
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 15
நம்பிக்கை என்ற உயிர்க்கொடியில்தான் பிணைந்து கிடக்கிறது வாழ்க்கை. அந்த உயிர்க்கொடியின் வேர்தான் தெய்வம். தன்னை அழுத்திக்கொண்டிருக்கும் சுமையை அந்த தெய்வத்தின் முன் நின்று வார்த்தைகள் வழியோ, கண்ணீர் வழியோ இறக்கிப் போட்டுவிட்டால், கரைந்துபோய்விடும்.

‘இனிமேல் மனிதர்களால் ஆகாது’ என்று தோணுகிற நொடி, ‘இனி தெய்வம் விட்ட வழி’ என்று நேராக தெய்வங்களின் காலடியில் சரணடைந்துவிடுகிறார்கள். ‘நான் இருக்கிறேன்... போ... போய் உன் பணிகளைக் கவனி’ என்று தலைகோதி அனுப்பிவைக்கின்றன தெய்வங்கள். அந்த நம்பிக்கையே பலமாக மாறிவிடுகிறது.
அப்படித்தான் பாப்பாத்தி அம்மாவும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்புரிகிறாள்.
திருப்பத்தூருக்கு அருகே ஆண்டியப்பனூரில் குடியிருக்கிற பாப்பாத்தி அம்மாவை நாடி வந்து, தங்கள் மனக்குமுறலைக் கொட்டிச் செல்கிறார்கள் மக்கள்.
பாப்பாத்தியம்மாவுக்கு தமிழகத்தில் நிறையக் கோயில்கள் உள்ளன. சில இடங்களில் சுதையாக, சில இடங்களில் பீடமாக, சில இடங்களில் நடுகல்லாக என்று பல வடிவங்களில் குடியிருக் கிறாள் பாப்பாத்தியம்மா. புதுக்கோட்டை, கோவை, வேலூர் வட்டாரங்களில் பாப்பாத்தியம்மா வழிபாடு அடர்த்தியாக உண்டு. ஆண்டியப்பனூர் பாப்பாத்தியம்மாவிடம் குழந்தை இல்லாத பெண்கள் சரணடைகிறார்கள்.
பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஒரு பழங்குடி இளைஞனிடம் மனம் மயங்குகிறாள். அவர்களின் காதலை பெண் வீட்டாரும் சமூகமும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், காதல் ஜெயிக்கிறது. ‘அந்த இளைஞன் இல்லாமல் வாழ்க்கையே இல்லை’ என்றானபிறகு, தங்கள் உறவுகளை விடுத்து அந்த இளைஞனிடம் செல்கிறாள் அந்தப்பெண்.

தன்னையே உலகமென நம்பிவந்த பெண்ணை உயிரெனக் கொண்டாடுகிறான் அந்த பழங்குடி இளைஞன். அவன் ஊரும் உறவுகளும் தங்கள் வீட்டுக்கு வந்த ராணியென அவளைக் கவனித்துக் கொள்கிறார்கள். அப்பா, அம்மா நினைவே வராத அளவுக்கு அவளுக்கு அந்த வனவாழ்க்கை இனிப்பாக இருக்கிறது.
கருவுற்றாள் அந்தப் பெண். தான் தாயானபிறகு, அவளுக்குத் தன் தாயின் நினைவு வருகிறது. தாயையும் தன் குடும்பத்தையும் காணச் செல்ல வேண்டும் என்று தன் கணவனிடம் வேண்டுகிறாள். ஆனால், அந்த இளைஞன் அதற்கு அனுமதிக்கவில்லை. தாயைப் பார்க்கச் சென்றால், திரும்பி வராமல் இருந்துவிடுவாளோ என்கிற அச்சம். மாதங்கள் ஓடுகின்றன. அதுவரை தேனாக இனித்த வாழ்க்கை, பெற்றோரின் நினைவால் பரிதவித்து நிற்கிறது.
நிறைமாதம்... முழுநிலவு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அந்தப் பழங்குடி மக்களின் குடியிருப்பு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது.
அந்தப்பெண் தன்னந்தனியாக தன் பெற்றோர் இருக்கும் திசைநோக்கி நடக்கிறாள். இரவுப்பூச்சிகள் ‘வேண்டாம்... வேண்டாம்’ என்று தகித்துக் கத்துகின்றன. நடக்கிறாள்... வேகவேகமாக நடக்கிறாள். பரந்த திட்டொன்று வருகிறது. அந்தத் திட்டைக் கடக்கும்போது பிரசவ வலியெடுக்கிறது. சுற்றிலும் ஆளரவம் இல்லை. உதவிக்கு யாரும் இல்லை. வலியும் பயமும் அவளை மிரட்டுகின்றன. அந்தப் பதற்றத்தில் சுயமாகவே பிரசவம் நிகழ்கிறது.
இதுவரையிலுமான ஒரு கதை திருப்பத்தூர் வட்டாரத்தில் உலவுகிறது. இப்படிச் சுயமாக பிரசவித்த பெண்தான் பாப்பாத்தியம்மா. அவள் என்ன ஆனாள், பிறந்த குழந்தை என்னவானது, அவள் தன் தாய் - தந்தையைச் சந்தித்தாளா, மனைவியைக் காணாது தவித்த அவள் கணவன் தேடிவந்து கண்டடைந்தானா எனப்போன்ற கேள்விகளுக்கு விடையில்லை.

ஆனால், பாப்பாத்தியின் பிரசவத்தின்போது, பனிக்குடம் உடைந்த இடத்தில் ஒரு சுனை பிறந்திருக்கிறது. அம்மனுக்கு முன்னால் இருக்கும் அந்தச் சுனை சிறு கிணறுபோல் இருக்கிறது. எந்தக் காலத்திலும் அந்தச் சுனை வற்றுவதேயில்லை. குழந்தையில்லாத பெண்கள் அந்தச் சுனையில் பாலூற்றி வேண்டுகிறார்கள். எப்போதேனும் சுனையில் நீரின் அளவு குறைந்தால், ஏதோ ஒரு பாதிப்பு நிகழப்போகிறதென்று ஆண்டியப்பனூர் மக்கள் அஞ்சுகிறார்கள்.
பிறந்த குழந்தையின் தொப்புள்கொடி, வெண்ணாங்கொடியாகக் கோயிலைச் சுற்றிலும் படர்ந்து கிடப்பதாக நம்புகிறார்கள் மக்கள். குழந்தையில்லாத தம்பதிகள் அந்தக் கொடியின் சிறுபகுதியைப் பறித்துச் சென்று தங்கள் வீட்டில் வைத்து எதிர்பார்ப்போடு வணங்குகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் பாப்பாத்தியம்மன் பற்றிய தொன்மம் வேறுமாதிரியிருக்கிறது. ஊரில் உள்ள கோயில் குருக்களின் பிள்ளை பாப்பாத்தியும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக வசிக்கும் கருப்பாயியும் உயிர்த்தோழிகளாக இருந்தார்கள். சிறு வயது முதல் பாகுபாடறியாமல் ஓடியாடித் திரிந்தார்கள்.
திடீரென ஊரில் பெரும் பஞ்சம். அன்றாடம் காய்ச்சிகளான கருப்பாயியின் குடும்பத்தால் அந்தப் பஞ்சத்தைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. காடு கரையென்று அலைந்து திரிந்து கிழங்கு களையும் செடிகொடிகளையும் பறித்துச் சாப்பிட்டும் பசியை விரட்ட முடியவில்லை. ஆடு, மாடுகளெல்லாம் மடிந்து விழுகின்றன. ‘இனிமேல் இந்த ஊரில் இருந்தால் உயிரே போய்விடும்’ என்று குடிபடைகளெல்லாம் பிழைப்பு தேடி இடம்பெயரத் தொடங்குகின்றன.
பாப்பாத்தியின் அப்பா, ‘வாழ்ந்தாலும் இறந்தாலும் இங்கிருக்கும் ஈசனுக்குத் தொண்டு செய்தபடியே நிகழட்டும்’ என்று ஊரைவிட்டு வர மறுக்கிறார். கருப்பாயி குடும்பத்துக்கு வேறு வழியில்லை.இருக்கும் சின்னச்சின்ன உடைமைகளை வண்டியிலேற்றிக் கொண்டு கிளம்ப யத்தனிக்கிறார்கள். கருப்பாயி அவர்களோடு வரமறுக்கிறாள். ‘பாப்பாத்தியோடு இந்த ஊரிலேயே இருந்துவிடுகிறேன்’ என்கிறாள்.
ஆனால் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. பாப்பாத்தி, கருப்பாயியைப் பிரியத் துணிவில்லாமல் கதறுகிறாள். வேறு வழியின்றி, இரண்டு தோழிகளும் பிரியா விடைபெறுகிறார்கள். வனம், மலை கடந்து கருப்பாயியின் குடும்பம் சேர நாடு நோக்கிப் பயணிக்கிறது. இரவு வருகிறது. இடையில் ஒரு சுனை... அதனருகே ஓர் ஆலமரம்... இந்த மர நிழலில் தங்கி இரவைக் கழித்துவிட்டுச் செல்லலாம் என்று தீர்மானிக்கிறார் கருப்பாயியின் அப்பா.

நடந்து வந்த களைப்பு... எல்லோரும் ஆழ்ந்து உறங்கிவிட்டார்கள். ஆனால் கருப்பாயிக்கு உறக்கம் வரவில்லை. பிழைப்புத் தேடி தன் கிராமம் விட்டுச் செல்லும் எந்தக் குடும்பமும் பிறிதொருமுறை மீண்டும் தன் கிராமத்துக்கு வருவதில்லை. பிழைக்கப்போன இடமே உலகமாகிவிடும். என்றால்... இனிமேல் பாப்பாத்தியைப் பார்க்கவே முடியாதா...? கருப்பாயி குழம்பித் தவிக்கிறாள். திடீரென எழுந்து வந்த வழியிலேயே, தன் கிராமம் நோக்கி ஓடுகிறாள்.

அங்கே பாப்பாத்தியின் நிலையும் அதுதான். தன் அன்புத்தோழியை இனி எங்ஙனம் பார்ப்பது..? அவளை மறக்கமுடியவில்லை. அவளும் அந்த இரவில் கிளம்பி தன் தோழி சென்ற பாதையில் ஓடி வருகிறாள். நீண்ட பயணத்தின் இறுதியில் இருவரும் ஓரிடத்தில் சந்திக்கிறார்கள். கண்ணீரில் நனைகிறது கானகம்.
மறுநாள், இரண்டு பெண்களையும் காணாமல் பெற்றோர் தேடியலைகிறார்கள். வழியிலிருக்கிற ஒரு பாழுங்கிணற்றில் பாப்பாத்தியும், கருப்பாயியும் உயிரற்றுக்கிடக்கும் செய்தி சென்று சேர்கிறது. ‘இருவரும் தெய்வப்பிறவிகள்’ எனத் தெரிந்து கொள்கிற உறவுகள் அவர்களுக்குப் பீடமெழுப்பி படையலிட்டு வணங்கத் தொடங்கினார்கள்.
பாப்பாத்தியம்மா குறித்து இப்படியொரு கதையும் உலவுகிறது.
தொன்மம் எதுவாயினும் பாப்பாத்தி இப்போது நம்பிக்கையின் வடிவம். அவள் தன் கனிந்த பார்வையின் வழி, சுனைநீரின் வழி, வெண்ணாங்கொடியின் வழி பெண்களின் உணர்வுகளோடு சங்கமிக்கிறாள்.
‘இனி உன் கவலைகளை நான் சுமப்பேன்... நிம்மதியாகப் போ’ என்று அரூபமாகத் தலைகோதி அனுப்பி வைக்கிறாள்.
பாப்பாத்தியிடம் தங்கள் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு நம்பிக்கையோடும், மன உறுதியோடும் வருகிற பெண்களுக்கு அவர்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறுகிறது. இந்த உளவியல்தான் கிராம தெய்வ வழிபாடுகளின் வேர்! அந்த வேர் எல்லா உயிர்களோடும் பிணைந்து கிடக்கிறது!
- மண் மணக்கும்...
வெ.நீலகண்டன், படங்கள்: ச.வெங்கடேசன்