மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா - தீர்த்தம்... இடமாற்றம்... அச்சம்!

நாரதர் உலா - தீர்த்தம்... இடமாற்றம்... அச்சம்!
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா - தீர்த்தம்... இடமாற்றம்... அச்சம்!

படங்கள்: புவநிதின்

`திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயில் அறக்கட்டளை சார்ந்த சொத்து விவரங்களை இந்து சமய அற நிலையத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றவேண்டும் - உயர்நீதி மன்றம் உத்தரவு’

நாரதர் உலா - தீர்த்தம்... இடமாற்றம்... அச்சம்!

செய்திச் சேனல்களில் பிரேக்கிங்  நியூஸ் வெளியாகிக்கொண்டிருக்க,  கையில் தண்ணீர் பாட்டிலை ஏந்தியபடி, நாராயண நாம முழக்கத் துடன் பிரவேசித்தார் நாரதர். உரிமையோடு தேநீர் கொண்டு வரச் சொல்லி, வாங்கி பருகியபடியே சிறிது நேரம் செய்திகளில் லயித்தவர், பின்னர் லேசாக தொண்டையைச் செருமி நமக்குக் கவன ஈர்ப்பு செய்தார்.

‘‘தீர்ப்பைப் பார்த்தீரா...?’’ என்றோம்.

‘‘எப்படியோ... கோயில்களுக்கும் அதன் சொத்துகளுக்கும் விடிவு காலம் பிறந்தால் நல்லதுதானே’’ என்றவர், கையிலிருந்த பாட்டிலை நம்மிடம் நீட்டினார்.

‘‘இதென்ன...’’ என்று நாம் கேட்டு முடிப்பதற்குள், ‘‘தீர்த்தப் பிரசாதம்... பவ்யமாகப் பெற்றுக்கொள்ளும்’’ என்று கேலித் தொனியுடன் தண்ணீர் பாட்டிலை நம்மிடம் ஒப்படைத்தார். நாம், அதை என்ன ஏதென்று ஆராய்ந்துகொண்டிருக்கும்போதே பேச  ஆரம்பித்தார் நாரதர்.

‘‘என்னவோய்... தீர்த்தப் பிரசாதத்தைக் கொடுத்தால், இப்படி சந்தேகத்துடன் ஆராய்ந்து கொண்டிருக்கிறீரே?’’

‘‘பார்த்தால் அப்படித் தெரியவில்லையே...’’ என்று நாம் இழுக்க,  பெரிதாக சிரித்த நாரதர், ‘‘கண்டுபிடித்து விட்டீரே... அது, நான் பக்கத்துக் கடையில் வாங்கிய தண்ணீர் பாட்டில்தான். லேபிளைக் கிழித்துவிட்டு, தீர்த்தம் என்று சொல்லிக் கொடுத்தால் ஏற்றுக் கொள்வீரா மாட்டீரா என்று சோதித்துப் பார்த்தேன். ஆனால், நீர் கில்லாடிதான்! உம்மைப் போன்று எல்லோரும் இருந்துவிட்டால் பிரச்னையே இல்லை...’’ என்று நாரதர் சொல்ல, ஏதோவொரு விஷயத்துக்கு முன்னோட்டம் கொடுக்கிறார் என்று புரிந்தது நமக்கு. அதை அவரே சொல்லட்டும் என்று அமைதி காத்தோம். நாரதர் தொடர்ந்தார். 

நாரதர் உலா - தீர்த்தம்... இடமாற்றம்... அச்சம்!

‘‘கொடைக்கானல் அருகிலுள்ளது பூம்பாறை கிராமம். இங்குள்ள  அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயில் பிரசித்திபெற்றது. கொடைக்கானலுக்குச் சுற்றுலாவாக வரும் அன்பர்களில் பெரும் பாலானோர், இந்தப் பூம்பாறை முருகனையும் தரிசிக்கச் செல்வார்கள். அப்படி,கோயிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரிக்க, உள்ளூர் மக்களின் வருகையும் அதிகரித்தது.

இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட கோயிலின் காவலாளி ஒருவர்,  ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்களில் குழாய்த் தண்ணீரைப் பிடித்து வைத்துக்கொண்டு, முருகனின் தீர்த்தம் எனக்கூறி பக்தர்களிடம் விற்பனை செய்கிறாராம். ஒரு பாட்டில் 200 ரூபாய்! நம் நண்பர்கள் மூலம் விஷயத்தைக் கேள்விப்பட்டு பூம்பாறைக்குச் சென்றேன். அங்கே சென்றபிறகு வேறொரு விஷயமும் தெரியவந்தது...’’

‘‘அதென்ன விஷயம்...’’

‘‘அந்தப் பகுதியில் வெள்ளைப்பூண்டு அதிகம் விளையும். ஆக, வெள்ளைப்பூண்டுகளை கட்டுக் கட்டாக வாங்கி வந்து, முருகனின் அபிஷேக வெள்ளைப்பூண்டு எனக் கூறி, ஒரு கட்டுக்கு 500 ரூபாய்  விலை வைத்து விற்று வருகிறார் அந்தக் காவலாளி என்பது தெரிய வந்தது. அதேபோல், முருகனுக்கு அனுதினமும் சமர்ப்பிக்கப்படும் வஸ்திரங்களையும் ஆயிரம் இரண்டாயிரம் என்று விலை வைத்து விற்பனை செய்து வருகிறாராம் அந்த நபர். பாவம்... பக்தர்கள் அவர் சொல்வதை உண்மை என்று எண்ணி, அவற்றை வாங்கிச் செல்கிறார்கள்’’

நாரதர் உலா - தீர்த்தம்... இடமாற்றம்... அச்சம்!‘`எவருக்குமே இதுகுறித்து சந்தேகம் வரவில்லையா?’’

‘`உள்ளூர் பக்தர்கள் சிலருக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களில் ஒருவர் மூலம்தான் நமக்கும் தகவல் கிடைத்தது. இந்த விஷயம் குறித்து, இந்து அறநிலையத் துறைக்கும், பழநி முருகன் கோயில் இணை ஆணையருக்கும் விரிவாக-விளக்கமாக புகார் மனுவும் அனுப்பினார்களாம். ஆனாலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்கள், அப்பகுதி மக்கள்’’

‘‘நீர் கோயில் தரப்பில் பேசினீரா?’’

நமது கேள்விக்கு, ‘‘பேசினோம். `விரைவில் தீர்வு காணப்படும்’ என்ற வழக்கமான பதிலே கிடைத்தது!’’ என்று பதில் சொன்னவர், ``அடுத்து கூறப்போவதும் தீர்த்தப் பிரச்னை தொடர்பானதுதான்’’ என்று முன்னோட்டம் கொடுத்துவிட்டு ஆரம்பித்தார்.

‘`ராமேசுவரம் அருள்மிகு ராமநாத ஸ்வாமி திருக்கோயிலைப் பற்றியும் தீர்த்தங்களிம் மகிமை பற்றியும் நன்கு அறிந்திருப்பீர். அந்தத் தலத்தின் 22 புனித தீர்த்தங்களிலும் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்வதைப் பெரும் புண்ணிய காரியமாகக் கருதுவார்கள் பக்தர்கள். சமீப காலமாக கூட்டம் அதிகம் வருவதாலும் குறிப்பிட்ட சில தீர்த்தக்கட்டங்கள் குறுகலான இடங்களில் அமைந் துள்ளதாலும், பக்தர்கள் தீர்த்தமாடுவதில் சிரமங்கள் ஏற்பட்டன. இதையொட்டி பக்தர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாரதர் உலா - தீர்த்தம்... இடமாற்றம்... அச்சம்!

மகாலட்சுமி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், காயத்திரி தீர்த்தம் மற்றும் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள சங்கு, சக்கர தீர்த்தம் ஆகியவற்றை கோயிலின் வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ரூ.30 லட்சம் செலவில், அதற்கான பணிகள் தொடங்கி முடிவடைந்தன. கோயிலின் 2-ம் பிராகாரத்தின் வடக்குப் பகுதியில் புதிதாக 5 தீர்த்தக் கிணறுகள் அமைக்கப்பட்டன. கடந்த 27.10.18 (சனிக்கிழமை) அன்று தீர்த்த பிரதிஷ்டையின் பொருட்டு `பிள்ளையார்பட்டி திருக்கோயில்’ சிவாசார்யர் பிச்சைக் குருக்களின் தலைமையில், கணபதி ஹோமத் துடன் பூஜைகள் தொடங்கின.’’

‘`புராதனமான பழைய தீர்த்தங்களை மாற்றக்கூடாது என்று பலரும் கண்டனம் தெரிவித்திருந்தார்களே?’’

நமது இந்தக் கேள்விக்கு விரிவாகவே பதிலளித்தார் நாரதர்.

‘`ஆமாம்! தீர்த்தங்களை மாற்றக்கூடாது என அனைத்துக்கட்சிகள் சார்பில், கோயில் இணை ஆணையரிடமும் மனு அளிக்கப்பட்டு, அதுகுறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்றதாம். ஆனாலும் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியாக வேண்டும் என்பதால், யாகசாலை பூஜைகள் முதற்கொண்டு அனைத்தும் விரைவாக நடத்தப்பட்டனவாம்.

கடந்த 28-ம் தேதி காலையில், 2-ம் கால யாகசாலை பூஜை முடிந்ததும், 6 கலசங்களில் புனித நீரை எடுத்துச் சென்று, புதிதாக அமைக்கப்பட்டுள்ள தீர்த்தக் கிணறுகளில் ஊற்றி, பக்தர்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்திருக்கவேண்டும். அன்றைய தினம், ஐந்து தீர்த்தங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன. ஆனால், மகாலட்சுமி தீர்த்தம் மட்டும் மூடியே வைக்கப்பட்டுள்ளது.

‘`மகாலட்சுமி தீர்த்தத்தைத் தவிர்க்கக் காரணம் என்னவாம்? இதுகுறித்து கோயில் தரப்பில் விசாரித்தீரா?’’

‘`கோயிலின் இணை ஆணையர் மங்கையர் கரசியிடம் இதுபற்றி கேட்டோம். ‘எனக்கும் மற்ற ஊழியர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என்பதாலும், தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாலும் முதல் கட்டமாக ஐந்து தீர்த்தங்கள் மட்டும் மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. உரிய பாதுகாப்புடன், மகாலட்சுமி தீர்த்தமும் விரைவில் மாற்றப்படும்’ என்கிறார் அவர்’’

‘`ஐந்து தீர்த்தங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து விட்ட நிலையில், குறுப்பிட்ட ஒரு தீர்த்தத்தை மாற்றுவதில் அச்சுறுத்தல்  என்பது ஏற்கும்படி இல்லையே! தவிர, அரசு அதிகாரிக்கே அச்சுறுத்தல் எனில்... எவ்வகையில், யாரிடமிருந்து?’’

``அதுபற்றியே நானும் விசாரித்துக்கொண்டி ருக்கிறேன். விரைவில் பகிர்ந்துகொள்கிறேன்’’ என்ற நாரதர், மீண்டும் செய்திச் சேனல்களில் மூழ்கிப்போனார்!

- உலா தொடரும்...

படங்கள்: உ.பாண்டி