதமாகப் பாய்கிறது.
“தீபாவளி மலருக்குப் பெரியவாளோட ஆசிச் செய்தியை வாங்கிண்டு வரச் சொல்லி கோபால கிருஷ்ணன் அனுப்பினார்...”
பெரியவா மௌனமானார். ஓரிரு நிமிடங்கள் கடந்ததும் உள்ளே சென்றுவிட்டார்.
‘ஏன் பெரியவர் பதில் சொல்லாமல் போய் விட்டார். என் கட்டுரை பற்றிய கோபமா... அது தொடர்பான விசாரணையை ஒத்திப் போட்டிருக்கிறாரோ... இந்த ஆண்டு ஆசிச் செய்தியே கிடைக்காதோ’ என்றெல்லாம் குழம்பினார் பரணீதரன்.
காலை எட்டு மணிக்கு குளக்கரையில் தரிசனம் அளித்துக்கொண்டிருந்தார் மகா பெரியவா.
“தீபாவளி ஆசிச் செய்தி...” என்று இழுத்தார்.
“இந்த வருஷம் நீயே எதாவது எழுதிடு...”
பரணீதரனுக்கு எதுவும் புரியவில்லை. ‘பெரியவா ஆசிச்செய்தியை நான் எழுதுவதா... தான் செய்த தவற்றுக்குத் தண்டனைதான் இது. எனில், இந்த வருஷம் ஆசிச் செய்தி கிடையாதோ... என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார் பரணீதரன்.
ஆனால்...
“இவா மெட்ராஸ்லேருந்து வந்திருக்கா... கார்த்தாலே காபி குடிக்கற பழக்கம் இருக்கும். நீங்க குடிக்கற காபிலே இவாளுக்கும் கொஞ்சம் கொடு...” என்று தமக்குக் கைங்கர்யம் செய்யும் ஓர் இளைஞரிடம் பெரியவா சொல்ல, மகானின் லௌகீக உபசரிப்பில் திக்குமுக்காடிப் போனார். எப்படியும் ‘ஆசிச் செய்தி’ கேட்டுவிடுவது என்ற தீர்மானத்துடன், மாலையில் மறுபடியும் பெரியவா முன் நின்றார்.
“எழுதிட்டியா?’' என்று கேட்டார் சுவாமிகள்.
பேசாமல் நின்றார்.
“என்ன பேசாமல் இருக்கே?”
“என்ன எழுதறதுன்னு தெரியலே”
“எதையாவது எழுதிண்டு வா... போ...”
பரணீதரனுக்கு மறுபடியும் பேரிடி. ‘அதை’ மனதில் வைத்துக்கொண்டுதான் சுவாமிகள் என்னை இப்படி அழவைக்கிறார். பேசாமல் காலில் விழுந்து ‘என்னை மன்னிச்சுடுங்க... தீட்சிதரைப் பற்றி நான் அப்படி எழுதினது தப்புதான்...’ என்று கதறிவிடலாமா என்றெல்லாம் அவர் நினைத்துக்கொண்டிருக்க, சுவாமிகள் ஸ்நானத்துக்குச் சென்றுவிட்டார்.
மறுநாள் காலை ஸ்நானத்துக்குச் சென்று கொண்டிருந்த பெரியவா, பரணீதரனைப் பார்த்து விட்டு நிற்கிறார்.
“எழுதியாச்சா?’ என்று கேட்கிறார்.
இவர் பதில் பேசாமல் நிற்கிறார்.
“பக்கத்து மண்டபத்துல உக்கிராணம் இருக்கு... அங்கே ஒரு பெரிய பிள்ளையார் இருக்கார். அவருக்குப் பின்னாலே மறைஞ்சுண்டு ஒரு கோஷ்டி காபி போடறா... அது ரொம்ப நன்னா இருக்காம்... இன்னிக்கு அங்கே போய் குடிச்சுப் பாரு...” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் பெரியவா. பரணீதரன் நகராமல் சிலையாக நின்றார். கனமாயிருந்த அவர் நெஞ்சு பஞ்சுபோல் லேசாகியது.
நண்பருடன் காபி அருந்திய பின்னர், அருகிலிருந்த அதிஷ்டான மண்டபத்துக்குள் நுழைந்தார். கையில் மானேஜரிடம் வாங்கி வந்த வெள்ளைத் தாள்கள். ஸ்ரீகாமகோடி பீடத்தின் 65-வது பீடாதிபதியான ஸ்ரீமகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானம் அது. நமஸ்காரம் செய்துவிட்டு, மகா பெரியவாளை தியானம் செய்தபடி மண்டபத்தில் அமர்ந்து, பிள்ளையார் சுழி போட்டுவிட்டு எழுதத் தொடங்கினார்.
அங்குமிங்கும் பார்க்காமல், அடித்தல், திருத்தல் இல்லாமல், அருகிலிருந்த நண்பரிடம் பேச்சுக் கொடுக்காமல், எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஓடிவர, ஒரே மூச்சில் எழுதி முடித்துவிட்டார். அதேநேரம், ‘படித்து விட்டு சுவாமிகள் என்ன சொல்லப்போகிறாரோ?’ என்ற அச்ச உணர்வும் பதற்றமும் எழுந்ததைத் தவிர்க்கமுடியவில்லை.
மாலை ஆறரை, ஏழு மணி இருக்கும். தென்னங்கீற்றினால் ஆன ஓர் அறை. சிறிய குத்துவிளக்கு ஒன்று சின்னதாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. கையில் மடித்த காகிதங்களுடன் நின்றிருந்தார் பரணீதரன்.
“எழுதிண்டு வந்திருக்கியா?” - மகா பெரியவா.
“ஆமா...”
‘`படி...”
நின்ற இடத்திலேயே பேப்பரைப் பிரித்தபோது, எழுதியவரின் விரல்கள் நடுங்கின.
“அங்கே வெளிச்சம் போதாது... இங்கே விளக்குகிட்டே வந்து படி...” - மகா பெரியவா.
அருகில் சென்றார். நடுக்கம் அதிகமானது. படபடத்தது. படிக்கத் தொடங்கினார். குரல் உடைந்து, உருமாறி, கம்மி, கர்ணகடூரமாக ஒலித்தது. வார்த்தைகள் சிதைந்து சின்னாபின்னமாயின. தொடர்ந்து, தட்டுத்தடுமாறி படித்தார். அவர் படித்துக்கொண்டிருந்தபோதே, சுவாமிகள் மிகச் சன்னமான தொனியில் பாடிக்கொண்டிருந்தார். அது தேவாமிருத கானமாய் இருந்தது. அந்தச் சங்கீத சாகரத்தில் திளைத்தபடியே படித்துக்கொண்டிருந்தார் பரணீதரன். கடைசி வரி வரும்போது, தலைமீதிருந்த பெரும் சுமை ஒன்றை இறக்கி வைத்துவிட்ட நிம்மதி ஏற்பட்டது அவருக்கு.
“இதை எங்கே எழுதினே?” - மகா பெரியவா
“அதிஷ்டான மண்டபத்தில்...”
“அந்தப் பெரியவாளே உனக்கு எழுதிக்கொடுத்துட்டாப் போலேருக்கு...”
தேனினும் இனிய சொற்கள் செவியை நிரப்ப, கண்களில் நீர் சுரக்க, சிந்தை பரபரக்க, கால்கள் தரையிலிருந்து எழும்ப, உடல் அந்தரத்தில் நிற்பது போன்ற ஓர் அபூர்வ அனுபவம் தனக்கு ஏற்பட்டதாகப் பதிவு செய்திருக்கிறார் பரணீதரன்.
உத்தரவுக்காக கைகட்டி நின்றிருந்தார் அவர்.
“அட்சர லட்சம் பெறும். ஒரு வார்த்தைகூட மாற்றாம இதை அப்படியே என் பெயர்ல தீபாவளி மலர்ல போட்டுடு...” என்றார் மகா பெரியவா!
மறுநாள் விபூதி, குங்குமப் பிரசாதம் அளித்துவிட்டு, மலர்ந்த மோகனப் புன்னகை வழியனுப்பி வைக்க, நண்பருடன் புறப்பட்டார் பெரியவா பக்தரான பரணீதரன்.
“இளையாத்தங்குடிக்கு வரும்போது மனதை அழுத்திக் கொண்டிருந்த அச்சத்துக்கும், திரும்பிச் செல்லும்போது அதில் குடி கொண்டிருந்த அமைதிக்கும் இடையேதான் எத்தனை பெரிய
இடைவெளி...” என்று தனது அனுபவக் கட்டுரையை முடிக்கிறார் அவர்.
- வளரும்...
வீயெஸ்வி

வில்லேந்திய விரிசடையோன்!
நெய்வேலிக்கு அருகே வில்லுடையான்பட்டி எனும் ஊரில், கையில் வில்லேந்தியபடி விரிசடையுடன் வேடனாகத் திருக்காட்சியளிக்கிறார் முருகப்பெருமான். வள்ளி, தெய்வானையுடன் கிழக்கு நோக்கி அருளும் முருகனின் இந்தத் திருக்கோலம், `சிவசுப்ரமணியர்' என்ற திருப்பெயரில் போற்றப்படுகிறது!
பிரம்மனாக வேலவன்!
நான்முகனின் படைப்புத் தொழிலை முருகப்பெருமான் சிறிது காலம் செய்துவந்தார். அப்போது அவர் நான்கு முகங்களுடன் பிரம்மவேலவனாகத் திகழந்தாராம். இப்படியான விசேஷ திருக்கோலத்தில் அருளும் முருகனை, திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி எனும் ஊரிலுள்ள கோயிலில் தரிசிக்கலாம்.இந்த வேலவனை வணங்கி வழிபட்டால் நம் விதி நல்லபடியாக மாறும் என்பது நம்பிக்கை.
- ஹரி, சென்னை-41