
மண்... மக்கள்... தெய்வங்கள்! - 16
நகரத்துக்கு நகரம் காவல்நிலையங்கள் இருக்கின்றன. குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் ஆயிரக்கணக்கான காவலர்கள் பணிபுரிகிறார்கள். ஆயினும் இன்றளவும் பல கிராமங்களுக்குக் கோயில்கள்தான் காவல்நிலையங்கள்; சாமிகள்தான் காவலர்கள். கோழித் திருட்டு முதல் நகைத் திருட்டு வரை மக்கள் தேடிவந்து புகார் செய்வது கிராமத்துக் கோயில்களில்தான். முனியனும், பட்டவனும், அரைக்காசுத் தாயும், வடக்கால் அன்னையும், கருப்பனும்தான் காவலர்கள், நீதிபதிகள்.

“கஷ்டப்பட்டு சம்பாதிச்சது சாமி... ஒரே ராத்திரியில அபகரிச்சுக்கிட்டுப் போயிட்டானுங்க... நீதான் கண்டுபிடிச்சுக் கொடுக்க வேணும்... திருடுனவனையும் எனக்குக் காட்டிக் கொடுக்கணும்” என்கிற அந்த வேண்டுதலும் சிந்துகிற கண்ணீரும் இன்னும் கிராமங்களை ஈரமாக்கிக்கொண்டுதான் இருக்கின்றன.
“ஆளைத் தெரியும்... அவன்தான் என் பொருளை அபகரித்திருக்க வேண்டும்... ஆனால் கேட்க பயம்... அவன் மோசமான மனிதன்... நீ எல்லாவற்றையும் விடப் பெரியவன்... நீயே அவனுக்குப் புத்தியைக் கொடுத்து திருடிய பொருளை என் வீட்டில் கொண்டு வந்து போடச் செய்...” என்று உரிமையாகத் தங்கள் மூத்தோனிடம் மக்கள் வேண்டுதல் வைக்கிறார்கள். கூடவே, “எனக்கு மட்டும், பொருளை எடுத்தவனைக் காமிச்சுக் குடுத்தியன்னா, சேவல் வெட்டி படைப்புப் போடுறேன்” என்றொரு வேண்டுதலையும் வைப்பார்கள்.

இந்த வேண்டுதலே, காவலர்களுக்குக்கூட அஞ்சாத திருடனுக்கு அச்சம் தருகிறது. அவனுக்குச் சின்னச் சின்னதாக சில சமிக்ஞைகள் காட்டப்பட, எப்படி எடுத்தானோ, அப்படியே கொண்டு போய் போட்டுவிடுகிறான். எவ்வளவோ திருட்டுகள் இப்படி காதும் காதும் வைத்தாற்போல தீர்வுக்கு வந்திருக்கின்றன.
இது ஓர் உளவியல் தீர்வுதான். `இந்தக் காலத்திலும் இப்படியா?’ என்று சிலருக்கு இது அபத்தமாகப் படலாம். ஆனால், இந்த நம்பிக்கையும் பிடிப்பும்தான் கிராமத்து வாழ்க்கையை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கின்றன.
எங்கள் பகுதியில் ஒரு திருட்டு. இது நடந்து பத்தாண்டுகள் இருக்கும். ஆனால் இப்போது நினைத்தாலும் மிரட்சியாக இருக்கும். ஓட்டைப் பிரித்து இறங்கி ஒரு குடும்பத்தின் வாழ்நாள் சேமிப்பை அள்ளிச்சென்று விட்டார்கள்.
உள்ளூரில் சிலபேர் மீது சந்தேகம். ஆனால், ஆதாரமில்லாமல் வெறும் சந்தேகத்தை மட்டும் வைத்துக்கொண்டு நேருக்கு நேர் நின்று கேட்கமுடியாது. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். மோப்ப நாய் வந்து தெருக்களைச் சுற்றிவிட்டு, எல்லைவரைக்கும் சென்று அங்கே படுத்துவிட்டது. அண்டை வீட்டுக்காரர்களிடம் விசாரணை நடத்திவிட்டு காவலர்கள் போய்விட்டார்கள். ஊர்க்காவலனான பட்டவ ஐயனாரிடம் சரணடைந்தது, பொருளைப் பறிகொடுத்த குடும்பம்.
ஐயனார் உத்தரவுப்படி `முக்காலி’ கொண்டு வந்தார்கள். நல்ல உயரமான முக்காலி. கோயிலில் வைத்து பூஜையெல்லாம் போட்டார்கள். மலரால் அலங்கரித்தார்கள். வழக்கமாகச் சாமியாடும் இளைஞர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டார்கள்.

இரண்டு இரண்டு பேராக அந்த முக்காலியைத் தொட, மூத்த சாமியாடிகள் இரண்டுபேர் தொடும் போது அந்த முக்காலியில் சிறு அசைவு தெரிந்தது. அவ்வளவுதான். அடுத்த மூன்றுநாள்கள் அவர்கள் இருவரும், அந்த முக்காலியைச் சிறிது சிறிதாக நகர்த்திக்கொண்டு ஊரை வலம் வந்தார்கள்.
சில இடங்களில் நகராது. சில இடங்களில் வேகமாக நகரும். சில இடங்களில் திரும்பும். அந்த முக்காலியின் பின்னால் ஊரே நடந்தது. திருடனைப் பிடிக்க முக்காலி வந்துள்ளதைக் கேள்விப்பட்டு பக்கத்து ஊர்க்காரர்களெல்லாம் திரண்டு வந்துவிட்டார்கள். கடைசிவரை முக்காலி திருடனைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், `முக்காலி எப்படியும் நம்மைக் கண்டு பிடித்துவிடும்’ என்ற அச்சத்தில் திருடியவர்கள் ஒரு பையில் பணம், நகைகளைப் போட்டு பறிகொடுத்தவரின் வீட்டுக்குப் பின்புறம் வீசிவிட்டுப் போய்விட்டார்கள். இன்றைக்கும், வெளியூரில் பிழைக்கப்போன என் வயது நண்பர்கள் சந்தித்துப் பேச வாய்த்தால், இந்த முக்காலிக் கதையும் கண்டிப்பாக இடம்பெறும்.
இப்படியான தெய்வக்கதைகள் நிறைய உண்டு. தஞ்சாவூருக்கு அருகிலிருக்கும் வடகால் கிராமத்தில் கோயில் கொண்டிருக்கிறாள் வடகாலம்மன். வடகால், மிகவும் வளமான ஊர். இந்த ஊரைச் சேர்ந்த நாட்டாமையின் மகன் சத்தியன். ஊரில் மைனர். முறுக்கு மீசை, முரட்டு உடம்பெனப் பார்த்தாலே அச்சம் ஏற்படும் வகையில் ஊரில் வலம் வந்து கொண்டிருந்தான். சத்தியனைத் திருத்த அவன் அப்பா எவ்வளவோ முயற்சிகள் செய்தார். முடியவில்லை. நாட்டாமை பிள்ளை என்பதால் ஊராரும் எல்லாக் கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டார்கள். இரவு நேரத்தில் ஊர் உறங்கியதும் தென்னை மரங்களிலேறி காய்த்து முகிழ்ந்திருக்கும் தேங்காய்களைப் பறித்துச்சென்று விற்றுவிடுவான் சத்தியன். அவனுக்குப் பயந்தே இரவுகளில் மக்கள் தங்கள் தென்னந்தோப்புகளில் விழித்திருந்து காவல் காக்கத் தொடங்கினார்கள்.
மக்கள் காவல் காக்கத் தொடங்கியதும் சத்தியனின் ‘இயல்பு வாழ்க்கை’ பாதிக்கப்பட்டது. எந்தப் பக்கம் போனாலும் அங்கே இரண்டுபேர் பந்தம் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். வேறு வழியில்லை... காவலர்கள் இல்லாமல் தனித்திருப்பது அம்மன் கோயில் தென்னந் தோப்புதான். பதுங்கிப் பதுங்கி, ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த அம்மன் கோயில் தோப்புக்குள் ஊடுருவினான் சத்தியன். அங்கு அவனைத் தண்டிக்கக் காத்திருந்தது தெய்வம்!
-மண் மணக்கும்...
வெ.நீலகண்டன் - படங்கள்: ம.அரவிந்த்