Published:Updated:

தஞ்சை திரும்பிய ராஜராஜன் ... நாளந்தாவை அடைந்த புத்தர்... சிலைகள் மீட்பில் 2018 #VikatanInfographics

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் சிலைகள் பல மீட்கப்பட்டன. அவை குறித்தும், அவற்றின் பின்னணி குறித்தும் பார்ப்போம்... சிலைகள் மீட்பில் 2018

தஞ்சை திரும்பிய  ராஜராஜன் ... நாளந்தாவை அடைந்த புத்தர்... சிலைகள் மீட்பில் 2018 #VikatanInfographics
தஞ்சை திரும்பிய ராஜராஜன் ... நாளந்தாவை அடைந்த புத்தர்... சிலைகள் மீட்பில் 2018 #VikatanInfographics

2018 - ம் ஆண்டைப் பரபரப்பாக்கியதில் சிலைகள் தொடர்பான செய்திகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த வருடம் தமிழகத்தில் மட்டுமே கோயில்களில் இருந்து திருட்டுப்போன பல்வேறு சிலைகள் கைப்பற்றப்பட்டன. தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த சிலைகள் மீட்கப்பட்டன. அது குறித்தும், அவற்றின் பின்னணி குறித்தும் பார்ப்போம்... 

சொந்த ஊர் திரும்பிய ராஜராஜ சோழன் - உலகமாதேவி சிலை 

தஞ்சைப் பகுதி மட்டுமல்லாமல் தமிழகத்தையே கொண்டாட்டத்துக்கு உள்ளாக்கியது ராஜராஜ சோழன் - உலகமாதேவி சிலை மீட்பு. உலகமே வியக்கும் பெரிய கோயிலைக் கட்டியவன் சோழப் பேரரசன் ராஜராஜன். பெரிய கோயில் கட்டுமானப் பணிகளுக்கும், நிர்வாகத்துக்கும் உறுதுணையாகச் செயல்பட்டவர் பொய்கை நாட்டுக் கிழவன், ஆதித்தன் சூரியனாகிய தென்னவன் மூவேந்த வேளான். இவர் 13 பஞ்சலோகத் திருமேனிகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெரியகோயிலுக்குத் தானமாக வழங்கினார். அவற்றில் ராஜராஜ சோழன் சிலையும் அவரது மனைவி உலகமாதேவியின் சிலையும் அடக்கம். ராஜராஜன் காலத்திலேயே இந்தச் சிலைகள் செய்யப்பட்டதால் இந்தச் சிலைகள் இரண்டும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. பெரிய கோயிலின் மேற்கு மண்டபத்தில் இருந்த இந்தச் சிலைகள் திருடப்பட்டு அதற்கு பதில் போலி சிலைகள் வைக்கப்பட்டன. 

ஒரிஜினல் சிலைகளை 50 ஆண்டுகளுக்கு முன்பே தஞ்சை,  சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதுார் சீனிவாச கோபாலாச்சாரி மற்றும் சில அதிகாரிகள் சேர்ந்து சென்னையில் உள்ள கவுதம் சாரா பாய் என்பவருக்குப் பல கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டது விசாரணையில் தெரியவந்தது. பின்பு இந்தச் சிலைகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுண்டேஷன் - காலிகோ அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. பல வருடங்களாக இந்தச் சிலைகளை மீட்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஆனாலும், தொடர் முயற்சியின் பயனாகத் தமிழகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசார் இந்த வருடம் மே மாத இறுதியில் இரண்டு சிலைகளையும் மீட்டுத் தமிழகத்துக்குக் கொண்டு வந்தனர். இந்தச் சிலை தொடர்பான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் 7 சிலைகள் 

’நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா’ எனும் அருங்காட்சியகத்தில் பல்வேறு நாடுகளின் கலை பொக்கிஷங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், தமிழகத்தைச் சேர்ந்த 7 சிலைகள் அடையாளம் காணப்பட்டு அவை தமிழகத்தைச் சேர்ந்த சிலைகள்தான் என்பதற்கான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. சென்னையில் ஆஸ்திரேலியத் தூதரக அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேட்டியளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “அடையாளம் காணப்பட்ட சிலைகளின் தொல்லியல் சான்றுகள், கல்வெட்டுச் சான்றுகள், சிலைகள் கோயிலில் இருந்த இடம், சிலைகளின் புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களைக் கொடுத்து ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இதன் அடிப்படையில் 7 சிலைகளை விரைவில் திருப்பித் தர ஆஸ்திரேலியா சம்மதித்திருக்கிறது” என்று அறிவித்தார். 

12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குழந்தை சம்பந்தர் செப்புத் திருமேனி, 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்திய காளிதேவியின் செப்புத் திருமேனி, 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆறுமுகர் கற்சிலை, 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடனமாடும் சம்பந்தர் செப்புத் திருமேனி, 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரானைட் கல்லால் ஆன நந்திச் சிலை, விஜயநகர அரசர்களின் காலத்தைச் சேர்ந்த இரண்டு துவாரபாலகர் சிலைகள் ஆகியவையே அந்த ஏழு சிலைகள். ஆனால், இதுவரை ஆஸ்திரேலிய அரசு அந்தச் சிலைகளைத் திருப்பிக் கொடுக்கவில்லை. 

ரன்வீர் ஷா & கிரண்ராவிடம் கைப்பற்றப்பட்ட சிலைகள்  

சென்னை சைதாப்பேட்டையில் வசிக்கும் நடிகரும், தொழிலதிபருமான  ரன்வீர் ஷாவின்  பங்களா வீட்டில் செப்டம்பர் மாதம் 27-ம் தேதி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, 16 பஞ்சலோகச் சிலைகள், 22 கல் தூண்கள், கற்சிலைகள் மற்றும் விஷ்ணுவின் சங்கு சக்கரம் உட்பட 91 பழைமையான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், மோகல்வாடி கிராமத்தில் அவருக்குச் சொந்தமான 75 ஏக்கர் விவசாயப் பண்ணையில் சோதனை நடத்தப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட கற்சிலைகள், அழகிய கல்தூண்கள் மற்றும் கலைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  ரன்வீர் ஷாவின் தோழி கிரண் ராவ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையிலும் பல்வேறு சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.  

லண்டனில் இருந்து மீண்ட நாளந்தா புத்தர் 

பீகார் மாநிலம் நாளந்தாவில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட போது நூற்றுக்கணக்கான சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கல புத்தர் சிலை உட்பட 16 சிலைகள் 1961 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் திருடப்பட்டன. இந்தச் சிலைகளைக் கண்டுபிடிக்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று ‘இந்தியா பிரைட் புராஜெக்ட்’ அமைப்பின் முயற்சியினால் இந்தப் புத்தர் சிலை லண்டனிலிருந்து மீட்கப்பட்டது. 

லண்டன் விற்பனையாளர்கள் நெதர்லாந்தில் இந்தப் புத்தர் சிலையை 40,000 யூரோவுக்கு ஏலம் விட முயன்ற போது  ‘இந்தியா பிரைட் புராஜெக்ட்’ அமைப்பின் நிறுவனரான விஜயகுமார்,  இந்தியத் தொல்லியல் துறை, டட்சு போலீஸ், லண்டன் மெட்ரோபாலிட்டன் போலீஸ் ஆகியோரின் துணையுடன் புத்தர் சிலையை மீட்டார். 

இந்தச் சிலை இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தில் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டது தொல்லியல் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்காவிலிருந்து ஆந்திரா...   

அமெரிக்காவின் மிகப்பெரிய அருங்காட்சியகம் ‘மெட்ரோபொலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட்’ (Metropolitan Museum of Art). இங்கு இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த துர்கை மற்றும் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சுதைச் சிற்பம் ஆகிய இரண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தின் நாகர்குனகொண்டா பகுதியைச் சேர்ந்த இந்தச் சிலைகளைத் திருப்பித் தருவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க அருங்காட்சியகம் அறிவித்தது. இரு சிலைகளில், சுதைச் சிற்பம்  மட்டும் இந்தியா வந்தது. துர்கையின் சிலை இன்னும் அமெரிக்க அருங்காட்சியகத்திலேயே உள்ளது.