Published:Updated:

காசிக்கு நிகரான பஞ்சமுக திருத்தலங்கள்!

காசிக்கு நிகரான பஞ்சமுக திருத்தலங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
காசிக்கு நிகரான பஞ்சமுக திருத்தலங்கள்!

காசிக்கு நிகரான பஞ்சமுக திருத்தலங்கள்!

காசிக்கு நிகரான பஞ்சமுக திருத்தலங்கள்!

காசிக்கு நிகரான பஞ்சமுக திருத்தலங்கள்!

Published:Updated:
காசிக்கு நிகரான பஞ்சமுக திருத்தலங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
காசிக்கு நிகரான பஞ்சமுக திருத்தலங்கள்!

தித்திக்கும் தீபாவளி என்றதும் நம் நினைவுக்கு வருவன, காசியும் கங்கையும்தான். ‘காசிக்குச் சென்று கங்கையில் நீராடி விசுவநாதரை தரிசிக்கவேண்டும்’ என்பது இந்துக்கள் ஒவ்வொருவரின் விருப்பமாகவும் லட்சியமாகவும் இருக்கும். ஆனால், போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலங்களில் காசி யாத்திரை என்பது பலருக்கும் சாத்தியப்படாத ஒன்றாகவே இருந்தது.

காசிக்கு நிகரான பஞ்சமுக திருத்தலங்கள்!

அதற்காக அவர்களுடைய விருப்பம் நிறைவேறாமல் போய்விடுவதா என்ன? கருணையே வடிவான ஈசன், அதற்கென்றே பல தலங்களில் காசிவிசுவநாதர் என்ற திருப்பெயருடன் கோயில்கொண்டு, தம்மை வழிபடும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அப்படியான தலங்களில் ஐந்து, நாகை மாவட்டம் - தரங்கம்பாடிக்கு அருகில் ஓம்கார வடிவில் அருகருகே அமைந்துள்ளன.

பொறையாறு தலத்தில் - ஈசான்ய வடிவம்; தேவானூரில் - தத்புருஷம்; தில்லையாடியில் - அகோரம்; ஒழுகைமங்கலத்தில் வாமதேவம்; கொட்டுப்பாளையத்தில் சத்யோஜாத அம்சம் என அருள்பாலிக்கிறார் ஈசன். இந்தத் தலங்கள் உருவாகக் காரணம்?

அதுபற்றி சிலிர்ப்புடன் விவரித்தனர், பொறையாறு காசிவிசுவநாதர் கோயிலின் நடராஜ குருக்களும் அவர் மகன் ராஜேஷ் குருக்களும். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காசிக்கு நிகரான பஞ்சமுக திருத்தலங்கள்!

‘`இந்தப் பகுதியை  நெய்தல் நிலம் என்கிறது நற்றிணை. இதை மெய்ப்பிப்பது போல், நாரைகளின் இறகுகளே நடராஜப் பெருமானின் கிரீடமாக திகழ்வதைக் காணலாம். முன்பொரு காலம் இங்கே மாற்று மதங்கள் தலையெடுக்கத் தொடங்கின. இந்தநிலையைக் கண்டு வருந்திய மன்னன் பெரியண்ணன், தேவசர்மா எனும் முனிவரை தரிசித்து வணங்கி, மறுபடியும் சைவம் தழைக்க  வழி சொல்லும்படி வேண்டினான். ‘காசிக்குச் சென்றால் தீர்வு கிடைக்கும்’ என்றார் முனிவர்.  அதன்படி, சிறு பரிவாரங்களுடனும் சில அந்தணர்களுடனும் காசிக்குச் சென்ற மன்னன், புனித கங்கையில் நீராடி, காசி விசுவநாதரை வழிபட்டான். தன் மனக்குறை நீங்க வழிகாட்டும்படி இறைஞ்சினான்.

அன்றிரவு அவன் கனவில் தோன்றிய சிவனார், ‘விடிந்ததும் நீ எம்முடைய ஐந்து திருமுகங்களின் அம்சமாக, ஒரே அளவில் ஐந்து சிவலிங்க மூர்த்தங்களை தரிசிப்பாய். அவற்றை எடுத்துச்சென்று  உன் நாட்டில் ஐந்து இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டால், சைவம் தழைக்கும். மேலும், அந்தத் தலங்களை தரிசிப்பவர்களுக்கு, காசியை தரிசித்த புண்ணியத்தைவிட அதிக புண்ணியம் கிடைக்கும்’ என்று அருளினார். 

காசிக்கு நிகரான பஞ்சமுக திருத்தலங்கள்!

சிவ வாக்கு பலித்தது. மறுநாள் ஐந்து சிவலிங்க மூர்த்தங்களைக் கண்டெடுத்த மன்னன்,  அவற்றைத் தனது நாட்டுக்குக் கொண்டுவந்து ஐந்து இடங்களில் பிரதிஷ்டை செய்தான்.  இந்த ஐந்து தலங்களையும் ஒன்றிணைத்தால் அவை ஓம்கார வடிவில் திகழும் அற்புதத்தைக் காணலாம். ஒரேநாளில் இந்த ஐந்து கோயில்களுக்கும் சென்று, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணத் தடை விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்’’  என்று சிலிர்ப்புடன் கூறினார்கள்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் ஐந்து கோயில்களுக்கும் நிலங்கள் மான்யமாக எழுதி வைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயில்களில், பொறையாறு கோயிலைத் தவிர, மற்றவை ஒரு கால பூஜைக்கும் வழியின்றி திகழ்கின்றன.

 பொறையாறு - ஈசான்ய தரிசனம்

உயர்ந்து நிற்கும் ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது காசி விசுவநாதர் ஆலயம். காசி விசுவநாதருடன், விசாலாட்சி அம்பிகை (ஐந்து தலங்களிலும் அம்பிகை விசாலாட்சி என்ற திருப்பெயருடனே அருள்கிறாள்) நடராஜர், சமயக்குரவர்கள் நால்வர் ஆகியோர் அருள்கிறார்கள். தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. பிரதோஷம், கிருத்திகை உள்ளிட்ட விசேஷங்களுடன், வைகாசி விசாக பிரம்மோற்சவம், ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக் களும் நடைபெறுகின்றன. 

காசிக்கு நிகரான பஞ்சமுக திருத்தலங்கள்!

ஆடிப்பூரத்தன்று அம்பாளுக்கு வளைகாப்பு அணிவித்தாலும், ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகப் பிரசாதத்தை உட்கொண்டா லும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். பங்குனி 12 முதல் 17-ம் தேதி வரை, சுவாமியின் திருமேனியில் கதிரவன் தன் கிரணங்களைப் பரப்பி வழிபடுவது இக்கோயிலின் விசேஷம்.

தேவானூர் - தத்புருஷ தரிசனம்


காவிரியின் கிளை நதிகளான நண்டலாறு மற்றும் வீரசோழன் ஆறுகளுக்கு நடுவில் அமைந்திருக்கிறது தேவானூர் காசி விசுவநாதர் கோயில். கடந்த 2014-ம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றதால், ஆலயம் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. இந்தக் கோயிலில் குருபகவான் ஞானகுருவாகப் போற்றப்படுகிறார்.

‘`இந்தக் கோயிலுக்கு வந்து சுவாமி, அம்பாளை வழிபடுபவர்களுக்கு அனைத்து தோஷங்களும் விலகி, காரியங்களில் வெற்றி உண்டாகும். ஆதியில் இந்தத் தலத்தில் இந்திரன் குரு பகவானை வழிபட்டு வரம்பெற்றதாக ஐதீகம். இதையொட்டி, மாசி மாதம் 3-வது வியாழக் கிழமை குருபகவானுக்கு விசேஷமான பூஜைகள் நடைபெறும். குருப்பெயர்ச்சி வைபவமும் இங்கே விசேஷம்'' என்கிறார், கோயில் அர்ச்சகர் கல்யாணசுந்தர குருக்கள்.

காசிக்கு நிகரான பஞ்சமுக திருத்தலங்கள்!

தில்லையாடி - அகோர தரிசனம்

தில்லையாடிக்குச் சென்று காசி விசுவநாதர் கோயில் எங்கிருக்கிறது என்று கேட்டால், ஊரில் பலருக்கும் தெரியவில்லை. முதியவர் ஒருவர் பொத்தாம்பொதுவாக ஓர் இடத்தைக் குறிப்பிட்டார். பெரும் தேடலுக்குப் பிறகு, மகிமலை ஆற்றங்கரையில், அடர்ந்த முட்புதர் களுக்கு இடையே சுமார் 2 பர்லாங் தூரம் சிரமத்துடன் நடந்து சென்று, கோயிலைக் கண்டோம். கோபுர வாசல் எப்போது இடிந்து விழுமோ என்பதுபோல் காட்சி தருகிறது!

கருவறையில் சுவாமி, அம்பாளுடன் மேலும் பல தெய்வத் திருமேனிகள் வரிசையாகக் காட்சி தருகின்றன. சரியான வெளிச்சம் இல்லாத காரணத்தால் தெய்வத் திருமேனிகளைத் தெளிவாக தரிசிக்க முடியாத நிலை.

அமாவாசைதோறும் இந்தக் கோயிலுக்கு வந்து பூஜை செய்கிறார், அர்ச்சகர் சுப்ரமண்யம்.  அவரிடம் பேசினோம்.

‘`இந்தக் கோயில் ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் வருகிறது. அறநிலையத்துறை தரும் பணம்  மாதத்துக்கு 232 ரூபாய்தான். அதில்தான் எண்ணெய், திரி, கற்பூரம், சந்தனம் எல்லாம் வாங்கவேண்டும்; பூஜை செய்யவேண்டும். எப்படி முடியும்? எனக்கு  81 வயசாகிவிட்டது. இந்த அடர்ந்த காட்டில் என்னைப் பாம்பு தீண்டினால்கூட இறைவன்தான் காப்பாற்ற வேண்டும். பல ஏக்கர் சொத்து இருந்தும் இறைவனின் கோயில் இந்த நிலைமையில் இருப்பது, மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. அனைவரும் சேர்ந்து இந்தக் கோயிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்தால் ஊருக்கும் நாட்டுக்கும் நல்லது’’ என்று மிகுந்த ஆதங்கத்துடனும் வருத்தத்துடனும் கூறினார்.

ஒழுகைமங்கலம் - வாமதேவ தரிசனம்

ஒழுகைமங்கலத்தில் பிரதான சாலையிலேயே அமைந்திருக்கிறது காசிவிசுவநாதர் கோயில். கருங்கற்களால் கட்டப்பட்ட சுவாமி, அம்பாள் சந்நிதிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. இரண்டு சந்நிதிகளையும் இணைத்து தற்காலிக ஷெட் ஒன்று அமைத்திருக்கிறார்கள். இந்தக் கோயிலைப் பற்றி பாலாஜி குருக்கள் அற்புதமான தகவலைப் பகிர்ந்துகொண்டார். 

காசிக்கு நிகரான பஞ்சமுக திருத்தலங்கள்!

``இந்தக் கோயிலை மையமாக வைத்துதான் மற்ற நான்கு கோயில்களும் எழும்பினவாம். ஐந்தையும் ஒன்றிணைத்தால் ஓம்கார அமைப்பாகத் திகழும். அதுமட்டுமல்ல, ஐந்தெழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில் இந்த ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்த ஆலயம் ஆடி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் மாலை வேளையில் சூரியக் கதிர்கள் சுவாமியின் திருமேனியில் படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

சிதிலமடைந்த ஆலயங்களைப் புனரமைத்து, பக்தர்கள் சிரமங்களின்றி ஒரேநாளில் ஐந்து தலங்களையும் தரிசித்து வழிபட, வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.  முற்காலத்தில், இந்தப் பகுதியில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும், அதனைத் தடுக்கும் ஆற்றல்  இந்த ஐந்து கோயில்களுக்கும் இருந்ததாகவும் சொல்கிறார்கள். எனவே, சிதிலமடைந்திருக்கும் காசி விசுவநாதர் கோயில்களை புனரமைக்க வேண்டியது அவசியம்’’ என்றார் பாலாஜி.

கொட்டுப்பாளையம் - சத்யோஜாத தரிசனம்!

கொட்டுப்பாளையம் காசி விசுவநாதர் கோயிலின் நிலைமை இன்னும் பரிதாபம். பிரதான கோபுரம் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது; மணல் மூட்டைகளை அடுக்கி முட்டுக் கொடுத்துள்ளனர். தற்போது, ஓய்வு பெற்ற ஆசிரியையான வனஜா குடும்பத்தினர் கொடுத்த பெருமளவு நிதியுதவி மற்றும் ஊர்மக்களின் நிதியுதவியுடன் கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அதிலும் ஒரு சிக்கல்! 

காசிக்கு நிகரான பஞ்சமுக திருத்தலங்கள்!

இது குறித்து நம்மிடம் பேசிய வனஜா, ‘`கோயில் கோபுரத்தை மணல் மூட்டைகளால் மூடியது ஆகம விதிப்படி தவறு. நாங்கள் புதிய கோபுரம் கட்டிக்கொள்கிறோம். மணல் மூட்டைகளை அகற்றி, கோபுரத்தையும் இடித்துத் தாருங்கள் என்று அறநிலையத்துறையினரிடம் பலமுறை முறையிட்டுவிட்டோம். ஆனால், ஒவ்வொருவரும் தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி நழுவத்தான் பார்க்கிறார்கள்.

இதுவரை 25 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறோம். மேலும் 25 லட்சம் ரூபாய் செலவு செய்யவும் தயாராக இருக்கிறோம். அறநிலையத்துறை உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. எங்கள் வேண்டுகோளை ஏற்று, மணல் மூட்டைகளை அகற்றி, சிதிலமடைந்த கோபுரத்தை இடித்துத் தந்தாலே போதும்'' என்கிறார்.

சிவனருள் கைகூடும்; விரைவில் அவரின் திருவருளால் ஆலயங்கள் பொலிவு பெறும். நாமும் நம்மால் இயன்ற பணிகளைச் செய்வோம். முன்னதாக, பஞ்சாட்சரன் அருளும் இந்த ஐந்து ஆலயங்களுக்கும் ஒருமுறை சென்று தரிசித்து, ஐயனின் அருளைப் பெற்று வருவோம்.

மு.இராகவன் - படங்கள்: க.சதீஷ்குமார்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism