Published:Updated:

அன்பே தவம்! - 3

அன்பே தவம்! - 3
பிரீமியம் ஸ்டோரி
அன்பே தவம்! - 3

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படங்கள் கே.ராஜசேகரன்

அன்பே தவம்! - 3

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படங்கள் கே.ராஜசேகரன்

Published:Updated:
அன்பே தவம்! - 3
பிரீமியம் ஸ்டோரி
அன்பே தவம்! - 3

திருக்கோயிலில் எழுந்தருளி யிருக்கும் இறைவன் அன்பே வடிவானவன். அதனால்தான் அன்பால் அவனைக் காண அடியார்கள் முயற்சி செய்தார்கள். திருப்பனந்தாள் திருக்கோயிலில் தாடகை என்கிற பிராட்டியார் இறைவனை வழிபட நினைத்தார். இறைவனுக்குப் பூ மாலை சூட்ட முயன்றார். அந்த நேரத்தில் அவரின் ஆடை நெகிழ்ந்தது. அது நெகிழக் கூடாது என்று அவர் மானம் காக்க, இறைவனின் திருமேனி வளைந்து கொடுத்தது. அப்படி வளைந்த திருமேனியை நிமிர்த்த முடியவில்லை. அன்றைய சோழப் பேரரசு யானையைக் கட்டி இழுத்துப் பார்த்தது. நிமிர்த்த முடியவில்லை. ஆனால், குங்கிலியக் கலையர் என்கிற தொண்டர், தன் கழுத்தில் பூமாலையைச் சூட்டிக்கொண்டு, மறுபுறத்தில் ஒரு பூமாலையை இறைவனுக்குச் சூட்டி அதைப் பிணைத்து இழுத்தார். அன்பால் கட்டுண்ட இறைவனின் திருமேனி நிமிர்ந்துவிட்டது. அன்பால் வளைந்த அந்தப் பேரான்மா, அன்புக்காக நிமிர்ந்து நின்றது. 

அன்பே தவம்! - 3

அன்பு ஒன்றுதான் இறைவனை வழிபடுகிற அடையாளம். திண்ணனார், இறைவனுக்கு ஆகாத புலாலை நைவேத்தியமாகப் பயன்படுத்தினார். தன் எச்சிலால் அபிஷேகம் செய்தார். தொண்டையில் செருகிய மலர்களால் பூசனை செய்தார். இவையெல்லாம் இறைவனுக்கு உவப்பாகவே இருந்தன. எதனால்? அந்தப் பூசனை அன்பு வழிப்பட்டது என்பதால். இறைவன் அந்த அன்பை உலகத்துக்கு நிரூபிக்க தன் ஒரு கண்ணில் குருதியை வழியச் செய்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்பே தவம்! - 3அந்த வேடுவர் பதறிப் போனார். ஓடினார். பச்சிலைகளைக் கொண்டு வந்து வைத்தியம் பார்த்தார். வழிகிற ரத்தம் நின்றபாடாக இல்லை. இப்போது தன் கண்ணையே பெயர்த்தெடுத்து, இறைவனின் ரத்தம் வழிகிற கண்ணில் அப்பினார். ரத்தம் வழிவது நின்றது. திண்ணனாருக்கு ஆனந்தம். அறுவை சிகிச்சையில் பலன் கிடைத்த ஆனந்தம். உலகத்தில் முதல் கண் மாற்று அறுவை சிகிச்சை நடத்தியவர், கண்ணப்பர் என்கிற திண்ணனார். சிகிச்சை செய்துகொண்டவர் கடவுள். திண்ணனாரின் அறுவை சிகிச்சை அன்புவழிப்பட்டது. அந்த அன்பை நிரூபிக்க, ஆண்டவன் மற்றொரு கண்ணிலும் ரத்தம் வழியச் செய்தார். திண்ணனார் தன் மற்றொரு கண்ணையும் பெயர்த்தெடுத்து, கண்ணில் அப்ப முயல்கிற நேரத்தில், `கண்ணப்ப நிற்க... கண்ணப்ப நிற்க’ என்று இறைவன் தடுத்தாட்கொண்டார்.

ஒரு கண்ணை இரவலாகப் பெற்றார் இறைவன். ஆனால், மற்றொரு கண்ணைப் பெறுவதில் தயக்கம். தடுத்து நிறுத்திவிட்டார். ஏன்? முதலில் கண்ணப்பரின் கண்ணைப் பெற்றபோது, இறைவனின் கண் இயல்பாக இருந்தது. இப்போது இரவலாகப் பெற்றிருந்ததோ கண்ணப்பரின் கண். அந்தக் கண்ணுக்கு இன்னோர் உயிர் துன்பப்படுவதைப் பார்ப்பதற்கு மனம் பொறுக்கவில்லை. இந்த வழிபாட்டு நெறியை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அன்புதான் வழிபாட்டின் அடித்தளம். எறும்புகள்கூட இறைவனைப் பூசித்திருக்கின்றன. யானைகள் வழிபட்டிருக்கின்றன. எறும்புகள் பூஜை செய்த திருத்தலம்தான் திருஎறும்பியூர். யானைகள் இறைவனுக்குப் பூஜை செய்த தலம் திருஆனைக்காவல். எல்லா உயிர்களும் அன்பின் அடித்தளத்தில் இறைவனை வழிபட்டிருக்கின்றன.

காசிக்குப் போகிறோம்.கங்கையில் குளிக்கிறோம். பாவங்களைத் தொலைக்கிறோம். ஊருக்கு வந்தவுடன், `இன்னமும் பக்கத்துவீட்டுக்காரன் நன்றாகத்தான் இருக்கிறானா?’ என்று கேட்டால், நம் இதயத்தில் ஆனந்தமில்லை, அருள் தன்மையில்லை என்று பொருள். எல்லா நிலைகளிலும் பிறரை நேசிக்கிற உணர்வு நம் வழிபாட்டில் வேண்டும். இதை எல்லாச் சமயங்களுமே வலியுறுத்தியிருக்கின்றன.

விவிலியம் தெளிவாகச் சொல்கிறது... `எரிப்பதற்கே என்னுடலைக் கையளித்தபோதும் அன்பு எனக்கில்லையேல் நான் ஒன்றுமே இல்லை.’ 

அன்பே தவம்! - 3

`காணிக்கை பீடத்தருகே, காணிக்கையைச் செலுத்த வருகிறபோது உன் சகோதரனோடு ஏற்பட்ட சண்டை நினைவுக்கு வருமேயானால், முதலில் உன் சகோதரனோடு சமரசம் செய்துவிட்டு வா. பிறகு காணிக்கையைச் செலுத்து’ என்பதும் விவிலியம் கூறும் வாசகம்தான்.

இதயத்துடிப்பு நின்றுபோனால், `உயிர் விடைபெற்றுவிட்டது’ என்பார்கள். சுவாசித்தல் நின்றுபோனால், `உயிர் பறந்துவிட்டது’ என்பார்கள். உலகின் சிறந்த உளவியல் மருத்துவர், வான்புகழ் வள்ளுவர் சொன்னார்... `நம் உயிர் அன்பில் இருக்கிறது. அன்பின் வழியது உயிர்நிலை.’

திருமந்திரம் சொல்கிறது...
`அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே.’

அன்புதான் சிவம். சிவம்தான் அன்பு. அந்தப் பண்பட்ட நிலையைத்தான் நம் சமய வாழ்க்கையில் பார்க்கிறோம். அதனால்தான் நம் முன்னோர்கள் ஆன்மிக வாழ்வுக்கு எல்லாவற்றையும் அர்ப்பணித்தார்கள்.

தென்காசியில் பிரமாண்டமான கோயிலை எழுப்பிவிட்டு, அதற்குக் கீழே பராக்கிரம பாண்டியன் கல்வெட்டில் எழுதிவைத்தான்... அது கல்வெட்டல்ல, அவன் கையெழுத்து. `எதிர்காலத்தில் இந்தக் கோயிலில் ஒரு சின்னக் குறை ஏற்படுமேயானால், யார் அதைத் தீர்க்கிறார்களோ, ஒரு கல் விழுந்தால் யார் அதை எடுத்துவைக்கிறார்களோ அவர் பாதங்களை என் தலை தாங்கும்.’

சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களைப் பிடிக்க முடியாத நிலையில் ஆங்கில ஏகாதிபத்தியம் பிரகடனம் செய்தது... `மருது சகோதரர்கள் சரணடைய வில்லையென்றால், காளையார்கோவில் ராஜ கோபுரத்தை வெடிவைத்துத் தகர்ப்போம்.’

ஆட்சி போனதற்கு, அதிகாரம் தொலைந்ததற்குக் கவலைப்படாமல், மனைவி, மக்களைத் தொலைத்துவிட்டு கானகத்தில் வாழ்க்கை நடத்திய மருது சகோதரர்கள் திருக்கோயிலை இழக்கத் தயாராக இல்லை. தங்களைத் தந்து, ராஜகோபுரத்தை மீட்டார்கள். இன்றைக்கும் கண்களில் நிழலாடும் காளையார்கோவில் ராஜகோபுரம் மருது சகோதரர்களைத்தான் நினைவுபடுத்துகிறது.

ஒருமுறை மருது சகோதரர்கள் காளையார்கோவிலுக்கு ஒரு ரதம் செய்ய ஆசைப்பட்டார்கள். அதற்காக குப்பமுத்து ஆசாரி என்பவரை அணுகினார்கள். 

அன்பே தவம்! - 3

`இப்போது நான் கலைத் தொழிலை விட்டுவிட்டேன்’ என்றார் ஆசாரி.

`ஏன்?’

`நம் கருவூலங்கள் களவாடப்படுகின்றன. ஆங்கில ஏகாதிபத்தியம் எல்லாவற்றையும் கொண்டு செல்கிறது. அதனால் என் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டேன்.’

பெரிய மருது விடவில்லை. அவருடைய நிர்பந்தத்துக்குப் பிறகு ஆரூடம் போட்டுப் பார்த்தார் குப்பமுத்து ஆசாரி. மீண்டும், `செய்ய முடியாது’ என்று மறுத்தார். `என்ன கேட்டாலும் தருகிறேன்’ என்று வற்புறுத்தினார் பெரிய மருது.

`பேச்சு மாறக் கூடாது’ என்று சொல்லிவிட்டு ரதம் செய்ய ஆரம்பித்தார் குப்பமுத்து ஆசாரி. ரதம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு முடிந்தது. அந்த அற்புத ரதம் வெள்ளோட்டம் விடுகிற தினம். ஆனால், ரதம் நகராமல் அப்படியே நின்றுகொண்டிருந்தது.

`ஏன் ரதம் ஓடவில்லை?’ பெரிய மருது கேட்டார்.

`நீங்கள் எனக்குக் கூலி தரவில்லை. அதனால் ரதம் நின்றுவிட்டது’ என்று குப்பமுத்து ஆசாரி சொன்னார்.

`என்ன கூலி வேண்டும்?’

தயங்கித் தயங்கி ஆசாரி சொன்னார்... `ரதம் ஓடுகிற இந்த வேளையில் நான்தான் இந்த நாட்டு மன்னனாக இருக்க வேண்டும்.’

இதைக் கேட்டு கோபத்தில், சின்ன மருது உடைவாளை உருவிக்கொண்டு ஆசாரியின் மேல் பாயப் போனார். பெரிய மருது, அவரைத் தடுத்து நிறுத்திவிட்டு, செங்கோலையும் அரச மகுடத்தையும் குப்பமுத்து ஆசாரிக்கு அணிவித்து தேரின் மேல் ஏற்றிவிட்டு, வெறுங்காலோடு நடந்து போனார். தேர் சில அடிகள்தான் நகர்ந்திருக்கும். தேரின் மேலேயிருந்த குப்பமுத்து ஆசாரி, கீழே விழுந்து ரதக் காலில் அடிபட்டு, குற்றுயிரும் குலையுயிருமாக உயிருக்குப் போராடினார்.

பெரிய மருது அவரைத் தூக்கித் தன் மடியில் கிடத்தினார். உயிர் போகிற தறுவாயில் குப்பமுத்து ஆசாரி, `இந்த ரதம் வெள்ளோட்டம்விடுகிற நேரத்தில், இந்த நாட்டு மன்னனின் உயிருக்கு ஆபத்து’ என்று ஆரூடம் சொன்னது. அதனால்தான் ரதம் செய்வதற்கு நான் மறுத்தேன். ஆனால், நீங்கள் என்னை நிர்பந்தித்தீர்கள். அதனால், என் உயிரைக் கூலியாகக் கொடுத்து இந்த ரதத்தை ஓட்டியிருக்கிறேன்’ என்று சொல்லி மருதுவின் மடியில் உயிரைவிட்டார்.

ஒரு நாட்டின் தலைவன், `நம் நாட்டின் கலை, ஆன்மிகம் பெரிது’ என்று தன் பதவியைத் துறந்தான். ஒரு கலைஞன் `இந்த நாட்டின் கலை, ஆன்மிகம் பெரிது’ என்று தன் உயிரையே தியாகம் செய்தான்.

நம் சமய வாழ்க்கை கோயிலைத் தழுவிய குடிகள்; குடிகளைத் தழுவிய கோயில் என்று வாழ்ந்த நெறிமுறை. அந்த வாழ்க்கை முறை நம் மண்ணில் நனவாக வேண்டும். அதை நோக்கி நம் ஆன்மிகம் பயணிக்க வேண்டும்.

(புரிவோம்…)

அன்பே தவம்! - 3

எது வலிமை?

திருக்குர்ஆனில் அருமையான ஒரு சம்பவம் உண்டு.

``அளவற்ற அருளாளனே, நிகரற்ற அன்புடையோனே, உமது படைப்பில் வலிமை வாய்ந்தது எது?’’என்று இறைவனின் தூதர்கள் கேட்பார்கள்.

முதலில், `இந்த பூமிதான் உமது படைப்பில் வலிமை வாய்ந்ததா?’ என்று கேட்பார்கள்.

இதைக் கேட்டவுடனேயே பூமிப்பந்து அதிர்ந்து, நடுங்க ஆரம்பிக்கும். உடனே கனமான மலைப் பாறைகளை அதன் மேல்வைப்பார் இறைவன். நடுக்கம் நின்றுவிடும்.

உடனே இறைத் தூதர்கள், `இறைவா, உமது படைப்பில் மலைகள்தான் வலிமை வாய்ந்தவையா?’ என்று கேட்பார்கள்.

`ஏன்... மலையைச் செதுக்குகிற இரும்பு உளி இருக்கிறதே!’

`இரும்புதான் உம்முடைய படைப்பில் வலிமை வாய்ந்ததா?’

`இரும்பை உருக்குகிற நெருப்பு இருக்கிறதே...’

`நெருப்புதான் உம் படைப்பில் வலிமையானதா?’

`நெருப்பை அணைக்கக்கூடிய தண்ணீர் இருக்கிறதே...’

`தண்ணீர்தான் உம் படைப்பில் வலிமை வாய்ந்ததா?’

`தண்ணீரைக் கலங்கச் செய்கிற காற்று இருக்கிறதே!’

இப்போது இறைவனே சொல்வார்... `எவர் அண்டை அயலாரின் துன்பம் கண்டு, தானே ஓடிச் சென்று வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் உதவுகிறார்களோ அவர்தான் என் படைப்பில் வலிமை வாய்ந்தவர்.’

ஓவியம்: ரமணன்