ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

ரங்க ராஜ்ஜியம் - 16

ரங்க ராஜ்ஜியம் - 16
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்க ராஜ்ஜியம் - 16

இந்திரா சௌந்தர்ராஜன் - படம்: என்.ஜி.மணிகண்டன்

‘காலா யிரமுடி ஆயிரம்
    ஆயிரம் கைபரப்பி
மேலா யிரந்தலை நாகம்
    கவிப்பவின் பூத்தகஞ்சம்
போலா யிரங்கண் வளரும்
    பிரான்பொன் அரங்கனென்றே
மாலா யிரங்கவல் லார்கெய்த
    லாந்திரு வைகுந்தமே!

- திருவரங்கக் கலம்பகம்

திருக்கோயில் வழிபாடு பற்றி கிளிச்சோழனுக்கு சொல்லும் சாக்கில் அனைவருக்கும் விவரித்தார் பௌராணிகர்.அத்துடன், எம்பெருமானின் ஐந்து நிலைகளை பற்றியும், ஆலய வழிபாடு எப்படி இருக்க வேண்டும் என்றும், அப்படி இருப்பதால் உருவாகும் நன்மைகளையும் கூறி முடித்திட கிளிச்சோழனிடம் பெரும் சிலிர்ப்பு!

ரங்க ராஜ்ஜியம் - 16

அதைத் தொடர்ந்து திருவரங்கத்தின் மேலான சிறப்பை, பௌராணிகர் ஒருவர் தன் வசமிருந்த ஏடுகளை உற்றுநோக்கி அறிந்தவராக, ‘`நான் இப்போது இந்தத் திருவரங்கத்தின் அதிமேலான சிறப்பை மனித வாழ்வோடு பொருத்திச் சொல்லப் போகிறேன்’’ என்று தொடங்கினார்.

‘`இந்தத் திருவரங்கமே பூ உலகின் முதல் கோயில். வடிவிலும் பெரிய கோயிலாகத் திகழ்ந்திடும் இந்தத் திருவரங்கமே பூலோக வைகுண்டமாகும். இந்தக் கோயிலுக்கு வருபவன் `முமுக்ஷு' என்று அழைக்கப்படுவான். இந்த முமுக்ஷு இந்தக் கோயிலை தரிசிக்க வருகையில், பரமபதத்தை அடைபவன் போல் ஆறு லோகங்களைக் கடந்து வர வேண்டும். அந்த ஆறு லோகங்களைப் போன்றவையே இந்த ஆலயத்தைச் சுற்றிலும் உள்ள ஆறு சுற்றுகள்.

ஏழாவதாகவும் ஒரு சுற்று உண்டு. அது, கலியுக ராமன் சுற்று எனப்படும். ஆறாவது சுற்று - இது விக்கிரம சோழன் திருச்சுற்று. ஐந்தாவது அகளங்கன் திருச்சுற்று; நான்காவது ஆலிநாடன் சுற்று; மூன்றாவது குலசேகரன் திருச்சுற்று; இரண்டாவது ராஜமகேந்திரன் திருச்சுற்று; முதலாம் சுற்று தர்மவர்மா சுற்று ஆகும்’’ என்று சுற்றுகளைப் பற்றி விவரித்த பௌராணிகர், தொடர்ந்து பேசினார்.

``ஒரு மனிதன் அரங்கன்பால் பக்தியோடு காவிரியில் நீராடி, இந்த ஏழு சுற்றுகளின் வழியாக வந்து அரங்க தரிசனம் செய்யும்போது, பிறவிகளைத் தொலைத்துக் கடைத்தேறியவன் ஆகிறான். ஒவ்வொரு சுற்றின்போதும் உடலின் ஒவ்வொரு பிரதான நாடியோடு, பூலோக வைகுண்ட ஆலயத்தின் சாந்நித்யம் தொடர்பு கொள்கிறது. இந்தத் தொடர்பு மூச்சுக்காற்றின் வழி நடந்து சப்த நாடிகளையும் கர்மசுத்தி அடையச் செய்கின்றன. அந்த நாடிகளின் துடிப்பால், உள்ளே கிடக்கும் ஆத்மா, வாழைப்பழத் தோலைத் தவிர்த்த பழம் போல், அந்திமத்தில் உடம்பைத் தவிர்த்து லகுவாக பரமாத்மாவை அடைந்துவிடும்’’ என்று உடம்போடு தொடர்புப் படுத்தியும் அரங்கன் கோயில் கட்டுமானத்தை விவரித்து முடித்தார்.

கிளிச்சோழன் இதன் மூலம் மேலான ஞான நிலைக்கே சென்றான். நீலிவனத்து மகரிஷியால் இன்னும் சொல்லப்பட வேண்டிய அவதாரங்களாக மீதமிருந்த நரசிம்மம், வாமனம், பரசுராமம், ராமம், கிருஷ்ணம், பலராமம் மற்றும் கல்கி என்று ஏழு அவதாரக் கதைகளையும் அங்கேயே அறியலானான்.

இதில் பலிச்சக்ரவர்த்தியோடு தொடர்புடைய வாமன அவதாரம், ‘தான்’ எனும் அகந்தை மனிதனுக்குக் கூடாது என்று உணர்த்தியதோடு, எம்பெருமான் எத்தனைப் பெரியவன் என்றும் காட்டிய ஓர் அவதாரமாகும்!

கிளிச்சோழன் அறியப் போந்த வாமனாவதாரம் ஒரு வாழ்நாள் பாடம்! கூர்ந்து நோக்கினால் அதில் ஒருவன் கேட்பதற்கு கேள்விகளும் ஏராளம் - பதில்களும் தாராளம். ஆச்சர்யங்களும் தாராளம்! குறிப்பாக வாமனாவதாரம் என்றாலே பலிச் சக்ரவர்த்தி ஞாபகமே வரும் வண்ணம் அது அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கிறது.

ஆனால், அந்த மகாவிஷ்ணுவான அரங்கன் இந்த ஒரு அவதாரத்தை மட்டும் இருமுறை நிகழ்த்தினார் என்று ரிஷிகளில் ஒருவர் அர்ஜுன மண்டபத்துக் காலட்சேபத்தின்போது கூறவும் கிளிச்சோழன் ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்று விட்டான்.

“மகரிஷி... இது என்ன விந்தை! ஒரே அவதாரம் இருமுறையா?” என்று எல்லோரையும் போல் வினாவெழுப்பினான்.

“தேவைப்பட்டால் ஆயிரம் முறைகூட நம் அரங்கர் அவதாரம் புரிவார். அவரின் அர்ச்சாவதார சொரூபம் கண்டு `உறக்கத்தில் இருப்பவர்தானே' என்று அஞ்ஞானமாக கருதி விடக் கூடாது!”

“அற்புதம்... இந்த வாமனத்தின் முதல் அவதாரத்தை முதலில் கூறுங்கள். இடையில் நான் வினாக்கள் தொடுக்கலாமா?”

“தாராளமாய்... நல்ல கேள்விகளே நல்ல விடைகளுக்குக் காரணமாய் அமையும். நல்ல விடைகளே தெளிவை ஏற்படுத்தும்”

“மிக்க மகிழ்ச்சி. தாங்கள் இதுவரை எவரும் அறிந்திராத அந்த முதல் வாமனாவதாரத்தைப் பற்றி கூறுங்கள்.” - என்று கிளிச்சோழன் தயாராகிட, அரங்கன் ஆலயத்து அர்ஜுன மண்டபத்தில் முதல் வாமனம் பிரவாகப் பெருக்கெடுக்கத் தொடங்கியது.

ரங்க ராஜ்ஜியம் - 16

‘`துந்து என்று ஓர் அசுரன்! இவன் காஸ்யப முனிவருக்குப் பிறந்தவன். முனிபுத்ரர்கள்  முனியாகத்தான் பிறக்கவேண்டும் என்றில்லை. ஒரு முனிவனுக்கு அவரின் முன்வினை  காரணமாக எப்படி வேண்டுமானாலும் பிள்ளைகள் பிறக்கலாம். அந்த வகையில் காஸ்யபரின் பொல்லாத கர்மவினையின் காரணமாய் பிறந்தவனே துந்து. அசுர குணங்களே இவனிடம் தடித்துக் காணப்பட்டன. முன்கோபம், சுயநலம், அதிக உறக்கம், மிகுந்த காமம் என்று பொல்லாத உணர்வுகளின் கேந்திரமாய் விளங்கினான்.

குறிப்பாய் வரசித்தி உள்ள தேவர்களைக் கண்டு பொறாமை கொண்டு, தந்தையான காஸ்யபரிடம் சென்று ‘தந்தையே... இந்தத்  தேவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம். இவர்கள் மட்டும் எப்படி இவ்வளவுப் பொலிவோடு இருக்கிறார்கள்?’ என்று கேட்டான். காஸ்யபர் முதலில் சிரித்தார். பிறகு மகனுக்குப்  பதில் கூறலானார்.

‘புத்ரனே... ஆண், பெண் என்று மானுடம் ஓர் இனப்பிரிவு கொண்டிருப்பது போல், தேவம் அசுரம் என்று ஒரு குணப்பிரிவும் கொண்டுள்ளது. இதில் தேவத்துக்கு ஆத்மசக்தி அதிகம்; அசுரத்துக்குத் திரேக சக்தி அதிகம். ஆத்மசக்தி அதிகரிக்கும்போது பிரகாசம் தானாய் வந்து விடும்’ என்று பதிலளித்தார்.

‘ஆத்மசக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?'

‘புலன்களை அடக்கித் தவம் செய்ய வேண்டும்.’

‘அவ்வளவுதானா?’

‘என்ன அவ்வளவுதானா? புலனடக்கம் என்பது சாமான்யப்பட்ட உணர்வல்ல. அடக்க அடக்க அது பீறிட்டெழ முயலும்.’

‘அப்படியானால் அவர்களால் மட்டும் எப்படி முடிந்தது?’

‘புத்ரா... நீ கூட முயற்சி செய்யலாம். தேவை மன உறுதி - அவ்வளவுதான்!”

காஸ்யபர் இப்படிக் கூறவும், துந்து தவத்தில் ஆழ்ந்துவிட்டான். தன் பதில், தன் பிள்ளையை தன்னைப் போல் ஒரு முனிவனாக்கியதில்  மிகவே மகிழ்ந்தார் காஸ்யபர். ஓர் ஆச்சர்யம்போல் அவரையே மிஞ்சும் வண்ணம் தவத்தில் ஆழ்ந்து பிரம்ம தரிசனமும் கிடைத்துவிட்டது துந்துவுக்கு.

துந்து சாகாவரம் வேண்டினான். பிரம்மாவோ `அப்படி ஒரு வரத்தைத் தர இயலாது. அதற்கு இணையான வரத்தைக் கேள்' என்றிட, `இம்மண்ணில் எங்கும், எவராலும், எந்த வகை ஆயுதத்தாலும், தேவராலும், முனிவராலும், உம் போன்ற மூவராலும் கூட எனக்கு ஆபத்து நேரிட்டுவிடக் கூடாது’ என்று சாமர்த்தியமாக   வரத்தை வாங்கிக்கொண்டான்.

`ததாஸ்து' என்று அவன் கேட்ட வரத்தை அளித்துவிட்டு மறைந்தார் பிரம்மா!”

-நீலிவனத்து ரிஷி இவ்வாறு கூறவும் கிளிச் சோழனிடம் ஒரு கேள்வி.

“மகரிஷி... இந்த வரமும்கூட சாகாவரத்துக்கு இணையானதுதானே?”

“ஆம், அதிலென்ன சந்தேகம்?’'

‘`இதற்கு அவன் கோரிய சாகாவரத்தையே பிரம்மதேவர் தந்து விட்டிருக்கலாமே?’’

‘`சோழ மன்னா... வரங்களிலேயே கொடியது சாகாவரமே! அழிவின்றி வாழ்ந்துகொண்டே இருப்பதைப் போல், ஒரு கொடிய துன்பம் இருக்கவே முடியாது. ஒன்று அழிக்க முடியாததாக ஆகிவிடும் பட்சத்தில், அதிலிருந்து ஆயிரமாயிரம் அழிக்க முடியாதவை தோன்றி உலகமே ஜனக் காடாகி விடும். நிற்க, அமரக்கூட இடம் இருக்காது. எவரும் எவரையும் அழிக்க முடியாது என்றாகி விட்டால், எவரும் தங்கள் வாழ்வின் நிமித்தம் உழைத்துப் பிழைக்கவும் விரும்பமாட்டார்கள். சண்டை சச்சரவுகளும் இருக்காது. யாரும் யாரையும் கொல்லவோ, கொல்வதால் வெல்வதோ நடக்கவே நடக்காது.’’

‘`மொத்தத்தில் இந்தப் பூமியே இப்போதிருப்பது போல் இன்றி, பெரும் ஜனாபாரத்தோடு விளங்கிடும் என்கிறீர்கள், அப்படித்தானே?’’

‘`அதிலென்ன சந்தேகம்?’’

‘`ஓர் அசுரனுக்கு அப்படி வரம் தருவதால், எல்லாமும் அப்படி மாறிவிடும் என்று எப்படிக் கருதமுடியும்?''

‘`எல்லோருமே துந்து போல் தவம் புரிந்தால் அப்படி ஆவது சாத்தியம்தானே?’’

‘`தவம் புரிந்தால்தானே?’’

‘`சாகாவரம் கிடைக்கும் என்றால் போதும், உலகத்தவர் எல்லோருமே தவத்தில் இறங்கிவிடுவர்.  இல்லாவிட்டால், அப்படியொரு வரம் பெற்றவனால் கொல்லப்படும் ஆபத்து ஏற்பட்டு விடுமே?”

“சரி, பிறகு என்னாயிற்று?’

‘`என்னாகும்... ஒரே அட்டகாசம்தான். தன் வரஸித்தியை மையமாக வைத்து, வரம் கொடுத்த பிரம்மனின் லோகத்தையே ஆட்டிப் படைக்கத் தொடங்கினான் துந்து’’

``இது என்ன கொடுமை?’’

‘`அசுரம் எப்போதுமே இப்படிப்பட்டதுதான்.’’

``பிறகு?’'

‘`பிறகென்ன நிகழ முடியும்? பிரம்மாவுடன் இந்திரன் முதலான தேவர்கள் ஸ்ரீவைகுண்டம் சென்று மகாவிஷ்ணுவின் பாதாரவிந்தங்களைப் பணிந்தனர்.

துந்துவை அழிக்கவோ அடக்கவோ அப்போது வழியில்லை. துந்துவும் பூமியில் அப்போதுள்ள எவராலும் தன்னை அழிக்க முடியாதபடி வரம் பெற்றிருந்தான். எனவே, பூமியிலுள்ள எவரைப் போலவும் இன்றி வாமனமாய் அதாவது குள்ள வடிவினனாய் ஒரு பிராமணர் போல் புறப்பட்டார் மகாவிஷ்ணு. அப்போது துந்துவும் அசுவமேதயாகம் செய்ய முனைந்திருந்தான்...”

‘`வரசித்தி பெற்றவனுக்கு எதற்கு அசுவமேத யாகம்?’’

“வரசித்தி என்பது உடம்புக்கும் உயிருக்கும்தான். பட்டம், பதவி, அதிகாரத்துக்கு அல்லவே...? துந்து இந்திர பதவியை அடைய விரும்பினான். அதற்கு நூறு அசுவமேத யாகம் புரியவேண்டும். எனவேதான் அசுவமேத யாகம் புரியத் தயாராகிக் கொண்டிருந்தான்.''

‘`இதனால்தான் தனது பதவிக்குஆபத்து என்று இந்திரன் திருமாலின் காலில் விழுந்தானோ?’’

‘`ஆம். துந்து இதுபோல் வேள்வி செய்து தேவர்களின் எல்லா சக்தியையும் பறித்து தன்னைச் சார்ந்த அசுரர்களுக்கு அளித்துவிட்டு, தேவர்களை அடிமைகளாக்க விரும்பினான்...’’

‘`கொடுமை...''

‘`கொடியது என்பதால்தானே அப்படியான குணத்தை அசுரம் என்கிறோம்.’’

‘`பிறகு என்னாயிற்று? வாமனராய் வந்த விஷ்ணு என்ன செய்தார்?’’

‘`வெகு அழகாய் ஒரு தந்திரம் புரிந்தார்!’’

‘`தந்திரமா.. என்ன அது?’’

‘`தேவிகா என்றொரு நதி. அந்த நதிக்கு நீராட துந்து வந்த தருணத்தில், அதில் குதித்து தற்கொலை புரிய முனைபவர் போல் நாடகமாடினார்.’’

‘`இது என்ன விந்தை?’’

‘`ஆம். துந்து எதிரில் இப்படி விந்தை புரியப் போய்தான், அவனும்  நெருங்கி வந்து ‘ஓய் குள்ள பிராமணரே... என்னாயிற்று என்று தற்கொலைக்கு ஆசைப்படுகிறீர்?’ என்று கேட்டான்.

‘உனக்கென்னப்பா... நீ இந்த உலகுக்கே சக்ரவர்த்தி. உன்னைப் பார்த்து மும்மூர்த்திகளே பயப்படுகின்றனர். நானோ வறுமையால் வாடும் ஏழை. என் சகோதரன் எங்கள் சொத்தை எல்லாம் தான் எடுத்துக்கொண்டு, இந்த நதியிலும் தள்ளி விட்டுச் சென்றுவிட்டான். கேட்டால்... என்னைப் போன்றவர்களுக்குச் சொத்தில் பங்கு தர விதியில்லை என்று ஏதேதோ கூறுகிறான். குள்ளனாய்ப் பிறந்தது என் குற்றமா மன்னா... நீயே சொல்...’ என்றார்.

வாமனரின் பேச்சு துந்துவை அசைத்தது. தனது ராஜ்ஜியத்தில் தன் இஷ்டப்படியே எல்லோரும் நடக்கவேண்டும் என்று விரும்பும் அவனது மனோபவம், வாமனரின் பேச்சால் கொதி நிலைக்குப் போயிற்று!

‘குள்ள பிராமணரே... உங்கள் சகோதரன் முன்னால், நான் உங்களை வாழவைத்துக் காட்டுகிறேன். உங்களுக்கு என்ன வேண்டுமோ என்னிடம் கேளுங்கள். அசுவமேத யாகத்தின் பொருட்டு நானும் அந்தணருக்குத் தானம் செய்ய வேண்டிய கடமை கொண்டவனாவேன். அந்தத் தானம் உமக்கானதாய் இருக்கட்டும்' என்றான்.’’

“பிறகு?”

“பிறகுதான் ஆரம்பமாயிற்று வாமனலீலை!'' என்றார் ரிஷி. அந்த அற்புத லீலையைப் பற்றி அறிய பெரும் ஆவலுடன் தயாரானான் கிளிச் சோழன்!

 - தொடரும்...