Published:Updated:

`எனக்குக் கிடைத்த மிகப்பெரும் பாக்கியம்!'- ஐயப்பன் தங்க அங்கியைச் சுமக்கும் தமிழக பக்தர்

`எனக்குக் கிடைத்த மிகப்பெரும் பாக்கியம்!'- ஐயப்பன் தங்க அங்கியைச் சுமக்கும் தமிழக பக்தர்
`எனக்குக் கிடைத்த மிகப்பெரும் பாக்கியம்!'- ஐயப்பன் தங்க அங்கியைச் சுமக்கும் தமிழக பக்தர்

`சாமியே..சரணம் ஐயப்பா...' ஐயப்ப பக்தர்களின் உணர்வோடு கலந்த மந்திரம். கார்த்திகை மாதம் மாலை அணிந்து, ஒரு மண்டலம் கடும் விரதம் இருந்து, கடுமையான பாதைகள், உச்சிமலைகளைக் கடந்து வந்தாலும், ஐயப்பனை தரிசிக்கும் நொடியில் அத்தனை வேதனைகளும் பறந்து போகும். ஐயப்ப பக்தர்களின் புனிதத் தலமாக பார்க்கப்படும் ஐயப்பன், கோயிலில் கால் பதித்தாலே புண்ணியம். ஐயப்பனின் திருமேனியை அலங்கரிக்கும் தங்க அங்கி சுமந்த பெட்டி பவனி வரும்போது, அதைத் தொட்டுப் பார்த்தாலே பாவங்கள் தீரும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை. தொட்டு வணங்கினாலே புண்ணியம் என நினைக்கும், தங்க அங்கி அடங்கிய பெட்டியைச் சுமந்து வரும் பாக்கியம் கிடைத்தால், அதை விடப் பிறவிப்பயன் வேறென்ன வேண்டும். அந்தப் பாக்கியம் ஒரு தமிழருக்கு கிடைத்திருக்கிறது.

மண்டல பூஜை காலத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி அடங்கிய பெட்டியைச் சுமந்து வரும் வாய்ப்பு, ஐயப்பனுக்காகவும், அவரது பக்தர்களுக்காகவும் சேவை செய்து வரும் ஐயப்ப சேவா சங்கத்துக்கு வழங்கப்படும். இதன் மூலமாக, தன்னலமற்ற சேவை செய்யும் சேவா சங்கம் கௌரவப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக, தங்க அங்கி அடங்கிய பெட்டியை தூக்கி வரும் வாய்ப்பு ஒரு தமிழருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த ராமையா என்ற 55 வயது ஐயப்ப பக்தர்தான் அந்த புண்ணியவான். இவர் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாகச் சபரிமலையில் தங்கி அகில பாரத ஐயப்ப சேவா சங்கத் தமிழ் மாநில அமைப்பு சார்பில் சேவை செய்து வருகிறார். மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களிலும், மாத பூஜையிலும் சபரிமலையில் நடை திறந்திருக்கும் நாள்களிலும் தவறாமல் சபரிமலை சென்று விடுவார். அங்கு ஐயப்பனைக் காண வரும் பக்தர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருவார். முக்கியமாக மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள். அந்தச் சமயத்தில் `எமர்ஜென்சி' பிரிவில் பணியாற்றுவார். பக்தர்களுக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனாலோ, இறக்க நேரிட்டாலோ அவர்களுக்கு உதவுவது இந்தப் பிரிவின் முக்கியப் பணி. இவரது சேவையை அங்கீகரிக்கும் வகையில், மண்டல பூஜையின்போது ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியைச் சுமந்துவரும் வாய்ப்பை, அகில பாரத ஐயப்ப சேவா அமைப்பு இவருக்கு வழங்கியுள்ளது.

இது பற்றி பேசிய ராமையா, `` நான் சபரிமலையில் தொடர்ந்து செய்து வருகின்ற சேவைக்காக அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் தமிழ் மாநில அமைப்பு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி சுமக்கும் அரிய பாக்கியத்தை வழங்கியுள்ளது. இந்த ஆண்டுடன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. இது என் வாழ்நாளில் கிடைத்த மிகப் பெரும் பாக்கியம். என் ஆயுள் முழுவதும் இந்தச் சேவையை செய்து வருவேன். என்னுடன், விழுப்புரத்தைச் சேர்ந்த செந்தில், திருநெல்வேலியைச் சேர்ந்த சுப்பிரமணி ஆகியோரும் அங்கியைச் சுமந்து வந்தனர். பக்தர்களுக்குச் சேவையாற்றுவது ஆண்டவனுக்கு ஆற்றும் சேவைக்கு சமமானது என்பதை உணர்ந்து அர்ப்பணிப்போடு இந்தச் சேவையை தொடர்ந்து செய்வேன்'' என்றார்.