
ஆலயம் தேடுவோம்: நாகராணி வழிபடும் நாதனின் ஆலயம்!
நாகை மாவட்டம் கீழ்வேளூரிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள ஊர், ராதாமங்கலம் தெற்காலத்தூர். நாக தோஷங்களை நீக்கியருளும் மிக அற்புதமான க்ஷேத்திரம் இது!

மாசி மாதம் - வசந்த பௌர்ணமியன்று, நாகலோகத்தின் அஷ்டநாகங்களும் தங்களின் நித்திய பூஜைகளை மறந்து, பூமிக்கு வந்து தங்கள் துணையுடன் களிப்புற்று இருந்தன. அப்போது அந்தப் பக்கமாக வந்த சம்புதத்தன் என்ற வேதியச் சிறுவனை ஒரு நாகம் தீண்டிவிட்டது. அதனால் அவன் இறந்துபோக, அவனின் தந்தை, நாகங்களைச் சபித்தார். தங்களின் தவற்றை உணர்ந்து வருந்திய நாகங்கள், அந்த வேதியரிடம் மன்னிப்பும் விமோசனமும் வேண்டின. அவற்றின்மீது இரக்கம்கொண்ட வேதியர், பூமிக்குச் சென்று சிவனாரை வழிபடும்படி அறிவுறுத்தினார்.

அடுத்து வந்த மகா சிவராத்திரி திருநாளன்று, ஆதிசேஷன் தலைமையில் பூமிக்கு வந்த அஷ்ட நாகங்களும் தங்கள் தேவியருடன் இணைந்து சிவனாரை பூஜித்தனர். உஷத் காலத்தில் திருக் குடந்தை நாகேஸ்வரரையும், உச்சிக் காலத்தில் திருநாகேஸ் வரம் நாகேஸ்வரரையும், சந்தியா காலத்தில் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரரையும், இரவில் நாகூர் நாகநாத ஸ்வாமியையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.
அதே தருணத்தில், நாகலோகத்தைச் சேர்ந்த மற்ற நாகங்களும் பூமியில் பல இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டன. அப்படியான தலங்களில் ஒன்றுதான் ராகுகேது மங்கலம் எனும் ராதாமங்கலம் தெற்காலத்தூர். இங்கே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீசாந்தநாயகி சமேத ஸ்ரீநாகநாத ஸ்வாமியை, இன்றைக்கும் நாகராணி வந்து வழிபடுவதாக நம்பிக்கை.
புராணச் சிறப்புகள் மிகுந்த இந்தக் கோயில், ஒருகாலத்தில் சீரும் சிறப்புமாகவும் விழா வைபங்களோடும் திகழ்ந்துள்ளது. ஆனால்... ஏதோவொரு காரணத்தால், பிற்காலத்தில் சிதிலமுற்றுப்போன திருக்கோயிலில் நித்திய பூஜைக்கும் வழியில்லாத நிலை ஏற்பட்டது.

சுமார் 1,500 வருடங்கள் பழைமை வாய்ந்த தாகச் சொல்லப்படும் இந்தக் கோயிலின் திருப்பணிகள் இப்போது தொடங்கி நடை பெற்று வருகின்றன. அடியார்கள் மற்றும் உள்ளூர் மக்களுடன் ஒருங்கிணைந்து, இந்தத் திருப்பணிகளை எடுத்துச் செய்து வருகிறார், அன்பர் சுப்ரமணியம்.
``அம்பிகையின் சந்நிதியில் புற்றுவடிவத்தில் இருக்கும் நாகராணி, இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நாகதோஷம், காலசர்ப்பதோஷம் ஆகியவற்றை நீக்கி அருள்கிறாள்.
மகா சிவராத்திரியன்று இரவு, நாகூரில் நாகநாத ஸ்வாமியை நாகராஜா பூஜிக்கும்போது, அவரது தலைப்பகுதி நாகூரிலும், வால் பகுதி ராதாமங்கலம் தெற்காலத்தூரிலும் இருப்பதாக ஐதீகம். மகாசிவராத்திரிக்கு அடுத்த அமாவாசை தினத்தில், நாகராஜாவும் நாகராணியும் அருகிலுள்ள நாக தீர்த்தத்தில் நீராடி வழிபட்டு, சாப விமோசனம் பெற்ற தலம் இது’’ என்று விவரித்த சுப்ரமணியம், கோயிலின் திருப்பணிகள் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

‘`எங்களுக்குத் தெரிந்து பல வருடங்களாகவே இந்தக் கோயில் சிதிலமடைந்து நித்திய பூஜைக்குக் கூட வழியில்லாமல் இருந்தது. எதற்கும் ஒரு நேரம் வரவேண்டுமே. ஐயன் நாகநாதஸ்வாமி அருளால் தற்போதுதான் ஊர்மக்களின் பூரண ஒத்துழைப்புடன் திருப்பணிகளை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. விரைவில் திருப்பணிகள் நிறைவுபெற்று, கும்பாபிஷேகம் நடைபெறுவதுடன், நித்திய வழிபாடு களும் விழாக்களும் தடையின்றி தொடரும் வகையிலான ஏற்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட்டிருக்கிறோம்’’ என்றார்.
‘ஊர் கூடி தேர் இழுப்போம்’ என்பார்கள். ஆனால், கோயில் திருப்பணி என்பது அந்த ஊர் மக்களால் மட்டுமே முடியக்கூடியதல்ல; இறையன்பர்கள் ஒன்றிணைந்து செய்யவேண்டிய திருப்பணி. நாமும் இந்தப் பணிக்குத் தோள் கொடுப்போம்; நம்மால் இயன்றளவு பொருளுதவிகள் செய்து அந்தப் பரமனின் பெருங்கருணையைப் பெற்று மகிழ்வோம்.
எஸ்.கண்ணன்கோபாலன் - படங்கள்: ர.கண்ணன்
எங்கிருக்கிறது... எப்படிச் செல்வது?
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ளது ராதாமங்கலம் தெற்காலத்தூர். திருவாரூரில் இருந்து ராதாமங்கலத்துக்கு பேருந்து வசதி உண்டு. அங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிலுள்ளது தெற்காலத்தூர்.
வங்கிக் கணக்கு விவரம்:
Name of the Account : T.K. Subhramanyam & R. Geetha
Name of the Bank : HDFC Bank
Branch : Perungudi
Account Number : 50100256039681
IFSC Code : HDFC0000795
தொடர்புக்கு: டி.கே.சுப்பிரமண்யம், செல்: 09962047701