Published:Updated:

வேலூன்றினான்... வினைகள் தீர்ந்தன!

வேலூன்றினான்... வினைகள் தீர்ந்தன!
பிரீமியம் ஸ்டோரி
வேலூன்றினான்... வினைகள் தீர்ந்தன!

கார்த்திகை தரிசனம் - இளையனார்வேலூர்

வேலூன்றினான்... வினைகள் தீர்ந்தன!

கார்த்திகை தரிசனம் - இளையனார்வேலூர்

Published:Updated:
வேலூன்றினான்... வினைகள் தீர்ந்தன!
பிரீமியம் ஸ்டோரி
வேலூன்றினான்... வினைகள் தீர்ந்தன!

திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர் தொடங்கி, முருகன் திருத்தலங்களில் சீரும் சிறப்புமாக நடந்துமுடிந்திருக்கிறது சூரசம்ஹார வைபவமும் கந்தனின் திருக்கல்யாணமும். ஐப்பசித் திங்களில் நடைபெறும் இந்த சூரசம்ஹார வைபவத்தை நாம் எல்லோருமே அறிவோம். ஆனால், ஐப்பசியில் மட்டுமின்றி பங்குனி மாதத்திலும் சூரசம்ஹார வைபவம் நடைபெறும் திருத்தலம் ஒன்று உண்டு!

வேலூன்றினான்... வினைகள் தீர்ந்தன!

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இளைனார் வேலூர் தான் அந்தத் தலம். இவ்வூரின் தோற்றத்துக்குக் காரணமே வேலாயுதம்தான். ஆகவே முதலில் வேலூர் என்று பெயர்பெற்று, பின்னர் சிவனாரின் இளைய மைந்தனான முருகனின் திருவருள் பொழியும் ஊர் என்பதால் இளையனார்வேலூர் என்றானதாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேலூன்றினான்... வினைகள் தீர்ந்தன!வேள்வி காத்தது வேலாயுதம்!

மு
ன்னொரு யுகத்தில் மலையன், மாகறன் எனும் அசுரர்கள் சிவனாரைக் குறித்து கடுந்தவம் புரிந்து, சிவாம்சத்தால் மட்டுமே தங்களுக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வரம் பெற்றார்கள்.

வரம் கிடைத்ததும் மலையனும் மாகறனும் மண்ணுலக மாந்தர்க்கு மட்டில்லாத துன்பத்தை விளைவிக்கத் தொடங்கினார்கள். இந்த நிலையில், அசுரர்களின் அராஜகம் முடிவடைந்து, உலகம் நன்மை பெறவேண்டும் எனும் எண்ணத்துடன், `காசிபன்தண்ட வனம்’ என்ற இடத்தில் மகத்தான யாகம் ஒன்று தொடங்கினார் காசிப முனிவர்.

இதையறிந்த அசுரர்கள் யாகம் நடக்கும் இடத்துக்குச் சென்று கடும் இன்னல்களை விளைவித்தனர். அதனால் அஞ்சிய காசிபர், `கடம்பர் கோயில்’ என்ற கடம்ப வனத்தில் அருளும் ஈசனை தரிசித்து, அசுரர்களிடமிருந்து யாகத்தைக் காக்கும்படி வேண்டினார்.

அது... சூரபத்மனை அழிக்க முருகப் பெருமான் அவதரித்திருந்த வேளை. ஆகவே ஐயன் ஈசன், தமது அம்சமாகத் தோன்றிய முருகனை அழைத்து,  தமது வாளாயுதத்தையும் கொடுத்து, மலையன், மாகறன் ஆகிய அசுரர்களை அழித்து வரும்படி பணித்தார்.

வேலூன்றினான்... வினைகள் தீர்ந்தன!

அதன்படியே அசுரரை அழிக்கச் சென்ற முருகன், முதலில் அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பளித்து, நல்ல அறிவுரைகளைக் கூறினார். ஆனால், அசுரர்களோ அவற்றை அசட்டை செய்தார்கள். அசுரரில் இளையவ னான மாகறன் பெரும்படையோடு வந்தான். முதலில் அவன் படைகளை அழித்து, மாகறனைத் தனிமைப்படுத்தினார் கந்தவேள். அப்போதும் சளைக்காத அந்த அசுரன் மாயப் போர் புரிந்தான்.

அவனுடைய மாயைகளை அழிக்கத் திருவுள்ளம் கொண்ட முருகப்பெருமான், தம் வேலாயுதத்தை நோக்கி, `‘நீ சேயாற்றின் கரையில் காசிப முனிவர் யாகம் செய்யும்  காசிபன் தண்டவனத்துக்குக் கிழக்குத் திசையில் ஊன்றி நின்று, அசுரனின் மாயா சக்திகளை எல்லாம் அகற்றுவாயாக!’’ என்று கட்டளையிட்டு ஏவினார்.
 
அதன்படி அவ்வேலாயுதம் சென்று ஊன்றி நின்ற இடமே இளையனார்வேலூர் என்று வழங்கப்படுகிறது. வேலின் கோடி சூரியப் பிரகாசத்தால் மாகறனின் மாயைகள் அழிய, முருகப் பெருமான், ஈசன் தந்தருளிய வாளாயுதத்தால் அசுரனை அழித்தார்.

வேலூன்றினான்... வினைகள் தீர்ந்தன!அசுரனின் மாயையைப் போக்கிய வேலின் வெம்மை அண்ட சராசரங்களையும் பாதித்தது. எனவே, கடம்பநாதராம் ஈசன், தாமே ஒரு சிவனடியார் போல் தோன்றி வந்து, மக்களின் பசியையும் தாகத்தையும் தணித்து மறைந்தார். அதைக் கண்ட அனைவரும் ஈசனின் கருணைத் திறத்தினைப் போற்றிப் பணிந்து வணங்கினர். வேலின் வெப்பமும் தணிந்தது.

கந்தன் வழிபட்ட கடம்பநாதர்!

மா
கறன் அழிக்கப்பட்டதை அறிந்த மலையன், சூரபதுமனின் தாயாகிய மாயை என்பவளை தியானித்து வணங்கினான். அவள்,  மலையனுக்கு ஒரு மாயா மந்திரத்தை உபதேசித்துச் சென்றாள்.

அந்த மந்திரத்தின் துணையுடன் தன் படைகளைத் திரட்டி வந்து முருகப்பெருமானுடன் போர் தொடுத்தான் மலையன். முதலில் அவன் படைகளை அழித்தார் வேலோன். தனியாக நின்ற மலையன், மாயா மந்திரத்தால் வீரபாகு முருகனின் தளபதிகள் மற்றும் சேனாவீரர்களை வேறுஇடத்துக்கு மாற்றி, அங்கே அவர்களை மயங்கிக்கிடக்கச் செய்தான்.

வேலூன்றினான்... வினைகள் தீர்ந்தன!

இப்போது முருகப்பெருமானும் தனிமையில் நிற்க, அவர் மீது  வலுவான அஸ்திரங்களைப் பிரயோகித்தான் மலையன். அவற்றையெல்லாம் பயனற்றுப் போகச் செய்தார் முருகன். அதைக் கண்டு அஞ்சிய மலையன் மறைந்து ஓட, முருகப் பெருமான் ஈசன் தந்த வாளாயுதத்தினால் மலையனையும் வெட்டி வீழ்த்தினார்.

அசுரர்கள் இருவரை சம்ஹாரம் செய்வதற்காக முருகப்பெருமான் எழுந்தருளிய பாசறை `இரும்புலம்’ என்றும், மலையனுடன் அவர் போரிட்ட இடம் `செம்புலம்’ என்றும், மலையன் அழிந்த இடம் `மலையான்களம்’ என்ற பெயரிலும் திகழ்கின்றன.

வேலூன்றினான்... வினைகள் தீர்ந்தன!

அசுரர்கள் அழிந்ததும், ஞானாஸ்திரத்தின் மூலம் தன் படைகளை மீட்டுக்கொண்டு, கடம்ப வனத்தை அடைந்தார் கந்தன். இது நடந்தது, பங்குனி மாதம், சுக்கில பட்சம், மகம் நட்சத்திரம் கூடிய பிரதோஷ நன்னாளில். அங்கே தேவ சிற்பி விஸ்வகர்மாவின் மூலம் திருக்கடம்ப நாதருக்கு ஆகமமுறைப்படி ஆலயம் அமைத்து, அந்த ஆலயத்தைச் சூழ நல்ல நகரத்தையும் உண்டாக்கி, தமது வேலாயுதத்தால் சேயாற்றை வரவழைத்து, ஈசனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டார். அவர் முன் திருக்காட்சி தந்த சிவன், “குமாரனே, காசிபனின் வேள்வியைக் காத்தருள, நீ நினது வேலினை ஊன்றிய தலத்தில் எழுந்தருளி, அங்கு வந்து உன்னை தரிசித்து வழிபடும் பக்தர்களுக்கு நல்ல வரங்களை அருள்வாயாக” என்று அருள்பாலித்தார்.

பிரம்ம சாஸ்தா திருக்கோலம்!

மைதியும் அழகும் தவழும் சேயாற்றின் வடகரையில் அமைந்த அந்தத் தலத்தில் கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது ஆலயம். இருபுறமும் யானைகள் தாங்க, ஐந்து நிலைகளும் ஏழு கலசங் களும் கொண்ட ராஜகோபுரத்தை தரிசித்தபடி ஆலயத்தினுள் நுழைகிறோம். பலிபீடம், துவஜஸ்தம்பம், கஜமண்டபம்  கடந்து கருவறைக்குள் செல்கிறோம்.

சந்நிதியில் அற்புதக் கோலம் காட்டுகிறார் முருகப்பெருமான். மேலிரு கரங்களில் ருத்திராட்ச மாலையும் கமண்டலமும் திகழ்கின்றன. கீழிரு கரங்களில் வலக் கரம் அபய ஹஸ்தம் காட்ட, இடக்கரத்தால் கடி ஹஸ்தம் காட்டி அருள்புரிகிறார். முருகப் பெருமானின் இந்தத் திருக்கோலம், பிரம்ம சாஸ்தா கோலம்; பிரணவப் பொருளை மறந்த பிரம்மனைத் தண்டித்து முருகப் பெருமான் ஏற்றருளிய திருக்கோலம்.

இந்தத் திருக்கோலத்தில் முருகன் அருளும் சில தலங்களில், இவ்வூர் முதன்மையானது என்கிறார்கள். இங்கு முருகனின் திருநாமம் - பாலசுப்பிரமணியர். குழந்தையைப் போலத் தன்னைக் கொண்டாடி வணங்கும் பக்தர் களுக்கு... கேட்கிறார்களோ இல்லையோ, அவர்களுக்குத் தேவையான அனைத்து வரங்களையும் வாரி வழங்குகிறார் இந்த வள்ளல்.

வேலூன்றினான்... வினைகள் தீர்ந்தன!

சிறு பிராயத்து முருகன் என்பதால், இங்கு தேவியர்க்கு சந்நிதிகள் இல்லை. ஆனால், கஜவல்லி அம்மன் என்றோர் அம்மன் சந்நிதி உள்ளது. கருவறை யின் இடப்புறம் உற்சவ மூர்த்தங்களும், ஆறுமுகக் கடவுளின் மூர்த்தமும் அருளும் மண்டபமும் உள்ளது. 1971-ம் வருடம் இந்தக் கோயிலின் கும்பாபிஷேகப் பணிகளையொட்டி, கருவறைக்கு முன்பாக பள்ளம் தோண்டப்பட்டதாம். அப்போது கிடைத்த வள்ளி-தெய்வானை சமேத முருகனின் திருவடிவையும் இந்த மண்டபத்தில் தரிசிக்கலாம்.

பிராகாரத்தின் இடப்புறத்தில் மூலவரான பால சுப்ரமணியரின் உற்சவ மூர்த்தி சந்நிதியும், தொடர்ந்து காசி விசுவநாதர், பெருந்தண்ட உடையார் சந்நிதிகளும் உள்ளன. பிராகாரத்தின் வடமேற்கு மூலையில் இருந்த சிறு மண்டபத்தைக் காண்கிறோம். அதனுள்தான் முருகப்பெருமான் ஏவி ஊன்றிய வேலாயுதத்தின் சிலா வடிவம் அமைந்துள்ளது. வடகிழக்கு மூலையில், முருகப்பெருமான் சந்நிதிக்கு எதிரில் சற்றுத் தள்ளி  சுவாமிநாத சுவாமி சந்நிதி உள்ளது. இந்தச் சந்நிதியில் கடம்பநாதர் சிறு சிவலிங்க வடிவில் எழுந்தருளியிருக்கிறார்.

இதே சந்நிதியில்தான் சித்தபுருஷரான சுவாமிநாத சுவாமியின் சமாதியும் அமைந்துள்ளது. இளையனார் வேலூர் முருகனின் கீர்த்தியையும், வேலாயுதத்தின் மகத்துவத்தையும் அறிந்த சித்தர் சுவாமிநாத சுவாமி, ஆலயத்தின் மூலவர் இருப்பிடத்தைச் சுற்றி கட்டட நிர்மாண வேலைகள் செய்து வழிபட்டார் என்றும், பின்னர் கோயிலின் வட கிழக்கு மூலையில் சமாதி நிலை எய்தினார் என்றும் கூறுகிறார்கள்.

ஆம்! குகனருளும் குருவருளும் ஒருங்கே கிடைக்கும் அற்புத க்ஷேத்திரம் இந்தவூர். கார்த்திகேயனுக்கு மிகவும் உவப்பான இந்தக் கார்த்திகை மாதத்தில் நீங்களும் இளையனார் வேலூருக்குச் சென்று அந்த அழகனை வழிபட்டு வரம்பெற்று வாருங்களேன்

எஸ்.கண்ணன்கோபாலன், அ.தளபதி - படங்கள்: அபினேஷ் தா

பக்தர்கள் கவனத்துக்கு...

தலத்தின் பெயர்: இளையனார்வேலூர்

இறைவன்: அருள்மிகு பாலசுப்பிரமணியர்

வழிபட்டவர்:
காசிப முனிவர், சுவாமிநாத சித்தர்

திருவிழாக்கள்: சித்திரை மாதம் - மிருகசீரிட நட்சத்திரம் தொடங்கி, சித்திரை நட்சத்திரத்தன்று தீர்த்தவாரியுடன் நிறைவடைகிறது பிரம்மோற்சவம். ஆவணி மாதம் வளர்பிறை துவிதியை திதியில் தொடங்கி சஷ்டி திதி வரை ஐந்து தினங்கள் பவித்ரோற்சவம் நடைபெறும்.

பங்குனி மாதம் சுக்கில பட்சம், மக நட்சத்திரம் கூடிய நாளில், அருள்மிகு பாலசுப்பிரமணியர் பல ஊர்களின் வழியாக பக்தர்களுக்குக் காட்சி தந்தபடி, இளையனார்வேலூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள கடம்பர்கோயிலுக்கு எழுந்தருளி, இரவு மலையன், மாகறன் ஆகியவர்களை சம்ஹாரம் செய்து திரும்புவார். இவை தவிர்த்து கிருத்திகை, சஷ்டி, வைகாசி விசாகம் போன்ற தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

எப்படிச் செல்வது?: காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இளைனார்வேலூர்தான் அந்தத் தலம். காஞ்சி புரத்திலிருந்து மாகறல் செல்லும் பேருந்துகளில் ஏறினால், வழியில் இவ்வூரில் இறங்கிக்கொள்ளலாம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் 10 மணி வரை; மாலை 4 முதல் 8:30 மணி வரை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism