Published:Updated:

அன்பே தவம் - 4

அன்பே தவம் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம் - 4

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்படங்கள் கே.ராஜசேகரன்

தீப ஒளித் திருநாள் முடிந்துவிட்டது. வண்ணமயமான மத்தாப்பு வெளிச்சம், காது பிளக்கும் வெடிச் சத்தங்களோடு உலா வந்தோம். மகிழ்ச்சியில் திளைத்தோம். கிருஷ்ண பரமாத்மா, நரகாசுரன் என்ற அரக்கனை அழித்ததன் அடையாளம்தான் தீப ஒளித் திருநாள்; இருள் அகல்கிற திருநாள். நரகாசுரனை பரமாத்மா அழித்துவிட்டார். ஆசை, கோபம், பொறாமை முதலிய அரக்கர்கள் நம் இதயத்துக்குள் எப்போதும் குடியிருக்கிறார்களே... நம் மனதுக்குள் ஒரு விலங்கு உணர்வு எப்போதும் தூங்கிக் கொண்டிருக்கிறதே... எண்ணிப் பார்க்கிறோமா? 

அன்பே தவம் - 4

காட்டு வழியே ஒரு துறவி போய்க்கொண்டிருந்தார். கையில் ஓர் ஊன்றுகோல். அதைக் கொண்டு பாதையில் தட்டிக்கொண்டே போனார். வழியில் ஓரிடத்தில் `நங்’கென்று ஒரு சத்தம் கேட்டது. மீண்டும் தட்டினார். அதே சத்தம். ஊன்றுகோலால் கிளறிப் பார்த்தார். ஒரு பழைய மண் கலயம் தட்டுப்பட்டது. மண் கலயத்தை மூடியிருந்த துணியை விலக்கினார். அந்தப் பானைக்குள் இருந்த அத்தனையும் தங்கக் காசுகள். 

அதைப் பார்த்தவுடனே துறவி, `ஐயய்யோ... ஆட்கொல்லி, ஆட்கொல்லி...’ என்று சொன்னபடி தலைதெறிக்க ஓடினார். தங்கக்காசுகளைப் பார்த்தவுடன் சலனப்படாமல், அதன் மேல் ஆசைப்படாமல், `ஆளைக் கொல்வது...’ என்று சொன்னபடி அவர் ஓடியது சற்று நேரத்தில் உண்மையானது.

அன்பே தவம் - 4அவர் ஓடிப்போன சிறிது நேரத்தில் இரு இளைஞர்கள் வந்தார்கள். அவர்களின் பார்வையில் அந்தப் புதையல் பட்டது. இருவர் கண்களும் வியப்பால் விரிந்தன. ஆசையோடு அதை வாரி எடுத்தார்கள். பிறகு, பரஸ்பரம் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். பகல் முழுவதும் அந்தக் காட்டிலிருப்பது; இரவானதும் ஊருக்குள் சென்று, புதையலைச் சமமாகப் பங்கு போட்டுக்கொள்வது என்பது ஒப்பந்தம். இருவரும் ஓரிடத்தில் அமர்ந்துகொண்டார்கள்.

பசி வயிற்றைக் கிள்ளியது.  ஒருவன் சொன்னான்... `நீ ஊருக்குள்ள போய் சாப்பிடுறதுக்கு ஏதாவது எடுத்துட்டு வா. அதுவரைக்கும் நான் இங்கே காவல் இருக்கேன். நிச்சயமா வேற எங்கேயும் போக மாட்டேன். இது சத்தியம்.’

மற்றவன் அதை ஏற்றுக்கொண்டான். ஊரை நோக்கிப் போனான். காத்திருந்தவன் மனதுக்குள் என்னென்னவோ எண்ணங்கள்... எதிரே கூர்மையான ஒரு மூங்கில் கழி ஆடிக்கொண்டிருந்தது. அதை உடைத்து எடுத்தான். இன்னும் நன்றாகக் கூர் தீட்டினான். சாப்பாடு வாங்கப் போனவன் வந்தான். உணவைக் கீழே வைத்தான். அடுத்த கணம், காத்திருந்தவன் மூங்கில் கழியை அவன் வயிற்றில் செருகினான். வந்தவன் அப்படியே சரிந்து, சுருண்டு விழுந்து, ரத்த வெள்ளத்தில் மிதந்தான். காத்திருந்தவன், கீழே விழுந்தவனின் உயிர் போய்விட்டதா என்று பார்த்தான். உயிர் பிரிந்ததை உறுதி செய்துகொண்டு நிம்மதிப் பெருமூச்சுவிட்டான். பிறகு, சாப்பாட்டை எடுத்தான். பிரித்தான். வேக வேகமாகச் சாப்பிட்டான்.

சாப்பிட்டு முடித்ததும், தங்கக்காசுகள் அடங்கிய பானையை எடுத்தான். தூக்கும்போதே தலைசுற்றியது. மயங்கிக் கீழே விழுந்தான். காரணம், சாப்பாட்டை வாங்கி வந்தவன் அதில் விஷத்தைக் கலந்துவைத்திருந்தான். துறவி சொன்ன `ஆட்கொல்லி’ வார்த்தை அந்த நண்பர்களின் வாழ்க்கையில் உண்மையாகிப்போனது. ஒருவனை நண்பனே கொலை செய்தான்; மற்றவன் உணவில் விஷம் கலந்து நண்பனைக் கொன்றான். இதுதான் ஆசையின் கதை. அது எப்போதுமே அற்பக் கதைதான். `ஆசை’ என்ற அரக்கனை எப்போது நாம் அடக்குகிறோமோ, அப்போதுதான் இதயத்தில் தீப ஒளி பரவும்.

ஆசையைப்போலவே கோபமும் நம்மைக் கொன்றுகொண்டிருக்கிறது. அது ஓர் அமிலப்பாத்திரத்தைப் போன்றது. அமிலம் எதில் இருக்கிறதோ, அது அந்தப் பாத்திரத்தையும் அரித்துவிடும்.  ஒரு அப்பா, விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்து வீட்டு வாசலில் நிறுத்தினார். அவருடைய நான்கு வயது செல்லக் குழந்தை ஓடி வந்தது. காரைப் பார்த்து ஆனந்தத்துடன் அதைச் சுற்றிச் சுற்றி ஓடியது. ஓடிய குழந்தை தன் கையிலிருந்த ஆணியால், அந்தப் புதிய காரில் ஓரிடத்தில் எதையோ கிறுக்கியது. காருக்கு இன்னும் எண்கூட வாங்கப்படவில்லை. அந்தக் காரில் குழந்தை எதையோ கிறுக்கிவிட்டது. 

அன்பே தவம் - 4

அப்பாவுக்கு வந்தது கோபம். அருகே கிடந்த ஒரு கல்லை எடுத்து குழந்தையின் கையை நைத்துவிட்டார். பிஞ்சு விரல்கள் நைந்துபோயின. கொஞ்ச நேரம்தான்... குழந்தை துடித்த துடிப்பைப் பார்த்து அப்பாவின் இதயமும் நைந்து போனது. ஒரு விநாடி கோபத்தில் நடந்த நிகழ்வு. அப்பா, குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். குழந்தையைப் பார்த்த மருத்துவர்களும் செவிலியர்களும் கேட்டார்கள்... `எந்த மிருகம், இந்தக் குழந்தையை வேட்டையாடியது?’ என்று. கோபம் என்ற மிருகம், அந்தக் குழந்தையை வேட்டையாடியிருந்தது.

அன்று இரவு முழுக்க அப்பா, அந்த அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே கண் சிவக்கக் காத்திருந்தார். குழந்தைக்கு ஆபத்தில்லை என்று தெரிந்த பிறகு வீட்டுக்கு வந்தார். குழந்தை காரில் இரும்பு ஆணியால் என்ன கிறுக்கியிருந்தான் என்று தெரிந்துகொள்ள, அந்தப் பகுதியைப் பார்த்தார். அந்தக் கிறுக்கல் இதுதான்... `டாட்... ஐ லவ் யூ.’

`அப்பா... உங்களை நேசிக்கிறேன்’ என்று அந்தக் குழந்தை காரில் கிறுக்கிய கிறுக்கல், அன்புக்கிறுக்கல் என்பதைப் புரிந்துகொள்ளாமல், கோபக்கிறுக்கில் குழந்தையின் இளம் பிஞ்சு விரல்களைச் சிதைத்துவிட்டார். கோபம் என்கிற அரக்கனை நாம் எப்போது கொல்கிறோமோ, அப்போதுதான் நம் இதயத்தில் அருமையான தீப ஒளி பரவும். இப்படி ஒவ்வொரு தீமையையும் வென்றெடுக்கிற நிலை நோக்கி நாம் பயணம் செய்ய வேண்டும். 

அன்பே தவம் - 4

`என் எதிரிக்கு ஒரு கண் போகிறபட்சத்தில், எனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை’ என்ற மனப்பான்மைக்குப் பெயர் பொறாமை. கோபம் கூடாது என்று சொன்னவர், அதற்கே தனி அதிகாரம் எழுதியவர், அந்தத் திருவள்ளுவரே கோபமாகச் சொன்னார்...

`அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.’


கொந்தளிக்கிறார் திருவள்ளுவர். ஏன்? பொறாமை, செல்வத்தை அழிக்கும்; அமைதியை அழிக்கும்; அன்பால் அமைந்த அமைதிப் பூங்காவை சூறைக்காற்றில் சூறையாடிவிடும். 

கங்கையில் குளிக்கிறோம். காவிரியில், மகாமகக் குளத்தில், தாமிரபரணியில் மூழ்கி எழுகிறோம். இப்படி எத்தனையோ புண்ணிய தீர்த்தங்களில் தீர்த்த யாத்திரை செய்கிறோம். ஆனால், இதயத்தில் இருக்கிற அழுக்கை அகற்ற நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.

அன்பே தவம் - 4உண்மையான நம்பிக்கையோடு நாம் எந்தச் செயலைச் செய்தாலும், அது ஆன்மிகத் தன்மையைப் பெற்றுவிடும். அந்தத் தன்மையை நாம் பெற்றிருக்கிறோமா? எல்லாத் தீர்த்தங்களிலும் தீர்த்தமாடலாம். குளித்துவிட்டு வந்தபிறகு அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப்பட்டால், நம் இதயத்தில் ஆன்மிகத் தன்மை ஒருபோதும் இருக்க முடியாது. அந்த நிலையை நோக்கி நாம் நகர வேண்டும்.

தீப ஒளித் திருநாள் போன்ற பண்டிகை தினங்களில் பலகாரங்கள் செய்கிறோம். நண்பர்களோடு, உறவினர்களோடு அவற்றை உண்ணுகிறோம். அன்றைக்குக்கூட ஒரு வேளை உண்பதற்கு வழியில்லாத எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நாம் செய்ததைக் கொடுத்து, மத்தாப்பூ வெளிச்சத்தில் அவர்களின் முக மலர்ச்சியைக் காணலாம் அல்லவா! ஆடையில்லாமல் எத்தனையோ பேர் வெயிலிலும் பனியிலும் வாடிக் கிடக்கிறார்கள்... ஒரு நாள் பண்டிகைக்குச் சிலர் பத்து ஆடைகள்கூட வாங்குகிறார்கள்.  ஒரே நாளில் நான்கைந்து ஆடைகளை மாற்றி மாற்றி அணிகிறார்கள். இல்லாதவர்களுக்கு எளிய புத்தாடைகளை அன்றைய தினத்தில் நாம் வழங்கலாமல்லவா! ஐந்து நிமிடங்கள் அப்பா, அம்மா இல்லாத ஆதரவற்ற குழந்தைகளிடம் அன்பு காட்டலாமல்லவா! இவையெல்லாம் மனிதத்தோடு பண்டிகைகளை இணையச் செய்யும் முயற்சி. அதை நாம் செய்ய வேண்டும்.

இதோ முருகப் பெருமானின் சஷ்டி பெருவிழா முருகனின் எல்லாத் திருத்தலங்களிலும் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. வடபுலத்தில் பரமாத்மா, நரகாசுரனை வென்றதைப்போல, தென்புலத்தில் சூரபத்மன் என்கிற அரக்கனை முருகப் பெருமான் வென்றார். அந்த ஆறுமுகப் பெருமானை எண்ணி, எண்ணற்ற மக்கள் உண்ணா நோன்பு மேற்கொள்கிறார்கள். ஆறு நாள்கள் நோன்பு முடிந்து, சூரபத்மனை வீழ்த்துகிற தினம். சஷ்டியின் மகா நோன்பு நிறைவு பெறும்.

இந்த மண்ணில் போர்கள் நிகழ்ந்தன; மன்னர்கள் நிகழ்த்தினார்கள். ஆண்டவனே நிகழ்த்தினான். கடவுள் ராமன், ராவணனோடு போரை நிகழ்த்தினார். அதில் ஒரு தீயவன் அழிக்கப்பட்டான். குருக்ஷேத்திரப் போர்க்களம். அண்ணன் தம்பிக்கு இடையில் சண்டை. முடிவில் துரியோதனன் கூட்டம் அழிந்தது. ராவணனும் அழிந்துபட்டான்; துரியோதனனும் அவன் தம்பிமார்களும் அழிந்துபோனார்கள். ஆனால், காலமறிந்து கருணைபுரியும் தமிழ்க் கடவுள் முருகன் நிகழ்த்திய போர் வேறுபட்டது. அவன் சூரபத்மனை அழித்துவிடவில்லை. அவனை சேவற்கொடியாகவும், மயில் வாகனமாகவும் மாற்றித் தன் அருகிலேயே வைத்துக்கொண்டான். தீயவர்களை அழிப்பதல்ல தர்மம்; தீயவர்களை நல்லவர்களாக மாற்றுவதே அறம். அதுவே ஆன்மிகம். இப்படி நடந்தால் நித்தம் நித்தம் தீப ஒளி நம் இதயத்தில் நிறையும். அப்படிப்பட்ட தீப ஒளியை நாம் வாழ்த்தி வரவேற்போம்!  

(புரிவோம்…)

யார் புண்ணியவான்? 

ருமுறை கயிலையில் இருந்தபடி பார்வதியும் பரமசிவனும் கங்கை நதியைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். உலகத்தின் தலைவனிடம் பார்வதி கேட்டாள்... `இத்தனை பேரும் பாவங்களை கங்கையில் கழுவி, புண்ணியம் பெற்றுக் கயிலைக்கு வந்தால், இவர்களுக்கு இங்கே இடம் இருக்குமா?’ 

அன்பே தவம் - 4

உமையவளின் காதோடு சொன்னார் சிவபெருமான்... `உனக்கு ஒரு வேடிக்கை காட்டுகிறேன். என்னுடன் வா!’

அடுத்த கணம் சிவபெருமான் முதியவர் உருவத்தில் கங்கையில் குதித்தார்; பார்வதி, ஒரு மூதாட்டியாகக் கரையில் நின்றாள். கங்கை வெள்ளம் கிழவரைச் சுற்றிச் சுழன்றது. கிழவர் சுழலுக்குள் சிக்கிக்கொண்டார். `ஐயோ என்னைக் காப்பாத்துங்க... காப்பாத்துங்க’ என்று அவரின் அலறல் கேட்டது.

கரையில் நின்ற கிழவி, `ஐயோ... என் கணவரைக் காப்பாத்துங்களேன்...’ என்று அலறினாள். கூட்டம் கூடியது. சிலர் கிழவரைக் காப்பாற்றத் தயாராக, கிழவி சொன்னாள்... ``ஒரு பாவமும் செய்யாதவர்தான் அவரைத் தொடணும். அப்படிப்பட்டவர் தொட்டாதான் அவரும் பிழைப்பார்; தொட்டவரும் பிழைப்பார். பாவம் செய்தவர் யாராவது என் கணவரைத் தொட்டால், அவரும் இறந்துபோவார்; தொட்டவரும் இறந்துபோவார்.’’ அவ்வளவுதான்... கூட்டம் அப்படியே நின்றுவிட்டது.

`என் கணவரைக் காப்பாத்த ஒரு புண்ணியவான்கூட இல்லையா?’ கிழவியின் அலறல் சத்தம் கூடியது. ஒரு படிக்காத, பாமரன் எங்கிருந்தோ ஓடி வந்தான். தண்ணீரில் பாய்ந்து, அதன் வேகத்தோடு போட்டி போட்டு நீந்தி, கிழவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்தான்.

கூட்டத்திலிருந்த ஒருவர் அந்தப் பாமரனைப் பார்த்துக் கேட்டார்... `நீ பாவமே செஞ்சதில்லையா... அப்படிப்பட்ட புண்ணிய ஆத்மாவா?’

`அதெல்லாம் இல்லைங்க. நான் செய்யாத பாவமில்லை.’

`அப்புறம், இறந்து போவோம்னு தெரிஞ்சும் எப்படி அந்தக் கிழவரைப் போய்த் தூக்கினே?’

அவன் சொன்னான்... `இந்த கங்கையில முங்கி எந்திரிச்சா பாவமெல்லாம் போயிடும்னு சொன்னாங்க... அந்த நம்பிக்கையிலதான் நான் கிழவரைக் காப்பாத்தினேன்.’

ஓவியம்: ரமணன்