மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மகா பெரியவா - 16

மகா பெரியவா - 16
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவா - 16

ஓவியங்கள்: கேஷவ்

முந்நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு அது. மகா பெரியவா தமது இளம் பிராயத்தில் கேள்விப்பட்ட நிகழ்ச்சி. ஒருமுறை சென்னை, சம்ஸ்கிருதக் கல்லூரி உபன்யாசத்தின்போது அதை நினைவுகூர்ந்திருக்கிறார். பெரியவா அதை விவரித்தபோது, முழு வளாகமும் நிசப்தத்தில் ஆழ்ந்திருந்தது. ஆடவரும் பெண்களும் மனம் உருகி, கண் கலங்கினார்கள்.

மகா பெரியவா - 16

ஒரு பெண்மணிக்கு நல்ல பாம்பு ஒன்று பிறந்தது. அருகிலிருந்த அத்தனை பேரும் முதலில் நடுநடுங்கிப் போனார்கள். பின்னர் அதை ஒரு குழந்தையாகவே பாவித்து ‘நாகராஜன்’ என்று பெயர் சூட்டினார்கள். பாலூட்டி வளர்த்தார்கள். அந்தப் பாம்பும் குழந்தையைப் போலவே வீட்டில் பழகியது. பெயர் சொல்லிக் கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கும். ‘வா’ என்று அழைத்தால் வரும். மடியில் ஏறிப் படுத்துக்கொள்ளும். கண் அயர்ந்து உறங்கிவிடும்.

நாகராஜன் பால் குடிப்பதற்காக அந்த வீட்டு ஹாலில் பள்ளம் ஒன்று வெட்டி வைத்திருந்தார்கள். பாலை, குடிக்கும் சூட்டில் ஆறவைத்து, அந்தக் குழியில் ஊற்றுவார்கள். நாகராஜன் வந்து குடித்துவிட்டுச் செல்வான். தினமும் காலை பத்தரை மணி அவனுக்கு பால் டைம்!

நாகராஜன் வளர்ந்துகொண்டிருந்தான்.ஒரு நாள், அந்தப் பெண்மணி பக்கத்துக் கிராமத்துக்கு செல்ல வேண்டிருந்தது.அங்கே ஒரு திருமணம். பெண்மணிக்கு தன் மகனையும் உடன் அழைத்துச் செல்ல விருப்பம். ஆனால், பாம்பைத் தூக்கிச் சென்றால் அங்கே களேபரமாகி விடுமோ என்கிற பயம். எனவே, வீட்டில் வேறொரு மூதாட்டியிடம் நாகராஜனை ஒப்படைத்து விட்டுச் சென்றாள்.

அந்த மூதாட்டிக்குப் பார்வைக் கோளாறு உண்டு. வீட்டு வேலைகளைச் சற்று நிதானமாகத்தான் செய்வார். அன்று அவர் பாலைக் காய்த்து எடுத்து வருவதற்குள் பகல் ஒரு மணி ஆகிவிட்டது. நாகராஜனுக்குப் பசி கிள்ளி எடுத்தது.

வழக்கம் போல் பத்தரை மணிக்கு பள்ளத்தில் பாலைத் தேடியிருக்கிறான். இருக்கவில்லை. பள்ளத்துக்குள்ளேயே சுருண்டுப் படுத்துவிட்டான். அதைக் கவனிக்காத மூதாட்டி, சூடானப் பாலை அப்படியே அந்தப் பள்ளத்தினுள் ஊற்றி விட்டாள். பாவம், நாகராஜன், வெந்து கருகி இறந்துபோனான்.

அன்று இரவு கல்யாண வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்மணிக்கு, கனவில் அருமை மகன் நாகராஜன் வந்தான்.

மகா பெரியவா - 16“அம்மா! பாட்டி சுடச்சுடப் பாலை பள்ளத்தில் படுத்திருந்த என் மேல் ஊத்திட்டாங்க. சூடு தாங்காமல் என் உயிர் போய்விட்டது. என்னைத் தாழம்பூக் காட்டில் அடக்கம் செய்துடுங்கம்மா. நான் தெய்வமாக இருந்து உங்களைக் காப்பாத்துவேன்” என்றான்.

திடுக்கிட்டு எழுந்த பெண்மணிக்கு உடலெல்லாம் வியர்த்தது. உடனே அவசர அவசரமாகக் கிளம்பி தன் கிராமத்துக்கு வந்தாள். கருகிப் பிணமாகக் கிடந்த நாக ராஜனைப் பார்த்துக் கதறினாள்.

“என்ன காரியம் செய்துட்டே? பிள்ளையைப் பார்த்துப்பேன்னு உன்கிட்டே விட்டுட்டுப் போனா, இப்படிப் பண்ணிட்டியே!” என்று மூதாட்டியிடம் அலறினாள். தவறை உணர்ந்த  மூதாட்டியும், குற்ற உணர்வு சேர்ந்துகொள்ள குமுறி அழுதாள்.

அருமையாக வளர்த்த நாகராஜனை, அருகிலுள்ள தாழம்பூத் தோட்டத்தில் அடக்கம் செய்தார்கள். அந்தச் சோக நிகழ்ச்சியின் காரணமாக அந்தக் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக யாருமே தாழம்பூ வைத்துக் கொள்வதில்லையாம். மட்டுமல்லாமல், அந்த வம்சத்தில், யார் வீட்டில் ஆண் குழந்தை பிறந்தாலும், ‘நாகராஜன்’ என்றோ ‘நாகேஸ்வரன்’ என்றோதான் பெயர் வைத்து வருகிறார்களாம்.

மகா பெரியவா தமது விஜய யாத்திரையின்போது இந்தப் பரம்பரையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சந்தித்ததாக அன்றைய உபன்யாசத்தில் கூறியது பதிவாகியிருக்கிறது. 

மகா பெரியவா - 16

அந்தக் குடும்பத்தினர் சுவாமிகளிடம் ஒரு தாமிர சாசனத்தைக் காட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு அச்சுத் தேவராயர் ஐந்து கிராமங்களை தானம் செய்திருந்த விவரம் அதில் இருந்தது. ஆனால், ராஜ ப்ரதிக்ரஹ தோஷத்துக்காக அவர்கள் அதிலிருந்து 108 பிராமணர்களுக்குத் தானம் செய்துவிட்டார்களாம். அந்த சாசனத்தில் நாகராஜன், நாகேஸ்வரன் என்ற பெயர்கள் காணப்பட்டிருக்கின்றன.

காசி யாத்திரை தருணத்தில், செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் இருந்தபோது, ஒரு மாதத்துக்குக் கடுமையான ஜுரத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் மகா பெரியவா. அவரால் எழுந்திருக்கக்கூட முடியவில்லை. அவரை யாரும் தொட்டுத் தூக்கி சேவை செய்ய முடியாது.

அந்த நாளில், மராட்டிய மாநிலத்தில்  அரசுப் பணியில் இருந்தவர் அவர். திடீரென்று வேலையை உதறிவிட்டு சந்நியாசியானவர். ராமேஸ்வர யாத்திரை மேற்கொண்டிருந்தார். வழியில் அவரது தண்டம் எப்படியோ தொலைந்துவிட்டது. அப்படி நேர்ந்துவிட்டால் வேறொரு சந்நியாசியிடமிருந்துதான் ஒரு தண்டத்தைப் பெறவேண்டும் என்பது நியதி. எனவே பெரியவா இருந்த இடம் தேடி வந்தார். பெரியவா ஒரு தண்டம் வழங்க, அதைப் பெற்றுக்கொண்டவர், மகானுக்குச் சீடனாகி விட்டதாகக் கருதி, அவரிடம் சரணடைந்து அங்கேயே தங்கி விட்டார்.

வயதில் மூத்தவராக இருந்த காரணத்தால், ஒரு மாதம் பெரியவா அவர்களுக்கு மிக அருகில் இருந்து சேவை செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தினமும் பெரியவா பாதக் கமலங்களில் மலரிட்டு அர்ச்சனை செய்து வந்தார். யாத்திரையிலும் அவர் கலந்துகொண்டார்.

திருப்பதி வந்தது. வழக்கம்போல் விடுவிடுவென்று நடந்து வந்தார் மகா பெரியவா. பின்னால் தொடர்ந்த அந்தச் சந்நியாசி வந்து சேருவதற்குள் கோயிலின் உள்ளே சென்று பெருமாளை தரிசித்துவிட்டு வெளியே வந்துவிட்டார் பெரியவா.

அப்போதுதான் மெதுவாகப் படிகளேறிக் கொண்டிருந்தார் துறவி. ‘அடடா... இவரை விட்டுவிட்டு தரிசனம் முடித்து விட்டோமே’ என்று வருந்தினார் பெரியவா. ஆலய நிர்வாகிகளை அழைத்து, “இவர் என்னுடன் வந்திருப்பவர். இவரை உள்ளே அழைத்துச் சென்று பெருமாளை தரிசனம் செய்து வையுங்கள்...” என்றார். நிர்வாகிகள் அவரை அழைக்க, “ரொம்ப நன்றி. எனக்கு தரிசனம் ஆகிவிட்டது. புறப்படலாம்...” என்றார் சந்நியாசி.

“என்னது! தரிசனம் ஆகிவிட்டதா? எப்போது?”

“கோயிலுக்குப் போய்தான் தரிசனம் செய்ய வேண்டுமா என்ன? இதோ, பாலாஜி நம் கண் எதிரிலேயே  இருக்கிறாரே...” என்று சொன்ன சந்நியாசி, கோயில் வாசலிலேயே மகா சுவாமிகளின் கால்களில் விழுந்து வணங்கினார். ஆலய மணி ஒலித்தது!

டம் வித்வான் விநாயகராமுக்கு ஏற்பட்ட அனுபவம் வியப்புக்குரியது. ஒருமுறை எல்.சுப்ரமணியம் (வயலின்), ஜாகிர் ஹுஸேன் (தபலா), விநாயகராம் (கடம்) கச்சேரி ஏதென்ஸில் ஏற்பாடு ஆகியிருந்தது. முன்னவர்கள் இருவரும் லண்டனில் ஒரு கச்சேரியை முடித்துக்கொண்டு ஏதென்ஸ் செல்ல, இந்தியாவி லிருந்து விநாயகராம் நேரே ஏதென்ஸ் போவதாகத் திட்டம்.

முதலில் ஏதென்ஸ் வந்துவிட்ட விநாயகராம், ஓட்டல் அறையில் வைத்து வாசிக்க நினைத்து பெட்டியைத் திறக்க, உள்ளே கடம் சுக்குநூறாக உடைந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.

‘`வேறு கடம் இங்கே கிடைக்காதே’ என்று நினைத்துக் கலங்கினார். இந்தியாவில் இருந்த மனைவியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

மகா பெரியவா - 16

“கடம் உடைந்துவிட்டது. நான் புறப்பட்டு இந்தியா வந்து விடுகிறேன்.. வேற வழியில்லை...”

“அவசரப்படாதீர்கள்... ஏதாவது அதிசயம் நடந்து, உங்களுக்குக் கடம் கிடைக்கும்... பெரியவா மேல் நம்பிக்கை இழக்காமல் பிரார்த்தனை செய்யுங்கள்...”

“எதாவது உளறாதே... இந்த ஊர்ல பானைகூடக் கிடைக்காது... எப்படி கச்சேரி பண்ண முடியும்?”

“ஒருநாள் வெயிட் பண்ணுங்க. நான் இப்பவே காஞ்சிபுரம் போய் பெரியவாகிட்ட நேர்ல வேண்டிக்கிறேன். கச்சேரி நல்லபடியா நடக்கும்...”

விநாயகராமின் மனைவி காஞ்சி புரத்தில் சுவாமிகளை தரிசித்து முறையிட, அவரை நோக்கி மட்டை தேங்காய் ஒன்றை உருட்டி விட்டார் மகாபெரியவா. அங்கே, கையில் அவருடைய படத்தை வைத்துக்கொண்டு பிரார்த்தனையில் விநாயகராம்.

அடுத்த நாள் லண்டனிலிருந்து ஏதென்ஸ் வந்து இறங்கிய வித்வான்கள் கையில் ஒருபெரிய மூட்டை. பிரித்துப் பார்த்த விநாயகராம் உள்ளே கடம் இருப்பதைப் பார்த்து துள்ளிக் குதித்தார். எப்படி இது சாத்தியமானது?

கடம் இல்லாமல் இங்கே விநாயகராம் பரிதவித்துக் கொண்டிருக்க, அங்கே லண்டனில் இருந்த மற்ற இரு வித்வான்களும் கடம் தேடி அலைந்திருக்கிறார்கள். ஓர் ஆங்கிலேயரிடம் இந்திய இசைக் கருவிகள் இருப்பதாகக் கேள்விப்பட்டு, அவரை அணுகியிருக்கிறார்கள். போன இடத்தில் கடம் இருப்பதைக் கண்டார்கள்.

“தயவுசெய்து இதை எங்களுக்கு கொடுத்து உதவுங்கள்... எத்தனை விலை சொன்னாலும் கொடுத்துவிடுகிறோம்...” என்று கேட்டுக்கொண்டார்கள்.

ஆனால், கடத்தை மறைத்துக்கொண்டு நின்றார் அந்த ஆங்கிலேயர். “ஸாரி... இதை நான் யாருக்கும் கொடுக்கமாட்டேன். தமது நினைவாக ஒருவர் இதை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். ‘பத்திரமாக வைத்திருப்பேன்...’ என்று அவருக்கு வாக்குக் கொடுத்திருக்கேன்.. ஸாரி, நீங்க வேற இடத்தில் தேடிப் பாருங்க...” என்றார்.

“உங்களுக்கு இதை அன்பளிப்பாகக் கொடுத்தவர் யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“மிஸ்டர் விநாயகராம்!”

“மை காட்! அதே விநாயகராம்தான் இப்போ ஏதென்ஸ்ல கடம் இல்லாம தவிச்சுக்கிட்டிருக்கார். எங்களோட அங்கே அவர் கச்சேரி வாசிக்கணும். அவர் எடுத்துட்டு வந்த கடம் டிராவல்ல உடைஞ்சுடுச்சு... ப்ளீஸ் ஹெல்ப்...” என்று விளக்கினார்கள்.

உடனே கடத்தையும், விநாயகராமுக்கு ஒரு கடிதமும் கொடுத்தனுப்பினார் அந்த ஆங்கிலேயர். கடிதத்தைப் படித்துப் பார்த்தார் விநாயகராம். அதில் கடைசி வரி அவரை சிலிர்க்கவைத்தது.

‘நீ கும்பிடும் தெய்வம் உன்னை ஒரு நாளும் கை விடாது!’’

- தொடரும்...

வீயெஸ்வி

`திருக்கார்த்திகை’ திருநாளில்...

*கார்த்திகை விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்து, சப்தரிஷி களுக்கும் மேலான பதவியை அடைந்தாராம் நாரதர்.திரிசங்கு, பகீரதன் ஆகியோர் கார்த்திகை தீபத்திருநாள் விரதத்தின் பயனால் பேரரசானார்கள் என்கின்றன புராணங்கள்.

* கிருதயுகத்தில், ஒரு கார்த்திகை மாத பௌர்ணமித் திருநாளில்தான் தன் முறுவலாலேயே முப்புரங்களையும் எரித்தாராம் சிவனார்.அவர் முப்புரம் எரிந்த பாவனையைக் காட்டும் விதமாகவே, சிவாலயங்களில் சொக்கப் பனை கொளுத்துகின்றனர்.

*அசுவன், கம்பளதாரன் என்ற கின்னரர்கள் இருவர், ஈசனைத் துதித்து சாம கானம் பாடி, திருவண்ணாமலையில் முக்தி பெற்றனர்.ஈசன் அவர்களை குண்டலங்களாக்கி, தன்னுடைய திருச்செவிகளில் அணிந்துகொண்டு, எப்போதும் அவர்களின் இசையை தாம் கேட்டுக் கொண்டிருக்கும் விதமாக அருள்புரிந்த நாளும் திருக்கார்த்திகையே!